Tuesday, 31 July 2012

உட்படும் வேளை



 ஈரோடு C.K.K அறக்கட்டளையின் 34 வது ஆண்டு இலக்கிய விழா
29.07.2012, கடந்த ஞாயிறு நடந்தது. இந்த வருட இலக்கிய விருது
திரு. ஜெயமோகனுக்கு வழங்கப்பட்டது.     சென்ற வருடம் விருது
வழங்கப்பட்டவன் என்ற முறையில், நானும் கலந்துகொள்ள அழைக்கப்
பட்டிருந்தேன்.





இந்த முறை என் தனிப்பட்ட விழாவை அதற்கு முந்திய நாளே நான் துவங்கிவிட்டேன்.  ரவி உதயன், மனோகர், ராஜு சுப்ரமணியன், ராஜரத்னம்,
லதா ரவி,  அருள்மொழி என, சனிக்கிழமை முழுமையாக நிரம்பிவிட்டது.
எப்போதாவது ஊரை விட்டு வெளியே வருகிற எனக்கு,  இலக்கியம் சார்ந்தோ, சாராமலோ கிடைக்கிற இந்த மனிதர்களே போதுமானவர்களாக இருக்கிறார்கள்.

29.07.12 ஞாயிற்றுக் கிழமையை மரபின் மைந்தன் முத்தையாவும் ஜெய மோகனும் ஆறுமுக தமிழனும் வெண்ணிலாவும் பிரபஞ்சனும் இறையன்புவும் அவரவர் கைகளில் எடுத்துக் கொண்டார்கள்.  காலையில்
முதல் அமர்வில் முத்தையா தலைமையில், ’வெளிப்படும் வேளை’ என்ற தலைப்பில் கவியரங்கம். கவிஞர்கள் தங்கம் மூர்த்தி, சக்தி ஜோதி, சதீஷ் குமார், இசைக்கவி ரமணன், ஆண்டாள் பிரியதர்சினி மற்றும் கவி அன்பன் கே.ஆர். பாபு கவிதைகள் வாசித்தனர்.

அறிவிக்கப்படாத, ஏழாவது கவிஞனாக, நான் ’உட்படும் வேளை’  என்ற கவிதையை , வழக்கமான என் பதற்றத்தோடும் நடுங்கும் விரல்களோடும் வாசித்தேன்.  இன்று, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி, தன்னுடைய நாற்பத்து நான்காவது பிறந்த தினம் காணும் மரபின் மைந்தன் முத்தையாவுக்கு
அதைப் பதிவேற்றுவதன் மூலம் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவிக்க நினைக்கிறேன்.

பிறந்த நாள் நல் வாழ்த்துகள் முத்தையா. ‘நல்லா இருங்க’

