எங்கள் நிலவெளி உங்களுக்கு உவப்பானதல்ல.
கருநிற நத்தையோடுகள் அப்பிய பாறைகள் நிறைந்தவை.
கருணையுடன் எப்போதோ பெய்த மழையின் ஞாபகம்
உடைய புழுதியில் விழுந்திருக்கிறது நீங்கள் வந்த தடம்.
திக்கற்ற சாலைகளில் நடக்கும் அயல்நிலப் பைத்தியம் போல்
அறுவடைக்குப் பிந்திய இடுபொருட்களில் வேய்ந்த கூரையில்
வெயில் அலைந்துகொண்டே இருக்கும்.
தழுவிக்கொள்ளத் தோதுவான மதுரமான வழவழப்பு
எங்கள் மரங்களில் வாய்த்திருக்கவில்லை.
பட்டை வெடித்த தூர்களில், சோர்ந்த கண்களுள்ள கால்நடைகள்
கழுத்தை உரசிக்கொள்வதைப் பார்க்க முடியும்.
புளிப்பிலிருந்து இனிப்பாகும் கனிகள் அல்ல,
கசப்பிலிருந்து இனிப்பாகும் காய்ப்பு உடையவை.
கோடிக்கணக்கில் சூடத்தகாத நுண் பூக்கள் உதிரும்
அதிகாலைகளை அதனிடமிருந்தே பெறுகிறோம்..
கருஞ்சிறகுப் பறவைகள் தகரம் உரசும் கருப்புக் குரலில்
‘விழித்திரு, பசித்திரு’ பாடலைப் பாடுகின்றன..
தணிந்த குத்துச் செடிகளில் கூடு பின்னும்
மண் நிறச் சிறு குருவிகளின் பறத்தலோசையில்
கிழிபடும் பிற்பகலில் வந்திருக்கிறீர்கள்.
சமையலுக்கு அடுப்புக்கூட்டும் இரவு வரை
உங்களுக்கு நெடுநேரக் காத்திருப்பு இருக்கும்.
எப்போதும் நிழலடியில் கிடக்கிறது
மூன்று தலைமுறை தாண்டிவந்த நார்க் கட்டில்.
வேண்டுமானால் நீங்கள் அதில் தனியமர்ந்து
நகரத்திலிருந்து கொண்டுவந்திருக்கும் உங்கள்
கனவுகளுடன் கதைத்துக் கொண்டிருங்கள்.
என்ன இருக்கிறது? என கிராமத்தை வெறுத்தொதுக்கி நகரேகியவர்களை அந்நகரில் 'என்ன இல்லை'யென உணர்த்தி மறுபடியும் கிராமத்துக்கு ஈர்க்கும் மகத்துவம் பட்டை உரிந்த அம்மரத் தூர்களுள் ஒட்டிக் கிடக்கிறது.
ReplyDelete