Tuesday 14 October 2014

ஒரு சாயுங்கால மழை, சில பூனைக்குட்டிகள்.










சுந்தரம் மழையையே பார்த்துக்கொண்டிருந்தான்.                        
எந்த ஆரவாரமும் இன்றிப் பெய்கிற மழையைப் பிடித்திருந்தது. சிதம்பரத்துடைய வீட்டில், தான் இப்படி ஒரு பழைய மர நாற்காலியில் உட்கார்ந்து பார்ப்பதற்காகவே, திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் அப்படி மழை பெய்கிறது என்று தோன்றியது. பிற்பகலும் இன்றி முன்னிரவும் இன்றி சாயுங்காலத்தில் பெய்கிற மழையை மிகவும் நெருக்கமாக அவனுக்கு உணர முடிந்தது. தெருவின் தார் பூச்சுமானத்தில் மழைத் தாரை விழுந்து கண்ணாடிச் சில்லாகச் சிதறிக்கொண்டு இருந்தது. நேர் எதிர் வீட்டின் வாசலில் நின்ற அரளிச் செடி, ஒரு பூவும் உதிராமல் அப்படியே தழைந்து தழைந்து அசைந்தது.
சரோ வீட்டு ஞாபகம் வந்தது. சரோ வீட்டின் முன் அரளி கிடையாது.  போகன்விலா பூக்கள். மழையில் நனையும் போது போகன் விலா பூக்கள் அவ்வளவு அழகாக இராது. ஒவ்வொரு பூவும் ஒரு பருவத்தில் அழகு. அதன் காலம் காற்று. காகித உலர்வுடன் காற்றில் தரையோடு தரையாக நகரும் சிவந்த பூக்களைப் பின்தொடர்ந்தால் சரோ வீடு வந்துவிடும். சரோ வீடு வந்துவிட்டது என்பதற்கு இன்னொரு அடையாளமும் உண்டு. காட்டுக் கொடிகளைப் போலத் திருகி வளர்ந்து கிடக்கிற போகன்விலா கிளைகளுக்குள் அடைந்து இடம் மாறித் தாவும் சிட்டுக்குருவிகள் சத்தத்தில், சரோ வீட்டு வாசலில் போடப்பட்டிருக்கும் கோலம் மிதப்பது போல இருக்கும்.

அந்தக் கோலங்கள் சரோவின் அப்பா கூடப் பிறந்த அத்தை போடுவது. சரோவுக்கு லீலா அத்தையை ரொம்பப் பிடிக்கும். லீலா அத்தையை பொதுவாக எல்லோருக்குமே பிடிக்கத்தான் செய்யும். ரெட்டியார்பட்டி பள்ளிக்கூடத்தில் லீலாவதி டீச்சரும்  அவருடைய கணக்குப் பாடமும் அத்தனை பிரபலம். லீலா அத்தை சிரிக்கிற மாதிரியும் இருக்கும். சிரிக்காத மாதிரியும் இருக்கும். பக்கத்தில் இருக்கிற மாதிரியும் இருப்பார்கள். தூரத்தில் போய்விட்டது போலவும் தோன்றும். கல்யாணம் ஆகிவிட்டதென்றும் சொல்கிறார்கள். பிடிக்காமல் வந்துவிட்டதாகவும் கேள்வி. பொட்டுவைத்திருக்கிறாரே தவிர, லீலா அத்தையைக் கட்டியவர் காலம் எப்போதோ முடிந்துபோயிற்று என்றும் பேச்சு உண்டு. எது எப்படியோ? லீலா அத்தை தான் தினமும் சரோ வீட்டு வாசலில் கோலம் போடுவது. கணக்குக்கும் கோலத்துக்கும் ஒரு பிடிமானம் உண்டு போல. அத்தனை புள்ளியில் அத்தனை வரிசையில் ஒரு இழைகூடப் பிசகாமல் அது படர்ந்து கிடக்கும்.

சரோ சொல்வது இன்னொன்று ஆச்சரியமாக இருக்கும். லீலா அத்தை வாய்க்குள்ளேயே பாடிக்கிட்டேதான் கோலம் போடும். வாசல் தெளிக்கிறவரை ஒரு சத்தம் இருக்காது. கோலப்பொடி டப்பாவை எடுத்ததும் பாட்டு ஆரம்பிச்சிரும். என்ன பாட்டுண்ணு நமக்குக் கேட்காது. பாட்டுண்ணு மட்டும் தெரியும். அது தெரிஞ்சாப் போறாதா?

