Friday 17 August 2012

செண்பகப் பூவும் சீமை இலந்தைப் பழமும்

'உங்களுக்கு பூ பிடிக்குமா, பழம் பிடிக்குமா?’
ரவீந்திரன் என்னைக் கேட்கும் போது நாஞ்சில்நாடன் தன்னுடைய மிலிட்டரி பச்சை சட்டையைநேர்த்தியாக ‘இன்’ பண்ணி, இடுப்புவாரின் பல்லை அதனுடைய சரியான துளையில் பொருத்திக்கொண்டு இருந்தார். ஏற்கனவே பெர்ஃப்யூம் வாடை அவருடைய தயாரை முன்னறிவித்துப் பரவிக்கொண்டிருந்தது.

“எனக்கு பூ, பழம் எல்லாம் பிடிக்கும்”
“ரெண்டில் எது ரொம்பப் பிடிக்கும்?” - ரவீந்திரன் கேட்டுவிட்டு மறுபடி சிரித்தார். ஆரம்பத்தில் ஒரு சிரிப்பு. முடிவில் ஒரு சிரிப்பு. இரண்டுக்கும் மத்தியில்தான் அவரால் எப்போதும் பேச முடியும்.
“பூ” - நான் சொல்லிக்கூட முடிக்கவில்லை.
“அப்போ நீங்க செண்பகத்தை நடுறீங்க. நாஞ்சில் சீமை இலந்தையை நடுகிறார்” என்று ரவீந்திரன் என் பக்கம் திரும்பி விவரிக்க ஆரம்பித்தார்.

ரவீந்திரனும் நாஞ்சிலும் ஜி.வி. ரெசிடென்ஸியில் குடியிருக்கிறார்கள். கோவை நகரத்தில் இருந்து கிட்டத்தட்ட அந்த திங்கட் கிழமைப் போக்கு வரத்தில் இருபத்தைந்து நிமிட தூரத்தில் அடையும்படி இருக்கிற அழகான, அமைதியான குடியிருப்பு அது.
ரவீந்திரனுக்கு, இசை, இலக்கியம்,ஓவியம் என நிறைய ஈடுபாடுகள். எல்லாவற்றையும் விடப் பெரிய ஈடுபாடு மனிதரிடம், மண்ணிடம், மரங்களிடம். சிறுதுளியில் அவருடைய ஈரம் உண்டு. பசுமைக் கோவையில் அவருடைய ஒளிச்சேர்க்கை கணிசமானது. எழுதுகிறவனின் பச்சையத்தில் அவருக்கு அக்கறை அதிகம். நான் ஒரு சிறிய உடல் நலிவிற்கான மருத்துவத்தில் இருந்த சமயம், அவர் எனக்கு அனுப்பி வைத்த புத்தகங்களால் பழுத்து உதிராமல் இருந்தேன். புதிதாகத் துளிர்த்தேன்.  அப்படி அவரால் துளிர்த்த இலைகள், ஏற்கனவே என் கிளையில் இருந்த இலைகளைவிடவும் அழகான கிளிப்பச்சை நிறத்தில் இருந்தன்.

ஜி.வி. குடியிருப்பில் மரம் வளர்ப்பதற்காக ஏழு ஏக்கர் நிலத்தை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். குறைந்தது எழுநூறு மரங்களாவது அதில் நடவேண்டும் என்ற திட்டம். அப்துல் கலாம் அவர்களால் நடப்பட்ட கனவு நாற்றுகள் இப்போது செடியாகி நிற்கின்றன. அந்த வரிசையில் நாஞ்சிலைத் தேர்ந்தெடுத்தது சரி. என்னையும் எதற்கு எனத் தெரியவில்லை. நாங்கள் ஒரு செண்பகம், ஒரு பவழ மல்லி, ஒரு சீமை இலந்தை கன்றுகள் நட வேண்டும் என நினைத்தாராம். பவழ மல்லி நாற்று கிடைக்கவில்லை போல. எனவே மற்ற இரண்டு மட்டும்.

