Thursday, 19 July 2012

சந்தோஷம்இன்று நீங்கள் நடைப்பயிற்சி செல்லும்போது, உங்களுடைய பாதத்தை,
பாதி கடித்தும் கடிக்காததுமாக, பச்சையும் மஞ்சளுமான நிறத்தில், ஒரு மாம்பழம் தடுக்கியதா?   இன்று உங்கள் வீட்டில் வாசல்  தெளிக்கையில், நேற்றுப் போட்ட கோலத்தின் மேல், செக்கச் சிவப்பாக ஒர் வாதாம்பழம் கிடந்ததா?    பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிவருகிற உங்களுடைய பிள்ளையின் கையில் ஒரு காக்கைச் சிறகு இருக்கிறதா? 

சந்தோஷப்படுங்கள், உங்களுடைய இந்த நாள் நன்றாகத் துவங்கி இருப்பதற்காக.  சந்தோஷப்படுங்கள், இந்த நாள் நன்றாக நிறைந்துகொண்டு இருப்பதற்காக.  ஒரு கடிபட்ட மாம்பழத்திற்காக, ஒரு வாதாம்பழத்திற்காக், ஒரு காக்கைச் சிறகிற்காக  எல்லாம் ஒருவர் சந்தோஷப்பட முடியுமா என்று கேட்கிறீர்களா?

நிச்சயம் சந்தோஷப்படலாம். நீங்கள் மாமரங்களுக்கு அருகில், வாதா மரத்திற்கு அருகில் மட்டுமல்ல, பழம்தின்னி    வவ்வால்களோடும் அணில்பிள்ளைகளோடும் காகங்களோடும் இருக்கிறீர்கள். உங்கள் உலகம் பத்திரமாக இருக்கிறது.

அலுவலகத்திலிருந்து திரும்பிவரும்போது, உப்புப் போட்டுக் குலுக்கிய நாவல்பழங்கள் உள்ள ஒரு வெங்கலக் கிண்ணம் வீட்டில் உங்களை வரவேற்கிறதா?  சந்தோஷப்படுங்கள். 
உங்களுக்குப் பிடித்த பெரியம்மாவைப் பார்க்கவேண்டும் எனத் திடீரென்று தோன்றுகிறது. பஸ் ஏறிப் போகிறீர்கள். வீட்டுக்குள் கால்வைக்கும்போது மஞ்சள் பொடி வாசனையுடன் பனங்கிழங்கு வேகிற வாசனை வருகிறது. சந்தோஷப்படுங்கள்.
இலந்தம்பழம் கொண்டுவருகிற உகந்தான்பட்டி ஆச்சிக்காக, மருதாணி அரைத்து எல்லோருக்கும் வைத்துவிடுகிற மீனாக்காவுக்காக, திருவாசகம் படித்துக்கொண்டே, பழைய செய்தித்தாள்களில் விதம் விதமாகப் பொம்மை செய்துதருகிற பூசைமடம் தாத்தாவுக்காக, சந்தோஷப்படுங்கள்.

’கடவுளின் துகள்கள்’ கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட, மின்னணுமயமாகிவிட்ட வேகவேகமான பதிவிறக்க நாட்களில் இதற்கெல்லாம் ஒருவன் சந்தோஷப்படுவானா? - என்று உங்களை யாரும் கேலி செய்யலாம். அந்த மெட்ரோ கேலிகளை, மாநகரக் கிண்டல்களை ஒதுக்கித் தள்ளுங்கள்.  அவர்கள் சுத்திகரிக்கப்பட்ட பாட்டில் தண்ணீரை விலைக்கு வாங்கிக் குடிக்கிறவர்கள்.   அவர்களை அதிகம் பொருட்படுத்தாதீர்கள்.  ஓடுகிற ஆற்றில், கல்மண்டபத்துப் படித்துறையில் இருந்து வட்டப்பாறைகளுக்கு நீங்கள் உங்கள் போக்கில் நீந்திச் சென்றுகொண்டு இருங்கள்.

உங்களுடைய நாணல் திட்டுகளுக்கு,  தாழம்புதர்களுக்கு, புளியமரச் சாலைகளுக்கு நீங்கள் சந்தோஷப்படுங்கள்.  உங்கள் வீட்டுக்குப் போகிற வழியில் உதிர்ந்துகிடக்கும் வேப்பம் பூக்களுக்காக,  பூக்கொறித்து, பூ உதிர்த்துத் தாவும் அணில் குஞ்சுகளுக்க்காகச் சந்தோஷப்படுங்கள்,
அரி நெல்லிக்காய்களுக்காக, செம்பருத்திப் பூக்களுக்காக, விதையுள்ள கொய்யாப் பழங்களுக்காகச் சந்தோஷப் படுங்கள்.

