உங்களுக்குத் தெரியுமோ, தெரியாதோ?
நான் இப்போதுதான் தெரிந்துகொண்டேன். இந்த ‘சின்னு முதல் சின்னுவரை’ தான் சந்தியா
பதிப்பகம் தன்னுடைய சந்தியா பதிப்பக வெளியீடு.1 என்று வெளியிட்ட முதல் எழுத்து.
2001ல் வெளிவந்த அதை , 2014ல் இந்த முன்னுரைக்காகப் பார்க்கையில்தான் தெரிகிறது.
அதற்கும் முன்பு அது பார்த்திபனின் விமலன்
புக்ஸ் வெளியீடாக 1991, வந்தது. எனக்கு பார்த்திபன் யார் என்றே தெரியாது. ஜெ. என்.
ஜெகன்னாதன் மூலம் இந்தப் பிரதி அவரிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது. ஒருவகையில்
இப்போது பார்த்தால், இந்தப் பிரதி மட்டும் அல்ல, சின்னு என்கிற ஸ்ரீனிவாச
லட்சுமியும் யார் யாரிடமோதான் போய்ச் சேர்ந்தாள். இந்த 1991ல் இருந்து 2014க்குள்
நானும் யார் யாரிடமோதான் போய்ச் சேர்ந்துகொண்டு இருக்கிறேன்.
இந்த வாழ்வின் அடிப்படை மாயமே, நாம்
விரும்பியும் விரும்பாமலும், அறிந்தும் அறியாமலும் இப்படி ஒவ்வொருவரிடமாகப் போய்ச்
செர்வதுதான். சேர்ந்தோமோ சேர்க்கப்பட்டோமோ என்று கூடத் தெரியாது. செய்வினையோ
செயப்பாட்டு வினையோ, இந்தச் சேர்தலே வினை. சேர்தலே விதி.
என் எல்லாப் புத்தகங்களும் ஓரிரு பழைய
பிரதிகளாவது என்னுடைய சேகரத்தில் இருக்க, பார்த்திபன் வெளியிட்ட இந்த விமலன்
புக்ஸ் சின்னு மட்டும் என்னிடம் இல்லை. நான் ’புது எழுத்து’ மனோன்மணியிடம் கேட்க, அவர் அவருடைய
கோவை நண்பர்களிடம் சொல்ல, சீனு எனக்கு அவருடைய பிரதியை வாசிக்க அனுப்பிவைத்தார்.
சீனு எனக்கு ஏற்கனவே நண்பர்தான். முதல்
பக்கத்துக் காலப் பழுப்பின் வலது உச்சியில் சீனு என்று கையெழுத்திட்டிருக்கிறார்.
சீனு என உச்சரிக்கையில் சின்னு என்பது போலத்தான் மனதில் அதிர்கிறது. சின்னுவின்
நீட்சியாக சீனுவும், சீனுவின் சுருக்கமாகச் சின்னுவும் இருப்பதை உணரமுடிகிறது. ஒரு
வாசகன் ஒரு பிரதியின் கதாபாத்திரமாக நீள்வதும், அல்லது அவனே அந்தப் பாத்திரமாக்க்
குவிவதுவுமான இந்த இடத்தின் நுட்பம், புரியும்படியாகவும் புரியாத ஒன்றாகவும்
எனக்குப் பிடித்திருக்கிறது. இது புதிர் எனில் புதிர். இது புதிர் அவிழ்தல் எனில்
புதிர் அவிழ்தல். தானாய் மலரும் தண்ணீர்ப் பூ. வெள்ளத்தனைய மலர் நீட்டம்.
நான் அதற்குப் பிறகு சின்னுவைப்
பார்க்கவே இல்லை. ஒரே ஒரு முறையாவது பார்த்திருக்கலாம். ‘அதற்குப் பிறகு’ என்பது, ‘எதற்குப் பிறகு’ என்ற கேள்வியை வைத்திருக்கிறது என்பதையும், கேள்வியின் மடியிலேயே
பதில் எப்போதும் இருக்கிறது என்பதையும் நான் மட்டுமே அறிவேன். நான் பார்க்கவில்லையே
தவிர, சின்னுவை தங்கராஜ் பார்த்திருக்கிறான். ஒரு முறை அல்ல, இரண்டு முறைகள்.
அதுவும் சமீபத்தில். கடந்த இரண்டு வருடங்களுக்குள்.
ஒரு முறை டவுண் மார்க்கெட் பக்கம், ஏதோ
ஒரு கடையில் பூவோ பழமோ பூஜை சாமான்களோ வாங்கிக் கொண்டிருந்த சின்னுவை. அடுத்த முறை
ஏதோ ஒரு சிவராத்திரியில் அல்லது பிரதோஷ வேளையில் நெல்லையப்பர் கோவிலில். தங்கராஜ்
கொடுத்து வைத்தவன். சின்னு முதல் சின்னுவரை பக்கங்களில் அவள் நடமாடுவதற்கு முன்பே,
அவளை செண்பகம் பிள்ளை தெருவில், அத் தெருவின் வெயிலோடு வெயிலாக, மழையூடு மழையாகப்
பார்த்தவன். அறுவடைக் களத்துமேடாக வைக்கோலும் கதிரும் நெல்வாசமும் ஆகத் தெருவில்
குவிந்து கிடக்கையில், அதனிடை வகிடெடுத்துச் செல்லும் அவளைக் கணடவன். ஒரு
செம்பருத்திப் பூவை, பள்ளிக்கூட ட்ராயிங் மாஸ்டர் பயிற்சி நோட்டில் வரைந்து
காட்டுகையில், அவன் பார்த்திருந்த ஒரு செம்பருத்திப் பூ ஒன்று சூல்முடியுடன்
அசைவதை ஒப்பிட்டு நினைத்துக் கொண்டு, இரண்டு பூக்களுக்கும் இடையில் இவன் ஒரு
புதுப் பூவை வரைய முடிகிறவன்.
