Tuesday 3 July 2012


சின்னச் சின்ன வாக்கியங்கள்..
------------------------------------------

"சின்னச் சின்ன வாக்கியங்கள்''  வாசித்துக் கொண்டிருக்கிறேன்.  பியரெத்  ப்லூசியோ   எழுதியது.   வெ . ஸ்ரீராம்  மொழிபெயர்ப்பு.  ஆனால்  அப்படித் தெரியாது .   நீங்களோ ,  நானோ  அல்லது இதை வாசிக்கிற யாருமோ
அவர்களே  இதை எழுதி,  வாசித்துக்   கொள்கிறது போலத்தான் .இருக்கிறது .
ஒரு  தாய்க்கும் மகளுக்குமான உலகையும் வாழ்வையும்  அதனுடைய   மிக நெகிழ்வு நிரம்பிய உணர்வு நிலைகளையும்  அண்மையான  கோணத்தில் சொல்கிற இதன்  ஒவ்வொரு  சின்ன வரியையும் ,  சின்னச் சின்ன வாக்கியத்தையும் ,  எனக்கும்  என்னுடைய முதிர்ந்த  தந்தைக்கும்  இடையிலான வாழ்வையும் உணர்வுகளையும்   சொல்கிறது  போல  இருக்கிறது.

முதல்  பத்தியில் இருந்து அப்புறம் நகர்ந்து, தொடர்ந்து  இதை வாசித்துக் கொண்டிருக்கும் மனநிலையோடு   நான் எழுத ஆரம்பித்தால்,  ஒரு  வேளை   அது   ஒரு அறுபத்து  ஐந்து  வயது மகனுக்கும் ,  எண்பத்து  ஏழு வயதுத்  தகப்பனுக்கும் இடையிலான  வாழ்வின்  நெடும்  பாலத்தையும் அதன் கீழ்   பெருகியோடும் துல்லியமானதோர்    பெரு  நதியையும்  நமக்கு முன்னால் கொண்டுவந்து எழுத்தில்  நிறுத்துவதாக  இருக்கும்..


இந்தப்   புத்தகத்தை  சாம்ராஜிடமிருந்து  பெற்றேன். அவர் இன்னும் வாசிக்கக் கூட இல்லை.   அவர் வாசிக்காத புத்தகங்களும் வாசித்துக் கொண்டிருக்கிற  சில  புத்தகங்களும்  மேஜையில் இருக்க , அவர்  வாசித்து முடித்த மிக நல்ல புத்தகங்கள்  அடுக்கப் பட்ட இரும்புச் சட்ட வரிசையின் அண்மையில்,  மிகப் பிந்தி  உறங்கிய  அந்த இரவு எனக்கு,  என்னுடைய   அண்மையான தினங்களில்  மிக முக்கியமானதும்  விருப்பமான ஒன்றுமாக இருக்கிறது..

இரண்டு இரண்டே  கால் மணி அளவில்தான்  கண் அயர்ந்திருப்போம்.   நான்  அந்தப் புத்தகங்களின்   அண்மையில், முந்திய இரவின் சாம்ராஜ் சொற்களை  ஏற்று இழுத்த சுவாசம்  அதன்  வெதுவெதுப்பும்   உண்மையும்  மாறாமல் என் மீது உறைந்திருக்க,  அப்படியே இறந்து கிடக்க  விரும்பினேன்.   ஆகாச முத்து எனும் அவருடைய அறை  நண்பரும் இல்லாமல்,  சாம்ராஜ் மட்டும்  மறுநாள்   எதிர்கொள்ளப்போகிற  ஒரு துக்ககரமான காலையைப் பற்றிக் கூட  அப்போது நான் கொஞ்சநேரம்   யோசித்துக் கொண்டேன்.

சாக   நினைக்கிறவர்களை  வாழ்வு  அப்படியெல்லாம் சுலபமாகச்  சாவதற்கு  அனுமதித்து விடாது.   அது  அசோகமித்திரன் கதைகளில் வரும்  மற்றொரு
தினத்தை எனக்குத் தருவது போல,  நான் கேட்பதற்கான  முதல் சத்தத்தை
தண்ணீருக்காக ஒரு வயதான அடி பைப்பில் யாரோ  தளர்வே  இல்லாமல் இயக்குவதில் இருந்து தந்தது.  அந்தப் பைப்புக்கும் அதை அடிக்கிற கைக்கும்
ஒரு தவிர்க்க முடியாத  நீண்ட கால உறவு இருப்பதை,  அந்தச்  சத்தம்  என்
ஜன்னலுக்கு வெளியே துருப்பிடித்த குரலில் சொல்லிச்  சொல்லித் தீரவே இல்லை . ஒரு தண்ணீருக்கான குரலைக் கேட்ட பிறகு எந்த மனிதனால் செத்துப் போகமுடியும்?  நான்   மிகுந்த  அமைதியுடன்,  சாம்ராஜ்    தந்த இந்த 'சின்னச்  சின்ன வாக்கியங்கள்'' புத்தகத்தையும் , ஷோபா சக்தியினுடைய
'எம்..ஜி..ஆர்..கொலை வழக்கு'' சிறுகதைத் தொகுப்பையும்  ஒரு  கசங்கிய ஜவுளிக்கடைப் பையில் வாங்கிக் கொண்டு  வந்தேன்.

'வாழ்வு'', 'மரணம்'' இரண்டும் சின்னஞ் சிறு சொற்கள்தான்.. ஆனால்  வாழ்வதும் , சாவதும் அப்படி ஒன்றும் சின்னச் சின்ன வாக்கியங்களுக்குள்
அடங்கிவிடுவன  அல்ல..

பத்தொன்பது அத்தியாயங்களை  வாசித்து விட்டேன்.  இன்னும் ஏழே  ஏழு
அத்தியாயங்களில்  என் வாசிப்பு முடிந்துவிடும்.   அவ்வளவு நிச்சயமாகவும்
உத்தரவாதமாகவும்  இந்த வாழ்வைப் பற்றிச் சொல்லிவிட முடியுமா  என்ன?

%


3 comments:

  1. சின்ன சின்ன வாக்கியங்கள் எந்த பதிப்பகம் சார்?

    ReplyDelete
    Replies
    1. க்ரியா, சென்னை வெளியிட்டிருக்கிறது.

      Delete
  2. ஒரு எழுத்தாளரின் வாசிப்பு விவரிப்பு அருமை சார்.
    உங்களின் இந்த ஒரு பக்க கட்டுரையே அந்த புத்தகம் குறித்து பல சிந்தனைகளை, எதிர்பார்ப்புகளை
    உருவாக்குகிறது

    ReplyDelete