Tuesday 12 November 2019

தூவானம் அல்லது ’தூத்தல்’










நேற்றிலிருந்து இப்போது வரை மழை பெய்துகொண்டே இருக்கிறது. அறிவு மதி ‘ கடைசி மழைத் துளி’ என்று ஒரு கவிதைத் தொகுப்புக் கொண்டு வந்திருக்கிறார்.
எங்களுக்கு மிக நெருக்கமான இருவர்க்கு இது ஒருவேளை ‘கடைசி மழைக் காலம்’ ஆக இருக்கலாம்.

மழைச் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இடைவிடாத
ஒரு இசைக் கோர்வை போல அதைக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
ஒரு உன்னதை இசை கூட, துவக்கத்தில் இருந்து, அது தீர்மானித்துவைத்திருக்கிற ஒரு திருப்பத்தைத் தாண்டும் வரை நம்மை வருடிக் கொண்டும், வருடலின் நுனி அறுபடும் தருணம் ஒன்றில் ஒரு கூர் ஆயுதம் போல நம்முள் இறங்கத் துவங்கியும் விடும் போல.

பணிக்கால அலுவலகங்களின் தினத்தில் கூட, எவ்வளவு வேலை மேஜையில் இருந்தாலும், மழை பெய்யும் போது , நகர்ந்து வந்து ஒரு தாழ்வாரத்தில் அல்லது ஜன்னலோரம் நின்று விடுவேன்.
இன்று விடிந்ததில் இருந்தே, அங்கிங்கே அசையாமல் வீட்டு ஜன்னல் அருகில் தான்.

பொது மருத்துவ மனையொன்றின் வலிக்கட்டிலில் புரளும் ஒருவனுக்கு இந்த மழைச் சத்தம் கேட்குமா? அது என்ன சொல்லும், அவனிடம்/அவளிடம்?

காலையில் இருந்து குறுக்குத் துறை ஆற்றையும், அம்பா சமுத்திரம் சின்னச் சங்கரன் கோவில் ஆற்றையும் நினைத்துக்கொண்டே இருக்கிறேன்.
ஆற்றின் மேல் பெய்கிற மழை,கடலின் மேல் பெய்கிற மழையை விட வேறொன்றாகவே இருக்கிறது . விழுந்து தெறிக்கும் குமிழிச் சில்லில் ஆற்றின் சந்தோஷம் எழுதப்படுகிறது.

ஒரு ஓய்வுபெற்ற ஆரம்பப் பள்ளி வயோதிக ஆசிரியன், மழைக்கு விடுமுறை விடப்பட்டிருக்கும் பள்ளிக்கூடத்தில், அவர் சொல்லித் தந்த வகுப்பில் இப்போது போய்த் தனியாக நின்றால், அந்தக் கரும்பலகையில் அவர் இப்போது என்ன எழுதுவார்? அவரால் எழுத முடியுமா எதையாவது?

நான் படித்த - நான் எங்கே படித்தேன்?- வ.உ.சி கல்லூரி முகப்பின் முன் வளாகத்தின் செம்மண் தரையில், மழைக்காலங்களில் நான் பார்த்த எண்ணிலி மண்புழுக்கள் எல்லாம் என்னவாகியிருக்கும்?
நான் துளைத்து வெளிவர அங்கு எனக்கிருக்கும் ஞாபகம் எல்லாம் இப்போது நனைந்து கிடக்கும் தானே..

மழையின் நிறம் என்ன மஞ்சளா? அது எப்போதும் தரையோரக் குறுஞ்செடிகள் அனைத்தையும் மஞ்சளாகத்தானே பூக்க வைக்கிறது. போனால் போகிறது என்ற சலுகையில், குறும் பூக்களின் மேல் பறக்க, சின்னஞ் சிறிய வெண்ணிற வண்ணத்துப் பூச்சிகள். ( எங்கள் அம்மையிடம் கேட்டால் ‘தண்ணிக் கலர்’ என்பாள்.).

இப்போது ஒரு தெற்கத்தி ஓவியன், என்ன ஓவியம் வரைந்துகொண்டு இருப்பான்? இந்த மழை நாளுக்காக அவன் தேர்ந்தெடுக்கும் பிரத்யேக நிறம் எதுவாக இருக்கும்?

இன்று ரேஷன் கடைக்கு முன்னால் சிந்திக் கிடக்கும் தானியங்கள் கொத்த , பயந்து பயந்த மைனாக்கள் வருமா? தீபாவளிச் சரவெடிகளின் சத்தத்தை அவை மறந்து விட்டனவா? அன்றன்றைக்கு எல்லாவற்றையும் மறந்துவிடும்படியான நிர்ப்பந்தத்தை அதன் சிறகுகளும் ஒப்புக்கொண்டாயிற்றா?

மூன்று சக்கர வண்டியில் செய்தித்தாள் வினியோகிக்கிற ராஜா, இந்த மழையில் வாரப் பத்திரிக்கை போட வரவில்லை என்று, எரிச்சல் பட்டுக்கொண்டே மழைக்கோட்டை அணிந்து ‘ஆபீஸ்’ கிளம்புகிற ஒருத்தர் இந்தத் தெருவில் இல்லாமலா போவார்?

நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? மழையின் ஒரே ஒரு துளி, சுமக்க முடியாத மிகப் பெரும் பாரம் போல, ஒரு ஈர இலை தன்னைத் தாழ்த்தி, மிகுந்த பிரயாசையுடன் அதன் நுனியில் ஏந்திக்கொண்டு, பாவலா பண்ணுவதை.

வெறித்து விட்டது மழை. வெறித்த பிறகு என்ன தோன்றும்? இன்னும் கொஞ்சம் பெய்துகொண்டு இருக்கக் கூடாதா என்றுதான்.


No comments:

Post a Comment