Wednesday 27 November 2019

சுயம்பு








தூய சவேரியர் கல்லூரியில் இன்று கோவை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம், ‘கரிசல் இலக்கிய வளம்’ என்று ஒரு கருத்தரங்கம் நடத்தியது.
ரொம்ப காலத்திற்குப் பிறகு மு. சுயம்புலிங்கத்தைப் பார்க்க முடிந்தது. எனக்கு அவர் பழக்கமில்லை. தீ மாதிரி அவர் எழுதியிருப்பவைதான் தெரியும். இன்றைக்கு எனக்கு இடப் பக்கம் இரண்டு மூன்று வரிசைக்கு முந்தித்தான் அமர்ந்திருந்தார். எனக்கு அவரிடம் பேச்சுக்கொடுக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அவர் கையைப் பிடித்துக்கொள்ள நினைத்தேன்.
தே நீர் இடைவேளை என்று சொன்னதும் நான் எழுந்து அவர் பக்கம் போய் அவர் தோளில் கை வைத்துக் கூப்பிட்டேன். தோளைத் தொட்டுக் கூப்பிடுவது ஒரு பழக்கம் எனக்கு. அவர் திரும்பிப் பார்த்தார். ‘யாரடா நீ, என் தோளில் கை வைத்துக் கூப்பிடுகிறாய்?’ என்ற பார்வையுடன் திரும்பினார். என்னை அடையாளம் தெரிந்துவிடும் என்று நம்பினேன். அவருக்குத் தெரியவில்லை. சத்தம் காட்டாமல், ஒரு வணக்கம் மட்டும் செய்துவிட்டுக் கீழே வந்துவிட்டேன்.
இங்கே வந்த பிறகு இந்தக் கவிதையைத் திரும்பத் திரும்ப வாசித்துக் கொள்கிறேன்.
தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்
%
நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
டவுசர் இல்லை என்று குழந்தைகள் அழுகும்
ஒரு அடி கொடுப்போம்
வாங்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள்
தீட்டுக்கறை படிந்த
பூ அழிந்த சேலைகள்
பழைய துணிச்சந்தையில்
சகாயமாகக் கிடைக்கிறது
இச்சையைத் தணிக்க
இரவில் எப்படியும் இருட்டு வருகிறது
கால்நீட்டி தலைசாய்க்க
தார்விரித்த பிளாட்பாரம் இருக்கிறது
திறந்தவெளிக் காற்று
யாருக்குக் கிடைக்கும்
எங்களுக்குக் கொடுப்பினை இருக்கிறது
எதுவும் கிடைக்காதபோது
களிமண் உருண்டையை வாயில் போட்டு
தண்ணீர் குடிக்கிறோம்
ஜீரணமாகிவிடுகிறது
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்.
%
இந்தக் கவிதையை எனக்குத் தெரியும். இந்தக் கவிதைக்கு என்னைத் தெரியும். நான் இப்போது மீண்டும் சுயம்புலிங்கத்தின் தோளில் கை வைத்துக் கூப்பிடுகிறேன். அவர் திரும்பிப் பார்க்கிறார்.
இப்போது அவருக்கு என்னைத் தெரிகிறது.
%
28.11.2015












1 comment:

  1. எல்லாவற்றையும் ஒரு கையின் தொடுகையால் அழகாக்கும், அடி மனதின் வண்டலை புரட்டிப் புது வெள்ளம் பாய்ச்சும் தங்கள் எழுத்தை மாயம் என்பதா? வித்தை என்பதா?

    ReplyDelete