Wednesday 9 July 2014

இந்தக் கவிதையில்...






இந்தக் கவிதையில் நான்
என் ரகசியங்களை ஒளித்துவைக்கவும் இல்லை.
திறந்து வைக்கவும் கூட.
உங்கள் ரகசியங்களை நான்
திருடவுமில்லை, பாதுகாக்கவும் இல்லை.
ஒரு கவிதை நம் ரகசியம் சார்ந்தது அல்ல.
அது ஒரு எளிய உண்மை.
சற்று தூரம் உன் பின்னால் வரும்
இரண்டு நாட்களுக்கு முன் பிறந்த
தெரு நாய்க் குட்டி.
ஒரு முடிதிருத்தக மூலையில் குவிக்கப்பட்ட
மயிர்ப்பிசிறுகள் நிகர்த்தது.
எழுதுபொருட்கள் கடையில் சீருடைச் சிறுவன்
மறந்துவைத்துவிட்ட குடை.
பொருந்தாத அளவில் வாங்கப்பட்டுவிட்ட உள்ளாடையை
மாற்றிக்கொள்ள உண்டாகும் தயக்கம் உடையது.
தானாய் பொதுமருத்துவ மனை பிண அறைப் பக்கம்
முளைத்து வளரும் வேப்பங்கன்றின் தாமிர நிறம் அதற்கு.
ஓய்வூதியதாரரின் வங்கி பாஸ்புத்தகத்தில் அடிக்கும்
சத்துமாத்திரை வாசனையும் பெருமூச்சின் வெப்பமும் உடையது.
இறந்த பெண்குழந்தையின் காலில் கிடக்கும்
வெள்ளித் தண்டையின் தேய்ந்த வெளிறல் அதன் வரிகளில்.
சேலை நுனியில் கண்ணீரைத் துடைத்து
சிலிண்டர்காரரின் சிவப்புக்குரலுக்குக் கதவு திறப்பது.
சற்று மிஞ்சிய போதையில்
நண்பன் வீட்டு மொட்டை மாடியில் தூங்குவதற்கு முன்
பார்த்த நட்சத்திரங்களின் உரையாடலை நினைவூட்டுவது.
தோற்றுப் போனவருக்கு வாக்களித்துவிட்டு
வெளியே சொல்லாத விரலின் கருநீல நிறம் அதற்கு.
இவ்வளவும் சொல்லிவிட்டேன்.
இந்தக் கவிதையில் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
உங்களை ஒருபோதும் அம்பலப்படுத்தக் கூடாது அது,
அப்படித்தானே?


%

2 comments:

  1. எல்லோரும் பார்க்கும்
    அதே பொருள் அல்லது செயல்.
    ஆனால்
    எங்களுக்கு வெறும் ஒரே புறப்பார்வை,
    உங்களுக்கு பு(றா)றபார்வை அகப்பார்வை,
    அறிவுப் பார்வை, முக்கண் பார்வையென
    பலப்பல (பளப்பள) பார்வைகள்....அற்புதம்

    ReplyDelete
  2. உங்கள் எழுத்து எனக்கு பரவத்தை மட்டுமே அளிக்கிறது அய்யா..நன்றி

    ReplyDelete