சரோ இதைச் சொல்லும் போதும், இப்படிக் கேட்கும் போதும், ஆமாம் போதாதா? என்ன பாட்டு என்று தெரிந்து என்ன ஆகப் போகிறதுஎன்றுதான் எல்லோருக்கும் தோன்றும்.

சுந்தரம் சரோவை நினைத்துக்கொண்டே மழை பார்த்துக்கொண்டிருந்தான். சரோவை விட லீலா அத்தை ஞாபகம் அதிகமாக வந்துவிட்டது எப்படி என்று தெரியவில்லை. ஆட்டோ சத்தம் கேட்டது. சரோவாகக் கூட இருக்கலாம். எதிர்வீட்டில் ஒரு ஆட்டோ வந்து யாரையோ இறக்கிவிட்டுவிட்டு அவசரமாகக் கிளம்பிப் போயிற்று. சுந்தரத்துக்கு இதுவும் புரியாத ஒன்றுதான். மழைக்கும் வாகனங்களுக்கும் அப்படி என்ன பகையும் முரண்டும்? இரண்டு தூறல்கள் விழுந்ததும் எல்லா வாகனங்களும் அப்படி ஏன் விழுந்தடித்துக்கொண்டு ஓடுகின்றன?

‘சரோ வந்துட்டுதா? உள்ளே இருந்து அருணா குரல் வந்தது.
‘இல்லை அருணா அருணாவை அருணா என்றே கூப்பிட சுந்தரத்தை சிதம்பரம் அனுமதித்திருந்தான். இதெல்லாம் அனுமதி சம்பந்தப்பட்ட விஷயமும் இல்லை.

‘ஆட்டோ சத்தம் கேட்ட மாதிரி இருந்தது. சரி. நம்ம வீட்டுக்கு தான்னு நினைச்சோம்’ -  இப்போது சத்தம் கொடுத்தது சிதம்பரம். அவனும் சமையல் கட்டில்தான் இருக்கிறான். சிதம்பரமும் அருணாவும் அப்படி ஒன்றாகவே சமையல் கட்டில் புழங்குவதை வந்ததில் இருந்தே சுந்தரம் பார்த்துக்கொண்டு இருக்கிறான். கொஞ்ச நேரம் குக்கர் சத்தம், மிக்ஸி சத்தம் கேட்கும். அப்புறம் இடைவேளை விட்டது போல ஒரு அமைதி. உடனே பாத்திரம் உருள்வது போல ஒரு பெரும் சிரிப்பு. அருணாவுடையது அது. அவள் சிரித்து அடங்கட்டும் என்பது போல, சிதம்பரம் வெளியே வந்து ஃப்ரிட்ஜின் மேல் வரிசையில் இருந்து முட்டைகளை எடுத்துக்கொண்டு போவான்.

‘நல்லா இருக்கு, உங்க ரெண்டு பேரையும் பார்க்க சுந்தரம் வாய்விட்டே சொல்லிவிட்டான். நேற்று ரயில் நிலையத்திற்கு சுந்தரத்தை அழைத்துவர காரை எடுத்துக்கொண்டு வந்த்து கூட அருணாதான். சிதம்பரம் பக்கத்தில் இருந்து, பின்பக்கம் திரும்பி இவனோடு பேசிக்கொண்டு வந்ததோடு சரி. ஆனால் வீட்டுக்கு வந்ததும் ‘காஃபி எப்படி சுந்தரம் இருக்கணும்? ஸ்ட்ராங்காகவா, லைட்டாகவா?’  என்று கேட்டது சிதம்பரம். காப்பி அவ்வளவு தரமாக இருந்தது. மற்றவர்களுக்கான ஒரு காப்பியின் கசப்பை, இனிப்பை, அதை விட அதனுடைய சூட்டை எப்படி அவ்வளவு துல்லியமாகத் தீர்மானிக்க முடிகிறது சிதம்பரத்தால்?

