Friday 6 September 2013

பறந்தலையும் வண்ணத்துப் பூச்சி.



எனக்குப் பழக்கமான, என் பதிவில் இருக்கிற எண் தான் அது.என்னுடைய சினேகிதன், உறவினன் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் அவனை. அவனுடைய எண் அது. சமீபத்தில் அந்த எண்ணில் இருந்து எந்தத் தொடர்பும் இல்லை. இது அவனுடைய குறுஞ்செய்தி நேரமும் கிடையாது.

அதிகாலைகளில் பின் இரவுகளில் வரும். ராஜேஷ் வைத்யா கேட்டுக்கொண்டு இருப்பதாக. ‘அனல் மேலே பனித்துளி’ பாடலின் வரிகள் எத்தனை அருமையானவை என்று. ‘மலர்கள் நனைந்ததுபனியாலே’ எந்தப் படத்தில்? இதய கமலமா வேறு ஏதாவதா என்று அந்தக் குறுஞ்செய்திகள் இருக்கும்.

இந்தக் குறுஞ்செய்தி வேறு விதமாக இருந்தது. முற்றிலும் அந்தரங்கமான குரலில், ‘எனக்கும் உன்னை ரொம்ம்ம்ம்ம்பப் பிடிக்கும் புஜ்ஜிம்மா’ என்று சிகை ஒதுக்கி, யாரோ ஒருவரின் காதோரத்திலோ சொல்லிகொண்டு இருந்தது.

நமக்குத் தெரியாதா? நாமும் இந்த மைல் கற்களைத் தாண்டிய இந்த நெடுஞ்சாலையில் தானே இந்த இடத்திற்கு வந்து சேர்ந்து இருக்கிறோம். வேறு எவருக்கோ போய்ச் சேர்திருக்க வேண்டிய ஒன்று. ஒருவேளை அவனுடைய பதிவின் ‘க’ வரிசைப் பட்டியலில், என் பெயருக்கு உடனடியாக முன்போ அடுத்தோ இருக்கிறவருக்குப் போகவேண்டியது அது என்று தெரிந்தது. நான் அது எனக்கு வந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை. ’அப்படியா சங்கதி’ என்று பேசாமல் விட்டுவிட்டேன்.

அதெப்படி அவனுக்கு தவறி அனுப்பிவிட்டது தெரியாமல் போகும்? புஜ்ஜிம்மாவிடம் இருந்து பதில் வந்திருக்காதே. என்னுடைய எண்ணுக்கு அனுப்பப்பட்டதைப் பார்த்திருப்பான். கூச்சமாக இருந்திருக்கும். யாரோ எட்டிப் பார்த்துவிட்டது போல. கல் விழுந்த வட்டம் அடுத்தடுத்த வட்டங்களாகி கரை தொட்டு, தண்ணீர் மீண்டும் தகடான பின், எனக்கு மீண்டும் அவனிடமிருந்து ஒரு செய்தி வந்தது.

‘நான் இப்போது ஒரு பட்டாம் பூச்சியுடன் பயணம் செய்துகொண்டு இருக்கிறேன்’என்று , என்னுடைய பழைய பட்டாம் பூச்சிக் கவிதை ஒன்றை, அவனுடைய ஞாபகத்தில் இருந்து, ஞாபகமறதி தவறவிட்ட வரிகளுடன் இருந்தது. இது ஒரு தூண்டில், முந்திய குறுஞ்செய்தி கிடைத்ததா என்ற ஆழம் பார்த்தல்.

நான் அந்த புஜ்ஜிம்மா பற்றி எதுவும் கேட்கவில்லை. சொல்லவும் இல்லை. அவன் அரைகுறையாக அனுப்பியிருந்த என்னுடைய கவிதையை, முழுமையாக

பாதி வழியில் / ஓடுகிற பஸ்ஸில்
ஏறி இடம் தேடிப்
பறந்தலைந்த வண்ணத்துப் பூச்சி
நான்
இறங்கின பின்பு
மனதில் உட்காரும்
ஒரு கவிதையின் மேல்.

என்று மட்டும் பதில் அனுப்பி வைத்தேன். வண்ணத்துப் பூச்சி மனதில் உட்கார்ந்ததா, கவிதையில் உட்கார்ந்ததா என்ற தகவல் இதுவரை இல்லை. எனக்கு அந்தத் தகவல்கள் அவசியமும் இல்லை.

என்னைப் பொறுத்தவரை வண்ணத்துப் பூச்சிகள் என்பது வெறும் தகவல்கள் மட்டும் இல்லை. அதற்கும் மேலே.
11Like ·  · Promote · 

1 comment: