Saturday 5 May 2012

மேலும் சில புத்தகங்கள்.

அம்மாசிக் கிழவனுக்கும் பாப்பாத்திக்கும் மட்டுமல்ல, உங்களுக்கும் எனக்காகவும்தான் ’ஒரு பகல் நேர பாசஞ்சர் வண்டி’ ஓடிக்கொண்டு
இருக்கின்றது. ஜெயகாந்தன் சரியாகத்தான் அந்த பகல் நேரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஒரு இரவு நேரப் பாசஞ்சர் வண்டியிலும் இதே
போன்ற மனிதர்களே பிரயாணம் வருவார்கள், இவர்களே நமக்கு, அவர்களின் சந்தோஷத்தின் வழியும் துக்கத்தின் ஊடாகவும் நம்மை
வேறொரு மனிதனாக்கி, வேறொரு கதையை எழுத வைப்பார்கள். ஆயினும்
அவர்கள் இந்த பகல் நேர பாஸஞ்சர்கள் ஆக மாட்டார்கள். அவர்களின் கதைகளும் பகல்களின் கதையாக இராது.
நான்  கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை
அப்படியொரு பாஸஞ்சர் பயணத்தைத் தேர்ந்தெடுத்தேன்.  அது ஏற்கனவே
முன் தீர்மானிக்கப் பட்டதால். அதற்குரிய பயணச் சீட்டை. முந்திய தினமே எடுத்துவைத்துக் கொண்டேன். அப்படி ஒரு முன் வசதி உண்டு, அது மறுநாளின்  அடுத்த பயணத்துக்கு ‘செல்லும்’ என்பதே எனக்கு ஒரு புதிய தகவல்.
‘நாளைக்கு ஈரோடு பாஸஞ்சர்’ல திருச்சிக்கு ஒரு டிக்கட்’ என நான் குனிந்து கவுண்ட்டரில் சொல்ல, அவர் அதைத் தருகிறவரைக்கும்  எனக்குள் நானே. ‘ அறிவிருக்காஉனக்கு? நாளைக்குப் போற ரயிலுக்கு, இண்ணைக்கு எந்த ஊர்ல’ய்யா டிக்கட் கொடுப்பான்?’ என்ற ஒரு பதிலையும் தயார் செய்திருந்தேன்.  ரயில்வே ஊழியர் அப்படியெதுவும் செய்யவில்லை. நூறு ரூபாய்த் தாளைக் கொடுத்ததற்குக் கோபப் படக்  கூட இல்லை. டிக்கட்டுக்கு நாற்பத்தி இரண்டு ரூபாய் போக பாக்கியை., சில்லறை உட்பட ‘வள்ளிசாக”க் கொடுத்தார். அவருக்குச் சிரிப்பதற்கு நேரமில்லை. முடிந்தால்  அதையும் செய்திருப்பார். அதற்குப் பதிலாக, ‘சரிபார்த்துக்கிடுங்க’ என்று சொன்னார்.
எதைச் சரிபார்க்க? அவர் சரியாக இருக்கிறார். நான் சரியாக இருக்கிறேன். ஆயிரம் ஆயிரம் பேர் கைபட்டிருக்கும் இந்தக் கண்ணாடித்
தடுப்பு சரியாக இருக்கிறது. வலது பக்கத்தில் இருக்கிற பெண் காவலர்
சரியாக இருக்கிற மாதிரித் தெரிகிறது. இப்படி  இருக்கையில் மற்றப்படி எல்லாமும் சரியாகத் தானே இருக்கும்.
மறு நாட் காலை ஐந்து ஐந்துக்கு வண்டி இங்கிருந்து புறப்பட்டு, ஈரோடு வழியாக மயிலாடுதுறை போகிறது./ அப்படியானால் வீட்டில் இருந்து
நாலு நாலே காலுக்காவது நான் புறப்பட வேண்டும்.
புறப்பட்டேன்.  தெரு விளக்குகள் ஆளற்ற தெருக்களை இது போன்ற நேரங்களில் மேலும் அழகாக்கிவிடுகின்றன,  சாமி இல்லம் வீட்டுப் பசுக்கள் இட்ட சாணி வாடையை எனக்கு ரொம்பப்  பிடித்திருக்கிறது. அதிலிருந்து துவங்கினால் பெருமாள் புரம் விலக்கு வரை வேப்பம் பூ
ராஜ்யம் தான்.  மழைத் தண்ணீர் விலகுவது போல என்னுடைய ஸ்ப்லெண்டர் சக்கரங்களுக்கு ஏப்ரல் மாத வைகறையின் தகட்டுவெளிச்சம் சாலையில் விலகிக் கொண்டிருந்தது.  யாராவது,
முடிந்தால் அனேகமாக எப்போதும் எதிர்ப்படத் தவறாத அந்த நெடுஞ்
சாலைப் பைத்தியங்களில் ஒருவர், இப்போது வர விரும்பினேன்.  உங்கள் நாசி கூர்மையானது எனில், பெட்ரோல் வாடையை வைத்தே நீங்கள் ஆர்.எஸ்.ஏ.எஸ் தாண்டி, மத்திய சிறைப் பக்கம் போய்க்  கொண்டிருப்பதை உணர முடியும்.  உங்கள் சாலையில் இதுவரை தினசரி கடந்து  சென்றுகொண்டு இருந்த அத்தனை இடங்களையும் நீங்கள் மனதுக்குள் தாண்டிக் கொண்டே இருப்பீர்கள்.  காதுகேளாதோர் பள்ளியில் நீங்கள் எப்போதோ கேட்ட தறிச் சத்தம் கூட இப்போது கேட்கும்.  நீங்கள் உங்கள் அப்பாவுக்குக் கொய்யாப் பழம் வாங்கும் பழக்கடை/ பழமுதிர் சோலை, அதனதன் பழ அடுக்குடன் பின் நகரும்.  பாளை பஸ் ஸ்டாண்ட் பக்கத்து டீக்கடை பாய்லர்’  கங்கு நட்சத்திரம் பறக்கவிடும்.  அவசரமாக் ஓலை எடுத்துச் செல்லும் பராந்தக சோழன் காலத்து ஒற்றன் போல,  முருகன் குரிச்சி வாய்க்கால பாலத்தைத் தாண்டி ஒரு பூனை பெருச்சாளியைக் கவ்விக் கொண்டு ஓடும். ஊசிக் கோபுரம் ஒன்று பாக்கியில்லாமல் ‘அருவாகிவிட்ட’ மருத மரங்களையும் அதை வரைந்துவரைந்து கொண்டாடி மறைந்த இசக்கி அண்ணாச்சியையும் வண்ணார்பேட்டை சாலையில் தேடிக் கொண்டிருக்கும்.  கொக்கிர குளம் ஆற்றுப் பாலத்துக்கடியில், இப்போது துடைத்து எடுத்தது போல் ‘காணாமல் போய்’ விட்ட ஆற்று மணலில்  எப்போதோ உட்கார்ந்து பேசியபோது, உங்களை அறியாமல் மணலை அளைந்த கையில் சிக்கிய சிப்பி  இதோ இந்த