அப்படிக் காப்பியை அருந்தும் நேரத்தில் அவர்களின் உரையாடல் ஆங்கிலத்துக்கு முற்றிலும் தானாக மாறி, ஒரு இசைத்தட்டின் அடுத்த பாடல் போல, வேறொரு வகை சங்கீதத்தை அது அடைந்துவிட்டிருந்தது.

‘உன் உதடுகளுக்கும் நாசிக்கும் இடையில் ஆவி படுகிற நேரத்தை நீதான் தீர்மானிக்க வேண்டும். உன் கண்கள் அப்போது கோப்பையின் உள்ளே உடைந்து அடங்கும் முடிவிலிக் குமிழிகளை எண்ணட்டும் என்று சுந்தரத்திடம் சிதம்பரம் சொல்லும் போது, அருணா அவன் பின்னால், ஒரு சித்திரம் வரைவதற்கு நிற்பது போல் ஒரு காப்பிக் குவளையுடன் நின்றாள்.

‘நீங்கள் இருவருமே உங்கள் சமையலறையை அழகாக்கிவிடுகிறீர்கள். அதன் முன்பு இந்தக் கோப்பையோ காஃபி நுரைகளோ ஒரு பொருட்டில்லைஎன்று சுந்தரம் சற்றுப் பரவசத்துடன் சொன்னான்.

‘அறைகள் மனிதர்களை அல்ல. மனிதர்களே அறைகளை எப்போதும் அழகாக்குகிறார்கள் அருணா சொன்னாள்.

‘வாஸ்தவம். அந்த மனிதர்கள் அருணா ஆகவும் சிதம்பரம் ஆகவும் இருக்கிற பட்சத்தில் சுந்தரத்தால் இதைச் சாதாரணமாகச் சொல்ல முடியவில்லை. அவனுடைய குரல் கம்மியது. அழுகை கூட வந்தது. மீதி இருந்த காப்பியை ஒரே மிடறில் விழுங்கினான். அவனுக்கு மீனா ஞாபகம் வந்தபோது பதற்றம் அதிகரித்தது. கையில் இருந்த காப்பிக் கோப்பை கீழே நழுவிவிடலாம் என்பது போல, அதை நொறுங்கும் அழுத்தத்துடன் இறுகப் பற்றினான்.

‘மீனாவும் நானும் இருந்த அறைகள் ஒருபோதும் அழகாக இல்லாமல் போயிற்று சிதம்பரம்என்று சுந்தரம் குனிந்தபோது, அருணா வந்து காப்பிக் கோப்பையை வாங்கிக் கொண்டாள். ‘கூல்என்று ஒற்றைச் சொல் சொல்லி, ‘சுந்தரமும் நீயும் சற்று நடந்துவிட்டு வாருங்கள் சிதா. வலது பக்கம் சற்றுத் தொலைவு நடந்தால் ஒரு நர்சரிப் பண்ணை வரும். நிறையப் பூக்கள். கேட்டால் அனுமதிப்பார்கள். சிவந்தியைப் போல ஒரு பெரிய வகைப் பூ இருக்கும். அப்படியொரு மஞ்சள். அப்படியொரு அடுக்கு. பாருங்கள். திரும்பி வரும்போது பிறைச்சந்திரன் உதித்திருக்கும். நேற்று அது ஒரு பாதரசப் படகு போல இருந்தது
அவள் சொல்லிமுடிக்கும் வரை காத்திருந்து, ‘நீயும் வரலாம் அருணா’  என்று சிதம்பரம் கூப்பிட்டான்.

‘சில சமயம் தனிமை நல்லது. சில சமயம் இருவர் நல்லது. தேவைப் பட்டால் மிகச் சில சமயம் மூன்றாமவர்என்று அருணா சிரித்தாள். என்னவோ சிதம்பரம்தான் கண்கலங்கிவிட்டது போல, சிதம்பரத்தின் தோளை அருணா தட்டினாள். அது சுந்தரத்துக்கானது என்று சுந்தரத்துக்குத் தெரிந்த்து.

