அவ்வளவு பெரிய தவளையை
இதற்கு முன் பார்த்ததில்லை
அதுவும் மயானத்தில்
‘ஓட்டை ப்ளேட்’ தாத்தா வாழ்வில்
எந்தக் குறைவும் இல்லை.
ஆண்டு அனுபவித்துத்தான்
போனார்.
எதையும் திருப்பித் திருப்பிச் சொல்வதால்
ஆச்சி வைத்த செல்லப் பெயர் அது.
சிதைக்குத் தீ மூட்டின பிறகு
தென்பக்கத்துக் கல் தூண் பக்கம்
அது அசையாமல் இருந்தது.
கீழ்த் தாடை விம்மித் தளரும்
ஒரு வழவழப்பான துக்கமாக.
‘நீ எங்கே இங்கே வந்து உட்கார்ந்திருக்கே?’
தோள்த் துண்டை மடித்து வீசின
சீரங்கம் பெரியப்பாவை
‘அது பாட்டில இருந்துட்டுப் போகட்டும்’
தோளில் கைவைத்துச் சொன்னது
செங்குளத்து ரெங்கம்மாச்சி
வீட்டுத் தாத்தா.
எனக்கு மங்கலாக ஞாபகம் வருகிறது
ரெங்கம்மாச்சி குளத்தில் கல்லைக் கட்டித்
தாழ்த்திச் செத்துப் போனது
ஓட்டைப் ப்ளேட் தாத்தா
நான்கு நாட்கள்
சாப்பிடாமல் கிடந்தது எல்லாம்.
No comments:
Post a Comment