Wednesday 15 August 2012

பழைய துக்கமும் புதிய வெயிலும்.


இன்று வெயில் ஜாஸ்தி. அப்படியெல்லாம் வெயிலை அலுத்துக் கொள்கிறவன் இல்லை நான். எனக்கு வெயில் பிடிக்கும். மழையைப் பிடிக்கிறவனுக்கு வெயிலும் பிடிக்காமல் போகாது. ஆனால் பருவம் தப்பிய வெயில் எதையோ உரக்கச் சொல்கிறது. புரிந்துகொள்ளமுடியாத லிபியில் எழுதப்பட்டிருக்கும் அதன் வெள்ளை வரிகளை வாசிக்க இயலாதவனாக இருக்கிறேன்.

ஆடி மாதம் முடியப் போகிறது. காற்றே இல்லை. ஏதோ ஒரு வித துக்கம்
வெயிலாக, அல்லது வெயிலில் படர்ந்து கிடக்கிறது. ஒரு பறவையின் குரலும் அற்ற இந்த பிற்பகலை என்ன செய்வது எனத் தெரியவில்லை. செடிகொடி எல்லாம் அசையாது உறைந்துவிட்டன. போய் சாமி வந்தது போல, உலுக்கிவிட்டு வரலாமா என நினைக்கிறேன்.  ஒரு மரத்தை அசைக்காவிடினும், ஒரு செடியையாவது அசைத்துவிட முடியாதா போகும்? ஒரு இலை அசைந்தால் கூடப் போகும். அப்படி அசையும் இலையில் இருந்து திரவம் போல் வழியும் வெயிலை, வெயிலின் சொட்டை என் உள்ளங்கையில் இப்போது ஏந்தி நிற்க விரும்புகிறேன். வெயிலை ஒரு அகலைப் போல ஏந்தும் என்னை யாராவது செதுக்கி, அவருடைய தெருவாசலில் நட்டுவைத்தால் அப்படியே நின்றுவிடச் சம்மதம் எனக்கு.

%

இதற்கிடையில் எனக்கு வே. முத்து குமார், தேடி எடுத்து அனுப்பியிருக்கிற
இந்தக் கதையின் பெயரும், ‘துக்கம்’  என இருக்கிறது. பிரக்ஞை அல்லது கசடதபற இதழ்கள் ஒன்றில் எப்போதோ வெளிவந்த கதை இது. எழுபதுகளின் மத்தி அல்லது கடைசியில் அச்சான இக்கதையை, பிரபஞ்சன் எதிர்மறையாக விமர்சித்து, அடுத்த இதழில் எழுதியிருந்தார். போகப் போக நேர்மறை எதிர்மறை எல்லாம் பழகிப் போயிற்று. எழுதுகிறவனுக்கு அந்தக் கணக்கெல்லாம் அவசியமில்லை என்பதுதான் நிஜம்.

 இதை திருநெல்வேலி வானொலியில் வாசித்திருக்கிறேன் என ஞாபகம்.
ஒலி காற்றில் பரவும் ஒன்றுதானே.  விதையும் காற்றில் பரவும். இந்த முற்றிய வெயிலில், எருக்கல விதை போல மினுங்கி இந்த ‘துக்கம்’
கதை பரவிக்கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்கிறேன்.  இந்த அணுவைப் பிளந்த நொடியில், உங்களில் யாரேனும் ஒரு இறகு, ஒரு சருகு அல்லது எருக்கலவிதை அந்தரத்தில் பறந்து நகர்ந்துகொண்டு
இருப்பதைப் பார்ப்பீர் எனில், ஒருவேளை அப்படி நீங்கள் பார்ப்பது இந்தக் கதையாகவும் இருக்கக் கூடும்.

%



துக்கம்.
_________


அவன் காலையில் வந்துவிட்டானாம்.

