Tuesday 15 July 2014

பிறந்த நாள் வெளியீடு.










அப்பாவுக்கு தன்னுடைய 90வது பிறந்த நாள் மேல் மிகுந்த நம்பிக்கை இருந்தது. ஒரு புதிய மைல் கல்லாக அதை நடும் விருப்பம் அவருக்கு நிறையவே உண்டு. அடுத்த அத்தியாயத்தின் முதல் வரிகளை அவர் தயாராக மனதில் எழுதியிருந்தார். 2014 மார்ச் 30ல் வரவிருந்த அதற்கு, கிட்டத்தட்ட 2013 நவம்பர் மாதத்திலேயே ஏற்பாடுகள் செய்யத் துவங்கியிருந்தார். ஒரு இலக்கு. அதை அடைவது. அங்கேயே ஓய்வெடுத்து அமர்ந்துவிடாமல் மற்றொரு இலக்கைத் தீர்மானிப்பது என்ற வகையில் அவர் தன்னுடைய தொண்ணூறாவது பிறந்த நாளை நோக்கி நகரத் துவங்கியிருந்தார்.

ஒரு பிறந்த நாளைக் கொண்டாடும் மனநிலையை அவர் கடந்த மூன்று நான்கு வருடங்களில் அடைந்திருந்தார். மாலை நேரத் தேனீர், சில தோழர் தோழியர், இலக்கிய நண்பர்கள், ஓவியர் பொன்.வள்ளிநாயகம், வே.முத்து குமார்,பொன்னையன், சரவணன் போன்ற அப்பாவின் அணுக்கத் தொண்டர்கள் கலந்துகொள்ளும் ஒன்றாக அது இருந்தது. குடும்பத்தைச் சேர்ந்த எங்களுக்கு ஏற்கனவே முற்பகலில் சந்திப்பும் வாழ்த்து வழங்கலும் கிடைத்திருக்கும். இந்த மாலை நாற்காலிகளின் எண்ணிக்கையை நாங்கள் கூட்டவோ குறைக்கவோ முடியாது.

21.இ.சுடலைமாடன் கோவில் தெரு முன்வாசல் நிகழ்வுகளில் அப்படிக் கலந்துகொண்டு  பேசியவர்களில் எனக்கு முக்கியமாக இப்போதும் படுவது, தபால்காரர் பாலசுப்ரமணியம், தோழர் பால் முகமது, டெல்லி வைத்தியர் அஹமத் கான், சித்தப்பா வீட்டில் குடியிருக்கும் சுந்தரி டீச்சர் மற்றும் அப்பாவுக்கு ஏழெட்டு வருடங்களாக அன்னம் பாலித்த சக்தி மெஸ் பரமசிவம் எல்லோரும்தான். இவர்களையும் உள்ளடக்கி, அதே சமயத்தில் இவர்களையும் தாண்டி விரிவடைந்திருந்தது அப்பாவின் 90வது பிறந்தநாள் அழைப்பினர் பட்டியல்.  உடல் நலம் குன்றுவதற்கு முன், பிறந்த நாளுக்கு அவர் அழைக்கவிரும்பிய 23 நபர்களின் பட்டியல் ஒன்றை அவர் முன் தயாரித்துவைத்திருந்தார். சமீபத்திய வருட நாட்குறிப்பின் பக்கங்களுக்கு இடையில் இருந்த துண்டுச் சீட்டுகளில் அதுவும் ஒன்று. தன் கைப்பட அப்பா எழுதியிருந்த அந்தப் பட்டியலில் புதுகை தர்மராஜன் ஆகிய உங்கள் பெயரும் இருந்தது.