%



 
தேரோடும் அந்தத் திருநெல்லைப் பதிக்காரன்
ஈரோட்டில் உம்முன்னே எழுந்துவந்து நிற்கின்றேன்.
யாரோடு இருந்தாலும் அவராகும் ரசவாதம்
வேரோடு வந்ததனால் வெளிப்பட்டு வருகின்றேன்.
பேரோடும் புகழோடும், பெருந்திருவின் அருளோடும்
ஊர் கூடி இருக்கின்ற ஒரு அவையின் மத்தியிலே.
*
முன்னைப் பழமைக்கும் முதிர்ந்துவரும் புதுமைக்கும்
தன்னை மரபாக்கித் தழைக்கிறவர் தலைமையிலே
என்னைப் புதிதாக்கி இணைக்கின்றேன். நிகழ்ச்சி நிரல்
தன்னில் பாயாத தாமிர நல் பரணியென.
*
இதற்கு முன்பு இறைவனாய் இருந்தவன்
இப்போதிங்கே தலைவனாய் இருக்கிறான்.
இதற்கு முன்பும் இச் சபையில் இருந்த நான்
இப்போது அவரது அவையில் நிற்கிறேன்.
நிற்பதும் நடப்பதும் நின் செயல் என்றும்
நினைப்பதும் நிகழ்வதும் நின்னருள் என்றும்
கற்பனாவல்லியின் துணைக்கரம் பிடித்து
கவிதையின் அழகுடன் வெளிப்படுகின்றேன்.
*
வில்லில் இருந்து கணையும்
வேரில் இருந்து விழுதும்
கல்லில் இருந்து சிலையும்
கருவில் இருந்து சிசுவும்
     வெளிப்படும் வேளை
மனதில் இருந்து கவியும்
மலரில் இருந்து மணமும்
கனவில் இருந்து நனவும்
கடலில் இருந்து கரையும்
     வெளிப்படும் வேளை
மண்ணில் இருந்து பயிரும்
மறைவில் இருந்து எதிரும்
கண்ணில் இருந்து துளியும்
கதிரில் இருந்து ஒளியும்
     வெளிப்படும் வேளை
புல்லில் இருந்து பனியும்
போ’வில் இருந்து வா’ வும்
அல்லில் இருந்து பகலும்
அகலில் இருந்து சுடரும்
     வெளிப்படும் வேளை
குனிவில் இருந்து நிமிர்வும்
குரலில் இருந்து இசையும்
துணிவில் இருந்து உயர்வும்
தொலைவில் இருந்து அருகும்
     வெளிப்படும் வேளை
உயிரில் இருந்து உடலும்
உடலில் இருந்து உயிரும்
கயிறில் இருந்து அரவும்
அரவில் இருந்து கயிறும்
     வெளிப்படும் வேளை
உள்ளில் இருந்து வெளியும்
உறவில் இருந்து துறவும்
முள்ளில் இருந்து மலரும்
முடிவில் இருந்து முதலும்
     வெளிப்படும் வேளை
வெளிப்படும் வேளையை, வியத்தகு பொழுதை
அளிப்பது அந்த ஆதியும் பகவனும்.
குளிப்பது ஒன்றே நம் கடன், ஆறாய்க்
குளிர்ந்து நடப்பது அவனின் நெடும் புனல்.
வெளி என்ற ஒன்று அன்றே இருந்தது.
வெளிப்படல் மட்டுமே மனிதன் அறிந்தது.
ஒளி என்ற ஒன்று உள்ளே இருப்பது
உள்ளே இருப்பதை வெளியில் தருகிற
வழியை மட்டுமே மனிதன் வகுத்தது.
வரவும் செலவும் அவனவன் தொகுத்தது.
வட்டங்களிட்டுக் குளம் அகலாத
மணிப்பெரும் தெப்பம் மிதப்பது போல
தொட்டுத் தொட்டு ஒன்றில் ஒன்று
தொடர்ந்து வெளிப்படும் சுழற்சியின் மத்தியில்
வெளிப்படும் வேளை இதுவென எப்படி
வெடிப்புறச் சொல்லி முடித்திட இயலும்?
உட்படும் வேளை இதுவென யாரும்
உங்களில் ஒருவர் சொல்லக் கூடுமா?
கவிதை எப்போது மனதுள் விழுந்தது?
கண்ணுள் எப்போது கரிப்பு நீர் புகுந்தது?
உடலுள் எப்போது உயிர் கலந்தது?
ஒளியுள் எப்போது இருள் நுழைந்தது?
கடலுள் எப்போது அலையடித்தது?
கல்லுள் எப்போது சிலை துடித்தது?
விதையுள் எப்போது வேர் முளைத்தது?
வெயிலுள் எப்போது மழை கருத்தது?
இது’வுள் எப்போது அது மறைந்தது?
எழுத்துள் எப்போது சொல் நிறைந்தது?
உட்படும் தருணம் உணர்ந்தால் மட்டுமே
வெளிப்படும் வேளை வெளிச்சம் அடையும்.
உள்ளிருந்துதான் எல்லாம் வெளிப்படும்.
உள்ளத்தனையதே உயர்வுகள் அனைத்தும்.
உட்பட உட்பட உள்ளிருந் தனைத்தும்
வெளிப்படும் எல்லா வித்தையும் விந்தையும்.
எய்கிற வில்லில் அல்ல, குவித்து
எய்பவன் உள்ளே இருப்பவை கணைகள்.
ஈன்று புறந்தரும் வேதனை அல்ல.
ஈரக் கருவறை வாசனை குழந்தை.
சொல்கிற சொல்லில் அல்ல, மனதில்
சுடர்விடும் பொழுதில் உள்ளது கவிதை.
கண்ணில் இருந்து வழிவது அல்ல
கனலும் நெஞ்சுள் கசிவது கண்ணீர்.
குரலில் இருந்து அல்ல, நல்லிசை
கூடுவதுள் உள ஏழு சுரங்களில்.
உடலில் இருந்தது அல்ல, அந்த
ஒன்பது வாசலுள் திரிந்தது உயிர்மை.
கட்புலம் மீறிய கருணையின் பெருக்கில்
கடந்து கடந்தவோர் காலக் கணக்கில்
உட்புறம் வெளிப்புறம் தாண்டிய நிலையில்
உருவாய் அருவாய் இருப்பதே அனைத்தும்.
வெளிப்படும் வேளை எதுவெனக் கேட்டால்
உட்படும் வேளையே அதுவெனச் சொல்வேன்.
நேர் விகிதம் போல் தலை கீழ் விகிதமும்
நிறைந்தவை தானே எல்லாக் கணிதமும்.
உட்படும் வேளைகள் கேள்விகள் என்றால்
வெளிப்படும் வேளைகள் விடையாய்க் கிடைக்கும்.
வெளியே உள்ள வெளிச்சம் அனைத்தும்
உள்ளே உள்ளதே என்பதைச் சொல்லி
மெல்ல மெல்ல விடை பெறுகின்றேன்
மீண்டும் அவைக்குத் தலை பணிகின்றேன்.
%

Tuesday, 24 July 2012

தேர், ரதவீதிகள், நாம்.