நாலரை மணியில் மினுங்கும்.  24 மணி நேர மருத்துவ மனைகளை விட
மிகத் துடிப்புடன் இயங்கும் 24 மணி நேர அல்வாக் கடைகளை நீங்கள் தாண்டிவிட்டீர்கள் எனில்,  நீங்கள் இருப்பது தானா மூனா ரோட்டில். என்ன தான் நெரிசல் என்றாலும் ஒரு ரயில்வே ஸ்டேஷனை நோக்கிச் செல்கிற பாதைக்கு இருக்கிற அழகே தனிதான்.
ரயில்வே ஸ்டேஷன் ஒரு ரயில்வே ஸ்டேஷனுக்கு உரிய அழகுடன்
பரபரத்துக் கொண்டிருந்தது. மனிதர்கள் அவர்களின் எல்லா நிலைகளிலும்
அழகாக இருந்து,  அவர்கள் இருக்கும் இடங்களையும் அழகாக்கி விடுகிறார்கள்.  ஒரு எடை பார்க்கும் இயந்திரமோ, ஒரு ஏ.ட்டி.எம்மோ, தரையில் விரித்துப் படுத்துவிட்டு இப்போதுதான் யாரோ எழுந்துபோயிருக்கும் செய்தித்தாள்க் கசங்கலோ,  ஒரு புத்தம் புது நார்ப் பெட்டியும் ஆரெம்கேவி பையுமாக உட்கார்ந்திருக்கும் பெண்ணின் முகத்தின் தூக்கம் இன்மையோ அழகாக இருப்பது  அதனால்தான். 
அந்த தண்ணீர் பாட்டிலை யார் விட்டுப் போயிருப்பார்கள்?  இந்த நெரிசலுக்கு இடையில் முகர்ந்து முகர்ந்து தொலைந்து போன தன்னுடைய எந்தத் தடத்தைத் தேடிக் கொண்டு அலைகிறது அந்த கிழட்டு வெள்ளை நாய்?  கருப்பு பர்தாவுடன் நகரும் அந்த நாலைந்து பெண்கள்
ஒன்றோடு ஒன்றாகக் கோர்க்கப் பட்டது போல, மழைக்கால ஈரக்  குடைகளை நினைவூட்டினார்கள். எனக்கு அந்த நேரத்தில் முகமற்ற அவர்களின் ஓவியத்தை வரையலாம்,  நானில்லை எனினும் யாராவது எனத் தோன்றியது.
ஈரோடு பாஸஞ்சர் எந்த ப்ளாட்ஃபார்ம் ல வருது? - என்னுடைய கேள்விக்கு
ஒண் எய்ட் டூ சிக்ஸா? மூணுல நிக்கி ஸார் - விசாரணை ஊழியர் பதில்
சொல்லிவிட்டு மீண்டும் கவிழ்ந்து மேஜையில் படுத்துக் கொண்டார்.  எடை பார்க்கும் இயந்திரம் போல, டிக்கட்டை துப்பிவிட்டு, சக்கரம் நிறுத்தி சிவப்பு விளக்கு எரிவது இதைவிடவா நன்றாக இருக்கும்? அப்படி அவர் பதில் சொல்லிவிட்டு முகத்தை மேஜையில் கவிழ்த்தியபோது, சிறு சிரிப்பை
அதுவரை அவர் கண்டுகொண்டிருந்த கனவின் கதவில் சாவியாக இட்டுத்
திறப்பது தெரிந்தது.
எனக்கு முன்பே ஈரோட்டுத் திசையில் நிறையப் பேர் நடந்து கொண்டு இருந்தார்கள். நான் வண்டி காலியாக இருக்கும் என நினைக்கவில்லை. ஆனால் இப்படி உட்கார இடமில்லாமல் நாலே முக்காலுக்கே  நிரம்பி வழியும் எனவும் எதிர்பார்க்கவில்லை. நடக்க நடக்க் எல்லாப் பெட்டிகளும் அதே நிலைதான். ஆறாவது அல்லது ஏழாவது பெட்டியில்தான் அந்த
பக்கவாட்டு இருக்கை இரண்டு காலியாக இருந்தன. தனித் தனி இருக்கைகள். அதுவும் ஜன்னல் ஓரம்.  ரயில் போகிற திசையின்  இருக்கையைத் தேர்ந்து கொண்டேன். என்னிடம் வாசிக்க நான்கு புத்தகங்கள் இருந்தன. இளங்கோ கிருஷ்ணனின் இரு கவிதைத் தொகுப்புக்கள், அ. முத்துலிங்கத்தின் சமீபத்திய கட்டுரைத் தொகுப்பு, மற்றும் வம்சி வெளியிட்டிருக்கும் விவேக் ஷன்பேக்கின் ‘வேங்கைச்
சவாரி’.  முடிகிறவரை மனிதரை வாசிப்பது. முடியாத பொழுதுகளில் இந்தப் புத்தங்களை வாசிப்பது என்பதே திட்டம். அதுதானே உத்தமமானது.
நான் கல்யாணப்பந்தியில் மற்ற எல்லோரின் இலைகளிலும் பரிமாறப் படும் வரை ஒரு வாய் கூடச் சாப்பிடாமல் காத்திருப்பது போல, ஐந்தரை மணிக்குப் புறப்பட்ட ரயில் ( அது புறப்பட வேண்டிய நேரம் 5.05. ஒரு
