Thursday 23 October 2014

சந்தோஷம்













நேற்று தென்காசியில் இருந்தேன். ஊரில் இருந்தால் நம்பிராஜனைப் பார்க்கலாம் என்று தோன்றியது. விசாரித்தேன். அவர் வீடு மாற்றிவிட்டார் போல. நடு முத்தாரம்மன் கோவில் தெருவில் இருப்பதாகச் சொன்னார்கள். எங்கே இருக்கிறது என்று மீண்டும் ஒரு விசாரிப்பு.  ‘அங்கே யார் வீட்டுக்கு?’ என்று கேட்டார்கள். நம்பிஎன்று சொல்லவில்லை. விக்ரமாதித்யன் என்று சொல்லி அவருடைய தோற்ற அடையாளம் சொன்னேன். உடனே சொல்லிவிட்டார்கள். அவர் அன்றைக்கு ஒளிபரப்பாகும் ஒரு சினிமாவில் வருவார் போல. ‘இந்த சித்தர் மாதிரி இருப்பாரு ல்லா அக்கா?’ என்று உடனே வீட்டு அடையாளம் சொல்லி,’நடந்து போகிற தூரம் தான். நாலு எட்டில் போய்விடலாம் என்றார்கள்.  நிஜமாகவே ரொம்பப் பக்கம்தான். போய்விட்டேன்.தெருவில் வெடி போட்டுக்கொண்டு இருந்தார்கள். ஃபோன்  பண்ணியதும்  நம்பியே தெரு வாசலுக்கு வந்து, கூட்டிப் போய்விட்டார்.

ரொம்ப  வருஷத்திற்கு அப்புறம் பார்க்கிறேன். இடையில் பார்க்க வாய்க்கவே இல்லை. நம்பி அப்படியே இருக்கிறார். அந்தப் பெண், அவரை  சித்தர் மாதிரி என்று சொன்னது சரிதான். கொஞ்சம் உடம்புக்குச் சரியில்லை. நீர்க் கொண்டு காய்ச்சல்கார முகத்துடன் இருந்தார்.  சோர்வு எல்லாம் ஒன்றுமில்லை. ஒரு கால் பாதத்தை இன்னொரு கால் தொடையில் பதிவாகப் போட்டு உட்கார்ந்துகொண்டு பேசும் போது எனக்கு ஓங்கூர் சாமியாரை கோபுலு வரைந்திருந்தது ஒரு நிமிஷம் வந்துவிட்டுப் போனது.

கரையிலும் இல்லை. தண்ணீருக்குள் இறங்கி ரொம்ப ஆழத்திற்கும் போகவில்லை. முங்கின மாதிரி, நீச்சல் மாதிரி, பாறை மாதிரி, ஆறு மாதிரி இருந்தது பேச்சு. அவருக்கு யாரிடம் எவ்வளவு பேசவேண்டும் என்று எல்லாம் தெரியும். ’சித்துப்பு, சித்தினிப்பு’ என்று ஒரு சிட்டிகை உப்பு உரைப்புக் கூடாமல் பேசினார். ஏதாவது தகவல்களில் சந்தேகம் வந்தால், ’ஏன் பகவதி?’ என்று வலது பக்கத்தில் இருக்கும் வீட்டம்மாவிடம் கேட்டுக் கொள்கிறார்.;எங்கே, எப்போங்கிறது சில சமயம் அயத்துப் போகிறது’ என்று சிரிக்கிறார்.இப்படித் தும்பைச் செடிக்கு மேல்  தட்டான் பறக்கிற மாதிரிப் பேசியதிலேயே இரண்டு மணி நேரம் போனது தெரியவில்லை.

புறப்படுகிற நேரத்தில் தான் அவருடைய பையன் சந்தோஷ் வந்தான். இரண்டு பேரில் இளையவன். திரைப்படக் கல்லூரியில்  ஒளிப்பதிவு படித்துத் தேறி, செழியனிடம்  உதவியாளராக இருந்து இப்போது தனியே இரண்டு படங்கள் பண்ணியிருப்பவன். சந்தோஷை அவன் இவன் என்று நான் சொல்வதில் ஒன்றும் தப்பில்லை. ஜமுக்காளத்தில் சின்னப் பையனாக அவன்  படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த ஒரு தோற்றம் என்னிடம் இருக்கிறது. அப்போது அந்தச் சின்ன குச்சுவீட்டிற்கு வெளியே படர்ந்துகிடந்த பீர்க்கங் கொடியும் மஞ்சள் பூவும் சந்தோஷை ஏக வசனத்தில் பேசும் உரிமையை எனக்குத் தந்திருக்கிறது.