சுந்தரம் மழையைப் பார்த்துக்கொண்டே, தன்னுடைய தோளைத் தடவிக்கொண்டான். அருணா தட்டிக்கொடுப்பது போலத்தான் இப்போதும் இருந்தது. ரொம்ப நேரம் மழை பெய்வது போலவும், அதே அளவுக்கு ரொம்ப நேரமாக தான் மழை பார்த்தபடி இந்த மர நாற்காலியுடன் அமர்ந்து விட்டதாகவும் அவனுக்குத் தோன்றிய சமயம், ஒரு பழுப்பு நிறப் பூனை ஒன்றின் பின் ஒன்றாக வரும் மூன்று குட்டிகளுடன் வாசலின் வலப்பக்கமிருந்து வீட்டுக்குள் நுழைந்தது. மழை மற்ற எல்லாவற்றையுமே மௌனமாக்கிவிடுவது போலவும், அந்த மௌனத்தின் நகரும் உருவங்களாகவே மழை இப்படிப் பூனையாகவும் குட்டிகளாகவும் வீட்டின் உள் வந்திருப்பதாகவும் சுந்தரம் நினைத்தான்.

நேற்றிரவு அவனும் சிதம்பரமும் அருணாவும் வெகுநேர்ம் மீனாவைச் சார்ந்தும், மீனாவை விட்டு விலகியும் பேசிக்கொண்டு இருந்தபோது, உறங்கவில்லையா?என்று கேட்பதாக, ‘உறங்குங்கள்என்று சொல்வதாகக் குரலிட்டுக்கொண்டு இருந்தது இந்தப் பழுப்பு நிற அம்மாப் பூனையாக இருக்கலாம்.  அக்காக் குருவி சத்தம் போடும் போது அக்காக் குருவி போலவும், பூனைக்குட்டி கூப்பிடும் போது பூனைக்குட்டி போலவும் சத்தம் கொடுக்காதவர் யாராவது இருப்பார்களா என்று சுந்தரத்துக்குத் தோன்றியது. அவனை அறியாமலே, ‘மியாவ்என்று சுந்தரம் குரல் எழுப்பியது அப்போதுதான்.

உள்ளே இருந்து அருணா கையைத் தட்டியபடி வேகமாக வந்தாள். சப்பாத்தி பிசைந்த கோதுமை மாவு கைகளில் அப்பியிருந்தது. அப்படி அப்படியே இருப்பதை, அப்படி அப்படியே செயல்படுவதை அருணா இயல்பாகவே பயின்றிருந்தால் மட்டுமே அவளுடைய சிரிப்பு இத்தனை அடுக்கடுக்கான அடர்த்தியுடன் இருக்கமுடியும்.

‘சுந்தரம். பேசாமல் நீ போய் மீனாவின் மடியில் படுத்துக் கொள். நீ இவ்வளவு அழகான பூனைக்குட்டி என்று அவளுக்குத் தெரிந்திருக்காதுஎன்று சிரிப்பின் அலைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணியவிட்டபடி, அந்தப் பூனைக்குட்டிகளில் ஒன்றை எடுத்துக்கொண்டாள்.

நேற்றிரவு சுந்தரம் அவனுக்கும் மீனாவுக்கும் இடையில் நிகழ்ந்துவிட்ட, நிகழ்ந்துகொண்டிருக்கும் அத்தனையையும் சொல்லியபோது, சொல்லிக்கொண்டே வரும்போது, ஒரு கட்டத்தில் தாளமுடியாது அழுதபோது கூட ஒரு வார்த்தையும் சொல்லாமல் கேட்டுக்கொண்டு இருந்தவளா, ஒரு எலுமிச்சைத் தேனீரைத் தயாரித்துக் கொடுத்துவிட்டு, வினோதமாக நசுங்கிக் கிடந்த அவரைப் பையில் பொதியப்பட்டது போலக் கூர்மையாக அமர்ந்து இருந்தவளா, இன்றைக்கு மீனாவின் மடியில் தன்னைப் பூனைக் குட்டியாகப் படுத்துக்கொள்ளச் சொல்கிறாள்?!. சுந்தரத்திற்கு அப்படியொரு ஆச்சரியம் உண்டாயிற்றே தவிர, ஒரு பூனைக்குட்டி ஆகிவிட அவனுக்கு முழுச் சம்மதம் ஏற்பட்டது. ஒரு வெதுவெதுப்புக்கான எளிய உத்தரவாதம் அதில் இருப்பது போலவும் இருந்தது.

