Friday, 3 November 2017

வியனுலகு முழுவதையும் ...






நான் நன்றி சொல்ல வேண்டியது சந்தியா பதிப்பகத்திற்கா? அல்லது மரபின் மைந்தன் முத்தையாவுக்கா? நன்றி சொல்லவேண்டும் என்ற நல்லுணர்வு சுடர்ந்த பின், இவருக்கு அவருக்கு என்னாமல் எல்லோர்க்கும் நன்றி சொன்னால் தான் என்ன? எல்லோரும் என் நன்றிக்குரியோர் தாமே. ‘என்னை நன்றாக இறைவன் வைத்தனன்’ எனில், அதை விடவும் நன்றாக,   அதனினும் அவனினும் மேலாகத்தானே  என்னைச் சுற்றியிருக்கிற எல்லோரும், அல்லது நான் சுற்றிவரும் எல்லோரும் என்னை வைத்திருக்கிறார்கள்.

எனக்கு நிகழ்ந்த எல்லா நற்செயலும் தற்செயலே என்றே நான் நம்புகிறேன். நேற்றும் அப்படி மற்றொன்று நிகழ்ந்தது. அஃதொப்பதில்லாத விரல்களின் அடுத்தூர்தலில், சந்தியா பதிப்பகத்தின் அந்தப் பதிவு இருந்தது முகநூலில். ஜெயகாந்தன் உரை குறித்த ஒரு ’சவுண்ட் க்ளௌட்’  இணைப்பு அது.. சில முகங்களைத் தாண்டிப் போகமுடிவதில்லை. முகம் பார்த்தவுடன் குரல் கேட்கத் துவங்கும் நிலைகளும் உண்டுதானே. நான் ஒலியின் மேகங்களுக்கு உடனே நகர்ந்தேன்.

சவுண்ட் கிளௌட் பதிவு மரபின் மைந்தன் முத்தையாவால் இரு பகுதிகளாகச் செய்யப்பட்டிருந்தது. பாரதியின் ஆன்மீகப் பார்வை என்ற தலைப்பில் அல்லது பொருளில் ஜெயகாந்தன் நிகழ்த்தியது. கோவையிலாக இருக்க வேண்டும், ‘ நண்பர்களே’ என்று துவங்கி, ஒரு மௌனம் காத்து, அந்த மௌனத்தில் மடியிலிருந்து பீச்சுவது போல் மறுபடியும், ‘ நண்பர் சிதம்பரநாதன் சொன்னது போல இது ஒரு வளமான கூட்டம்’ என்று மேற்செல்வது அப்படித்தான் யூகிக்க வைக்கிறது.
‘வித்தையேதும் கல்லாதவன், என்னுளே வேத நுட்பம் விளங்கிடச் செய்தனை’ என்று அங்கிருந்து அவர் பாரதியின் ஆன்மீகப் பார்வையை விதந்தோத, ஓத நிச்சயம், அந்தச் சபை அன்று வேதபுரம் ஆகியிருக்கும். அங்குறு சபையோர் ஒரு வேத வாழ்வு வாழ்ந்திருப்பர்,

’வியனுலகு முழுவதையும் அமுதென நுகரும் வேத வாழ்வு ‘ என்பதன் நீட்சியாகவும் மடங்குகளாகவும் நிறுவுவதாகவும், ஜெயகாந்தன் அவருக்கே உரிய தோய்வோடும் ஆய்வோடும், முரணோடும் இசைவோடும் ஒரு பாரதி தரிசனம் உண்டாக்குகிறார். மிகவும் மேற்கொளப்படுகிற, “ விஸ்வரூபம் என்பது காட்டுவது அல்ல, காண்பது’ என்ற தெறி அந்தப் பேச்சிடை மின்னிய ஒன்றுதான்.

நான் அந்த உரையைக் கேட்ட உன்மத்தத்தில், ஜெயகாந்தனின் குரலில் எனக்குள் அவர் பேசிக் கேட்டவற்றுள் நினைவுறுவதை, அவர் பாணியில் எனக்குள் போலிசெய்துகொண்டே இருக்கிறேன். அது ஒரு சிறு பிள்ளைத்தனம் எனினும், யாரும் அருகிலற்ற இந்தத் தனிமையில் அதுவே எனக்கு விருப்பமான பெரும் பிள்ளைத்தனமாகவும் படுகிறது.

பொன்னீலன் பாரதியைப் பேசுகிற குரலில், பாரதி கிருஷ்ணகுமார் ஜெயகாந்தனைப் பேசுகிற குரலில் நான் என்னுடைய குரலை வடிவமைத்துக்கொண்டு,, மறைவாக நமக்குள்ளே, பேசத் துவங்குகிறேன்.

‘நண்பர்களே, நாம் பாரதியைப் பயில்வோம். ஜெயகாந்தனைப் பயில்வோம். அப்படிப் பயில்வதன் முகத்தான் வேதத்தைப் புதுமை செய்வது போல, பாரதியைப் புதுமை செய்வோம். ஜெயகாந்தனைப் புதுமை செய்வோம். நாம் புதுமை செய்ய அவசியமின்றி, அவர்களே புதுமையுறுவர். அப்படி அவர் புதுமையுறுவர் எனில் நாம் புதுமையுறுவோம். நம் வாழ்வு புதுமை கொள்ளும். வியனுலகு முழுவதையும் அமுதென நுகரும் வேதம் நமக்கு வசப்படும்… .. “
*




3 comments:

  1. பொன்னீலன் பாரதியைப் பேசுகிற குரலில், பாரதி கிருஷ்ணகுமார் ஜெயகாந்தனைப் பேசுகிற குரலில் நான் என்னுடைய குரலை வடிவமைத்துக்கொண்டு,, மறைவாக நமக்குள்ளே, பேசத் துவங்குகிறேன்.

    அருமை ஐயா...

    ReplyDelete
  2. வியனுலகு முழுவதும் அமுதென நுகரும் வேதமாக ஒவ்வொரு படைப்பாளியின் படைப்பும் நுகரப்பட வேண்டும் தான்..அதுவே அவர்களுக்கும்,அவர் தம் படைப்புக்கும் நாம் தரும் மரியாதை.

    ReplyDelete
  3. வியனுலகு முழுவதும் அமுதென நுகரும் வேதமாக ஒவ்வொரு படைப்பாளியின் படைப்பும் நுகரப்பட வேண்டும் தான்..அதுவே அவர்களுக்கும்,அவர் தம் படைப்புக்கும் நாம் தரும் மரியாதை.

    ReplyDelete