Saturday 25 April 2015

புதிதாகி, புதிதாக்கி.












இரண்டு நாட்களுக்கு முன், ஜெயகாந்தன் நிகழ்த்திய சில உரைகளையும், ஜெயகாந்தன் மறைவுக்குப் பிறகு, ஜெயமோகன், ஜயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆற்றிய மூன்று வெவ்வேறு அஞ்சலி உரைகளையும் கேட்டுக்கொண்டு இருந்தேன். அனேகமாக, சமகாலப் படைப்பாளிகள், வாசகர்களில் ஒரு மென்மையான பகுதியினரின் இயல்பான மனநிலையும் அதுவாகத்தான் இருந்திருக்கும்.

ஜெயகாந்தன் இருக்கும் போதே ஜெயகாந்தனைப் போலப் பேசுகிறவர்கள் இருந்திருப்பார்கள். நான் அறிய, ஜெயகாந்தனின் பாணியை அப்படியே சுவீகரித்துக்கொண்டவராக பாரதி கிருஷ்ணகுமாரைத்தான் சொல்ல வேண்டும்.  என்னுடைய 91-95 மதுரைக் காலத்தில் ரவி சுப்ரமணியன் தான் இரண்டு காஸெட்டுகளை – சரி, ஒலிப்பேழைகளை – என்னிடம் கொடுத்து, ‘கேட்டுப் பாருங்க ‘ண்ணே’ ‘ என்றார். அவை கிருஷ்ணகுமாருடையவை .எனக்கு அவை அப்படியே ஜெயகாந்தனை நினைவூட்டின.

அவரை அப்போதே ஜே.கே என்று பிரியமாகவும் செல்ல மரியாதையோடும் அழைத்தது போல, இவரையும் இப்போது, அதே பிரியத்தோடும் செல்ல மரியாதையோடும் பி.கே என்று அழைப்பது ஒன்றும் தற்செயலானது அல்ல. திருப்பரங்குன்றம்  த.மு.எ.ச கலை இரவு ஒன்றில்தான் முதன் முதல் கிருஷ்ணகுமாரைப் பார்த்தேன், கேட்டேன். வசீகரமும் வசியமும  மிக்க தோற்றம், பேச்சு. அதற்குப் பிறகு எப்போது எந்த வடிவத்தில் கிருஷ்ணகுமாரைக் கேட்டாலும் ஜெயகாந்தனின் நிழல் குரலாகவே அவரைக் கேட்க முடிந்தது. நிழல் என்பதும் இன்னொரு நிஜம்தான்.

நான் வேறு எங்கோ போய்விட்டேன். கிருஷ்ணகுமார் அவராகவே, மிக விரும்பி, பாரதியையும் ஜெயகாந்தனையும் தன்னுடைய குருவாகவும் ஆசான் ஆகவும் வரித்தும் பயின்றும் சாதகம் செய்தும் சாதனை செய்தும் வந்திருக்கலாம். சரியான அம்புகளை சரியான இலக்குகளில் எய்து நிற்பவரைக் காண்பது அரிதெனில். அப்படி அரிய ஒருவரை நம்மிடையே காணமுடிகிறது எனில், அது போற்றுதற்கு உரியதே.