பாஸஞ்சர் எல்லாம் அப்படிக் ‘கரெக்டாக’ புறப்பட்டால் அது அப்புறம் என்ன பாஸஞ்சர்?) கொஞ்சம் கொஞ்சமாக தன்னை நிரப்பிக் கொள்கிறவரை நான் வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன்.  ஒரு தண்ணீர்த் தொட்டி நிறைவது போல இல்லையே, ஒரு ரயில் பெட்டி நிறைவது.
ஒரு தினம் எப்படியெல்லாமோ விடிகிறது.
ஒரு ரயில் ஜன்னல் வழியாக விடியும் ஒரு தினத்தை அன்று பெற்றுக் கொண்டேன்.  வெறும் நீர்க்கருவை முளைத்துக் கிடக்கும் புறம் போக்கு நிலங்கள். இதுவே உடைமரங்கள் எனில், கோடைகாலத்துக்கே உரிய அதன் கிறங்க வைக்கும் குஞ்சம் குஞ்சமான மஞ்சட் பூக்களும் அதன் மதுரமான வாசனையும் அற்புதமாக இருக்கும். உடைமரம் பூத்த ஒரு கடுங்கோடையில் புடைகளின் வெக்கை தாங்க முடியாது பெரும் பாய்ச்சலில் நகரும் பாம்பை, இந்த வாசனை அப்படியே கட்டிப் போட, உச்சி வெயிலில் மேலும் பரவும் மகரந்த போதையில் அப்படியே அவை மினுமினுத்துக் கிடக்கும். 
நீர்க் கருவைக்கும் கரிசல் கருப்புக்கும் இடையில் அங்கங்கே மயில் குஞ்சுகள் மட்டும் நடமாடின. ஒரே ஒரு பிராயத்து மயில் தோகையைத் தரையோடு இழுத்துக் கொண்டு போயிற்று.  நாங்கள் குடியிருக்கிற பகுதியில், அனாதை இல்லத்துக் குழந்தைகளை ஞாயிற்றுக் கிழமைப் பிரார்த்தனைக்கு இப்படித்தான் வரிசையாக நடத்திக் கூட்டிப் போவார்கள், கூடவே துணைக்கு அதே இல்லத்தில் வளர்ந்த ஒரு அக்கா போவாள் இந்தப் பெரிய மயிலைப் போல்.
நான் இளங்கோ கிருஷ்ணனின் ‘காய் சண்டிகை”யை வாசிக்கத் துவங்கியது இந்த அக்கா மயிலின் தரை பெருக்கும் தோகையில் இருந்துதான்.
ஆனால் அதிக  நேரம் வாசிக்க முடியவில்லை. புத்தகங்களின் பக்கங்களை விட, வாசிப்பதற்குரிய முகங்களுடன் மனிதர்கள் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஏறிக்கொண்டே இருந்தார்கள்.  ஒதுக்கித் தள்ளவும் நிராகரிக்கவும் முடியாத வரிகள் உடையதாக மனிதர்களின் முகங்களே
இருக்கின்றன.  எனக்குத் தெரியாத வரி ஒன்று உங்களுக்காக அச்சடிக்கப் பட்டிருக்கும்.  எனக்கு ஒளித்துவைக்கப் பட்ட ஒரு முழுப் புத்தகம் உங்கள் வாசிப்புக்குத் திறந்து வைக்கப் படும். என்னால் பறிக்க முடியா ஒரு சொல், காற்றில் தானாக உங்கள் மடியில் விழும்.  தாழையூத்து, மணியாச்சி, கடம்பூர் தாண்டுவதற்குள்ளேயே, பெரும் நூலகம் ஒன்றிலிருந்து சரிந்த
புத்தகக் குவியல்களுக்கிடையே என்னுடைய பென்சில் உருண்டுவிழுந்து கிடந்தது.  நேத்தாஜி போஸ் மார்க்கெட்டின் ஓரமாகக் குவிக்கப்பட்டிருக்கும்
முட்டைக்கோஸ் இலைகளுக்குள்ளிருந்து எப்போதோ வெளிவரப் பார்த்த
பச்சைப் புழு போல, என் உடம்பின் அத்தனை வளையங்களாலும் என்னை
நகர்த்தி வெளிவந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
எத்தனை மனிதர்கள்!  இந்த மனிதர்கள் தான், அவர்கள் மனிதராக இருக்கும் போது, எவ்வளவு அழகாக இருக்கிறார்கள். தலை முடியும் மீசையும் அதைவிட வெள்ளையாக நரைக்கமுடியாத அவர், தனக்கே ஒரு
பேத்தியிருந்தும், தன்னுடைய செல் ஃபோன், பேனா, சிட்டை எல்லாவற்றையும் பாக்கெட்டில் கை விட்டு துளாவி எடுக்கும் இன்னொரு பெண் குழந்தையைக் கொஞ்சுகிறார். எதிர்த்தாற்போல தூக்கக் கலக்கத்தில் இருந்த பையன், நான் கேட்காமலேயே. தொங்க விட்டிருந்த பையைக் காட்டி,’கேக் ஸார். ஊருக்குப் போறேன் கடம்பூர்ல இறங்கி நடக்கணும்’ என்கிறான்.  அவன் சொன்ன கடம்பூரில் பத்து நூறு பையன்கள் ஏறுகிறார்கள். அதிகம் போனால் பன்னிரெண்டு பதிமூன்று இராது. விடுதியில் தங்கியிருந்த, ஒரு வேளை, காப்பகமாகக் கூட இருக்கலாம், அதிகம் வெளிச்சம் படாத முகங்கள். ஒரு பையன் கருப்பு கோட் ஒன்றை அணிந்து நீல நிற சட்டைக் காலரை வெளியே விட்டிருந்தான். ஒரு பையனிடம் செல் ஃபோன் இருந்தது.  நான் கேட்க நினைத்ததை யாரோ கேட்டார்கள். ’எங்கடே போறியோ. லீவு விட்டாச்சு என்ன?’.  ஆமாம். அவர்களுக்கு விடுமுறை.   மதுரை செல்கிறார்கள்.  ஒரு ஆசிரியர் அவர்களுடன் வருகிறார். அந்த செல் ஃபோன் அவருடையதுதான்.  அவர்களுக்குரிய உதவிப் பணம் அவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கிறது. அவர்கள் அவர்கள் இஷ்டப்படி போளி, வடை வாங்கிச் சாப்பிடலாம். சிரிக்கலாம். ஒருவரை ஒருவர் அடித்து விளையாடலாம்.