அப்பா, அவருடைய புதிய புத்தகம் ஒன்றும் 2014 மார்ச் 30ம் தேதி வெளியிடப்பட விரும்பினார். அப்பாவின் சமீபத்திய புத்தகங்களை ஒருங்கிணைத்துத் தொகுக்கும் வே. முத்து குமார்,  அப்பா 1948ல் எழுதிய நாட்குறிப்பை அதற்குத் தேர்ந்தெடுத்திருந்தார். ஒரு அகழ்வாராய்ச்சிக்குப் பிந்திய கண்டுபிடிப்பு அது என்றே சொல்லவேண்டும். 1948ம் வருடத்தில் அப்பாவுக்கு 23 வயது. எனக்கு மிஞ்சிப்போனால் இரண்டு வயது இருக்கும்.
உள்ளது உள்ளபடியே, ஒரு வரி மறைக்காமல், ஒரு சொல் மாற்றாமல் அதை அப்படியே வெளியிடத் தீர்மானித்ததில் அப்பாவும் முத்து குமாரும் ஒரே மன நிலையில் இருந்திருக்கிறார்கள். 2014 புத்தகச் சந்தைக்கு வரும் என எதிர்பார்த்து, அது வராமல் போனதில் அப்பாவுக்கு ஏமாற்றம்தான். பிறந்த நாள் வெளியீடாக அந்தத் தொகுப்பு வந்தே ஆகவேண்டும் என்பது அவர் தீவிரமான அக்கறையாக இருந்தது. உடல் நலம் குன்றி அப்பா எங்களுடன் வந்து தங்கி இருக்கும்போது கூட, முத்துகுமாரை வரவழைத்து, அந்தப் புத்தகம் பற்றியே அப்பா அதிகம் பேசினார். அந்தப் புத்தகம் தவிர, அவரைப் பற்றிய கட்டுரை ஒன்றை முத்துகுமார் விரிவாக எழுதவேண்டும், அது அவருடைய பிறந்த நாளில் ஏதாவது ஒரு முக்கிய தினசரியில் வெளிவர வேண்டும் என்ற விருப்பமும் அவருக்கு இருந்தது

நான் என்னால் .ஆனதைச் செய்ய விரும்பினேன். என்னுடைய படைப்புகளைக் கடந்த 13 ஆண்டுகளாக வெளியிட்டுவரும் சந்தியா பதிப்பகமே அப்பாவின் நாட்குறிப்புகளையும் வெளியிட இருக்கும் செய்தி அறிந்து, பதிப்பகத்தினரிடம் பேசினேன். மார்ச்.30 அப்பாவின் பிறந்த நாள் எனில், மார்ச்.23க்குள் புத்தகம் அப்பாவின் கைகளுக்குக் கிடைத்துவிடும் என, சந்தியா பதிப்பகம் சார்ந்து திரு. சௌந்திரராஜன் உறுதி சொன்னார். 23ல் அல்ல, அதற்குமுன்பே, மார்ச்.14 வெள்ளிக் கிழமை நண்பகல் உணவு வேளையில், ‘ தி.க.சி. நாட்குறிப்புகள் நூலின் பத்து பிரதிகள் இந்த 19.சிதம்பரம் நகர் முகவரிக்கு வந்துசேர்ந்துவிட்டன.

முழுக் கருப்பில் புத்தக முகப்பில் அப்பாவின் படம் அச்சிடப்பட்டிருந்தது. ஒரு வேளை 1948ம் வருட நாட்குறிப்பு எழுதிய அப்பாவின் 23ம் வயதுப் படமாகக் கூட அது இருக்கலாம். இதுவரை நான் பார்த்திராத ஒன்று. அப்பா எப்போதும் அழகுதான். தீர்க்கம் தான். அந்தப் படத்தில் அந்த இளவயதின் வெளிச்சமும் சேர்ந்து அப்பாவைப் பேரழகனாகக் காட்டியது.
அப்பாவிடம் புத்தகத்தைக் கொடுத்தேன். அவருக்கு நம்பமுடியவில்லை. ‘வந்துட்டுதா? ம்ம்.வந்துட்டுதா?என்று கேட்கிறார். ‘அதுக்குள்ளே வந்துட்டுதா. முத்துகுமார் ஒண்ணுமே சொல்லலியேஎன்று ஆச்சரியப்படுகிறார். நான் முத்துகுமார் எண்களை அழுத்தி அப்பாவிடம் கொடுக்கிறேன். அப்பாவுக்குக் கைபேசித் தொலைபேச்சு சரியாக வராது. ‘நீயே பேசீருஎன்கிறார். ‘சும்மா நீங்களே பேசுங்க. முத்துகுமாருக்குக் கேட்டால் போதும்என்று சொல்கிறேன். தேவைக்கு அதிகமான, உணர்ச்சி அதிரும் குரலில் முத்துகுமாரிடம் அப்பா திருப்பித் திருப்பி நன்றி சொல்கிறார். குரல் கரகரக்கிறது. கண்ணாடி அணியாத, தலைமுடி சரியாக வாரப்படாத, களைத்த முகத்தில் அப்பாவின் கண்கள் கலங்குவதை இப்போதும் பார்க்கிறேன். ஒரு புத்தகம் வரும் போது, அது எத்தனாவதாக இருந்தாலும், அதை எழுதியவனுக்கு எப்போதும் தவறாது உண்டாகும் கலங்கல் அது.