‘ஜாக்கிரதை சுந்தரம். அருணாவை எவ்வளவு நம்பவேண்டும் என்பதை நீதான் முடிவு செய்யவேண்டும். சரோவை வரச் சொல்லி இருக்கிறோம். இப்போது நீலா அத்தையும் இல்லை சிதம்பரம் சொல்லும் போது சுந்தரம்

‘நீலா அத்தை இல்லை. லீலா அத்தைஎன்றான்.

‘சரி. உனக்கு லீலா. எனக்கு நீலா. மொத்தத்தில் அத்தை.என்று சிரித்து, மேலே, அவளும் இல்லாமல் தனியாக சரோ இத்தனை வருடங்களுக்குப் பிறகு உன்னைப் பார்க்கவேண்டும் என்று வருகிறாள். ஒரு பூனைக்குட்டியாக உன்னைப்பார்த்தால் ஏமாற்றமாக இராதா அவளுக்கு? சிதம்பரம் அருணாவின் பக்கத்தில் அமர்ந்து, அவள் கையில் இருந்த பூனைக்குட்டியைத் தான் வாங்கிக்கொண்டே பேசினான். முன் கால்களின் அடியில் ஏந்தியிருந்த அவன் கைகளுக்குள், கீழுடலும் பின்கால்களுமாக, ஒரு மிருதுவான கனத்துடன் தொங்கிய குட்டி, கண்களை இடுக்கி அதன் அம்மாவைக் கூப்பிட்டது.

சுந்தரத்துக்கு லீலா அத்தை ஞாபகம் வந்தது. பாட்டுப் பாடியபடியே அவள் இடும் கோலங்களின் பொடி மினுங்கியது.  லீலா அத்தை போன்றவர்கள் எப்படி இறந்து போகலாம்? அவர்கள் எல்லாம் எப்போதும் நம்முடன் இருந்தால் என்ன?  லீலா அத்தையை மீனா பார்த்ததே இல்லை. கேள்விப்பட்டுக் கூட இருக்கமாட்டாள். ஆனால் லீலா அத்தை இருந்திருந்தால் தனக்கும் மீனாவுக்கும் இப்படியெல்லாம் ஆகியிருக்காது. எல்லாம் சுமூகமாக இருந்திருக்கும் என்று எப்படித் தோன்றுகிறது? மனம் ஏன் இப்படி யாருக்கும் யாருக்குமோ முடிச்சுப் போடுகிறது? யாரின் முடிச்சையோ யார் மூலமோ அவிழ்த்துவிடலாம் என நம்புகிறது?

சுந்தரமும் சற்று மடங்கி, அருணாவுக்கும் சிதம்பரத்திற்கும் பக்கத்தில் தரையில் உட்கார்ந்தான். சிதம்பரத்தின் கைகளுக்குள் ஒரு குலை போலத் தொங்கிக் கொண்டிருக்கும் பூனைக்குட்டியை வாங்கி, முகத்துக்கு நேரே உயர்த்தி, அதன் நாசியில் முத்தம் வைத்துக் கீழே விட்டான். அது மற்ற இரு குட்டிகளின் பக்கம் ஓடுவதையே பார்த்தான். சாம்பல் நிறத்தில், எப்போதும் ஜாக்கிரதையாகவும் உஷாராகவும் இருந்த இன்னொரு குட்டியை, அது விலகி நகர்ந்தும் விடாமல் பிடித்துக் கையில் வைத்துக் கொண்டான்.

அவர்கள் மூன்று பேர், பூனை, மூன்று பூனைக்குட்டிகள் ஆகிய இவர்களுக்கு மட்டும் எனக் கணக்கிட்டு அனுமதித்தது போல் பரவியிருந்த மழையிருட்டில் அல்லது மழைவெளிச்சத்தில் அந்த அறையும் அவர்களும் சோபிதம் உற்றிருந்தார்கள். கொஞ்ச நேரம் யாரும் எதுவும் பேசாமல், அவரவர் அசைவுகளுடனும் அசைவின்மையுடனும் அப்படியே இருந்தார்கள்.

சிதம்பரம்தான் அருணாவிடம் கேட்டான்.

‘ஏன் அருணா? நீதானே சரோவுடன் கடைசியாகப் பேசினாய்?