மிக இயல்பாக, அவர்களில் ஒருவர் பாக்கியில்லாமல், லக்கேஜ் வைக்கிற
இடத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள்.  ஏதோ ஒன்று குறைவது போல இருந்த அவர்களின் சிரிப்பில், அவ்வப்போது எதுவுமே குறைவற்ற ஒரு பதின்வயதுச் சேட்டையும் குதூகலமும் சீண்டலும் இருந்தது. சற்று வளர்ந்த ஒரு பையன் மட்டும் எல்லாவற்றிலும் விலகி இருந்தான். காற்றே இல்லாத, அசையா மரத்திலிருந்து உதிரும் ஒற்றை இலை போல அவன் இருந்தது என்னைத் தொந்தரவு செய்தது. 
நல்லவேளை, எதுவும் அப்படியே இருந்துவிடுவதில்லை.  வெயில் நகர்கிறது. நிழல் நகர்கிறது. மரம் அங்கேயே நிற்கிறது. அப்படித்தான் எல்லாம். அந்த ‘டீச்சர்’, அவருடைய குடும்பத்தினர் எல்லோரும் வந்தார்கள். அவர் டீச்சரா என்று எல்லாம் எனக்குத் தெரியாது. அப்படித்தான் இருக்கவேண்டும் என நானாக நினைத்துக் கொண்டேன். அவர் டீச்சராக இருக்கிற பட்சத்தில் அவர் வகுப்பில் படிக்க எனக்குச் சம்மதம். எங்களுடன் தமிழிலும், அவர் குடும்பத்தினரிடம் தெலுங்கிலும் பேசிக் கொண்டே வந்தார். இரண்டு மூங்கில்களுக்கு இடையே குதித்துக் குதித்து ஆடுகிற ஆதிவாசி நடனம் போல இருந்தது அந்தக் குரல். அவர் டீச்சர் மட்டுமில்லை. தலைமை ஆசிரியராகக் கூட இருக்கலாம். அவர் சொல்லுக்கு இந்தப் பெட்டியில் இருக்கும் அனைவரும் கட்டுப் பட்டார்கள்,
சிலரை, கைக் குழந்தையோடு இருந்த அவர் தங்கையைக் கூட, மேலே
ஏறி உட்காரச் சொன்னார். சிலரை செய்தித்தாள் விரித்துக் கீழே அமரச் சொன்னார். கோவில் பட்டியில் ஏறிய ஒரு முஸ்லிம் குடும்பத்தினருடன்
உடனடியாக ஐக்கியமாகி, அவர்களுக்குப் பயண ஆலோசனைகள் சொல்ல ஆரம்பித்துவிட்டார். முக்கியமாக தண்ணீர் பாட்டில்களை எங்கு சுத்தமாக நிரப்பிக் கொள்ளலாம் என்று.
ஒரு பாஸஞ்சர் ரயிலின் பயணிகள், சீட்டுக் கட்டுக் கலைத்து விளையாடு
வது போல மாறிக் கொண்டே இருக்கிறார்கள்.  மாறும் விதம் ஒரு இசையின் ஒழுங்குடனும் அமைதியுடனும். ஒரு விளையாட்டின் ஈர்ப்புடனும் அமைந்துவிடுவதும். எல்லோரும் அவரவர் இடத்தை மன
நிறைவுடன் அடைந்து மேற்கொண்டு பயணத்தைத் தொடர்வதும், அப்படித் தொடரும் போதே, தான் இப்போது இருக்கும் இடம், ஏதோ ஒரு நிலையத்தில் ஏற்ப்போகும் யாரோ ஒருவருக்கானது என்பதை உணர்ந்து அதைப் பாதுகாப்பது போலவும் எல்லாம் இருந்தது எனக்கு.
நெரிசல் ஒரு விஷயமே இல்லை. நிஜமாகவே  ஒற்றையடித் தடத்தில் தேர்
ஓடியது. வரப்பில் கால் வைத்து யானை நடந்து போய்க் கொண்டிருந்தது.  கடல் வழிவிடும் என்பதை ஒரு பாஸஞ்சர் வண்டிப் பயணத்தில் நம்பாமல் தீராது.
டிக்கெட் விலை குறைவு என யாரும் செலவளிக்க யோசிக்கவில்லை. சொல்லப் போனால், இவர்களுக்குத் தான் நிறையச் செலவளிக்கும் மனம் இருந்தது. வடை வாங்கினார்கள். போளி வாங்கினார்கள். பலாப் பழம், திராட்சைப் பழம். ‘இருவத்தஞ்சு ரூவாயா, இம்புட்டூண்டு பாட்டில்?’ எனச்
சொல்லிக் கொண்டே ஒரு அம்மா மாஸா வாங்கியது. இதை விட, உப்புக் கடலையும் வேர்க் கடலையும் பட்டாணிக் கடலையும் விற்றுக்கொண்டு வந்த பார்வையற்றவரிடம் அதுவரை எதுவுமே வாங்காதவர் கூட வாங்கினார்கள்.  அவர்களுக்கு எதற்காக எதை வாங்க வேண்டும் என்பது நன்றாகவே தெரிந்திருந்தது.  அவர்களின் ருசியை அவர்கள் எந்த மனத் தடையும் இன்றிக் கௌரவித்துக் கொண்டே இருந்தார்கள்.   ஒரு பஞ்சு மிட்டாய் சாப்பிட்ட கையோடு அவர்களால் ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிட முடியும். பலாச் சுளை சாப்பிட்ட கையை, இடுப்பில் கட்டியிருக்கும் சாரத்தில் துடைத்துவிட்டு மேலே இருக்கிற ஒரு பையனை,’பைய இறங்குடே. பெரியாட்கள் மேல கால் பட்டுராம, என்னா?’ என்று அவனை
