Saturday 18 April 2015

எப்போதும் இருப்பவர்.







அது ஒரு காலம். அது ஒரு வாழ்வு.

அப்போதே நான் ஜெயிக்கத் துவங்கியது போல, தோற்கவும் துவங்கி இருந்தேன். ஜெயம் என்பது ‘தீபம்’ இதழில் என் நான்கு ஐந்து சிறுகதைகள் வெளிவந்து இருந்ததைக் குறித்தது. தோல்வி என்பது நான் B.Com  படிப்பில் தேர்வடையாமல் போனது சார்ந்தது.

விருது நகரில் ஒரு தனிப்பயிற்சியில் சேர்ந்திருந்தேன். கணக்கில் தான் எனக்கும் பிணக்கு. அந்தப் பேராசிரியர் அக்கவுன்டன்ஸியை துல்லியமான ஒரு தேர்வு நோக்கில் சொல்லிக் கொடுத்து, நம்மை விடைத்தேற்றுகிறவர். அதனால் விருது நகர் வாசம். விடுதியில் அல்லது விடுதியிலும் அ. கண்ண பிரான் என் சகா. கல்லூரியிலும் அகரவரிசைப்படி அமர்ந்ததில் நாங்கள் ஒரே பெஞ்ச். அகரவரிசைப்படி ஒரே தோல்வி.

அவர் அபாரமான புத்திசாலி. தேர்ந்த நகைச்சுவை உணர்வு. கலகலப்பு. நான் எல்லாவற்றிலும் நேர் எதிர் என்பதுதான் தெரியுமே. ஆனாலும் நாங்கள் ரொம்பவும் நெருக்கம். அவருடைய ஒரு புதிய இளம் நீல டெரிகாட்டன் முழுக்கைச் சட்டையைப் பெரும்பாலும் நான் போட்டுக்கொள்கிற அளவுக்கு அவரிடம் எனக்குச் சில பிரியமான சலுகைகள் உண்டு. அவருடையது அசல் திருநெல்வேலிப் பேச்சு. அதிலும் ஸ்ரீவைகுண்ட, ‘என்ன…வே’ யில் ஆரம்பித்து மற்ற தாராளச் செல்ல வசைகள் நிரம்பியது. நடிகர் முத்துராமன் தன் முதல் படத்தில், அடுக்கடுக்காகச் சொல்லி, ‘நினைவிருக்கிறதா சீத்தா?; என்று கேட்கும் போது, கரண்டை அளவு தண்ணீர் தெளிந்து ஓடும் சிவசைலம் ஆறு மாதிரி இருக்குமே, அந்தக் குரல் கண்ணபிரானுக்கு.

கண்ணபிரானும் நானும் தான் ஜெயகாந்தன் பேச்சைக் கேட்பதற்காகப் போனோம்.  ஜெயகாந்தன் அப்போது காங்கிரஸில் இருந்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் முடிந்து ஓரிரு வருடங்கள் ஆகியிருக்கும். ஜெயகாந்தன் இந்திக்கு ஆதரவான நிலை எடுத்தவர். ‘மெல்லத் தமிழ் இனி…’ என்ற தலைப்பில் பேசினார்.  அது ஏதோ ஒரு தெருவில், திடலில், சதுக்கத்தில் நடக்கும் பொதுக்கூட்டம் தான். அவருக்குத்தான் எல்லாப் பொதுவுக்குள்ளும் ஒரு சிறப்பை வரவழைத்துவிட முடியுமே. சிறப்பாகவே பேசினார்.

சிறப்பாக என்பதை விடவும் கோபமான பேச்சு. கோபமே அவருடைய சிறப்பும் அல்லவா?. விருதுநகர் ரயில் நிலையச் சுவர்களில், விதானங்களில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது எழுதப்பட்டிருந்த கரி எழுத்துக்களின் மீது கோபமுற்றுப் பேசினார். இந்திரா காந்தியைப் பெண்டாளக் கூப்பிடும் ஒரு தொனியில் அங்கே கிறுக்கப்பட்டிருந்த ஒரு வரிக்காகச் சீறினார். இத்தனை காலத்திற்குப்  பிறகும் அது அழிக்கப்படாது இருப்பதற்காகச் சாடினார். எதை உடனடியாக அழிக்கவேண்டுமோ, அதை அழிக்காதிருப்பின், எது அழியாது என்று நினைக்கிறோமோ  அது அழிந்துபோம்  என்று சொல்லி, ‘மெல்லத் தமிழ் இனி..’ என்ற தலைப்புக்கு வந்தார்.

அதுதான் ஜெயகாந்தனை ஸ்தூலமாக முதலில் பார்த்தது. அதுதான் அவரை முதலில் கேட்பது. நான் அப்படியே அசையாது நின்றேன். கண்ணபிரான் பக்கத்துப் பெட்டிக் கடைக்குப் போய், சிட்டை என்றும் இல்லாமல், பாக்கெட் டைரி என்றும் சொல்லமுடியாத  இரண்டு கையகலக் குறிப்பேடுகளை வாங்கி வந்தார். எனக்கு அதன் அட்டையும்  உள் இருந்த அசட்டு நீல நிறக் கோடுகளும் பிடிக்கவே இல்லை.

பேசி முடித்துவிட்டார். இரண்டு பேரும் கூட்டத்தோடு கூட்டமாக, வகிர்ந்து, முண்டியடித்துப் போய் அவரிடம் நீட்டுகிறோம். ‘ஜெய் ஹிந்த்’ என்று எழுதி, ‘த,ஜெயகாந்தன்’ என்று கையெழுத்திட்டுத் தருகிறார். கண்ணபிரானுக்கு என்ன எழுதியிருக்கிறார் என்று பார்க்கிறேன். அவருக்கும் அதே ‘ஜெய் ஹிந்த்’. அதே ‘த.ஜெயகாந்தன்’.

அந்தச் சிட்டை இப்போது என்னிடம் இல்லை. தற்சமயம் யு.எஸ்ஸில் இருக்கும் கண்ணபிரானிடமும் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

சிட்டைகள்  இப்போது இல்லாவிட்டால் என்ன?
ஜெயகாந்தன் தான் எப்போதும் இருக்கிறாரே.

%

1 comment:

  1. எப்போதும் இருப்பவர். = திரு ஜெயகாந்தன் அவர்கள் பற்றி திரு வண்ணதாசன் அவர்களின் அற்புதமான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். மிக்க நன்றி சார் திரு
    Vannadasan Sivasankaran S

    ReplyDelete