நான் சந்தோஷைப் பக்கத்தில் இருத்திக்கொண்டேன். தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டேன். சமீபத்தில் முகநூலில், இரண்டு தோளிலும் இரண்டு பழுப்பு நிறப் பூனைக்குட்டிகளை வைத்திருக்கும் அவனுடைய படம் வந்திருந்தது. நீங்களும் பார்த்திருக்கலாம். அந்த ஞாபகத்தில் , ‘பூனைக்குட்டி ரெண்டையும் எங்கே காணோம்?’ என்று கேட்டேன். உயிருள்ள கண்கள், நம்பி குடும்ப மூக்கு, முறுக்கு மீசை என்று ஆள்  தீர்க்கமாக இருந்தான். ‘நீ ஒளிப்பதிவு பண்ணப் போறியா? நடிக்கப் போறியா?’ என்று கேட்டேன். எதற்கும் பதில் சொல்லவில்லை. வெறும் சிரிப்பு. சிரிப்புதான் பதில்.

கொஞ்ச நேரம் கழித்து, செழியன் பற்றி,  கலகம் அமைப்பு பரிசுவழங்கியிருக்கும் அவனுடைய குறும் படம் பற்றி, போஸ்ட் ப்ரொடக்‌ஷன் நிலையில் இருக்கிற அவனுடைய இரண்டாவது படம் பற்றி, தற்போது அவன் வாசித்துக்கொண்டிருக்கும் ‘ஓநாய் குலச் சின்னம்’ பற்றியெல்லாம் பேச்சு நகர்ந்தது.

அப்புறம் வெளியே போய் பால் வாங்கிவந்தான். எல்லோரும் டீ சாப்பிட்டோம். பொதுப்படையாக கேலியும் சிரிப்புமாக மேற்கொண்டு கொஞ்சநேரம் பேசிக்கொண்டு இருந்தோம். ரொம்ப நேரமாகிவிட்டது. புறப்பட்டேன். சந்தோஷ் தான் கூடவே வந்தான். மழை பெய்த வாசலில் ‘பார்த்து நட’க்கச் சொன்னான். தெருவில் வெடி போடுகிறவர்களை கொஞ்சம் நிறுத்தச் சொன்னான். பூக்கடையில் காலையில் ஏலம் போட்டது போக மிஞ்சின பூவைப் பை பையாகக்  கட்டித்  தூரப் போட்டிருந்தார்கள். பாலித்தீன் முடிச்சுடன், சிறு சிறு மர்ம பலூன்களாகக் கிடக்கும் அதைத் தாண்டிப் போகும் போது உண்டான நொடிநேர அமானுஷ்யத்தைக் கடக்க அவன் ஏதோ  சொன்னான். நான் ஏதோ சொன்னேன்.

வீட்டு வாசல் வரை கொண்டுவந்து விட்டான். உள்ளே வந்துவிட்டுப் போகச் சொன்னேன். வரவில்லை.’ ரொம்ப சந்தோஷம். ரொம்பசந்தோஷம்’ என்று இரண்டு முறைகள் சொல்லிவிட்டுச் சிரித்தான். அவனுடைய பெயரை, அவனே சொல்லி, அவனே அவனைக் கூப்பிட்டுக்கொண்ட அந்த முகம்  நன்றாக இருந்தது.

வீட்டுக் கல் நடையில் ஏறுகையில், எனக்குத் தோன்றியது. நான் நம்பிராஜனைப் பார்க்கத்தான் போனேன். ஆனால் பார்த்துவிட்டு வந்திருப்பது நம்பிராஜனை அல்ல, சந்தோஷை என்று.

ஒரு நேரத்தில் ஒருத்தரைப் பார்த்தால் போதாதா?

2 comments:


  1. //நம்பிராஜனை நீங்கள் சந்திக்க முடியாமல் போன வருத்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது...என்ன இருந்தாலும் பழைய பாஷை கேட்க இதயம் ஏங்கித் தவிக்கும்தானே...மாறிப்போன காலமும், மாற்றிப்போட்ட சூழலும் மனசுக்கு வலியாகி விடுகிறது...// உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, எனக்கு இப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது. சந்தோஷ் தோளில் பூனைக்குட்டிகள் தேடிய கண்கள் அல்லவா உங்கள் கண்கள்!...

    ReplyDelete
  2. நம்பி அப்படியே இருக்கிறார்.. இப்படித் தும்பைச் செடிக்கு மேல் தட்டான் பறக்கிற மாதிரிப் பேசியதிலேயே

    ReplyDelete