Monday, 1 December 2014

சிங்கக் குட்டியும் வெள்ளி மீன்களும் சிதம்பரம் தெருவும்





பெயர் தான் சிதம்பரம் நகரே தவிர, உண்மையாகச் சொல்லப் போனால் இது சிதம்பரம் தெரு தானே. தெரியத் தருவதாகவும் தெரிந்து கொள்ளவேண்டியது ஆகவும் இந்த வாழ்வும் மனிதரும் இருக்கிற போது இது தெரு ஆக இருந்ததும், நகர்ந்துகொண்டே இருப்பதாகவும், நகராமல் நிற்கமுடியாதது ஆகவும் இந்த வாழ்வும் மனிதரும் ஆகிவிட்ட பிறகு இது நகராகவும் ஆகிவிடுவதில் எந்த வியப்பும் இல்லை.

இது நகர் என அறியப்பட்டாலும், ஒரு ஆதித் தெருவைப் போல, இங்கே இன்னும் ஒவ்வொரு வீட்டில் வாசல் தெளித்துக் கோலம் இடுகிறார்கள். அப்படி வாசல் தெளித்துக் கோலம் இடுகிறவர்கள் அந்தந்த வாசலுக்கும் அந்தந்த வீட்டுக்கும் உரிய பெண்களாகவும் இருக்கிறார்கள். அப்படி வாசல் தெளிக்கும் போதும் கோலம் இடும்போதும் தவறாது, எப்போதும் நெருக்கமாகவும், எப்போதாவது சற்றுச் சினந்தும் பேசிப் பரிமாறிக் கொள்கிறார்கள். அவர்கள் இப்படி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதற்காகவே அவர்கள் இப்படி ஒரு நித்திய கருமம் போல, வாசலைத் தெளிப்பதையும் கோலமிடுவதையும் தங்கள் கடமையாக வரித்துக் கொள்கிறார்களோ என்று கூடத் தோன்றுகிறது.

எங்கள் வீட்டிலும் வாசல் உண்டு, கோலமிடுபவர்களும் உண்டு அல்லவா? ஒரு செய்தித்தாளை விட ‘செய்திகளை முந்தித் தருகிற’ முந்திய நாளின் அன்றாட வர்த்தமானங்களை, இந்தப் பெண்கள் பேசிக் கொள்வது போல ஒருபோதும் ஆண்களால் மனம் விட்டுப் பேச முடியாது. ஒரு வேளை அப்படி மனம் விட்டுப் பேசுவதால் தான் அவரவர் வாசல்கள் இத்தனை சுத்தமாகவும், அவரவர் இடும் கோலங்கள் இத்தனை நெளிவும் சுளிவுமாய் எழிலுற்றுவிடுவதும் சாத்தியம் ஆகிவிடுகிறது போல.

வயதின் காரணமாகவும் அனுபவத்தின் காரணமாகவும் தலைமைப் பண்பை முன்னிட்டும், எங்கள் வீட்டம்மாவுக்கு, எதைப்பற்றிப் பேசவும் எதைக் குறித்தும் கேள்வி கேட்கவுமான உரிமை உண்டு. இவர் கையில் வாரியல் இருப்பதும் அவர்கள் கையில் கோலப்பொடி டப்பா இருப்பதும் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. வெற்றுக் கைகளால் முழம் போட அவர்கள் அரசியல் வாதிகளா என்ன? அதற்காக அவர்களுக்கு அரசியல் தெரியாதென்றோ, அவர்கள் அவர்களுக்குள்ளேயே ஒரு அரசியல் நடத்துகிறார்கள் என்பதைத் தெரியாதது போலவோ நாம் எண்ணிவிடவும் இருந்துவிடவும் முடியாது. ஆனால், இன்றையப் பேச்சு அரசியல் குறித்து அல்ல. கனவுகள் குறித்து. அரசியலே ஒரு கனவுதானே என்கிறீர்களா? அது குறித்த விசாரணையை அல்லது சிலாகிப்பை அப்புறம் வைத்துக் கொள்ளலாம் இது முழுக்க முழுக்க கனவு குறித்து. சொப்பனம் என்றே சாதாரணமாகச் சொல்லி இருக்கலாம். சொப்பனத்தை கனவு என்று சொல்கையில் அந்தச் சொல்லே கனவு போல ஒரு விஸ்தாரணம் அடைந்துவிடுகிறது.