அந்தக் குடியிருப்பு நிழற்சாலைகள் நிரம்பியவை. குழந்தைகளாய்த் திரிவதற்கும், முதியோராய் அமிழ்வதற்கும் அந்த நிழல்முற்றம் தொடர்ந்து அழைத்துக்கொண்டிருந்தது.  கட்டிடங்கள் எல்லாவற்றிலும் இருந்து விலகி, நான் நிழலின் நதியோரம் நிற்கவிரும்பினேன். எனக்கும் மற்ற இருவர்க்கும் இடையிலான உரையாடலை நான் தொலைத்துவிட்டிருந்த நேரம் அது. எங்கள் வாகனம் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றது. காரின் கதவை மூடிவிட்டு அந்த உத்தேச எதிர்காலச் சோலையைப் பார்த்த சமயம் எனக்கு முதுகு சொடுக்கியது. யோகாவை அல்லது தியானத்தை குவிந்து ஒன்றிச் செய்கிற போதெல்லாம் எனக்கு இப்படி முதுகு சொடுக்கும். இரண்டு தோள்ப்பட்டைகளும் உலுக்கப்பட்டு அதிர்ந்து அடங்கும். அந்த மண்ணை, வளர்செடிகளைப் பார்க்கும் போது அப்படியிருந்தது.

சற்று முன் யாரோ அவர்களை நட்டுவிட்டுப் போயிருந்தது போல, அந்தத் தோட்டத்தைப் பராமரிக்கிற இரண்டு ஊழியர்களும் எங்களை எதிர்பார்த்து அந்த மண்ணிலேயே உட்கார்ந்திருந்தனர்.  அவர்களின் உடல் மொழியில் காற்றில் அசையும் தாவரங்களின் மொழியிருந்தது. அவர்களில் மூத்தவர் என, காக்கிச் சட்டையில்  இருந்த ஒருவருக்கு, நரை முடி, நரை மீசைதாடி. நரையை விட வெள்ளையான சிரிப்பு முகத்தில்.  இன்னொருவர் சற்று இளையவர். சதா வெயில் கிடந்த பாறை மாதிரி, மலையில் எரிகிற தீ மாதிரி இருந்தது அவர் தோற்றமும் கண்களும். பக்கத்தில் நாங்கள் நட வேண்டிய நாற்றுக்கள்.

எங்களுடைய அம்மாவைப் பெற்ற ஆச்சிதான் எங்களுக்கு ஆடிப் பட்டம் தேடி விதைக்கச் சொல்லிக்கொடுத்தாள். தாத்தா ‘படவரைக் குழி’களை வெட்டிப் போட்டிருப்பார். ஆச்சி எங்கள் எல்லோர் கையிலும் விதைகளைக் கொடுப்பார்.  அவரை, பீர்க்கு, பாகல், புடலை இந்த நான்கும் தான்.  அவற்றை வாங்கியிருந்த உள்ளங்கைகளையும் விதைகளையும் இப்போது என்னால் பார்க்க முடிகிறது. யாரேனும் ஒருவன், அவன் பார்த்த முதல் விதையை, முதல் குழந்தையின் முகத்தை மறப்பான் எனில்,  அவனிடம் இருப்பதாகக் கொண்டாடப் படும் வேறெந்த ஞாபகங்களிலும் எந்த அர்த்தமும்  இல்லை எனக்கு.
“யார் ஊணுகிற விதைமுதல்’ல முளைக்கிறதுண்ணு பார்க்கலாம்” - இதுதான் ஆச்சியின் மந்திரம். இதைச் சொல்லிக்கொண்டே ஆச்சி, நாங்கள்
விதைகளை ஊன்றிய குழிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவாள். உற்றுக் கேட்டால் சிறுசிறு குமிழிகளோடு அந்தந்தக் குழிகளுக்குள்ளே உள்ள மண் எதையோ பாடுவதைக் கேட்கமுடியும்.
நாங்கள் அன்றைக்கு ராத்திரி தூங்கவே மாட்டோம்.  அந்த ஒரு இரவின் சொப்பனங்க்ளில் அவரவர் விதைத்த விதை ‘மானம் வரைக்கும்’ வளர்ந்து படர்ந்துவிட்டிருக்கும். மறு நாட் காலை பல்தேய்க்காமல் தோட்டத்துக்கு ஓடுவோம்.