நேற்றிலிருந்து அவன் வரவேண்டும் என்று காத்திருந்தார்கள். கிட்டத்தட்ட ஒருநாள் முழுவதும் கரைந்து ஒரு மெளனத்திற்கு வந்திருந்த சோகம் அவன் வந்த போது மறுபடி வெடித்திருக்கும். தந்தி கிடைத்து, கிடைத்த நேரத்திலிருந்து பஸ்கள் மாறி, ஒரு பஸ்ஸிலிருந்து இன்னொரு பஸ்ஸிற்குக் காத்திருக்கிற கணங்கள் சகிக்க முடியாததாகி, இறந்து போன அப்பாவின் முகம் மனதுக்குள் புரள அவன் வந்த இருட்டு எவ்வளவு கனமாக இருந்திருக்கும்.

வந்த நடுராத்திரியில் இரண்டாவது ஷோ கூட முடிந்துவிட்ட நேரத்தில் டவுண் பஸ் நிச்சயம் இருந்திராது. நடந்து தான் வந்திருப்பான். இன்னும் மிச்சமிருக்கிற ஹைரோடின் மரங்கள் நிழல்களை லேசாகச் சிந்தியிருக்கும். நிலா பூசியிருக்கும். ஒர்க் ஷாப் ஒன்றில் வெல்டிங் செய்து கொண்டிருக்கிற கையில் மத்தாப்புச் சிரிக்கும். பெரிய ட்ரக் ஒன்றுடன் அலுமினிய லாரி வெளியூருக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும். பெட்டிக்கடைக்குப் பக்கத்துப் பெஞ்சில் ஒரு உடம்பு குறட்டை விடும். பிய்ந்து தொங்குகிற சினிமா போஸ்டரை விலக்கி விலக்கிக் களகளவென்று சாக்கடைத் தண்ணீர் ஒடும். ட்ராபிக் கான்ஸ்டபிள் இல்லாத குடை பீட் நடந்து வருகிற இவனைப் பார்க்காமல் நிற்கும். தெப்பக்குளத்தில் இப்போதும் கூட யாராவது துவைத்திருப்பார்கள். கோபுரமும் நியான் விளக்கும் பக்கத்தில் வரும். ரஸ்தாவில் பச்சைச் சவுக்கங்களை விட்டுவிட்டு ஏணியும் பசை வாளியுமாக நோட்டீஸ்கள் சுவர்களில் ஏறும். மார்க்கெட்டில் லோட் இறக்குகிற லாரிகளில் ஒரு மூட்டையின் சிழிசலில் கத்திரிக்காய்க் காம்பின் வளைசல் எட்டிப் பார்க்கும். போலீஸ் ஸ்டேஷனின் நடையில், இருளில் புதைந்துவிட்ட அந்த நாளின் பேப்பரை ஒரு காக்கி உடை தொப்பியில்லாமல் படித்துக் கொண்டிருக்கும்.

அப்புறம் தெருவை பார்க்கத் திரும்பினதும் ரொம்பவும் அழுகை கனத்துக் கொண்டே வந்து, லாண்டிரியில் பறக்கிற கங்குச் சிவப்பை, மரக்கடை முன்னால் காத்துக் கிடக்கிற கல்லுரல்களை, குறுக்கே ஒடுகிற நாயை, தெருப் பைப்பில் கால் கழுவி விட்டுப் போகிற ஒருத்தரை எல்லாம் கடந்து, வீட்டிற்கு வந்ததும் “அப்பா” என்று வெளிச் சிதறியிருக்கும். இவனைப் பார்த்த கனத்தில் மற்றவர்கள் தான் ஹோவென்று அழுதிருப்பார்கள். முக்கியமாக அம்மா.