சமீபத்தில்தான் எங்கள் ஊரில் தேரோட்டம் முடிந்தது.  ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் தேர் ஓடும்.  இந்த வருடம் ஆனித் திருவிழாவுக்கு நான் வெளியூரில் இருக்கும்படி ஆகிவிட்டது.

வேறு என்றைக்கு இல்லாவிட்டாலும், தேரோட்டத்து அன்றைக்கு, எப்படியாவது ஊரில், அதுவும் பிறந்து வளர்ந்த வீட்டில் இருக்கமாட்டோமா என்று இன்றைக்கும் தோன்றத்தான் செய்கிறது.    யாருக்கும் அது இயற்கைதான்.  அந்தந்த ஊர்த் திருவிழாவை, அந்தந்த ஊரில், வீட்டில், அதே ஆட்களோடு பார்க்கவேண்டும் என்று தோன்றத்தானே செய்யும்.  அப்படித் தோன்றாவிட்டால், அப்புறம் நாம் என்ன மனிதன்?  அது என்ன சொந்த ஊர்?

இந்தத் தடவை, தற்செயலாக, தேரோட்டம் நடைபெறுகிற அன்றைக்கு நான் பெங்களூருவில் இருக்கிறேன்.     பரமனிடமிருந்து போன் வருகிறது, ‘கல்யாணி இன்றைக்கு நம்ம ஊரிலே தேரோட்டம்’.     அதைக் கேட்ட உடனே எனக்குள் ஒரு சத்தம் கேட்கிறது.  வடம் பிடிக்கிறவர்கள் சத்தம்.  நகரா அடிக்கிறவர்கள் சத்தம். வேட்டுப் போடுகிற சத்தம். இவையெலாம் மொத்தமாகச் சேர்ந்த ஆனித்திருவிழாச் சத்தம்.

எனக்குத் தேர் அசைந்து அசைந்து, வாகையடி முக்குத் திரும்பி, தெற்கு ரதவீதியில் வருகிறமாதிரித் தெரிந்தது. தேர் தேர்தான். நின்றாலும் அழகு. நகர்ந்தாலும் அழகு.  ‘தேர் அசைந்த மாதிரி இருக்கும்’ என்று சொல்வது எப்பேர்ப்பட்ட வார்த்தை.  தேர் அசைந்து வருவதுதான் அழகு. உச்சியில் கொடி பறக்கும். ஏழு தேர்த் தட்டும் லேசாக அசையும். நிஜமாகவே நான்கு மரக்குதிரைகளும் நமக்கு மேல் பாய்கிற மாதிரி இருக்கும். தூரத்தில் இருந்து பார்க்கிற போது,சாமியைக் கும்பிடத்  தோன்றுகிறதோ இல்லையோ, தேரைக் கண்டிப்பாகக் கும்பிடத் தோன்றிவிடும்.

நான் பரமனிடம் பதிலுக்குக் கேட்கிறேன், ‘தேர்ப் பார்க்கப் போயிருக்கியா?
தேர் எங்கே வருது?’

‘நான் எங்கே போக? மயூரியில, ஏ,எம்.என். டிவியில எல்லாம் லைவா காட்டுதான். பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்கேன்’  என்கிறான்.    இதைச் சொல்ல அவனுக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்திருக்க வேண்டும். சிரிப்பு அப்படித்தான், நேரே நம் முகத்தைப் பார்க்காமல் லேசாகக் குனிந்து கொண்டது மாதிரி இருந்தது.

இது முடிந்து கொஞ்ச நேரம் ஆகியிருக்கும்.    அதிகமாகப் போனால் பதினோரு மணி கூட இருக்காது. மூங்கில் மூச்சு சுகா, அவருடைய முகப் புத்தகத்தில், ’தேர் லாலா சத்திர முக்கு திரும்பீட்டுதாம்’  என்று ஒரு தகவலைப் போடுகிறார்.  லாலா சத்திர முக்குத் திரும்பியாகிவிட்டது என்றால், இனிமேல் ராயல் டாக்கீஸ் முக்கு. அதற்குப் பிறகு நேராக தேர் போய் நிலையில் நிற்க வேண்டியதுதான்.