இறக்கிவிட முடியும். பக்கத்து வயசாளியிடம், அவர் இந்த இடத்தில் உடகாரும் போது இவருடன், ‘ஒங்க அப்பன் வீட்டு ரயிலா. இதுல ஒம்ம
பேரு எழுதி ஒட்டியா வச்சிருக்கு?’ சண்டை போட்டவர், பாட்டிலை வாங்கி, விருதுநகரில் அவருக்கும் சேர்த்து தண்ணீர் பிடித்துக் கொண்டுவரும் மனசு இருக்கும். ‘’எம்புட்டு நேரந்தான் நீ நட்டமா நிண்ணுக்கிட்டே வருவ. செத்த நேரம் உக்காரு இப்படி’’ என்று ஒரு சின்ன வயதுக்காரிக்கு எழுந்து நின்று இடம் கொடுக்கிற மனுஷிக்கு குறைந்தது எங்க அம்மை வயதாவது இருக்கும்.
இவர்கள் இப்படி என்றால், இங்கே விற்க வருகிறவர்களும் அப்படித்தான்
இருந்தார்கள். அது சாத்தூர் வெள்ளரிப் பிஞ்சாக இருக்கட்டும், கொடை ரோடு ப்ளம்ஸாக இருக்கட்டும், யார் யார் கேட்கிறார்களோ அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டே அடுத்த பெட்டிக்குப் போகிறார்கள், துட்டை அப்புறம் வந்து வாங்குகிறார்கள்.  ‘பத்து ரூவாத் துட்டைக் கொடுக்காம இறங்கிப் போயி அவ்வொ என்ன பங்களாவா கட்டியீரப் போறாங்க. அப்படியே கட்டினாலும் ஏஞ் செங்கல் ஒரு செங்கல் அங்கே இருக்கும்ணா எனக்குப் பெருமை தானே’ இப்படிச் சொல்ல என்னை மாதிரிப் புத்தகம் படித்துக் கொண்டு ஓரமாக உட்கார்ந்திருக்கிறவனுக்கு எல்லாம் வராது. அந்த வெற்றிலையை இந்த வாழ்வைப் போலவே குதப்பிக் குதப்பி வாயோரம் ஒதுக்கியிருக்கிற அந்த அம்பாத்துரை மனுஷிக்குத்தான் முடியும்.
அசல் அசலாகவே இருக்கிறது இன்னும்.
எல்லாம் சரியாகத்தான் இருந்தது. அல்லது இருந்தது போல இருந்தது எனக்கு. மதுரை வரை, நான் அந்த முஸ்லிம் குடும்ப உறுப்பினர் அத்தனை பேரும் உட்கார்ந்து விளையாடின சீட்டு விளையாட்டில் நான் மனம்
ஒன்றிய பார்வையாளனாக இருந்தேன். சில சமயங்களில், இப்படிப் பார்வையாளனாக இருப்பதுதான் எவ்வளவு இதமாகவும் சௌகரியமாகவும் இருக்கிறது!  மாமா என்றும் சித்தி என்றும் உறவு சொல்லி அழைத்துக் கொண்டும், அவர்கள் அந்த ‘கழுதை’ விளையாட்டை
ஆடிக்கொண்டிருந்தார்கள். ஒரு ஐம்பது வயது ஆண், ஒரு முப்பது வயது ஆண், ஒரு முப்பத்தைந்து வயதுப் பெண், இரு முக்காடிட்ட பதினைந்து பதினாறு வயதுப் பெண்கள், ஒரு இளைஞன், ஒரு எட்டு வயதுப் பையன் என மிக அழகிய அரங்காக அந்தப் பெட்டி மாறி இருந்தது. நான் எனக்கு
முன் இருந்த அந்த எட்டுவயதுப் பையனின் சீட்டுக்களில் கவனம் குவித்திருந்தேன். ஒரு மகாபாரதச் சதுரங்கத்தைக் கூட, தன்னுடைய இடது கையால் விளையாடிவிட முடிகிறவனாக இருந்தான் அவன்.   தொடர்ந்து  ஜெயித்துக் கொண்டே இருந்த அவனின் மீது, தொடர்ந்து ஜெயித்துக் கொண்டே இருக்கிற ஒருவனின் மீது, ஒரு கட்டத்தில் நமக்கு வருகிற, அவன் அடுத்த ஆட்டத்தில் தோற்றுவிடுவானோ என்ற பதற்றம் எனக்கு வந்திருந்தது. ஆனால் என்ன ஆச்சரியம் அவன் தோற்கவே இல்லை. அவன் சிகையை என்னை அறியாமலேயே நான் வருடிக் கொடுத்துக் கொண்டே இருந்தேன்.
நானே ஜெயித்த புத்துணர்வுடன் இருந்த போதுதான் மதுரை வந்திருக்க வேண்டும்.  அந்தக் கணவன் மனைவியும் மதுரையில்தான் ஏறினார்கள்.
உட்கார இடம் கிடையாது. அவர்கள் கண்களில் உட்கார்வதற்கான ஒரு இடத்தை அவர்கள் நிச்சயமாகச் சுமந்துகொண்டிருந்தார்கள். கீழே அப்படியே உட்கார்ந்து கொள்ளச் சொன்னோம். உட்காரவில்லை. அந்த ஆண் கனத்த கண்ணாடி அணிந்திருந்தார். வயது சொற்பம்தான். சதா ஒரு
சிடுசிடுப்பு இருந்தது முகத்தில்.   அளவு கூடுதலான முழுக்கைச் சட்டை
