Friday 25 July 2014

ஆமாம். நன்றாகத்தான் இருந்தது.





நேற்று, 24.07.14 , வியாழன் மாலை எனக்கு முக்கியமான பொழுதாக இருந்தது. நான் இதுவரை எந்த மேடையிலும், எந்த நிகழ்ச்சிக்கும் தலைமை வகித்தது இல்லை. கடந்த ஏழு நாட்களாக நெல்லையில் நடைபெற்றுக் கொண்டு வரும் புத்தகத்திருவிழாவில் நேற்று  கவிதை வாசிப்பு நிகழ்ச்சி என் தலைமையில். கவிஞர் கலாப்ரியாவின் ஒருங்கிணைப்பில்.

என்.டி.ராஜ்குமார், கீதாஞ்சலி பிரியதர்ஷினி, வே.பாபு, சாகிப் கிரான், கதிர்பாரதி, வேல்கண்ணன், செந்தி மற்றும் சக்தி ஜோதி ஆகியோர் கவிதை வாசிப்பதான திட்டம். முதல் நான்கு கவிஞர்களும் கலந்துகொள்ள இயலவில்லை. வியாழக்கிழமை எனும் வார நடு நாள், வரவேண்டிய தூரம், மற்ற தனிப்பட்ட சிரமங்கள். புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் எல்லோரும் வரவேண்டும் என நான் விரும்பினேன். அப்படி அந்த மொத்த எட்டுப் பேருடன் நானும் கலாப்ரியாவும் நடத்தும் ஒரு கவிதை வாசிப்பின் ஒத்திகையை நான் மனதுக்குள் நிகழ்த்தியும் இருந்தேன்.

பட்டியலில் உடனடியாக கிருஷியை சேர்த்துக்கொண்டோம். நான்காவது நபராக சக்திஜோதி கவிதை வாசித்துக்கொண்டு இருக்கையில், கவிஞர் சின்னசாமி அவருடைய வாசிப்பையும் தர முன்வந்தார்.  ஆக, என்னையும் கலாப்ரியாவையும் தவிர ஆறு கவிஞர்களின் வாசிப்பால்  அரங்கை ஒரு ஒன்றேகால் மணி நேரம் வசப்படுத்த எங்களால் முடிந்தது.

ஒரு சிக்கலான மனநிலையில் என்னால் இந்த நிகழ்ச்சியைச் சரியாக , நான் விரும்பும் வகையில் நிர்வகிக்க முடியாது என்று தோன்றியதால், ஏற்கனவே கலாப்ரியாவிடம் அதிகப் பொறுப்பை எடுத்துக்கொள்ளக் கேட்டுக்கொண்டு இருந்தேன். முதல் முதல் தலைமை ஏற்கும் ஒரு நிகழ்வுக்கான பேச்சை என்னால் வடிவமைத்துக்கொள்ளவே முடியவில்லை. அடுக்கி அடுக்கி வரிசைப்படுத்தியவை அத்தனையும் உள்ளே சரிந்து கலைந்தபடியே இருந்தது.

இளையபாரதியும் கலாப்ரியாவும் வீட்டுக்கு வந்தார்கள். சற்று நேரத்தில் சக்தி ஜோதி வந்தார். சங்கரியம்மாவும் எங்களுடன் வர நாங்கள் புறப்பட்டோம். என்னுடன் சங்கரியம்மா ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்கு, அதுவும் உள்ளூரில் வருவது இதுதான் முதல் முறை. எனக்குச் சந்தோஷமாக இருந்தது.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு, எனக்கு மிகப் பிடித்த உடையான வெள்ளை ஜிப்பாவும் வேட்டியும் அணிந்திருந்தேன். நிலைக்கண்ணாடி. ‘ உனக்கு வயதாகிவிட்டது. நீ மெலிந்து தளர்ந்துவிட்டாய், உன் கழுத்து நரம்புகள்  ‘தென்னி’ உன் முதுமையை உறுதிப்படுத்துகின்றன’ என்று சொல்லியதன் பின்னும் அதே உடையில் நான்  புறப்பட்டிருந்தேன்.

எப்போது என் பதற்றம் மாறியது, படபடப்புக் குறைந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அது ஒருவகையான மாயம். மேடையில் எல்லாம் சரியாக நிகழ்ந்தது. நான் என் பொறுப்பை சரியாகச் செய்தேன்.  எனக்குள் ஒரு அமைதியும் நிறைவும் வந்து சேர்ந்திருந்தன.




என்னால் நேற்று நன்றாகப் பேச முடிந்தது. என் உடல்மொழி சுதந்திரமான அசைவுடன் இருந்தது. குரல் வசப்பட்டிருந்தது. மனம் அதன் போக்கில் இயல்பாக இயங்கியது. என் கவிதை வாசிப்பை எனக்கே பிடித்திருந்தது. நான், சற்று உரிமை மீறலாகக் கூட, மற்றவரை விட அதிகக் கவிதைகள் வாசிப்பதற்கான நேரத்தை இடையிடையே எடுத்துக்கொண்டேன்.

நான் அப்படி வாசித்தவைகளில், என் தலைமை உரையின் உடனடித் தொடர்ச்சியாக வாசித்த கவிதை இது.