அந்த எதிர் வீட்டுப் பெண் தான் நேற்றிரவு கண்ட சொப்பனங்களை எங்கள் வீட்டம்மாவிடம் முகம் கொள்ளாத பிரகாசத்துடன் சொல்ல ஆரம்பித்தது, ‘இந்தா பாருங்க சித்தி. எந்திரிச்ச உடனே உங்க கிட்டே தான் சொல்லணும்னு தோணுச்சு. அதுக்குள்ளே சபரியப்பா கிட்டே காப்பி கொடுக்கப் போனேனா. பொறுக்க முடியாம, அவங்க கிட்டே சொல்லிட்டேன்’ என்று துவங்கியது. ஒரு சாதாரணப் பேச்சை இவர்கள்தான் எவ்வளவு ஈர்ப்போடும் அடிப்படை வசீகரத்தோடும் துவங்கிவிடுகிறார்கள்.

அந்தப் பெண் கனவில் ஒரு சிங்கக் குட்டி வந்ததாம். சிங்கக் குட்டி அப்படி ஒரு அழகாக இருந்ததாம். நிஜ சிங்கக் குட்டி கூட அவ்வளவு அழகாக இருக்காதாம். ( ’இங்கே பாருய்யா’ என்று கேட்டுக்கொண்டிருக்கும் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது ). பச்சைப் பிள்ளை மாதிரி அது அவள் காலையே சுற்றிச் சுற்றி வருகிறதாம். சற்றுக் குரலை அந்தரங்கமாக ஒருவருக்கு மட்டும் இருக்கிற குரலில் தணித்து, ‘எடுத்து அப்படியே இடது பக்கத்தோடே வைத்து பால் கொடுத்துவிடலாம்’ என்றே அவளுக்குத் தோன்றியதையும்  சொல்லி, மறுபடி குரலை ஏற்றி, ‘எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது சித்தி’ என்று சொல்லி முடித்தாள். சரி இதைப் பற்றிய அபிப்பிராயம் என்ன  என்று வல்லுநர் கருத்துக் கேட்கப் போகிறாள் என்று நினைத்தால், அவள் இன்னொரு கனவை அடுத்துச் சொல்ல ஆரம்பித்தாள்.


’ அதை விட சூப்பர் சித்தி’ என்று துவங்குகிற அந்த முகத்தை,அந்தச் சொல் வழியே பார்க்க முடிந்தது. அவள் ஆற்றில் நிற்கிறாளாம். எந்த ஊர் ஆறு என்று தெரியவில்லையாம். நெல்லையப்பர் கோயில் மூங்கில் மாதிரி சடை சடையாக ஆற்று ஓரம் வளர்ந்து கிடக்கிறதாம். தண்ணீர் கரண்டை அளவுதான் இருக்குமாம். ஆனால் கண்ணாடி மாதிரி, குனிந்து முகம் பார்த்துக் கொள்ளலாமாம். உச்சி வகிட்டில் இருக்கிற நரை முடி வெள்ளிக்கம்பி மாதிரி மினுங்குவது தெரியுமாம். ’நிலைக் கண்ணாடி தோத்துப் போகும்’ என்று சொல்லும் போதும் அந்த முகத்தை எட்டிப் பார்த்துவிட எனக்குத் தோன்றியது. தெப்பக் குளத்தில் எல்லாம் கருப்புக் கருப்பாகத்தான் நாம் மீன் பார்த்திருக்கிறோமாம். அது வெள்ளிமாதிரி இருந்ததாம் ஒவ்வொன்றும். மாதிரிக் கூட இல்லையாம். வெள்ளியே தானாம். கோமதி அம்மனுக்கு வெள்ளியில் கண்மலர் சாத்துவது போல, யாரோ வெள்ளியில் மீன் மீனாகச் செய்து ஆற்றில் விட்டிருந்தார்களாம். கூட்டம் கூட்டமா தேரோட்டம் பார்க்கப் போகிறமாதிரி நீந்தும் அதைப் பார்க்கிறதற்கே ஆசையாக இருந்ததாம். ஆனால் சட்டென்று ’முழிப்பு, வந்துவிட்டதாம்.