மார்ச்.16 ஞாயிறு காலை அப்பாவைப் பார்ப்பதற்காக, சென்னையில் இருந்து சுபாஷிணி வருகிறார். கல்லத்திமுடுக்குத் தெரு சரவணன் துணையோடு நம் வீட்டிற்கு வந்த அவருடைய வருகையைச் சற்றுத் தாமதமாகத்தான் நான் அறிகிறேன். குடிதண்ணீர்த் தொட்டியைச் சுத்தம் செய்கிற வேலை எனக்கு இருந்த நேரம் அது. வரவேற்றுவிட்டுப் போனதுடன் சரி. அப்பாவும் சுபாஷிணியும் பேசிக்கொண்டிருந்தார்கள். பேச்சுச் சத்தம் மட்டும் தூரத்தில் கேட்டுக்கொண்டு இருந்தது. வேலை முடிந்து நான் திரும்பிவந்து பார்க்கும் போது, சரவணனும் சுபாஷிணியும் போய்விட்டிருந்தார்கள். முதல் பிரதியை அப்பா சுபாஷிணிக்கு அளித்திருக்க வேண்டும். மீதி ஒன்பது பிரதிகள் மட்டும் மிச்சம் இருந்தன.

மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பின்பும், தீவிர சிகிட்சைப் பிரிவில் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்வுற்று வந்த நிலையிலும், அப்பாவுக்கு தன்னுடைய 90வது பிறந்த நாள் முக்கியமானதாகவே இருந்தது. அவருடைய நினைவின் கிரணங்களை அந்த ஒரு தினத்தின் மேலேயே குவித்திருந்தார். குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் பார்வையாளர்களிடமும் மிக விருப்பமான குரலில் அந்த தினத்தைப் பற்றியே பேசினார். அந்த தினம் பற்றிப் பேசுவதற்கு என்று ஒரு தெளிவானகுரலை அவர் திரட்டிக் கொண்டார். அந்தச் சமயங்களில் அவர் முகம் அடைந்த பிரகாசம், தீவிர சிகிட்சைப் பிரிவுக்காரர்களுக்கு ஒருபோதும் உரியதல்ல.

இதற்கு இடையில் ‘புதுகை தென்றல்மார்ச்.2014 இதழ் அப்பாவின் முகப்புடன் தபாலில் வந்திருந்தது. அப்பாவிடம் காட்ட நினைத்தோம். அப்பா காட்சி அடையாளங்களில் இருந்து அவ்வப்போது விலகுவதும் அடைவதுமாக இருந்த நிலை. சின்னத் தங்கை கௌரிதான் காட்டினாள். அப்பா பார்த்தார். ‘உங்க படம் போட்டிருக்கு புதுகைத் தென்றல் பத்திரிக்கையிலஎன்று அப்பா பக்கம் குனிந்து சொல்கிறேன். தீவிர சிகிட்சைப் பிரிவு செவிலியர் எல்லோரும்  பக்கத்தில் வந்து பார்க்கிறார்கள். இதுவரை முதல் படுக்கைத் தாத்தாவாக மட்டும் இருந்தவர், வெறும் நோயாளி மட்டும் இல்லை, அதை விடக் கூடுதல் என்று அவர்களுக்குத் தெரிகிறது. அப்பா பார்த்துவிட்டதாகத் தலையை அசைக்கிறார். ‘சந்தோஷம்என்றுதான் அவர் சொல்லியிருக்க வேண்டும். அப்படி யூகிக்கும்படியாகவே அவர் குரல் இருந்தது