எங்கேயோ இருக்கிற எங்கள் வீட்டின் சிதிலமான இறந்தகாலத்திலிருந்து
தன் எண்பது வயது பித்தவெடிப்பு நிறைந்த கால்களுடன், இந்த ஜி.வி. குடியிருப்பின் மண்ணில் அம்மாச்சி நடந்து போயிருக்கும் தடம் எனக்குத் தெரிந்தது. இந்த சாயுங்கால வெயிலில் புரண்டு கிடக்கும் மண்ணுக்கும், எழுபத்தைந்து வருடங்களுக்கு முந்திய அந்த ஆடிப்பருவ மண்ணுக்கும் ஒரே நிறம்தான், ஒரே வாசம் தான். எந்த கன்னி நிலத்தைக் கிள்ளி வாயில் போட்டாலும் மண்ணின் ருசி ஒன்றாகத்தான் இருக்கும்.

“இந்தாங்க ஸார். வையுங்க” - ரவீந்திரன் என்னிடம் செண்பக நாற்றை நீட்டினார். ஒரு மின்னல் கணம் எனக்கு, பூமா ஈஸ்வரமூர்த்தியின் ‘செண்பக மரமும் நாங்களும்’ என்ற கவிதையும் தொகுப்பும் ஞாபகம் வந்தது. எல்லாக் கவிதைகளும் இப்படி ஒரே ஒரு சிறு கணமாவது ஒரு மரத்தின் கிளையாகவோ, இலையாகவோ, பூவாகவோ கனியாகவோ இருந்திருக்கவே முடியும். ஒரு நல்ல கவிதையின் கண்ணுக்குத் தெரியாத காம்பு அந்தக் கவிதையை எழுதியவனின் மண்ணிலிருக்கும் ஒரு தாவரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன்.

நான் ரவீந்திரன் நீட்டிய அந்தசெண்பகச் செடியை அறிய முனைந்தேன். ஒரு விதையை அறிவதும், செடியை அறிவதும் மரத்தை அறிவதும் எப்போதும் என் காரியமாகவே இருக்கிறது.  அதே போல ஒரு பெயர் தெரியாத பறவையை அறிவது கூட.

நான் செண்பக நாற்றை நாஞ்சிலிடம் கொடுத்தேன். இதற்கு முந்திய பிற்பகலில் அவருடைய ஒவ்வொரு சொல்லிலும் அசைவிலும்  பொங்கிய சந்தோஷம் அவர் கைகளின் வழி அந்த செண்பக நாற்றினூடாக மண்ணில் இறங்கும் என நான் நம்பினேன்.  இரண்டு பேருமாக ஏந்திப் பிடித்து செண்பக நாற்றை, அந்த இரண்டு மனிதரின் உதவியோடு நட்டோம்.  நாற்று காற்றில் சாயாமல் இருக்க ஒரு குச்சியையும் ஊன்றி, மண்ணைத் தள்ளினோம்.  சம்பந்தமே இல்லாதபடி, அந்த ஈரமண், வேறொரு துயர நேரத்தின் மண் தள்ளலை எனக்குள் உருட்டுவது போல ஒரு மண்கட்டியாக உள்ளே விழுந்தது. தண்ணீர் விட்டோம்.

பேசிக்கொண்டே நகர்கையில், ரவீந்திரன் சொன்னது சரி. இந்த ஏழு ஏக்கர் நிலத்திலும் எந்த அலங்காரமான, அயல் மர நடுகையும் கிடையாது. எல்லாம் உள்ளூர் மரங்கள். நாட்டு மரங்கள்.  வேம்பு, புங்கை, மா, ஆல், அரசு, பவழமல்லி, செண்பகம், பன்னீர், வாதாம்,இலந்தை இப்படி.