இதைச் சொல்லி முடித்த பிறகும் அந்தப் பெண்ணால் கனவு ஆற்றங்கரையில் இருந்து நகர முடியவில்லை. இன்னும் ஆற்று மணல் அவள் சொற்களில் இருந்தது. ‘இந்தா பாருங்க சித்தி. இப்டி இப்டி, இப்டி இப்டி அது நீந்திப் போகுது’ என்று கைவிரல்களை அவள் காற்றில் நீந்தவிட்டுக் கொண்டிருக்கும் போது நான் தாங்கமுடியாமல் வெளியே வந்து அவளைப் பார்க்கவந்து விட்டேன். அவளுக்கு அப்படி ஒரு வெட்கம். ‘சித்தப்பாவைப் பேப்பர் படிக்க விடாமல் பண்ணிவிடாமல் பண்ணீட்டேன் போல’ என்று மன்னிப்புக் கேட்கிற குரலில் என்னைப் பார்த்தது.

எந்தப்  பேப்பரில் இப்படிக் கனவுகளை அச்சடிக்கிறார்கள். எந்தப் பக்கத்தில் இப்படிச் சிங்கக் குட்டிகளை அச்சுக் கோர்க்கிறார்கள். வெள்ளிமீன்கள் நீந்தும் செய்திகளை எந்த நிருபர்கள் முன் வைக்கிறார்கள். அல்லது தன்னுடைய கனவுகளைப் பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் பகிர்ந்துகொள்ளும் பத்தியை எந்த தினத்தாள் பதிகிறது. செய்தித் தாட்கள் பதிவதும் பதியாததும் இருக்கட்டும், ஒரு அன்றாடப் பெண்ணுக்கு இன்னும் கனவில் சிங்கக் குட்டி வருவதும் மீன்கள் நீந்துவதும் எவ்வளவு அருமையான விஷயம். அதை அவர்கள் தங்களுடைய ஒரு  அலுத்த நாளின் முடிவில், இரவில் காண்பதும், காலையில் எழுந்த கையோடு ஒரு சிறுமியைப் போல, அவளுடைய கணவனிடம் பகிர்ந்து கொள்வதும் எத்தனை நல்ல துவக்கம் அவர்களின் மற்றொரு நாளுக்கு.

எனக்கு சமீபத்தில் மிகக் குறைந்த கனவுகளே வருகின்றன. அல்லது கனவே வருவதில்லை. ஒரு ஆறு மணல் அற்றுப் போவது நிகர்த்ததே ஒரு வாழ்வு கனவற்றுப் போவதும். உலகமயமாதலில் கனவுகளும் பலியாகுமோ? எளிய கனவுகளும் திருடு போமோ? சுதந்திரமாகவும் ஆனந்தமாகவும் காணப்படும் இந்தப் பெண்களின் கனவுகள் வரையறுக்கப்பட்டும் அட்டவணைப் படுத்தப் பட்டும் போகும் காலம் வரும் எனில் அது எத்தனை துயர மிக்கது.

அப்போது இந்தச் சிங்கக் குட்டியும், வெள்ளி மீன்களும் எங்குறும்? எங்கு செல்லும்? நேரில் நின்று கேட்கும் வீட்டம்மாவும், மறைவாக நமக்குள்ளே கேட்டு மகிழும் என் போன்றோரும் சிங்கக் குட்டிக் கனவை, வெள்ளி மீன்கள் சொப்பனத்தைச் சொல்கின்ற அந்தப் பெண் இன்றி எப்படி வாழ்வோம்?

யார் இதற்கு சிதம்பரம் நகர் என்று பெயர் இட்டார்கள்?
ஏன் இது சிதம்பரம் தெருவாகவே இல்லாது போயிற்று?

1 comment:

  1. இப்டி இப்டி, இப்டி இப்டி அது நீந்திப் போகுது’ என்று கைவிரல்களை அவள் காற்றில் நீந்தவிட்டுக் கொண்டிருக்கும் போது பார்த்த உங்களுக்கும் படிக்கும் எங்களுக்குமாக காட்சி விரிகிறதே...!! பெண்களின் கனவுகளும் வரையறுக்கப் படும் காலம் ஊழித் தொடக்கமாகும்.

    நகர் என்பதும் தெரு என்பது எத்தனை நுட்பமான அர்த்தங்கள் கொண்டிருக்கிறது உங்கள் கைவண்ணத்தால்!!

    நாங்களும் வசிக்க ஒரு தெரு இருக்கிறது- விசாலமான வாசலுடன். கோலமும் போடுகிறோம். கண்ட கனவையும் இன்ன பிறவற்றையும் பகிர்ந்து கொள்ள நடையுலாவில் இணையும் சிநேகிதிகளும் இருக்கிறார்கள்.

    உலக மயமாதல் எனும் பேரரக்கன் அதையும் ஒருநாள் ஸ்வாஹா செய்து விடுவானோ...

    ReplyDelete