தினசரிகளின், ஊடகங்களின் வழியாக அவருடைய 90வது பிறந்த நாள் எல்லோராலும் அறியப்படவேண்டும் என மூன்று நாட்களாகவே அவர் எங்களிடம் வலியுறுத்தினார். அவருடைய மாசற்ற விருப்பத்திற்கும் உடல் நலிவிற்கும் இடையே உண்டாகியிருந்த எட்டமுடியாத தொலைவு கவலை அளித்தது. ஆனாலும், சேதுவும், ஜெயாவும், நானும் வள்ளியும் நம்பினோம். எப்படியும் மார்ச்.30ல் 90வது பிறந்தநாள் காண அவர் இருப்பார் என்கிற ஒரு திட நம்பிக்கையை அப்பாவே எங்களுக்குத் தந்திருந்தார். மருத்துவ மனையின் 408ம் அறையில் ஊதி அணைக்க மெழுகுவர்த்திகளையும், வெட்டிக் கொண்டாட, தி.க.சி. 90 என்று எழுதப்பட்ட கேக் ஒன்றையும் கூட எங்களால் கற்பனை செய்ய முடிந்தது.

ஆனால் அது கற்பனை மட்டுமே ஆயிற்று. அப்பா மார்ச்.25 செவ்வாய் இரவில் அவர் இதுவரை பிறந்து,வளர்ந்து,வாழ்ந்த 21.இ. சுடலைமாடன் கோவில் தெரு பூர்விக வீட்டில் அமைதியாக விடைபெற்றுக் கொண்டார்.25க்கும் 30க்கும் அப்படி என்ன தூரம்? ஒரு செவ்வாய்க் கிழமை இரவுக்கும் ஞாயிற்றுக்கிழமைப் பகலுக்கும் அப்படி என்ன பெருந்தொலைவு? வெறும் ஆறு நாட்கள். இடையில் நான்கே நாட்கள். அப்பா அந்த தினங்களையும் வாழ்ந்திருக்கலாம். அந்த தினங்களின் தினசரிகளை ராமையா பிள்ளை கடையில் வாசித்திருக்கலாம். நம்பி கடையில் டீ குடித்திருக்கலாம். தன்னுடைய இணைபிரியா கையடக்க வானொலிப் பெட்டியில் செய்தி ஒலிபரப்புகள் கேட்டிருக்கலாம். மார்ச்.30ம் தேதிக்குரிய தினக்காலண்டர் தாளைக் கிழித்த கையோடு, அவர் மிகவும் ஆசைப் பட்ட’  அவருடைய புதிய புத்தகத்தை வெளியிட்ட கையோடு, அந்த 23 பேர்களுடனான தேநீர்க் கோப்பைகளை நிறைத்து, வாழ்த்திவிட்டுப் போயிருக்கலாம்.

27ம் தேதி வியாழன் மாலை எரியூட்டினோம். அன்றைக்கே தம்பி சேதுவும் நானும் முடிவு செய்தோம், அப்பா விரும்பியது போலவே, 30ம் தேதி ஞாயிற்றுக் கிழமை, அப்பாவின் பிறந்த தினத்தில், ‘ தி.க.சி நாட்குறிப்புகள் புத்தகத்தை வெளியிடுவது என்று. குடும்பத்தினர் தவிர, அல்லது குடும்பத்தினரையும் விட, வே.முத்துகுமார், ஓவியர் வள்ளி, சரவணன் மூவரும் கண்டிப்பாக அதில் கலந்துகொள்ள வேண்டும் என்று எல்லோரும் ஒரே மாதிரி விரும்பினோம்.