இரண்டாவது நடுகைக்கான குழி தோட்டத்தின் ஓர விளிம்பில் வெட்டப் பட்டிருந்தது.  ஒரு மரம் மனிதர்களுக்கு மட்டுமானதல்ல. அதே அளவு பறவைகளுக்குமானது என்ற புரிதலுடன் பழ மரங்களும் தேர்வு செய்யப் பட்டிருப்பது அருமையானது.  மனிதர்கள் பறவைகளாக இருக்கவும் விரும்புகிறவர்கள் தானே. ஒரு சீமை இலந்தை நாற்றை அங்கே நட்டோம்.
ஆழமான குழியில் அதை நடுவதற்குச் சிரமமாக இருந்தது எங்களுக்கு. அந்த இரண்டாவது மனிதர் மண்ணோடு மண்ணாகக் குப்புறப் படுத்தார்.  ஒரு மழைக்காலச் செம்மண் துளைக்குள்ளிருந்து வெளிவரும் மண் புழு
போல, அவ்வளவு உயிர்ப்பான அழகுடன் அவருடைய தோற்றம் இருந்தது.நான் நாற்றை விட அவரையே பார்த்துக் கொண்டு இருந்தேன். அந்தச் சீமை இலந்தை வளர்ந்து மரமாகிப் பழுக்கிற முதல் முதல் இலந்தைப் பழம் அவருக்கே உரியது. அந்தப் பழம் உண்ணவரும் சிறுபறவையின் சிறகுகள் இதோ இப்போது விரிந்திருக்கும் அவருடைய கைகளைப் போலவே விரிந்திருக்கும்.

மூன்றாவதாக ஏற்கனவே நட்டு, செழிப்பாக வளர்ந்துகொண்டிருந்த ஒரு ஆலஞ்செடிக்கும் நாங்கள் தண்ணீர் வார்த்தோம். அந்த ஆல் ஒரு அற்புத அழகுடன் இருந்தது. குலுங்கும் செம்பழங்களுக்கும் அசையும் விழுதுகளுக்குமான வீரியமான அடையாளங்களுடன் அதன் இலைகள் ‘தட்டுவிட்டு’ அடர்ந்திருந்தன. ’ஒரு போதும் வீழ்வதற்கு இல்லை’ என்ற தாவரப் பிரகடனம் அந்த ஆலம் இலைகளில் எழுதப்பட்டிருந்தன.
நாங்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். ரவீந்திரனின் அதி நவீன ‘ஐ பேட்’ மூலம் எடுக்கப்பட்ட அந்தப் படங்களின் நேர்த்தி மிகவும் துல்லியமாக இருந்தது.
நான் ஆலஞ்செடிப் பக்கம் நின்ற அவர்கள் இருவரையும் பார்த்தேன். “வாங்க ரெண்டு பேரும். போட்டோ எடுத்துக்கிடுவோம்’ என்று அவர்களைக் கூப்பிட்டேன். தயங்கிய இருவரின் கைகளைப் பிடித்து என் பக்கம் இழுத்தேன். என் வலப்புறம் அந்த நரைத்த மீசைக்காரர். என் இடப்புறம் தீ மாதிரி, பாறை மாதிரி இருந்த இரண்டாமவர்.  ‘அங்கே பாருங்க. சும்மா சிரிங்க’ என்று ரவீந்திரன் பக்கம் காட்டினேன். வலது பக்கம் இருந்த மூத்தவர் சிரித்தார். இடது பக்கம் இருந்தவர் இருகைகளையும் கூப்பிக் கும்பிட்டுக் கொண்டு நின்றார்.  ‘கும்பிட வேண்டாம்’ என்றேன்.  செதுக்கப் பட்ட சிலை மாதிரி, அவருடைய கும்பிடுகிற தோற்றம் மாறவே இல்லை

மின்னஞ்சலில் ரவீந்திரன் அனுப்பியிருக்கிற புகைப்படங்களில், நாஞ்சிலும் நானும் நாற்று நடுகிற, தண்ணீர் வார்க்கிற படங்களை விட,  எனக்குப் பிடித்தது கடைசியாக எடுத்த அந்தப் படம்தான்.