%

கவிதை மேடையில் அமர்கிறது.
கவிதை எதிர்நாற்காலிகளை நிரப்புகிறது.
கவிதை தலைமை தாங்குகிறது.
கவிதை ஒருங்கிணைக்கிறது.
கவிதை கவிதை வாசிக்கிறது.
%
கவிதை தனித்தலைகிறது.
மெசியாவின் மச்சங்களை எண்ணுகிறது.
மதுக்குவளைகளில் மலர் செருகுகிறது.
சொற்களின் தானியம் விதைக்கிறது.
கவிதை வனம் புகுகிறது.
மணலுள்ள ஆற்றில் கூழாங்கல் தேடுகிறது.
பதநீரில் நிலா வெளிச்சமாகப் பொங்குகிறது.
முலைக்காம்பில் வியர்வைத் துளியைத்
திரண்டு நிற்கச் செய்கிறது.
நிறையக் கண்ணீரையும் கொஞ்சம் மௌனத்தையும்
அடையாளம் காட்டுகிறது.
%
கவிதை முதலில் அரங்கமானது.
முடிவில் அந்தரங்கமாவது.
கவிதை பெரும்பாலும் மௌனமாக இருக்கிறது.
எப்போதாவது உரையாடுகிறது.
கவிதை எங்கிருந்தோ உங்கள் மீது விழும் வெளிச்சம்.
கவிதை உங்களின் நடமாடும் நிழல்.
கவிதை ஒரு அடர்வனம், சாயாவனம்.
அதன் சருகுகளிலும் எழுதப்பட்டிருக்கிறது ஒரு கவிதை.
கவிதை ஒரு பறவை.
அதன் உதிர் இறகிலும் ஒரு கவிதையை
நீங்கள் வாசிக்கமுடியும்.
கவிதை உங்கள் பழைய திசைகளைத் தொலைக்கிறது.
புதிய திசைகளைக் கண்டுபிடிக்கிறது.
கவிதை மலர்கிறது, உதிர்வதே இல்லை.
கவிதை அதிகாரம் செய்கிறதில்லை.
அதிகாரத்திற்குக் கட்டுப்படுகிறதும் இல்லை.
கவிதையின் சிகரத்திற்கு அப்பாலும்
கவிதையின் பள்ளத்தாக்கே இருக்கிறது.
கவிதை தன் வரிகளின் அழகைக்
கண்ணாடியில் தனியாகப் பார்த்துக்கொள்கிறது.
அடுத்த கவிதைகளின் இடவல மாற்றத்தை
எல்லோர் முன்பும் அணைத்துக்கொள்கிறது.
கவிதைகளில் நீங்கள் உங்களைப் பார்க்க விரும்புகிறீர்கள்.
உங்களைத் தவிர வேறு யாரை எல்லாமோ
அது உங்களுக்குக் காட்டுகிறது.
கவிதையை நீங்கள் குவளைகளில் ஊற்றுகிறீர்கள்.
கவிதை உங்களைக் குடித்துவிடுகிறது.
கவிதை ஒரு சூதாட்டம்.
தோற்றுக்கொண்டே இருந்தாலும்
கவிதையுடனான சீட்டாட்டத்தை
உங்களால் நிறுத்தவே முடியாது.
கவிதையைக் குளிர்பதனப் படுத்தமுடியாது.
கவிதையைக் கொல்ல முடியாது.
%
கவிதை உங்களுடையது.
உங்களுக்காக உங்களைப் போன்றவர்களால்
எழுதப்படுவது.
நீங்கள் இந்தப் புத்தகத் திருவிழாவுக்கு வரும்போதே
உங்களிடம் ஒரு கவிதை இருந்தது.
திரும்பிச் செல்லும்போது அந்தக் கவிதை
திருத்தி எழுதப்பட்டிருந்தது.
இன்றிரவு அந்தக் கவிதையை
மீண்டும் நீங்கள் வாசிக்கிறீர்கள்.
அந்தக் கவிதையை உங்களுக்குப் பிடித்திருக்கிறது.
ஏனென்றால்
நீங்கள் தான் அந்தக் கவிதை.
அதைத் திருத்தி எழுதியது
இதோ நாங்கள் எல்லோரும்தான்.

%

நான் தேவேந்திரபூபதியை, நேஷனல் புக் ட்ரஸ்ட் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை, கலாப்ரியாவை, கதிர்பாரதியை, வேல் கண்ணனை, செந்தியை, சக்திஜோதியை, கிருஷியை, சின்னசாமியை மிகுந்த நெகிழ்வோடு நினைத்துக்கொள்கிறேன்.

வீட்டிற்கு வந்ததும், சங்கரியம்மா சொன்னார்கள், ’நல்லா இருந்துது’.
ஆமாம். நன்றாகத்தான் இருந்தது எல்லாமும்.

%

2 comments:

  1. கவிதை என்பது எங்களுக்காக எங்களைப் போன்றோரால் எழுதப்படுகிறது. உண்மைதான் நாங்கள் ரசித்து ஆனால் வார்த்தைகளால் காசிப்படுத்த இயலாததை அனாயாசமாக செய்ய எங்களைப் போன்ற உங்களால் இலகுவாக முடிகிறது. அதற்காகவே தலை வணங்குகிறோம்.

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி...உங்கள் கவிதை வாசிப்பை இங்கிருந்தே மனக்கண்ணால் பார்க்க முடிகிறது. இனியும் வாய்க்கலாம் அரங்கத்தின் ஒரு மூலையிலிருந்து உங்கள் குரலை கடைசி நாற்காலியில் அமர்ந்தபடி செவிகளை மேடைக்கு வெகு அருகில் கேட்டபடி நான்...

    ReplyDelete