அவரை மேலும் பொருத்தமற்ற தோற்றத்தில் வரைந்திருந்தது.  எதையோ தணிந்த குரலில் கோபமாக அந்தப் பெண்ணைப் பார்த்து முணுமுணுத்துக் கொண்டே இருந்தார்.  மிகக் கூர்மையான, எங்கள் கண்ணுக்கு எல்லாம் தெரியாத ஒரு கூர்மையான ஆயுதத்தை அவர் அந்தப் பெண்ணின் அடிவயிற்றில் பாய்ச்சிக் கொண்டிருப்பார் போல. அந்தப் பெண்  ஒரு ஐந்தரை அடி வலியாக நின்று கொண்டிருந்தார்.   எதிர்த்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. அத்தனை சாந்தம். அத்தனை அழகு. 
அந்தக் கண்கள்இரவும் பகலும் இப்படி அழுவதை மட்டுமே செய்துகொண்டிருக்கக் கூடும். கண்ணீரால் சுத்தீகரிக்கப்பட்டால் ஒரு துயர் தவிர வேறறியாப் பெண்ணின் அகன்ற கண்கள் எப்படித் தீப் பிடித்திருக்குமோ அப்படி இருந்தன அந்தக் கண்கள். செதுக்கிய அந்த மூக்கு வாழ்வின் துர்க்கந்தங்களை மட்டுமே நுகர்ந்திருக்க வேண்டும். கையில் ஒரு சிகப்பு ப்ளாஸ்டிக் வளையல். ஒரு சாயம் போன சாமிக் கயிறு. அப்படி என்னதான் அந்தப் பாவி சொல்லிக் கொண்டே இருப்பானோ, துடைக்கத் துடைக்க கண்ணீர் பெருகிக் கொண்டே வருகிறது.’ ஒனக்கு எல்லாம் எதுக்குய்யா கல்யாணம். பொண்டாட்டி?’ என்று நானே செவிட்டில் ஒரு அறை கொடுத்துக் கேட்டுவிடுவேன் போல இருந்தது.
அழுவதை விடவும், அந்தப் பெண்ணுக்கும் மிக அதிகத் துன்பம் இப்படி
எங்கள் எல்லோர் முன்னாலும் அழுவது.  யாரும் என்ன ஏது என்று கேட்க
வில்லையே தவிர, எல்லோருமே அந்தப் பெண்ணின் அழுகையை மட்டுமே
கவனித்துக் கொண்டிருந்தோம். சீட்டு விளையாட்டில் எப்போதும் ஜெயித்துக் கொண்டே வந்த பையன் நிமிர்ந்து அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டுக் குனிந்த வேகம், கையில் விசிறி மாதிரி வைத்திருந்த சீட்டுக்களை சட்டென்று மடித்துக் கீழே வைத்தவிதம் எல்லாம், ஒரு நில நடுக்கத்தை விடக் கூடுதலான அதிர்வை எனக்கு உண்டாக்கியது.
வையம் பட்டி மணப்பாறை என்று ஒவ்வொரு ஊராக வந்து கொண்டிருந்தது. அந்த ஆள் குனிந்து குனிந்து எந்த ஸ்டேஷன் வந்திருக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டே வந்தான். ஆமாம், இவ்வளவு பார்த்த பின் என்ன மரியாதை வேண்டிக்கிடக்கிறது அவனுக்கு. நான் வையம்பட்டி வந்த போது,’வையம்பட்டி’ என்று மாத்திரம் அவனிடம் சொன்னேன்.
என்னை வரவேற்பதற்காக திருச்சியில் எதிர்பார்ப்பவர்கள், இன்னும் பதினைந்து நிமிடம்தான் என்று தொலைபேசினார்கள்.  இப்படிச் சீட்டு விளையாடிக் கொண்டு சந்தோஷமாக இருப்பவர்களைப் பார்க்கையில், எனக்கு முந்திய பெட்டியில், தன் மிகத் தளர்ந்த உடலுடன், ஒரு பழைய
பட்டுச் சேலையும் மூக்குத்தியுமாக மயிலாடுதுறைவரை போகத் தயாராக ஒரு சிலை போல அமர்ந்திருக்கிற அந்த முதிர்ந்த பெண்ணின் திடத்தை உணர்கையில், இப்படி இன்னும் கற்றுக் கொள்ளும் படியாகவும் கற்றுத் தருவதாகவும் இந்தப் பயணம் நீண்டு கொண்டே இருக்கக் கூடாதா என்று
இருந்தது.
மதுரையில் இருந்து திருச்சி வரை அழுதுகொண்டே வருகிற இந்தப் பெண்ணை என் மிக அண்மையில் பார்க்கையில், பின்னால் என்ன நிகழ்கிறது இத்தனை அழும்படி எனத் தெரியவே தெரியாத ஒரு கண்ணாடித் திரையை இந்த வாழ்வு எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையில் தொங்கவிட்டிருக்கையில், அந்தப் பதினைந்து நிமிடங்களுக்கு முன்பே கூட அந்தத் திருச்சி வந்துவிடாதா என்று இருந்தது.
ரயில், அதுவும் ஒரு பாஸஞ்சர் ரயில் அப்படியெல்லாம் நாம் நினைக்கிற நேரத்திற்கு வந்து, நாம் நினைக்கிற இடத்தில் நம்மை இறக்கி விட்டுவிடுமா?
பக்கவாட்டில் தண்டவாளங்கள் பின்னலிட்டுத் துணை வரும்போதே நான் என் பெட்டியை எடுத்துக் கொண்டேன். புத்தகங்கள் வைத்திருந்த தோள்ப்
பை  திருநெல்வேலியில் ஏறியபோது இருந்ததை விட இப்போது கனப்பது போல இருந்தது.
மேலும் சில புத்தகங்கள்,  ஜெயித்துக் கொண்டே இருக்கும் அந்தச் சிறு பையன் போல, அந்த கண்ணீர் தீராத பெண் போல, எனக்கு இங்கே  கிடைத்திருக்கிறது அல்லவா.
கனக்காமல் எப்படி இருக்கும்?