எதற்கு இப்படி அவசரப் படவேண்டும்?    நெல்லையப்பரை இப்படி ஷேர் ஆட்டோவில் ஏற்றிகொண்டுபோய், ‘ஸ்பீடாக’  நிலையில் நிறுத்துவதற்கு, எதற்கு இந்த கொடியேற்று, ஒன்பது நாள் திருவிழா, சப்பரம், சாமிபுறப்பாடு எல்லாம்?

நான்கு ரதவீதிகளில், ஒவ்வொரு ரதவீதி முக்கிலும் ஒரு நாளாவது தேர் நின்று புறப்பட்டால் நன்றாகத்தானே இருக்கும். என்ன அவசரம் அப்படி? பத்து மணிக்கு ஆரம்பித்து ஒரு மணிக்குள் முடிவதற்குப் பெயர் தேரோட்டமா?  இப்படி வேக வேகமாக முடித்துவிட்டு, அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம்?  மிஞ்சிப் போனால், தொலைக்காட்சி, ஒரு திரைப்படம் அல்லது தூக்கம்.  அதுதான் என்றைக்கும் இருக்கிறதே. இன்றைக்குமா?

திருவிழாக்களை ஏன் ஆற, அமர நிதானமாக, சந்தோஷமாக நாம் கொண்டாடக் கூடாது?  பனி உருகுவது போல, பூ உதிர்வது போல, ஒரு தொட்டில் பிள்ளை தூக்கம் கலைந்து அழுவது போல, ஒரு திருவிழா ஏன் அதன் போக்கில் நிகழக் கூடாது?

இவ்வளவு கனத்த வடம் பிடித்து, இவ்வளவு பெரிய தேரை, இத்தனை பேர் இழுக்கிற காட்சி எவ்வளவு அருமையானது!
தேர் என்றாலும் சரி, வாழ்க்கை என்றாலும் சரி, கூடி இழுக்கும் போது அசைந்தசைந்து நகர்வது நன்றாகத்தானே இருக்கும்.

அது திருவிழாவாக இருக்கட்டும், 
நீங்கள் தொடுத்த பூவை உங்கள் சினேகிதியின் தலையில் சூடுவது போன்ற, அல்லது தொலைபேசியில் கூப்பிட்டு உங்களுடைய நண்பருக்குத் திருமண நாள் வாழ்த்து சொல்வது போன்ற எளிய சந்தோஷங்களாக இருக்கட்டும். நிதானமாகக் கொண்டாடுவோம்.

அறுபது நொடிகள் ஓட வேண்டிய தேரை, ஏன் ஒரே ஒரு நிமிடத்தில் இழுத்துமுடிக்க வேண்டும்?

கேட்பது நான் அல்ல, ரதவீதிகள்.

%

ஆனந்த விகடன் - இன்று, ஒன்று, நன்று
25-07-2012    ஒலிபரப்பப்பட்ட பதிவு.

Monday, 23 July 2012

இன்னும் அழகான ஓவியங்கள்



இப்போதெல்லாம் வளரும் குழந்தைகளின் மேல் எல்லா ஊடகங்களுக்கும் ஒரு கவனம் இருக்கிறது. தவிர்க்கமுடியாத அக்கறை இருக்கிறது.

அனேகமாக எல்லாத் தினசரிகளும் சிறுவர்மலர் பகுதி வெளியிடுவதை நாம் பார்க்கிறோம். பெண்களுக்குரிய பகுதி என்றால், சமையல் குறிப்பு, கோலப் போட்டிகள். சிறுவர்களுக்கு என்றால், புகைப்படங்களுடன் பிறந்த நாள் வாழ்த்துகள்,  வயது மற்றும் பள்ளிக்கூட விபரங்களுடன் ஓவியங்கள்.

நான் சிறுவர் மலர்களில் வருகிற கதைகளையும் இந்த ஓவியங்கள் வெளியாகியிருக்கிற பக்கங்களையும்  தவறவிடுவதே இல்லை.  ஒரு களங்கமற்ற மாய உலகத்தின் மேல் ரத்தினக் கம்பளங்களில் நம்மைப் பறக்கவைக்க, அந்தக் கதைகளுக்கே முடியும்.  கதைகளாவது சிறுவர்களுக்காக, பெரியவர்களால் எழுதப்பட்டது. அது சிறுவர்களுக்காக உண்டாக்கப்பட்ட உலகமே தவிர, சிறுவர்களின் அசலான  உலகம் அல்ல.  ஆனால் அவர்கள்    வரைகிற ஓவியங்கள் முழுக்கமுழுக்க அவர்கள் உடையது.  ஒரு சிறு வயது மனம் இயங்கி, சிறு வயது விரல்களின் வழி வரையப்பட்ட ஓவியங்கள் அவை.    மெழுகு வண்ணங்களாக இருக்கட்டும். நீர் வண்ண ஓவியங்களாக இருக்கட்டும்.  சிறுவர்களின் ஓவிய உலகம் பறவைகளால் நிரம்பியிருக்கின்றன. முக்கியமாக கிளிகளாலும் மயில்களாலும்.

