Monday, 7 July 2014

உன் கரைந்த நிழலுக்கு







ஜெ.சி. டேனியல்
உங்களைப் பற்றிய கட்டுரையை
இன்று நான் படித்திருக்கக் கூடாது.
அன்றாடத்தின் வெவ்வேறு திராவக வீச்சுகளால்
பொசுங்கிய என் தோலின் சீழ் வாடையுடன்
கனலும் கண்களுடைய உங்களுடைய அந்தக்
கருப்பு வெள்ளைப் படத்தை நான் பார்த்திருக்கக் கூடாது.
நீங்கள், நான் எல்லாம் தொலைந்த குமாரன்கள்.
தொலைந்த குமாரன்களும் கெட்ட குமாரன்களும்
ஒன்றுதான், எனினும் ஒன்றல்ல என்று சொல்லலாமா?
வாருங்கள். இன்று உங்களுடன் அமர்ந்து
வாற்றுச் சாராயம் அருந்த விரும்புகிறேன்.
உங்களுடைய கண்ணீரை விட உப்பான ஒரு வரியை
என்னால் ஒருக்காலும் எழுதமுடியாது.
இல்லாள் ஜானெட் எனக்கு மீன் பொரித்துத் தர
தயங்காமல் முன்வருவாளா?
ஆம் எனில்,  கண் முன்னால் செல்லுலாய்டின்
பாம்புச் சுருள் எரிந்து நொதிக்கும் போது
கள் போத்தல்களை எப்படி நான்
காலிசெய்யாமல் இருக்க முடியும்?
ரோசம்மாவை அவளுடைய ஈயத் தூக்குச்சட்டியில்
கஞ்சியும் நாரத்தையும் எடுத்துவரச் சொல்லும்.
இருட்டின் தீராத பக்கங்களில் ஒளித்துவைக்கப்பட்ட
அவளுடைய துயரத்தின் அம்பாரத்திலிருந்து
ஒரு ராணி போல அவளை நான் அழைத்து வருவேன்.
சேலங்கோடு கோபால கிருஷ்ணனுக்கு
இன்னேரம் தகவல் கிடைத்திருக்கும்.
டேனியல் பெயரைச் சொன்னால் ஓடிவந்துவிட மாட்டாரா?
ஒரு கனத்த அவலத்தின் தீ எரியும் குரலை
இந்த உச்சக் குடியில் கேட்க விரும்புகிறேன்.
பைத்தியக்காரா, டேனியல். தயவுசெய்து இப்போதும்
சொத்தைப் பல் சின்னப்பாவைப்  பாட சிபாரிசு செய்யாதே.
எனக்கென்னவோ, ‘காற்றே, காற்றேஎன
வைக்கம் விஜயலட்சுமியின் சருகுதிரும் குரல்
நிரப்பவேண்டிய இரவு இது என்று படுகிறது.
ரோசி, ரோசம்மா. நீ சொல்.
கிழிக்கப்பட்ட திரைச்சீலையில் இருந்து,
எரிக்கப்பட்ட உன் வீட்டில் இருந்து,
துரத்தப்பட்ட உன் திசைகளில் இருந்து
துடிதுடித்து விம்மும் குரல் வேறு யாருக்கு உண்டு?
கமல், பிருத்வி, சீனுவாசன். நிணமும் சதையுமாக
ஏற்கனவே நீங்கள் டேனியலைக் கொண்டாடிவிட்டீர்கள்.
உங்களுக்காக நிரப்பியதையும் சேர்த்து
நானே அருந்திக் கொள்கிறேன்.
டேனியல், உன்னை மரியாதை இல்லாமல் அழைக்க அனுமதி. 
உன் அகஸ்தீஸ்வரம் வீட்டு முகப்பின்
நாழி ஓடுகளின்  பிசுபிசுக்கும் இருட்டில் இருந்து
வால்முறுக்கி இணை அழைக்கும் கடுவன் ஒப்புக்கொள்கிறது
கன்னம் ஒட்டிய உன் கடைசிக் காலப் படத்தையும்
நான் பார்த்திருக்கவே கூடாது என்று.
சின்ன வயதில் நானும் என் பெரியதங்கையும்
சேகரித்து வைத்த கூட்டுப்பொக்கிஷமான
அவ்வையார் பட ‘பிக்சர்போல
உன்னுடைய விகத குமாரனின்
ஒரே ஒரு துண்டு பிக்சர் கிடைத்தால் போதும்
முகர்ந்து பார்த்து, டேனியல் உன் கரைந்த நிழலுக்கு
முத்தம் கொடுத்துக் கவிழ்ந்து விடுவேன்.
அந்தக் கருத்த கட்டுரை வரிகளுக்கு இடையில்
போதமற்றுக் குப்புற விழுந்துகிடக்க  எனக்கு 
ஏராளமாக இடம் இருக்கிறது.

%

1 comment:

  1. //கருத்த கட்டுரை வரிகளுக்கு இடையில்
    போதமற்றுக் குப்புற விழுந்துகிடக்க எனக்கு
    ஏராளமாக இடம் இருக்கிறது//.நீங்களே எழுத்தாய், வார்த்தையாய், சொல்லாய்,
    வரியாய், வலியாய், வழியாய்....
    பொருத்தமான இடம் தான்
    இரவு பொழுதில் புக....

    ReplyDelete