அவன் எப்படி அழுதிருப்பான் என்று தெரியவில்லை. உள்ளே வாசலில் போய் உட்கார்கையில் அவன் முகத்தில் அழுகையில்லை. அவன் மாத்திரமில்லை. அவனுக்கு மேல் உள்ள ரெண்டு அண்ணன்களிடம் கூட அவ்வளவு வருத்தமில்லை. நண்பர்களாக உள்ளே போன போது அவன் ஏறிட்டுப் பார்த்து விட்டுக் குனிந்து கொண்டான். ஏறிட்டுக் குனிந்து கொள்கிறது தான் இந்தச் சூழ்நிலைக்குப் பொருந்தும் போலிருக்கிறது. கூட்டமாக வந்து வந்து போகிறவர்களிடம் பேச முடியாது. அழ முடியாது. வயது குறைந்த அவனிடம் பெரியவர்கள் வந்து துக்கம் விசாரிக்கவும் போவதில்லை. அப்படியிருக்கும் போது நண்பர்களிடமும் அவன் பேசாமல் குனிந்து, அப்படிப் பேசாமல் இருந்தால் தான் சோகம் என்றாக நினைத்து, எதிரே உட்கார வேண்டியதாயிற்று.

வாசல் ரொம்ப சுருக்கம் . ஒரு பக்கத்தில், பெஞ்சில், இறந்து போன அப்பாவுக்காக வந்திருந்தவர்கள் இரண்டு, மூன்று பேர் உட்கார்ந்திருந்தார்கள். எதிர்த்த வீட்டு ஒட்டுத் திண்ணையில் நாங்கள் நான்கு பேர் உட்கார்ந்திருந்தோம். காலை முழுதாகக் தொங்கப் போட முடியவில்லை. ரொம்பத் தணிவு. அவனுடன் பேச முடியாமல் வெறுமனே என்ன நடக்கிறது என்று பார்க்க மட்டுமே இனி முடியும்.

அவன் இன்னும் அங்கே தான் உட்கார்ந்திருந்தான். ரொம்பவும் சின்னப் பையன் போலிருந்தான். நிறைய வளர்ந்திருந்த முடி சரிந்து கிடந்தது. சட்டையில்லாத உடம்புடன் அவன் மடிந்து உட்கார்ந்திருந்ததில் ஒரு லேசான அழகு இருந்தது. சோகத்தின் அழகு. பக்கத்தில் குருக்களையா வந்து ஏற்பாடுகளைப் பண்ணிக் கொண்டிருந்தார். குடங்கள், செம்புகள் என்று இறங்கு வரிசையில் இரண்டு, மூன்று பாத்திரங்களில் நூல் சுற்றிக் கொண்டிருந்தார். ஒரு பக்கத்தில் கொப்புடன் பறித்து வந்திருந்த மாவிலை.பூவும், மாலையுமாக முரட்டு இலை கீறின பொட்டலம் இருந்தது. தாம்பாளம் இருந்தது. வெங்கல மணி இருந்தது. அத்தானாக இருக்கலாம். அவர் தான் மேல் துண்டுடன் நின்று வேண்டியதைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

குழந்தைகள் எல்லோரும் வேடிக்கை பார்க்க குருக்களையா பக்கம் வந்து உட்கார்ந்து கொண்டன. இந்த துக்கத்திற்கு சம்பந்தமே இல்லாத முகங்களுடன் அவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. இப்படி நேரத்திலும், கல்யாண நேரத்திலும் குழந்தைகளுக்குக் குருக்களையா செய்கிற காரியங்கள் சுவாரசியமானதாகி விடுகின்றன. அது அவற்றின் சத்தமான பேச்சில் தெரிந்தது. இட்லி சாப்பிட்டதைப் பற்றிச் சொல்லிக் கொண்டது ஒன்று. சூடனோ பத்தியோ தேவைப்பட்டபோது நான் கொண்டாரேன் என்று முந்திக் கொண்டு ஓடின. ஓடமுடியாமல் தள்ளப்பட்ட ஒன்று அழுதது.