இன்றைக்கு வெளியாகியிருக்கும் ஏதாவது ஒரு சிறுவர்மலரில், நீங்கள்  இந்தப் படத்தை ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேலோ பார்த்திருக்க முடியும்.

இரண்டு மலைகள். ஒரு வட்டச் சூரியன். சுற்றிலும் கோடு கோடாக கிரணங்கள். இடது பக்கம் துண்டுதுண்டாக மேகம்.  வலது பக்கம் நான்கைந்து பறவைகள்.  மூக்கும் கிடையாது. முழியும் கிடையாது. வெறுமனே புல் முளைத்தது போல நான்கைந்து.  அசல் பறவைகளையும் விட அழகாகப் பறக்கிறவை இவர்களின் இந்த ஓவியப் பறவைகள்தான்.

இடது ஓரத்தில், கீழ்ப் பக்கத்தில், இரண்டு தென்னை மரங்கள். மலையை விடவும் அவை உயரமாக இருக்கும். அப்புறம் ஒரு ஜன்னல் வைத்த வீடு.  மலைக்கும் தென்னை மரங்களுக்கும் இடையில் ஊதா நிறத்தில் நிரம்பியிருக்கும் தண்ணீர்.  தண்ணீரில் சில சமயம் தாமரை அல்லது வாத்து. ஒன்று அல்ல. இரண்டு.  சிறுவர்கள் உலகத்தில் எதுவும் தனி கிடையாது.   தனிமையும் கிடையாது.

இதில் அருமையானது என்னவென்றால், அவர்கள் அப்படி வரைந்திருக்கிற
மலைகளையோ மேகங்களையோ நதியையோ சூரியனையோ அவர்கள் பார்த்திருக்கவே மாட்டார்கள்.  தென்னை மரங்கள் தவிர, அந்தத் தாமரைப் பூவையோ, வாத்துக்களையோ கூட, அந்த வயதில் அவர்கள் நேரடியாகப் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால் அவர்களுக்குள், அவர்களின் மனதில் எல்லாமே இருக்கிறது.  இத்தனையும் பார்க்கிற, இவ்வளவையும் ஒன்றாகச் சேர்த்துவைத்துப் பத்திரப்படுத்துகிற ஒரு ஆதிமனம் சிறுவர்களிடம் இருக்கிறது.  நாம் இயற்கையில் இருந்து புறப்பட்டவர்கள் அல்லது ஒரு பேரியற்கை நம்மை இந்த உலகத்துக்கு அனுப்பிவைத்திருக்கிறது என்பதன் அடையாளம்தான் அந்த மலையும் சூரியனும் பறவையும் நிரம்பிய சிறுவர்களின் ஓவியங்கள். 

பெரியவர்களுக்கு அதைவிட அதிகமாக ஆறும் குளமும் பறவைகளும் வானமும் தெரியும்.  ஆனால் நாம் நம்முடைய ஆற்றை வற்றும்படியாக விட்டுவிடுகிறோம்.  உள்ளே இருக்க வேண்டிய பறவைகளை வெளியே விரட்டி விடுகிறோம். பொத்தல்கள் நிரம்பியவானத்தில்,  கைவிடப்பட்ட பட்டங்கள் போல அலைகின்றன மேகங்கள்.  உள்ளே நந்தவனமாக இருக்கவேண்டிய செடிகள், வெளியே பாலிதீன் பைகள் சிக்கிப் படபடக்க முள் நிறைந்த வெயிலில் வாடுகின்றன.

சிறுவர்களைப் போல, நாமும் இயற்கையை மனதுக்குள் பத்திரப்படுத்த வேண்டும். அப்படிப் பத்திரப்படுத்துகிறபோது,  நாம் வரைகிற ஓவியங்கள் நிச்சயம் இன்னும் அழகாக இருக்கும்.

%

ஆனந்த விகடன் - இன்று, ஒன்று, நன்று
23-07-2012    ஒலிபரப்பப்பட்ட பதிவு.