மீண்டும் முத்து குமார்
மீண்டும் அகழாய்வு
மீண்டும் ஆதிச்ச நல்லூர்
%
அன்புமிக்க வண்ணதாசன் சாருக்கு,
வணக்கம். நேற்று முன் தினத்திற்கு முன் தினம் நிறைய விஷேசம். ஆனித் தேரோட்ட திருவிழா நிறைவுநாளையொட்டி பல்லக்குகளில் அப்பனும், அம்மையும் வீதி உலா.. தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி.. அப்புறம்நிறை பெளர்ணமி. எங்கள் வீட்டு மொட்டைமாடியிலிருந்து பார்க்கையில் வெளிர் நீல வானத்தில்சின்னஞ்சிறு திட்டுகளாக, தவழப் பழகிய குழந்தை நெட்டித் தள்ளிய பால் பாட்டிலிலிருந்து சிந்திச் சிதறியவெண்ணிறத் திட்டுகளாக திரிந்திருந்த மேகத்திரட்டுகளுக்கு மத்தியில் நிலா தெளிவாக தெரிந்தது.கல்லூரிப் பருவகாலத்தில் ஒருவித சந்நியாச மனோபவத்துடன் கடனாநதிக் காடுகளில் சுற்றிதிரிந்தகாலத்தில் பார்த்த பெளர்ணமி நினைவுக்கு வந்தது. நானும் துறவி நிர்மலானந்தாவும் நீண்ட கல்திண்டில்ஆளுக்கொரு திசை பார்த்து அமர்ந்திருந்தோம். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவர் இந்த நிலாவெளிச்சத்தில் உனக்கென்ன தோன்றுகிறது எனக் கேட்க, யாரையாவது வீணை வாசிக்கச் சொல்லி கேட்கவேண்டும் போல இருக்கிறது என்றேன். தனக்கு அரியலூரில் பழகிய சிலம்பாட்டம் ஞாபகத்துக்குவருகிறதெனச் சொல்லி நீண்ட கம்பொன்றை எடுத்துக் கொண்டு சிலம்பு சுற்ற ஆரம்பித்துவிட்டார்.விறுவிறு கம்பு நாதத்தின் சந்தமாக அவர் அணிந்திருந்த ஸ்படிக மாலையும், ருத்ராட்ச மாலையும்ஒன்றோடொன்று உரசிக் குலுங்க, அன்று  வேறொர் இசையில் நான் லயித்தேன். துறவியானாலும்,இளைஞனானாலும் எல்லோர்க்குள்ளிருக்கும் ஆசையை சற்று கிள்ளி கிளறிப் பார்க்க வைத்து விடுகின்றனஇது போன்ற பெளர்ணமி நிலாக் காலங்கள். நேற்றைக்கு முன் தினத்திற்கு முன் தினமிருந்த பெளர்ணமிவெளிச்சத்தின் மிச்சம் முந்தா நாளுமிருந்தது ; நேற்றுமிருந்தது ; இன்றும் இருக்கின்றது; நாளையும்இருக்கலாம். நாளைய இரவுக்குப் பிந்தைய விடிகாலையில், வானத்தின் எல்லையிலே சிவந்து எழுதுகிறசூரியன் பொன்னிற வண்ணத்தை வரையலாம். இயற்கையின் வண்ணக் கலவையினை மனத்தினுள்பெருக்க முடியுமா ?
முன்பொரு முறை வாசித்த பொதுவுடைமைக் கவிதையின் வரிகள் இத்தருணத்தில் நினைவில்ஊர்கின்றன, நேற்றைக்கு முன் தின நள்ளிரவில் நகர்ந்த நிலா போல. இந்தக் கவிதையின் 'சிகப்பு'நெடியும், வண்ணமும் எனக்கு நிரம்பப்  பிடித்திருக்கிறது ; கூடவே பெங்களூருவிலுள்ள உங்களைநினைத்து நினைத்து நாசி உளைய வைத்திருக்கிறது .
%
எத்தனைதான் வாழ்க்கை 
இடம்மாறிப் போனாலும் 
குத்துகிற முட்காடாய்க் 
கோலம் எடுத்தாலும் 
நீராடும் விழி, வேலை 
நிறுத்தங்கள் செய்தாலும் 
போராடு எனக் கால்கள் 
புறப்பட்டு விட்டாலும் 
இன்னும் கவிதைக்கு 
இடமுண்டு, தொட்டியிலே 
சின்ன இதழ் விரித்துச் 
சிரிக்கின்ற பூப்பார்த்து 
நிற்பதற்குக் கூட 
நேரமுண்டு, இம்மனதை 
விற்பதற்கு இல்லையென 
விதிசெய்வோம் தோழர்களே ! 