மறுபடியும் அந்த மேல் துண்டு போட்ட மனிதர் தேவைப்பட்ட பொருளுடன் வந்தார். குழந்தைகளை மெதுவாகச் சத்தம் போட்டார். உள்ளே போய் உட்காரச் சொன்னார்.முடியாது என்ற குழந்தைகளை வாயைப் பொத்தி விரலை வைத்து உஷார் பண்ணினார். யாரிடமோ இருந்து துண்டுச் சீட்டையும் சில்லறையையும் வாங்கி மடியில் கட்டிக் கொண்டார். “’பையை உள்ளே கொடுத்திட்டியா’ என்றார். தோளில் சங்குகளைப் போட்டுக் கொண்டு வந்தவனின் தாமதத்திற்குச் சத்தம் போட்டார். வேட்டியை மடித்துக் கொண்டு அவன் உட்காரப்போகையில் ‘இரு இரு’ என்று அவனைக் கூட்டித் தனியாகப் போய் ரெண்டு வார்த்தை பேசிவிட்டு வந்தார். தலைப்பாகையைச் சுருணையாக மடித்து அதன் மேல் சங்கை வைத்தபடி உட்கார்ந்தவன் முகத்தில் இப்போது சின்னதாக ஒரு சிரிப்பிருந்தது.

வந்திருந்த எங்களுக்குள்ளேயும் ஒன்றும் பேச இல்லாதது போல் ஒரு மெளனம் இறங்கியது. காற்றும் சாரலுமாக பொசு பொசுவென்று ஒருதடவை வீசினது. சுவரை ஒட்டிப் பக்கத்து வீட்டில் நின்று கொண்டிருந்த தென்னை சலார் என்று தோகையும் கீற்றுமாக விசிறிக் கொண்டது. இந்த வீட்டில் நடப்பதை எட்டிப் பார்ப்பது போல் கொஞ்சம் குனிந்திருந்த தென்னையில் பாளை வெடித்து உட்பக்கம் பல் பல்லாக உதிர்ந்து கிடந்தது. அழுகை வெளியில் கேட்காத, குழந்தைகள் இரைந்து கொண்டிருக்கிற, சாரல் அடிக்கிற இந்தக் காலையில் ஒரு சோகமற்ற தன்மையிருந்தது. நாட்பட்ட நோயாளியாக இருந்ததால் சோகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிறி இன்றைய நிறத்திற்கு வந்திருக்கும். எழுந்திருந்து போய்விடலாம் என்று தோன்றியது. இன்னும் நாலைந்து பேர் யாராவது உள்ளே வந்தால் நாங்கள் எழுந்திருப்பது இயல்பாக இருக்கும். குனிந்து கொண்டிருக்கிற அவன் நிமிர்ந்தாலாவது தலையை அசைத்து விட்டுப் போய்விடலாம்.

அவன் நிமிராமலே இருந்தான். ஆற்று மணலில் விரலால் கிண்டுவது போல் வெறும் தரையில் கீறிக் கொண்டிருந்தான் . திடீரென்று அவன் என்ன எழுதியிருப்பான் என்று தோன்றியது. எல்லாக் கவிதைகளிலும் அவன் இடையறாது உச்சரிக்கிற அவளுடைய பெயரைத் தான் அப்போதும் எழுதியிருப்பான் என்று தோன்றியது. இந்த சந்தர்ப்பத்தில் அவனுக்கு அந்தப் பெயர் எழுதத் தோன்றுமா ? அல்லது வந்திருக்கிற என் பெயரை, கிட்டுவை, கணபதியை, ராஜுவை எழுதிப் பார்ப்பானா? இல்லை இறந்துவிட்ட அப்பா பெயரையா ? கொஞ்சம் கொஞ்சமாக மனம் விலகி விலகி ஒரு நிசப்தத்தில் நின்று கொண்டிருந்தது.

யாருடனாவது பேசினால் தேவலை . யாரும் பேசுவதாக இல்லை. இன்னும் எதற்காகக் காத்திருக்கிறார்கள். ஏன், இவ்வளவு நேரம் ஆகிறது ? உள்ளே என்ன தான் நடக்கிறது ?