ஆனால் நான் கேட்ட , எஸ்.ராமகிருஷ்ணனோ ஜயந்தஸ்ரீயோ ஜெயமோகனோ கிருஷ்ணகுமாரைப் போல, ஜெயகாந்தனை வரித்துக்கொண்டவர்கள் அல்லர். ஜெயகாந்தன் மறைவு, ஜெயகாந்தன் இழப்பு அவர்கள் அறியாதே, அவர்களின் அஞ்சலி உரைகளின் மேக விளிம்புகளிலும் ஜெயகாந்தனுடைய ஒளியின் ரேகைகளைக் கீற்றாகப் பூசியிருந்தது. அவர்கள் முயலாமலேயே, அவர்கள் வகுத்துக் கொள்ளாமலேயே, அவர்கள் குரலின் ஏற்ற இறக்கங்களில், எவ்வல்களில், செய்வினையாகவும் செயப்பாட்டுவினையாகவும் முன்பின்னாகத் தங்கள் தர்க்கங்களை அடுக்கி நிறுவி மேற்சென்று நெகிழ்வதிலும் ஜெயகாந்தனின் சாயல்கள் இருந்தன. இருந்ததோ இல்லையோ, அப்படி இருந்ததாக நான் உணர்ந்தேன். ஜெயகாந்தனின் எழுத்தில், பேச்சில், தோற்றத்தில், ஞானத்தில் மனம் தோய்ந்தவர்களுக்கும், சாய்ந்தவர்களுக்கும், ஒரு மின்னல் கீற்றுப் போல அப்படி ஒரு ஜெயகாந்தனின் சாயல் வரும் தான்.

நான் என் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு, எங்கள் வீட்டு வளவு முடுக்குக்குள் வரும்போது என்னிடம் உண்டாகிற இருமல், எங்களுடைய ரத்தினச் சித்தப்பா இருமுவது போல இருக்கிறதாகச் சொல்லியிருக்கிறார் அந்தச் சித்தப்பா வீட்டுச் சின்னம்மை. நான்கு பேர்களோடு ஒரு திருமண வீட்டில் பேசிக்கொண்டு நிற்கையில், பின்பக்கமிருந்து என் தோளைத் தொட்ட ஒருவர், நான் முகம் திருப்பியதும், ‘ சாரி, கணபதி மாதிரியே இருந்தது. நீங்க அவர் தம்பி அல்லவா? அப்படியே இருக்கு பின்னால் இருந்து பார்க்க’ என்றார். முகநூல் பதிவர்கள் தொடர்பாக தோழர் நாறும்பூ நாதன் நடத்திய கூட்டத்தில் செய்த என் பேச்சுப் பதிவை, கதிர் டி.வியில் பார்த்தவர், கையை ஆட்டுகிறது, விரலை விரிக்கிறது எல்லாத்தையும் பார்த்தா தி.க.சி அய்யா ஞாவுகம் வந்துட்டுது’  என்று என்னிடம் நேரில் சொன்னபோது, நான் அப்பாவாகவே அவருக்கு, அவர் முன் நின்றுகொண்டு இருந்திருக்கலாம்.

சொல்ல முடியாது. இதோ இந்த மன நிலையில், ஜெயகாந்தனைச் சார்ந்தோ, அல்லாமலோ நான் எங்காவது பேசினால், ஏதாவது ஒரு சொல், ஒரு வாக்கியம், ஒரு உச்சரிப்பு அவரைப் போல அமைந்துவிடக் கூடும். சொல் மொழியோ உடல் மொழியோ அவர் போல அசைவுற்று, அவரைப் போல் பேசுகிற தோற்றம் வந்து போகும்.

எவரைப் போலவோ பேசுவதைக் காட்டிலும், அவரைப் போலப் பேச முடியும் எனில், பேச வாய்த்தது எனில், அது ஒரு சொல்லே ஆகினும், அச் சொல் புதிதாகி, பொருள் புதிதாகி விடும் அல்லவா?

புதிதாவதும், புதிதாக்குவதும் நல்லது தானே.

%

4 comments:

  1. பேசி ஆற்றிக்கொள்ள வேண்டிய இழப்பின் துக்கம்...

    ReplyDelete
  2. சாயமில்லாச் சாயல்கள் பெரிய கொடுப்பினைதான்

    ReplyDelete
  3. "அல்லவா?" - இந்த அல்லவா-வில் கூட அவர் தெரியலாம்.. என்னா லாவகமாக அவரிடம் இருவது அது வரும்.

    ReplyDelete
  4. இன்னொரு ஜெ .கே வாகிப்போன ..பி .கே ...அருமை !வாழ்த்துக்கள் !..

    ReplyDelete