Saturday 2 June 2012

கையில் இருந்த தாமரை


மற்றுமோர்

தாமரைக்குளம் பார்த்து நிற்கிற
வெளியூர்ச் சிறுமிக்கு
மாடு குளிப்பாட்டிக் கொண்டிருந்தவர்
புத்தனைப் போல நீந்திப் போய்
பூவெடுத்துக் கொடுத்துப்
புன்னகைத்த கிரணத்தில்
மாடு சிலுப்பியது
மற்றுமோர் வானவில்.


தேவன்/ஈசன்/தூதன்

என் தேவன் என்னை
புறாவாகப் படைத்திருக்கலாம்.
கூட்டாகப் பறந்து
கூட்டமாக இறங்கி
தனித்தனித் தானியம் பொறுக்குவேன்.
ஈசன் என்னைச்\
சருகாக உதிர்த்திருக்கலாம்.
வேம்பு, புங்கை, குல்மோஹர் எனும்
வேற்றுமையின்றி எரிந்திருப்பேன் கூளமாக.
இறைத்தூதன் என்னை
எறும்பாக அனுப்பியிருக்கலாம்.
நந்தியாவட்டைக் கிளை மீதும்
மரமல்லிப் பூ மீதும்
நகர்ந்திருப்பேன் அன்றன்றைய
வெயில் உறிஞ்சி.
சாப்பாட்டு மேஜையில் பழக்கிண்ணங்கள்.
கண்காணிப்புக் கண்களுடன் நெடுஞ்சுவர்கள்.
கதவுத் தாழ்கள் நனையாத் தூரத்தில்
கடும் மழை.
நெடுந்தொடர் பார்த்தபடி நான்.


நாளையை இன்றே. 

அவரிடம் என்னை
அழைத்துப் போன நண்பரின்
கையிலிருந்த தாமரையைப் பெற்றுக் கொள்வதில்
அவருக்குச் சிரமம் இருந்தது.
சாய்ந்திருந்த தலையணையிலிருந்து
அவர் எந்த நொடியிலும்
சரிந்துவிடும் தோற்றத்தில்.
என்னைப் பார்த்துச் சிரித்ததும்
எழுந்துபோய்ப் பற்றிக்கொண்டேன்
அவர் கைகளை.
அந்த என் செய்கை ஒரு
அத்துமீறல் எனப் பதைத்தார் நண்பர்.
சுத்தம் செய்யப்படாது, சிறுநீர் வாடையுடன்
பொதுக்கழிவறையிலிருந்து வருகிற
பெரியவர் ஒருவரின் சாயலில்
இருக்கிறார் அவர் எனச் சொன்னால்
எப்படி அதை எடுத்துக்கொள்வார்
நாளை மலருமொரு மொக்கை
இன்றே பறித்துவந்த
என்னுடைய நண்பர்?

துயரம் நிரம்பிய

ஒரே ஆரவாரமாக கிடந்தது.
அடுக்கக மேல் நிலைத் தொட்டியின் மேல்
அமர்ந்திருக்கிறது ஒரு மயில் என.
தோகை பற்றியும் கொண்டை
பற்றியும்
தொகை தொகையாக வர்ணனைகள்.
ஒரு மயிலை,
ஒரு எறும்பு தின்னியை,
ஒரு மர நாயை,
ஒரு மலைப் பாம்பை
குடியிருப்பின் மத்தியில்  பார்ப்பது
கிணற்றுக்குள் தவறி விழுந்துகிடக்கும்
திருடனைப் பார்ப்பது போல
பரிதாபமானது,
துயரம் நிரம்பியது.


கல்யாண்ஜி
 உயிர் எழுத்து -  மார்ச் . 2012.

2 comments:

  1. மற்றுமோர் கவிதை பாபநாசம் செல்லும் வழியில் ஒரு பிள்ளையார் கோவில் தெப்பக் குளத்தில் ஸ்விஸ்ஸிலிருந்து வந்திருந்த ப்ரியாவுக்கு நேர்ந்த அனுபவம். இங்கு இப்போது படிக்கும்போது ஆச்சரியமாக இருந்தது. ‘துயரம் நிரம்பிய’ மற்றும் ’நாளையை இன்றே’ ரண்டுமே இரு வேறு நிலையில் மனதை கனக்கச் செய்பவை. ’தேவன்/ஈசன்/தூதன்’ எனைப் போன்ற நகரத்து பிராணிகளின் ஏக்கப் பிரதிபலிப்பு.

    ReplyDelete
  2. அருமை சார் எப்போதும் போல

    ReplyDelete