Tuesday 8 May 2012

ப்ரெய்லில் ஒரு பிரார்த்தனை

இன்றைய ஹிந்து நாளிதழில் ஒரு நிழற்படம் வெளியாகியிருக்கிறது.
அவர்களது ஆவணக் காப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று.
வார்த்தைகளுக்கு அப்பால் என்று சிவப்பெழுத்துக்களில் அந்தப் படம்
பற்றிய குறிப்பு தொடர்கிறது.
குருதேவ் ரபீந்திரனாத் தாகூரை, ஒரு நியூ யார்க் சந்திப்பில்,  1930 ல், ஹெலென் கெல்லெர் சந்தித்த நேரத்தின் அற்புதமான படம்.  ஹெலென் கெல்லெர் ஏற்கனவே அழகானவராகவே இருந்திருக்கிறார். வலது கையால்
அவர் தாகூரை அணைத்திருப்பதையும் இடதுகையால் தாகூர் அவரை அணைத்திருப்பதையும் நாம் அந்தப் படத்திற்கு அப்பால் யூகித்துக் கொள்ளவேண்டும். இது போன்ற தருணங்களில் நம் கைவசம் அணைப்பைத் தவிர நம்மைத் தெரிவிக்க வேறொன்றும் எஞ்சுவதில்லை.
ஹெலென் தன் இடக்கை விரல்களால் குருதேவை வாசித்துக் கொண்டிருக்கிறார். தாகூரின் வலக் கன்னத்துத் தாடி இழைகளில் எழுதப்
பட்டிருக்கும் தாகூரை அவர்  விரல்கள் வாசித்து நகர்கின்றன. தாகூர் எனும்
மனிதன்  சில வரிகளாக தன்னை ஒப்புக் கொடுத்து நிற்கும் நிலை. ஒரு சிலை போல நிற்கிறார் அவர்.  ஒரு பெண்ணால், அல்லது ஹெலென் கெல்லெர் போன்ற அழகிய மனுஷியால் வாசிக்கப்படும் நேரத்தின் பூரண
அதிர்வில் நிற்கிற தாகூர். அவருக்குப் பார்க்க முடியும். ஹெலென் கெல்லெரை பௌதிகமாகவும் அவர்  அறிந்திருக்கிற உயர்நிலை அவருடைய சற்றே உயர்ந்து இடுப்பளவில் அசையாது நிற்கிற வலது கையில் தெரிகிறது. நான் கற்பனை செய்துகொள்கிறேன்.  ஹெலென் கெல்லெரை இடுப்போடு சேர்த்து அணைத்துக் கொள்வதற்கான தவிப்பில்
தாகூரின் வலது கை இருப்பதாக.
இந்த நாளின் முகங்களின் பரிச்சயத்தில், எல்லா முகங்களையும் வேறொரு முகத்தின் சாயலுடன் ஞாபகப்படுத்திக் கொள்ளும் பழக்கம் உள்ள எனக்கு, குருதேவரின் முகத்தில் ஓஷோவின், சத்குரு ஜக்கி வாசுதேவின் சாயல் எல்லாம் மேக நிழல் போல் விழுந்து நகர்கிறது. கோபுரங்களின் மேல் சாயுங்கால வெளிச்சம் விழுந்து நகர்வதைப் பார்த்தவர்களுக்கு, அக்கணம் மேலும் புரிபடும் கோபுர தரிசனம் போல அது.
 தாகூர் ஒரு பெரும் தழுதழுப்பில், நிறைவின் பெருக்குடன் இருந்திருக்க வேண்டும். அவர் பார்வை, இதற்கு முன் அவர் அடைந்திராத ஒரு பார்வையுடன் இருக்கிறது. நானே அதற்கு முன் பல முறை அவரை உடனிருந்து பார்த்திருப்பது போலவும், இப்போது குருதேவ் அடைந்திருக்கும் உணர்வுச் செறிவான முகத்தை இதற்கு முன் அவர் அடைந்ததே இல்லை என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும் எனவும் தோன்றுகிறது.
ஹெலென், பார்வைத் திறனற்றோரின் மேல் நோக்கிய பார்வையுடன் இருக்கிறார். ஒரு வெதுவெதுப்பான,  இதுவரை வாசிக்கக் காத்திருந்த ஒரு
உயிருள்ள கவிதையை வாசிக்கிற, ஒரு குளிர் தடாகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி, அவரே குளிர்தாண்டிய தடாகம் ஆகிவிடுகிற நேரத்தின் மலர்ச்சி ஹெலெனின் உதடுகளில் மலர்ந்திருக்கிறது. எனக்கு நிச்சயம்,  ஹெலெனுமே இதற்கு முன்பு இத்தனை ஒளிரும் அழகுடன் இருந்திருக்கவே மாட்டார்.
நான் இப்போது குருதேவாகக் கூட அல்ல, ஹெலென் கெல்லெர் ஆக இருக்க விரும்புகிறேன்.
எனக்கு  ப்ரெய்ல் தெரியும், தாகூரை விரல்களால் வாசிக்கிற
அளவுக்கு.

No comments:

Post a Comment