Friday 24 August 2012

வாழ்வெனும் பெரும் பூ







நிரம்புதல்.

நெல்லிக்காய்கள் உதிர்ந்துகிடக்கும்
எதிர்வீட்டுச் சுவரின்
சாய்ந்த நிழலில் அமர்ந்திருந்த
அவள் பக்கம்
அதுவரை பொறுக்கிய குப்பைக் கூடை.
அருகில் இருந்த கிழவனின் கால்களில்
ஆயுட்காலச் செம்மண் புழுதி.
தானியம் பொறுக்கும் பறவையாக நகர்ந்து
வெயிலில் கிடந்த உருட்டுக்கல்லை
மூக்கின் அருகில் வைத்து
நீண்ட நேரம்
முகரத் தொடங்கினான்.
பார்த்துக் கொண்டே நடந்து எனக்குள்
நிரம்பத் துவங்கியது
வாழ்வெனும் பெரும் பூவின்
வாசம்.
%
ஆனால்...

‘எல்லாவற்றையும்
எடுத்துக் கொண்டீர்களா?’
யாரிடமோ கேட்கிறார்கள் யாரோ.
எதையும் எடுத்துக் கொள்ளவில்லை.
எதையும் விட்டுவிடவும் இல்லை.
என் எல்லா நகங்களிலும்
நீல அழுக்கு., ஆனால்.
%
போலவே...

இந்த மாலை வேளை
காலை வேளையைப் போல இருக்கிறது.
எனில், காலை வேளை
மாலையைப் போல இருந்ததா?
இல்லை.
காலை வேளை
காலைவேளையைப் போலவே இருந்தது
ஒரு கலங்கிய நதியென
என்னைக் கடந்து சென்றிருக்கும்
இரவின் ஈரத்துடன்.
%

கல்யாண்ஜி

2 comments:

  1. ஒரு கலங்கிய நதியென
    என்னைக் கடந்து சென்றிருக்கும்
    இரவின் ஈரத்துடன்.


    அற்புதம் சார், நீங்கள் அறியாதது இல்லை.
    படித்த உடன் மனதில் தோன்றியது இதுதான்

    காலை சந்தியா வந்தனத்தில் அர்க்யம் என்ற ஒன்று உண்டு

    சூரியனை அழைப்பார்களாம்/அழைக்க வேண்டுமாம்
    இரவின் இருளில் ஈரத்தில் இருந்து மனிதர்களை, நதியை, இயற்கையை, விலங்குகளை
    காக்க வாரும் சூரியரே என்று

    Arghyam - Offering to sun- bring brightness- eliminate darkness, wetness

    ReplyDelete
  2. காலை மட்டுமல்ல ராம்ஜி. மூன்று வேளையும் அர்க்யம் உண்டு. காலையும் மாலையும் மூன்று முறை. மதியம் இரண்டு முறை. அப்போது சொல்லப்படும் மந்திரம் காயத்ரி மந்திரமே. அதன் பொருள் இதுவன்று.

    ReplyDelete