அந்தமன நிழலின் 
அடியிருந்து நம்பிக்கை 
சிந்துகிற உதிரிப்பூச் 
சேகரித்து வருகின்றேன் 
சூடுங்கள், சூடாதோர் 
சுற்றிநின்று என்னுடனே 
பாடுங்கள். பாடாதோர் 
பாடலிதைக் கேளுங்கள் 
சொல்லுதற்கும், சொல்லாமல் 
சொல்லத்தான் நினைத்துவிட்டுச் 
செல்லுதற்கும் தோன்றுகிற 
சிநேகிதத்தின் நெகிழ்ச்சியினில் 
எல்லோர்க்கும் பொதுவாகி 
இதையிங்கு சொல்லுகிறேன் 
வெல்லுங்கள் ! வாழ்க்கை 
வீதிகளில் வாய்ப்புக்கள் 
மெல்ல வரலாம் 
மிகவிரைந்தும் தான் வரலாம் 
எல்லோர்க்கும் ஒருவாய்ப்பு 
இடையினிலோ முதலினிலோ 
சொல்லாமல் நிச்சயமாய்ச் 
சுடர்விளக்கு ஏந்திவரும் 
வருகின்ற சுடர்விளக்கு 
வாய்ப்பதனின் வெளிச்சத்தைப் 
பெறுவதற்கும் அப்படிநாம் 
பெற்ற வெளிச்சத்தில் 
நாளை உலகத்தை 
நமதாக்கி நடப்பதற்கும் 
வேளை இதுதான் 
வெல்லுங்கள் தோழர்களே ! 
வென்றவுடன் வாழ்வின் 
வெற்றிச் சிகரத்தில் 
நின்றவுடன் எல்லாம் 
நிறைந்துவிடு  மா என்ன ? 
நிறைவதுவும் குறைவதுவும் 
நெஞ்சத்தைப் பொறுத்ததென 
அறிவதுதான் வாழ்வென்று 
அறியுங்கள் தோழர்களே ! 
வாழ்க்கையதன் வெற்றி 
வாசல்களில் நின்றாலும் 
தோள்மீது மலர்மாலை 
தொடர்ந்து விழுந்தாலும் 
பள்ளத்தில் மேட்டில் 
பக்கத்தில் தூரத்தில் 
உள்ளத்துள் உறவுக்குள் 
ஊருக்குள் எனப்பலவாய் – 
உமைச் சுற்றி வாழ்கின்ற 
உலகத்தை, உலகத்தின் 
சுமைதாங்கி வருகின்ற 
சுற்றத்தை, சுற்றத்தின் 
சகமனிதன் படுகின்ற 
சந்தோஷம் துக்கத்தை 
முகத்தோடும் அகத்தோடும் 
முழுதாகப் பகிருங்கள் 
தனியாக ஒற்றையடித் 
தடம்போட முனையாமல் 
இணையுங்கள் மக்களுடன் 
இவ்வுலகம் பொதுவுலகம் 
பணம் வேண்டாம் உலகமுடன் 
பாலம் இட அவரவர்கள் 
மனம்போதும் பிரியத்தால் 
மாலையிட தோழர்களே ! 
பிரியத்தால் மாலையிட்டுப் 
பேசுகையில் இவ்வுலகம் 
விரிகிறது தாய்மடியாய் 
விளையாட தோழர்களே ! 
ஆடுகையில் புல்தரையாய் 
அணிவகுத்துப் போராட 
ஒடுகையில் போர்க்களமாய் 
உருமாறும் வாழ்க்கையதில் 
எல்லோரும் ஒன்றாக 
இணையுங்கள் வானத்தின் 
எல்லையிலே சிவந்து 
எழுதுகிறதோர் பொன்னுலகம் 
%கல்யாண்ஜி 
வே.முத்துக்குமார் 
 | 
தனியாக ஒற்றையடித்
ReplyDeleteதடம்போட முனையாமல்
இணையுங்கள் மக்களுடன்
இவ்வுலகம் பொதுவுலகம்
பணம் வேண்டாம் உலகமுடன்
பாலம் இட அவரவர்கள்
மனம்போதும் பிரியத்தால்
மாலையிட தோழர்களே !
அருமை சார் கவிதையும், பௌர்ணமி வரிகளும்