ஏறிட்டுப் பார்க்கும் போது ஒரு பையன் வெளியில் வந்தான் . வெளியில் வந்த பையனை ஒரு வளையல் கை பிடிக்க வந்து, பிடிக்க முடியாமல் நழுவி வெளியே வந்தான். தலையைக் குனிந்து உட்கார்ந்திருந்த இவன், பையனை நிமிர்ந்து பாத்துவிட்டுக் குனிந்து கொண்டான். குருக்களையா பக்கம் நின்று கொண்டிருந்த மனிதர் பையனைப் பார்த்ததும் ‘வீட்டுக்குள்ளே போ’என்றார். பையன் போகவில்லை. தூணைப் பிடித்துக் கொண்டு நின்றான்.

தூணைப் பிடித்துக் கொண்டு அவன் நின்ற விதம் இரக்கமாக இருந்தது. அழகான அந்த எழு வயது முகத்தில் ஒரு இருட்டு இருந்தது. நெற்றி முழுவதும் கலைந்து கிடந்த முடிக்குக் கீழ் மினுங்கின கண்ணில் ஒரு அலைச்சல் இருந்தது. அலைந்தது போதும் என்று நின்று விட்ட மாதிரியும் இருந்தது. இரண்டு, மூன்று குழந்தைகளின் பெயரைச் சொல்லி, ‘எல்லாரும் அவன் கூடப் போய் விளையாடுங்க. போங்க.. போங்க..’ என்று அவர் விரட்டிக் கொண்டிருந்தார். மேல் துண்டு இடுப்பில் இறங்கியிருந்தது இப்போது. குழந்தைகள் போகவில்லை. இன்னும் நூல் சுற்றப்பட்ட குடங்களையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.

அந்தப் பையன் தூணைப் பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான் . யாரையும் பார்க்காத சிரிப்பு. அருவமான எதிர் முகத்தைப் பார்த்துச் சிரிக்கிற சிரிப்பு. காற்றில் முகம் கண்டு சிரிக்கிற சிரிப்பு. கொடியில் தொங்குகிற துணி நிழல் போல் நெளிந்து சுயரூபம் கலைக்கிற சிரிப்பு. சிரித்துக் கொண்டே இருந்தவன் எங்களைப் பார்க்க வந்தான் . தேய்த்துத் தேய்த்து வந்தான்.

உள்ளேயிருந்து யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்தது.

குனிந்து தரையில் இன்னும் கீறிக் கொண்டிருந்தவன் திரும்பிப் பார்த்தான். இந்தப் பையனை வீட்டுக்குள் கூட்டி வரும் போது அவனிடம் அவசரமாகச் சொன்னார்கள். எங்களையும் பையனையும் பார்த்து விட்டு ஒன்றுமே சொல்லாமல் மறுபடி அவன் குனிந்து கொண்டான்.

எங்களிடம் வந்த பையன் சிரிப்பற்றுச் சிரித்தான். சிரித்துக் கொண்டே கேட்டான். கேட்க ஆரம்பிக்கிற வரை சிரிப்பு இருந்தது. “யார் நீ?யாரு வேணும்? அப்பாவா, அப்பா, அப்பா இல்லை. காம்ப் போயிருக்கார்?” ஒவ்வொருத்தரிடமும் இதையே கேட்டான். இதையே சொன்னான். மரத்தில் பண்ணின பொம்மை பேசின மாதிரி உச்சரிப்பில் இயல்பில்லை.

மேல் துண்டை அவிழ்த்துக் கொண்டு ஒடி வந்தார். “’டேய்..டேய்.. மாமாவை எல்லாம் தொந்தரவு பண்ணக்கூடாது’” என்று அவனை இழுத்து உட்பக்கம் போகச் சொன்னார். போகச் சொல்கிற மாதிரித் தள்ளிவிட்டார். “’அப்பா இன்றைக்கு காம்ப் போகலை. ஆபீஸ் லீவு’ என்று எங்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டார். வாசலில் வந்த பெரியவர் ஒருவரை வணங்கி உட்காரச் சொன்னார். தானும் உட்கார்ந்தார்.