மார்ச்.30. அப்பாவின் முகவரியாகிவிட்ட அதே 21.இ.வீடு. அந்த நடுவீட்டுப் பட்டாசலில், வள்ளிநாயகம், முத்துகுமார்,சரவணன் எல்லோரும் எங்கள் குடும்பத்தினருடன் நிற்கிறோம். இதுவரை தனியாகத் தொங்கிய அம்மா படத்துக்குப் பக்கம் அப்பா படத்தை மாட்டியிருக்கிறோம். விளக்குமாட்த்தில் குத்துவிளக்கு எரிகிறது. பூட்டையா தாத்தா, பூட்டையாச்சி, அம்மாத் தாத்தா, அம்மாச்சி படங்களுடன் இப்போது அம்மா அப்பா படங்களிலும் பூச்சரம் தொங்குகிறது. ஊதுபத்தி வாசனை மட்டுமல்ல அது. அந்தத் தருணத்தின் வாசனை அப்போது கசிந்துகொண்டிருந்தது.

யாரும் பேசவில்லை. எல்லோரிடமும் சொற்களைக் காட்டிலும் துக்கமே இருந்தது. நான் பேச ஆரம்பிக்கிறேன். அதாவது அழ ஆரம்பிக்கிறேன். ஒரு சிறு மௌன அஞ்சலியுடன் துவங்கலாம் என்பதற்குள் உடைந்து விடுகிறேன். அம்மாவை, கணபதி அண்ணனை நினைவு கூறுகிறேன். என் குரல் கணபதி அண்ணன் குரல் போலிருக்கிறது. ‘கல்யாணிஎன்று எங்கள் அம்மா என்னிடம் ஏதோ சொல்வது போல உடல் அதிர்கிறது. புத்தகப் பிரதிகளைக் கையில் எடுக்கும் போது கை நடுங்குகிறது. அப்பாவின் கனம், அப்பாவின் கனமின்மை இரண்டையும் உணர்ந்த விரல்களின் நடுக்கம் தணியவே இல்லை.

அப்பாவுக்கு மிக விருப்பமான, ஓவியர்.பொன்.வள்ளிநாயகம் வெளியிட, அப்பாவின் இறுதிக்கால இளந்தோழன் சரவணன் பெற்றுக்கொள்ள, அப்பா விரும்பியபடியே, அவருடைய 90வது பிறந்த நாளில், அப்பாவின் புத்தகம் ‘தி.க.சி நாட்குறிப்புகள் வெளியிடப்படுகிறது. அப்புறம் வே.முத்து குமார், அதைத் தொடர்ந்து ஒருத்தர் பாக்கியில்லாமல் குடும்பத்தினர் அனைவரும் வெளியிடவும் பெறவுமாக எல்லோர் கையிலும் புத்தகம்.
ஒரு சம்பிரதாயமான புத்தக வெளியீட்டுப் புகைப்படம் போல, எல்லோர் கையிலும் உயர்த்திப் பிடித்த புத்தகத்தில், அப்பாவின் கருப்பு வெள்ளை முகம் எல்லோரையும் பார்க்கிறது.

கருப்பு வெள்ளைப் படம் எப்போதுமே ஆழம்தான். இத்தனை அடர்த்தியான துக்கத்தின் ஆழமாக அது இருக்கும் எனத் தெரியாமல் போயிற்று.

%

கல்யாணி.சி.

புதுகைத் தென்றல் - ஜூலை.2014.


4 comments:

  1. மெளன விசும்பல்...

    ReplyDelete
  2. பெரியவர் இறந்த தாக்கத்தை விட அவர். தம் படத்தில் மாலையை பார்தத துக்கம் பெரும் துக்கம் ஆக இருந்திருக்கும்

    ReplyDelete
  3. இதுவரை முதல் படுக்கைத் தாத்தாவாக மட்டும் இருந்தவர், வெறும் நோயாளி மட்டும் இல்லை, அதை விடக் கூடுதல் என்று அவர்களுக்குத் தெரிகிறது.

    ReplyDelete
  4. என் இளமையில் சுஜாதாவின் 'அன்புள்ள அப்பா' படித்தபோது இருந்தது போல் உணர்வு. இப்போது சுஜாதாவும் இல்லை, என் அப்பாவும் இல்லை. நல்ல அப்பா வாய்க்கப்பெறுதல் பாக்கியம். அப்பா அப்பாதான்.!

    ReplyDelete