அந்தத் தெருப் பெயர் கூட எனக்குத் தெரியாது.
ஆனால் அந்தத் தெருவில்தான் அவரை எப்போதும் பார்த்து வருகிறேன். அடுத்தடுத்து மூன்று பிள்ளைகள். இரண்டு பையன்கள், ஒரு பெண். குழந்தைகள் இல்லாமல் அவரைப் பார்த்ததில்லை. தலையில் ஒரு பாத்திரம் இடுப்பில் ஒரு பாத்திரம் எனத் தண்ணீர் எடுத்துக் கொண்டு போகிற போது கூட ஒரு பையன் அவர் கையைப் பிடித்துக்கொண்டே நடப்பான். ஒரு பெண் குழந்தை அவர் பின்னாலேயே போகும்.
தளர்வாடை என நான் சொல்கிற நைட்டிதான் அவருடைய முழு நாள் உடையாக இருக்க வேண்டும். அந்த தொண்ணூற்றுச் சொச்சம் இருக்கும் மிகத் தளர்ந்த முதிய பெண்ணை அந்த வீட்டுக்கு உள்ளே இருந்து மிகக் கனிவுடன் அழைத்து வந்து முன்பக்கத்துப் பிரம்பு நாற்காலியில் அமர்த்தும் போதும் அதே உடைதான். அந்த நேரத்தின் சித்திரம் இப்போதும் கூட எனக்குள் தொங்குகிறது. வேலை செய்கிற மற்றொரு வீட்டுக்கு மீனோ முட்டையோ வாங்கிக்கொண்டு போகும் போதும் நைட்டியில்தான். கைபேசியில் பேசிக்கொண்டே மஞ்சள் சரக்கொன்றை உதிர்கிற வீட்டுப் பக்கத்தில், அவரைப் போல இன்னொரு வீட்டில் வேலை பார்க்கிறவரிடம், அல்லது தேய்ப்பு வண்டிக்காரரிடம் பேசும் போதும் அதே தளர்வாடை.
தான் அழகு என்று அவருக்குத் தெரியும். அவருடைய உயரம், கருப்பு நிறம், அதையெல்லாம் விட எப்போதும் அவரிடம் இருக்கும் துறுதுறுப்பின் வெளிச்சம் அவர் எதிரே வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பை அந்தத் தெருவில் ஒவ்வொரு முறையும் எனக்கு உண்டாக்கி இருக்கிறது.. பார்க்காதது போல் பார்ப்பதையும், பார்க்கப் படாதது போல பார்க்கப் படுவதையும் யார்தான் விரும்பவில்லை. ‘பராக்குப் பார்த்துக் கிட்டே நடக்காதேண்ணு எத்தனை தடவை சொல்லுதது’ என்று நான் அவரை எதிர்கடக்கும் நுட்பமான சிறுபொழுதில், அவர் அவருடைய இரண்டாவது பையனைப் பார்த்துத்தான் சொல்கிறார் என்பதை நீங்களும் நானும் நம்புவோமாக, அதற்கும் அப்பால் புரிந்துகொண்ட ஒரு சிறு புன்னகையுடன். அகராதிக்கு வெளியே வழியும் அர்த்தங்கள் உடைய சொற்கள் சிந்தாத வாழ்வின் பக்கங்கள் உண்டா?
இன்று அவரைக் காய்கறிக் கடைப் பக்கம் பார்த்தேன். அந்தக் கடையில் ஏதோ வாங்கிக் கொண்டு திரும்பிக்கொண்டிருந்தார். அவருடைய வழக்கமான உடையான தளர்வாடையில் இல்லை. சேலையில் இருந்தார். வாடா மல்லிக் கலர் சேலை. சற்று அதிகப் பளபளப்பு உடையது. இடையிடையே மினுங்கும் பூக்கள் தைக்கப்பட்டிருந்தன. அந்த ஆழ்ந்த கருநீலத்தில் போர்த்தப்பட்டு அவர் பெரும் கனிவுடன் நடந்துவருவது நன்றாக இருந்தது. நான் எதிரே வருவதை அவரும் பார்த்துவிட்டார். தான் முதல் முறையாக இப்படி ஒரு முழுமையான உடையில் பார்க்கப்பட்டதில் அவருக்கு சந்தோஷம், நிறைவு, வெட்கம். தலை குனிந்தே இருந்தது. வகிட்டுப் பிளவு தெரிந்தது. உள்ளிருந்து பொங்கும் அத்தனை பெரு ஊற்றையும் உதடு நடுங்கும் ஈரச் சிரிப்புக்குள் தடுத்துவிட முடியும் போல.
நான் அவரை எதிர்கொண்டு கடந்து போகிற அந்தச் சிறுகணம் அது. அவர் என் முகத்தைப் பார்த்தார். ‘காய் வாங்க வந்தீங்களா ஸார்?’ என்று மிகத் தணிந்த குரலில் கேட்டார். சிரித்தார். போய்விட்டார். ஒரு மீன் கொத்திச் சிறகுகளுடன், வாடாமல்லி நிறம் பறந்தது.
நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை.
எல்லாக் கேள்விகளும் நம்மிடம் பதிலை எதிர்பார்ப்பதும் இல்லை. எல்லாக் கேள்விகளுக்கும் நாம் பதில் சொல்லும் அவசியமும் இல்லை. இது கூட நமக்குத் தெரியாதா என்ன?

இன்று முதல் நான் உங்களுடைய விசிறி .
ReplyDelete