இன்னும் பத்துப் பதினைந்து வருடங்களில் நான் எழுபத்தைந்து வயதைத் தாண்டியிருப்பேன். ஒருவேளை நடப்பதற்குச் சிரமப்படக் கூடும். ரவீந்திரன் தோளைப் பிடித்துக் கொண்டு நிற்பேன்.  இந்த இடம் பசுஞ்சோலையாக மாறியிருக்கும். நாங்கள் நட்ட செண்பகமரம் பூக்கத் துவங்கியிருக்கும். பழம் கடிக்கவந்த பறவைகள் சீமை இலந்தை மரத்தின் கிளைகளில் சிறகடித்து இடம் மாறும். இப்போது நடுத்தர வயதில் இருக்கும் அந்த இரண்டாவது மனிதருக்கு சற்று நரைத்திருக்கும்.

நான் அந்த மரங்களைக் கும்பிடுவதற்கு முன்பு, முதலில் அந்த நரைத்த மனிதனைக் கும்பிடுவேன். கிட்டத்தட்ட, அந்தப் பழைய புகைப்படத்தில் இருகை கூப்பி அவர் கும்பிட்டு நின்ற, அதே பரவசத்தோடு.


%

புகைப்படத்தில் எனக்கு வலப்புறம் திரு. ராமசாமி.     இடப்புறம் திரு.பழனி. ரவீந்திரனின் மின்னஞ்சல் மூலம் அவர்களின் பெயர்களை அறிந்துகொள்ள வாய்த்தது.

5 comments:

 1. அந்த எளிய மனிதர்களை பற்றி ( ராமசாமி, பழனி) நீங்கள் எழுதிய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்

  இரு இமயங்களும் ஒன்று சேர்ந்து மரம் நடும் அந்த காட்சி இன்னும் கண்ணில் நிற்கிறது. அத்தனை மரங்களை நடும் போதும் நாஞ்சில் அவர்கள் அங்கேயே வசித்து இருந்த போதிலும் இந்த நாளுக்காகவே, அவரை மரம் நட அழைப்பது தாமதபட்டது போலும்.

  அடுத்த முறை நீங்கள் வரும்போது போத்தனூரில் நாங்கள் அமைத்து வரும் 3௦௦௦ மரங்கள் அடங்கிய ஒரு பெரிய சோலைக்கு அழைத்துச் செல்கிறேன்.

  என்னைசெதுக்கிய ஒரு சிலரில் நீங்களும் ஒருவர். அந்த நன்றிக்காக உங்களை வணங்குகிறேன், பழனியின் அதே பணிவோடும், எளிமையோடும்.

  ReplyDelete
 2. அருமை சார் , நன்றி
  உங்களின் இந்தப் பதிவு/பகிரல் மூலம்
  செடி நட வேண்டும் , மரம் வளர்க்க வேண்டும் என்ற பழக்கம்
  இன்னும் விரிவு அடையட்டும்

  ReplyDelete
 3. //அந்த ஆல் ஒரு அற்புத அழகுடன் இருந்தது. குலுங்கும் செம்பழங்களுக்கும் அசையும் விழுதுகளுக்குமான வீரியமான அடையாளங்களுடன் அதன் இலைகள் ‘தட்டுவிட்டு’ அடர்ந்திருந்தன. ’ஒரு போதும் வீழ்வதற்கு இல்லை’ என்ற தாவரப் பிரகடனம் அந்த ஆலம் இலைகளில் எழுதப்பட்டிருந்தன.//

  ரொம்பப் பிடிச்சிருக்கு...எழுத்தும் கருத்தும்..

  ReplyDelete
 4. அருமை.... இத்தகைய பகிர்வுகள் எங்களைப் போல் இளைஞர்களுக்கு இயற்கையின் மீது ஓர் ஆவலைத் தூண்டுகிறது......

  ReplyDelete
 5. செரிந்த வருனணை.. சொற்கள் மேல் கண்கள் நகர மனதிற்கு இனம் புரியாத அமைதி..

  ReplyDelete