‘கடைசியாக அல்ல. சமீபத்தில்’. அருணா உடனடியாகச் சொன்னாள்.

‘சரி. சமீபத்தில். சாயங்காலம் வந்துவிடுவதாகத் தானே சரோ சொன்னாள்? = சிதம்பரம் அருணாவைப் பார்த்தான். அருணாவை அப்படிப் பார்க்க அவனுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அருணாதான் சரோவை வரவழைத்தால் என்ன என்று முதலில் யோசித்தாள். ஏதோ ஒரு வண்ணம், ஒரு தீற்றல் பாக்கி இருப்பது போலவும், அது சேர்ந்தால் இந்தச் சித்திரம் நிரம்பிவிடும் என்றும் அவள் எதிர்பார்த்தாள். சுந்தரத்திடம் பேசினாள். லீலா அத்தையைப் போலவே சரோவும் இப்போது ஆசிரியையாக இருப்பதும், ஒன்றரை மணி தூர பிரயாணத்தில் பக்கத்து ஊரில் வசிப்பதும் பற்றிய தகவல்களை அருணாவே சொன்னாள் . அவளே சுந்தரம் இங்கே வந்திருப்பதாகவும், சரோ வரமுடிந்தால் நன்றாக இருக்கும் என்றும் சொல்லி சரோவிடம் ஒப்புதல் வாங்கினாள்.
                                                      
‘என்ன பதிலைக் காணோம். சரோ வந்துவிடுவாள் இல்லையா? என்ற சிதம்பரத்தைப் பார்த்து நிச்சயமான குரலில்

‘வந்துவிடுவாள்’  -  என்று அருணா சொன்னாள். ஒரு சிறு குறும்புச் சிரிப்புடன்; ‘சரோ வந்துவிடுவாள் இல்லையா. சுந்தரம்?என்று அவனைப் பார்த்தாள், மழை முற்றிலும் நின்றுவிட்ட முகம் அவனுக்கு வந்திருந்தது. சுந்தரம் அந்தச் சாம்பல் பூனைக்குட்டியை அதன் நெற்றியில் வருடிக்கொடுத்தபடி வாசலைப் பார்த்தான்.

‘ஏன், மீனா வர மாட்டாளா என்ன?என்றான்.

அந்தக் குரல்  மிருதுவாக, ஒரு பூனைக்குட்டியின் உடையதைப் போலவே இருந்தது.

%

தினகரன் தீபாவளி மலர் - 2014.

3 comments:

  1. எப்படிங்க அய்யா இப்படியெல்லாம்.. உறவுகளை முடிச்சி போட்டு சொக்க வைக்க உங்களால மட்டுமே முடியுது.

    பழனி பாரதியோட வரிகள் ஞாபகம் வருது..
    பின்னி பின்னி
    சின்ன இழையோடும்
    நெஞ்சை அள்ளும்
    வண்ண துணிபோல
    ஒண்ணுக்கொண்ணுதான்
    இணைஞ்சி இருக்கு
    உறவு எல்லாம் அமைஞ்சி இருக்கு..

    ReplyDelete
  2. மீனா சுந்தரம் அவர்களின் மனைவியா, காதலியா என்பது எனக்கு புரிய வில்லை. என்ன உறவு என்றாலும் இதே உணர்வு தான். உங்கள் கதை மூலம் நெல்லை பகுதியிலும் அடைந்து உள்ள மாற்றங்களை அறிய முடிகிறது , எலுமிச்சை டீ, ஆங்கில உரையாடல் , வாக்கிங், கணவர்கள் காப்பி போடல்...

    ReplyDelete
  3. வெதுவெதுப்பு வேண்டியிருந்த பூனைக் குட்டியாய் இருந்த சுந்தரத்துக்கு அருணாவும் சிதம்பரமும் தங்களால் ஆன நியாயத்தை செய்திருக்கிறார்கள். சில நேரங்களில் மீனாவைப் போன்ற மனிதர்கள் ஏனிப்படி இருக்கிறார்கள் என்ற துக்கமும் சோகமும் நம் இயல்பைக் குலைத்து சோர்ந்து கிடக்கவே செய்கின்றன. மீளவும் நீந்திக் கரையேறவும் ஒரு பிடிமானம் வேண்டியிருக்கிறது.

    ReplyDelete