இயற்கை உங்கள் அருகில்  இருக்கிறது. நீங்கள் இன்னும் இயற்கையின் நடுவில் இருக்கிறீர்கள்.

உங்கள் வீட்டுச் செம்மண் முற்றத்தில்தான் மழைக்குப் பிந்திய மண்புழுக்கள் நெளியும்.  உங்கள் வீட்டுச் சுவரோரம்தான் மார்கழி மாதம் வளையல்பூச்சிகள் ஊர்ந்துசெல்லும்.  சரியாகச் சுடப்பட்ட ஒரு பேக்கரி ரொட்டியின் நிறத்தில், ஒரு குடைக்காளான் நீங்கள் புகைப்படம் எடுப்பதற்கு நிற்பதுபோல முளைத்திருக்கும்.

உங்களுடைய தினங்களில், அணில்கடித்த பழமாக, வவ்வால் போட்ட வாதாங் கொட்டையாக, காக்கைச் சிறகாகக் கிடப்பவை எல்லாம் உங்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கிற சந்தோஷங்கள்.

கொஞ்சம் குனியுங்கள்.
உங்கள் சந்தோஷங்களைப் பொறுக்கிக் கொள்ளுங்கள்.

%

ஆனந்த விகடன் - இன்று, ஒன்று, நன்று.
19.07.2012 ஒலிபரப்பப்பட்ட பதிவு.

3 comments:

 1. //உங்கள் வீட்டுச் செம்மண் முற்றத்தில்தான் மழைக்குப் பிந்திய மண்புழுக்கள் நெளியும். உங்கள் வீட்டுச் சுவரோரம்தான் மார்கழி மாதம் வளையல்பூச்சிகள் ஊர்ந்துசெல்லும். சரியாகச் சுடப்பட்ட ஒரு பேக்கரி ரொட்டியின் நிறத்தில், ஒரு குடைக்காளான் நீங்கள் புகைப்படம் எடுப்பதற்கு நிற்பதுபோல முளைத்திருக்கும்//

  எல்லாத்தையும் விட்டுட்டு வந்தாச்சு! :(((( இங்கே வேறு விதமான சந்தோஷம்! ஆகக் கூடி சந்தோஷம் எங்கே வேண்டுமானாலும் கிடைக்கும். இல்லையா? மதியம் பஸ்ஸர் போல் கத்தும் குருவி, கூவிக் கொண்டிருக்கும் ஒற்றைக் குயில், இந்த மாதிரிப் பச்சையைப் பார்த்திருக்கியானு சவால் விடும் பச்சைநிற ஓணான்/ பச்சோந்தி, சாதம் வைச்சதும் சாப்பிட வரும் அணில்கள், மொட்டைமாடிக் கைப்பிடிச் சுவரில் இருந்து பேசும் ஒற்றை மைனாவும் அதற்குத் தென்னை மரத்திலிருந்து பதில் கொடுக்கும் இன்னொரு மைனாவும். கருடத் தம்பதிகள்னு இங்கேயும் நிறைய இருக்குதான்.

  ReplyDelete
 2. அற்புதம் சார்
  ஒவ்வொரு முறை திருவனந்த புரம், கேரளா செல்லும் போதும்
  மனம் வருத்தப் படும்
  அவர்கள் இன்னமும் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

  தாத்தாவிற்குத் தாத்தா வழிபட்ட மஞ்சன வடிவு அம்பாளையும், கண்ணாடிப் பிள்ளையாரையும், புட்டாரத்தி அம்மானையும்
  மறந்து விட்டு
  இன்று மாநகரப் புறநகர்களில் அழகாகப் பளிங்கினால் ஆயில் பெயிண்டில் செதுக்கப் பட்டுள்ள
  வெற்றி விநாயகரும், ஐஸ்வர்யா லக்ச்மியையும் வழிபட்டுக் கொண்டு இருக்கிறோம்.


  மெட்ரோ கேலிகளை, மாநகரக் கிண்டல்களை ஒதுக்கித் தள்ளுங்கள். சென்னையை விட்டு தென் மாவட்டங்கள் வந்த உடன் முதல் நாள் இந்த உணர்வு இருக்கும், பிறகு மறந்து விடுவோம்

  ReplyDelete
 3. நாளைய நடை பயிற்சியின் போது நிச்சயம் சின்ன வயதில் தொலைத்த எனது சந்தோஷங்களை பொறுக்க முயல்வேன் ..சார்.

  ReplyDelete