Saturday 25 August 2012

அந்த அறை, இந்த வானம்.








இதற்கு முந்திய வானம்..
_________________________

கிட்டத்தட்ட பின்னிரவுத் துவக்கத்தில்
ஏதோ ஒரு உணவக மேஜையின்’
முட்கரண்டிகள் பீங்கான் உரையாடல்களீன்
மத்தியிலிருந்து
இடதுவிரல்களால் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளை
நான் வாசித்துகொண்டிருக்கும்
அயல்கவிதைவரிகளுக்கும்
மலர்களின் மௌனம் பற்றிய
திரைப்பாடல் குரல்களுக்கும் இடையில்
பத்திரப்படுத்துகிறேன்.
தண்ணீருக்கு மத்தியில்
முளைத்த முள்மரக் கூடுகளில்
வரத்துப் பறவைகள் இட்ட
கருப்புப் புள்ளிகளுடைய
பிசிபிசுத்த முட்டைகள் போல
புல்சருகு அடுக்கில் வெதுவெதுத்திருக்கும்
அவற்றின் மேல் அமர்ந்து
அடைகாக்கத் தோன்றுகிறது எனக்கு.
பாதி கேட்கப்பட்ட பாடலுக்கும்
மிச்சமிருக்கும் கவிதை வரிகளுக்கும்
நடுவில் தொங்குகிறது
இதற்கு முன் நான்
மிதந்துகொண்டிருந்த வானம்.

%

யாரோவின் சாயல்கள்.

’யாரோ சொன்னது மாதிரி’
என்று இவரின் முகம் பார்த்து
அவர் துவங்கினார் பேச்சை.
இவரை, அவரை, மேலும்
எவர் எவரையோ தெரிகிறது
அந்த ‘யாரோ’வைத் தவிர.
யாரோவின் சாயல்களை
யாராவது சொன்னால் நல்லது.

%

மழைக்கு முந்திய

இன்னும் கேட்கும்படி இருக்கிறது
தொண்டைச் செருமலுடன் துவங்கும்
அவளுடைய உரையாடல்கள் நிரம்பிய
ஓர் இரவும் இரண்டு பகல்களும்.
அவள் அதிகம் கீழ் நின்ற
மூங்கில்புதரின் வேறுவித இலையசைவு.
கருத்தரங்கக் குறிப்புகளை வாசித்து
தன்னை அடுக்கிக்கொள்வதற்கு முன்
அருந்திய காப்பிக் கோப்பையின் அடியில்
கருத்து நெளிந்து, விபத்து ரத்தம் என
உறைந்து மினுங்கும் மிச்சத் திரவம்.
கடிப்பின் வளைவுடன் ரொட்டித் துண்டுகள்.
ஒரு பிரத்தியேக வாசனைத் தெளிப்பின்
மயக்கம் களையாத் காற்றில்
கண்ணாடிக்குள் பிம்பம் உருட்டி
மேஜை விளிம்பில் புரட்டிக் கொள்ளும்
அடர் மஞ்சள் பென்சில் கூர்.
புதிய விமான நிலையத்திற்கான
போக்குவரத்து தூரத்தைத்
தாமதமாகக் கணக்கிட்ட அவசரத்தில்
குளியலறையில் விடப்பட்டுவிட்ட
பூத்தையலுடைய உள்ளாடைகள்.
மற்றும் இவற்றினிடையே
மலர்ந்துதிர்ந்து மலர்ந்த
இசை நிரம்பிய சில முத்தங்கள்.
இதற்கு மேலும் உயிர்ப்புடன்
ஒருபோதும் இருப்பதற்கில்லை
மழைக்கு முந்திய ஈரப்பதத்துடன்
அந்த அறையும்
அவனைப் போல் ஒருவனும்.

%

கல்யாண்ஜி.

2 comments:

  1. நீங்கள் அடிப்படையில் கவிஞன் என்பதுதான் உண்மை..

    ReplyDelete
  2. இரண்டாவது கவிதையில்
    கணிதத்தில் பயன் படுத்தும்
    x, y , z பயன் படுத்தினாலும்
    விடை அறிய முடிய வில்லை
    (விடை அறிய விருப்பம் இல்லை)

    மனிதமும் வாழ்க்கையும்
    கணித சூத்திரங்கள், வாய்ப்பாடுகள்
    மூலம் அறிந்து கொள்பவை அல்ல
    என்று மீண்டும் உரைத்தத தருணம்

    ReplyDelete