பையனை எங்கள் பக்கத்தில் இருக்கச் சொன்னோம். இருந்து கொண்டான். பேசாவிட்டாலும் அந்தச் சிரிப்பு இருந்தது. சுவர்ப்பக்கம் திரும்பிக் காரை பெயர்ந்த சுவருடன் கொஞ்சம் சைகைகளால் பேசினான். வீட்டின் பக்கம் மறுபடி அந்த முகம் தெரிந்தது. இந்தப் பையன் வெளியே வரும்போது போகாமல் பிடித்து இழுத்த வளையல் கையின் முகம். இந்தப் பையனை வீட்டிற்குள் கூட்டிவரச் கூசலும் குறுகலுமாகச் சொன்ன குரலின் முகம். அது மறுபடியும் கூப்பிட்டது.

அந்தக் குரலை கேட்டதும் பையன் வழுக்கலில் இறங்கினான். தேய்த்துத் தேய்த்துப் போனான். நடைப்பக்கம் கை எட்டுகிற தூரம் வரும் வரை காத்திருந்து வெடுக்கென்று பிடுங்கிக் கொள்கிற மாதிரி பையனை உள்ளே இழுத்துக் போட்டுக் கொண்டது அந்தக் கை.

உள்ளே விழுந்த வேகத்தில் பையன் அழுதான் . அடி விழுந்தால் அழுகிற அழுகை. வெளியே போகமாட்டேன் என்று சொல்கிற அழுகை.

கப்பென்று மனதில் கண்டு கண்டாக அடைத்தது. குனிந்து கொண்டிருந்த அவனிடம் போய்க் கைகளைப் பிடித்து வெளியே போய் நிற்கிறதாகச் சொன்னான். தலையை அசைத்தான்.

வெளியில் வந்தபிறகு மேல் துண்டு போட்ட மனிதரிடம் தான் சொல்லிக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

%

பிரக்ஞை - நவம்பர்.1975.

3 comments:

  1. அருமை சார்
    அருணகிரி திரை அரங்கம் தாண்டி குறுக்குத் துறை
    செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள
    வேப்ப மரத்தின் சருகு பறந்து நகர்ந்து கொண்டு இருக்கிறது சார்
    வாசிக்கையில்.

    பிணம் தூக்கி என்ற ஒரு கதை (நீங்களா, வண்ண நிலவனா)
    டோனாவூரில் இருந்து கணபதி பஸ்ஸில் அவன் மட்டும் வர வேண்டும் இன்னமும் லேட்
    அந்தக் கதையும் கூடவே ஞாபகம் வந்தது

    ReplyDelete
  2. நான் இதுவரை படிக்காத கதையை அனுப்பிய வே. முத்துக்குமார் அவர்களுக்கு நன்றி.

    குழந்தைமையையும் , அவர்கள் உலகையும் எப்போது நாம் புரிந்துகொள்ள போகிறோம்.. ? நமது துக்கங்களை அவர்களும் சுமக்க வேண்டுமா ? என்று மிக நுட்பமாக கேள்வி எழுப்பும், கதை.

    அருமை சார்.

    ReplyDelete
  3. நான் இதுவரை படிக்காத கதையை அனுப்பிய வே. முத்துக்குமார் அவர்களுக்கு நன்றி.

    குழந்தைமையையும் , அவர்கள் உலகையும் எப்போது நாம் புரிந்துகொள்ள போகிறோம்.. ? நமது துக்கங்களை அவர்களும் சுமக்க வேண்டுமா ? என்று மிக நுட்பமாக கேள்வி எழுப்பும், கதை.

    அருமை சார்.

    ReplyDelete