8 comments:

  1. பெருமாள் புரத்தில் இருந்து , பஸ் ஸ்டாண்ட் , வாய்க்கப் பாலம், ஜங்க்ஷன், கடம்பூர், கோவில்பட்டி, மதுரை , மணப்பாறை என
    உங்களுடன் திருச்சி வரை வாசித்தவரும் பயணம் செய்த ஒரு உணர்வு நிலை

    நீங்கள் திருச்சி அல்லது சென்னை வரை பயணம் செய்து இருக்க மாடீர்களா, பதிவும் இன்னமும் நீண்டு இருக்குமே என்ற ஆவல்.


    சரிபார்த்துக்கிடுங்க’ என்று சொன்னார்.
    எதைச் சரிபார்க்க? அவர் சரியாக இருக்கிறார். நான் சரியாக இருக்கிறேன். ஆயிரம் ஆயிரம் பேர் கைபட்டிருக்கும் இந்தக் கண்ணாடித்
    தடுப்பு சரியாக இருக்கிறது. வலது பக்கத்தில் இருக்கிற பெண் காவலர்
    சரியாக இருக்கிற மாதிரித் தெரிகிறது. இப்படி இருக்கையில் மற்றப்படி எல்லாமும் சரியாகத் தானே இருக்கும்.


    ஒரு பாஸஞ்சர் ரயிலின் பயணிகள், சீட்டுக் கட்டுக் கலைத்து விளையாடு
    வது போல மாறிக் கொண்டே இருக்கிறார்கள். மாறும் விதம் ஒரு இசையின் ஒழுங்குடனும் அமைதியுடனும். ஒரு விளையாட்டின் ஈர்ப்புடனும் அமைந்துவிடுவதும்.