சொல்லப்போனால், இதை நான் எழுதுவதற்குப்
பதிலாக தங்கராஜ் எழுதியிருந்தால், இதைவிடக் கூட, இந்த ‘முதல்’ ‘வரை’ வரையறைகளைத் தாண்டி, சின்னு யாதுமாகி நின்றிருப்பாள். ’அவன்’ எனினும் ’அவள்’ எனினும், அகமும் புறமும் அறிய முடியும்
நிலையில், அவர்கள் யாதுமாகி நின்று எங்கணும் நிறைபவர்களாகவே இருக்கிறார்கள்.
எந்த வாழ்வும் சக்கையானதில்லை. எந்த
மனிதரும் தட்டையானவரில்லை. அதிலும் இந்தச் சின்னுவைப் போன்ற பெண்களின் பரிமாணமே
வேறு. எந்த மர்மமும் அற்று, தங்களின் உடையும் குமிழிகள் மீது ஏழேழு வண்ணங்கள்
சுடரிட, அலைகளிடை நுரைத்து மினுங்கும் விதத்தை எல்லாக் கடற்கரைக் கால்களும்
அறிந்தே இருக்கின்றன. கடல் என்பதும் கரை என்பதுவுமே அவரவருக்குத் தனித்தனியாகி
விடுகையில், சின்னுவைப் பற்றிக் கேட்பானேன்? சின்னு தனி. தனித் தனி.
நான் சின்னுவைக் கூட அல்ல, சின்னுவின்
மகளை, சின்னுவின் பேரக் குழந்தைகளில் ஒன்றையேனும் பார்த்திருக்கலாம். என்னுடைய
இந்த 68 – 69ம் வயதில், என்னுடைய மகளின் மகன், மகனின் மகளுடைய உணர்வுலகில்,
சின்னுவின் கண்களை, சுருள்முடிச் சிலும்பலை ஏந்தி நிற்கும் அவளுடைய வம்சாவழியைப்
பார்க்க முடிந்திருந்தால், இந்தச் சின்னு முதல் சின்னுவரையின் வம்சமாகவும்
வழியாகவும் , இதனுடைய நீட்சியாகவும் இன்னொரு புதிய பகுதியை எழுதியிருக்க முடியும்.
முழுக்க முழுக்கப் புனைவதை விடவும்,
முழுக்க முழுக்க மெய்ப்பதை விடவும். சின்னுவின் பேரனின் கரண்டைக் காலில் புரளும் வெள்ளித்
தண்டையின் தேய்வைத் தொட்டு மேலேறி, அந்த ஆதிச் சின்னுவின் அகலக் கண்களில் குடியேறி
இருப்பேன். எழுத்தில் குடியேறுவது எல்லாம், எழுத்தில் உயிரை விடுவதற்குத் தானே.
சின்னுவுக்கு அவளுடைய சாயலில், அவள்
கதையும் கதையின்மையுமாக ஒரு புத்தகம் வந்திருப்பது 1991ல் தெரியாது. 2001ல்
தெரியாது. இதோ இந்த 2014ல் கூட்த் தெரிய வாய்ப்பில்லை. யாரை வரைந்தோமோ அவர்களால்
பார்க்கப் படாமல், இப்படி எத்தனை எத்தனை ஓவியங்கள், எட்டுத் திக்குகளின்
புகையடித்த சுவர்களில் எங்கெங்கோ தொங்கிக்கொண்டிருக்கும்?
ஆர்.கண்ணன் அப்போதே போய்ச்
சேர்ந்துவிட்டான். இவள் இருக்கிறாளோ இல்லையோ தெரியாது. இருக்க வேண்டும் என்றும்
தோன்றுகிறது. என் கண்ணில் படாதவரை, இருந்தாலும் இல்லாதவள்தானே அவள் என்றும்
படுகிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், இல்லாதவளை இருக்கப் பண்ணத்தானே இந்த
எழுத்தெனும் மாயக் கூத்து.
இதை மீண்டும் பதிப்பிக்கிற சந்தியா
பதிப்பகத்திற்கு நன்றி சொல்கையில், நான் விமலன் புக்ஸ் பார்த்திபனையும்,
ஜெ.என்.ஜெகனையும், அந்தப் பச்சை நிற அட்டையில் முகப்போவியம் வரைந்திருந்த ஆனந்த
முருகனையும் நினைத்துக் கொள்கிறேன்.
என்னை விடச் சமீபத்தில் சின்னுவைப்
பார்த்திருக்கும். என்னைப் போலவே அதே நெகிழ்வுடன் அவளைப் போற்றும் தங்கராஜுவுக்கு
இந்தப் புதிய பதிப்பைச் சேர்க்கிறேன். தங்கராஜுவின் இயற்பெயர் தங்கராஜ் அல்ல.
கு.சண்முகசுந்தரம். சின்னுவின் இயற்பெயர் மட்டும் என்ன, ஸ்ரீனிவாச லட்சுமியா?
இல்லை.
ஒரு வாழ்வைப் புனையும் போது, ஒரு
பெயரைப் புனைந்தால்தான் என்ன?
கல்யாணி.சி.
12.09.2014.
இந்த ‘முதல்’ ‘வரை’ வரையறைகளைத் தாண்டி, சின்னு யாதுமாகி நின்றிருப்பாள்.
ReplyDelete