    பார்வையற்றவரிடம் அதுவரை எதுவுமே வாங்காதவர் கூட வாங்கி

    ReplyDelete
  2. முடிகிறவரை மனிதரை வாசிப்பது. முடியாத பொழுதுகளில் இந்தப் புத்தங்களை வாசிப்பது என்பதே திட்டம். அதுதானே உத்தமமானது.
    புத்தகங்களின் பக்கங்களை விட, வாசிப்பதற்குரிய முகங்களுடன் மனிதர்கள் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஏறிக்கொண்டே இருந்தார்கள். ஒதுக்கித் தள்ளவும் நிராகரிக்கவும் முடியாத வரிகள் உடையதாக மனிதர்களின் முகங்களே
    இருக்கின்றன.

    ReplyDelete
  3. என்னைப் பெற்றவள் 18 வயது வரை வளர்த்தாள். இந்த ரயில், இதோ என் 55 வயது வரை வளர்த்திருக்கிறது. இன்னும் என் ஆயுசு பரியந்தம், எனக்குப் பின்னால் என் மனைவியையும், ஒரு வேளை இடையில் காலம் முடிந்தால் என் மகளையும் வளர்க்கும். என் அம்மாவையும் தினம் அவள் சுமக்கும் மனிதர்களையும் எத்தனை அழகாக வரைந்துவிட்டீர்கள் சார்.

    ReplyDelete
  4. அதன் கனம்...

    வாசிப்பு நம்மை மாற்றக் கூடுமா? மாற்றி இருக்கிறதா? உங்கள் இந்த வலைத்தளத்தின் பின்கிடைக் காட்சி, ஒரு ரொமான்ற்றிக் இடையூறாய், உங்கள் எழுத்தை வாசிக்க ஒட்டாமல் பண்ணுகிறது. நான் மொத்த எழுத்தையும் block செய்து அந்நியப் படுத்தி வாசித்தேன். புத்தகங்களை அல்லது மனிதர்களையும் அப்படித்தான் வாசிக்கிறோமோ?

    யதார்த்தத்தில் நாம் ஊடிறங்கிப் பட்டழுந்தாத போதும், கண்ணோக்கம் நம்மில் கனம் சுமத்திவிடும் இல்லையா? மாறாத ஒன்றே உண்மையான நாம் என்பது எவ்வளவு பெரிய பொய்!

    ஒரு வலைத்தள எழுதத்தாளராகி வந்திருக்கிற உங்கள் மாற்றத்தை வரவேற்கிறேன், கல்யாண்ஜி!

    நன்றி!

    ReplyDelete
  5. விடியல் பார்ப்பதே எங்கும் எப்போதும் ஒரு ஆனந்தமே. உங்கள் எழுத்தின் வாயிலாக அதை அனுபவித்தேன். ராஜ சுந்தரராஜன் சொல்வது போல உங்களின் இந்த வலைத்தளத்தில் பின்புலம் கண்களை சிரமப்படுத்துகிறது. மாற்றினால் நல்லது.

    ReplyDelete
  6. கடைசியில் உங்களை போலவே படிப்பவர்கள் மனதும் கனத்துவிடுவது உண்மை.

    ReplyDelete
  7. நானே பயணித்ததைப் போல...

    ReplyDelete
  8. என்றும் எனக்கு பயணங்கள் நம்பிக்கையையே தருகிறது வரும் மனிதர்களின் ஆதரவோடு.
    கல்லூரி சுற்றுலாப் பயணத்தின் போது பாதி பேர்களுக்கு மட்டுமே தூங்கும் வசதி கிடைக்க மீதி நண்பர்கள் உட்காரும் இரண்டாம் வகுப்பு பெட்டியில் சாமான்கள் வைக்கும் அடுக்கில் படுத்து வந்ததை நினைவு கூறுகின்றன.பயணங்கள் வலியையும் சோகத்தையும் எடுக்கவே செய்து விடுகின்றன.
    தியாகராஜன்

    ReplyDelete