Saturday 12 October 2013

சிரிப்பின் அளவுக்கு...










அப்பாவைப் பார்க்கப் போயிருந்தேன். அப்பா என்னிடம் வேறொன்றும் கேட்கவில்லை. பன் ரொட்டி தீர்ந்துவிட்டது என்றார். இஞ்சி முரப்பா கிடைத்தால் நல்லது என்றார். இஞ்சி மிட்டாயைத்தான் இஞ்சிமுரப்பா என்று இங்கே சொல்கிறோம். ‘முரப்பாஎன்பது எந்த மொழிச் சொல் என்று தெரியவில்லை.

போன முறை சந்திப்பிள்ளையார் கோவில் பக்கத்தில் ஒரு கடையில் கிடைத்தது. அலைச்சல் இல்லாமல் வாங்கிவிட்டேன். இன்றைக்கு அந்தக் கடை அடைப்பு. பொதுவாக ‘பாய்கடைகள்தான் வெள்ளிக்கிழமையன்று சாத்துவார்கள். அல்லது தசராவுக்குக் குலசேகரப் பட்டினம் போயிருந்தாலும் போயிருக்கலாம். பேக்கரியைத் தேடி, கிட்டத்தட்ட ரதவீதியை ஒரு சுற்றுச் சுற்றிய பிறகு, பன் ரொட்டி வாகையடிமுக்கு லாலா கடையில் கிடைத்தது. அல்வாவும் காராசேவுவும் விற்கிற கடையில் பன் ரொட்டி வாங்குவதற்கு என்னவோ போல இருந்தது. கூச்சப்படாமல் அவர்கள் விற்கிறபோது கூச்சப்படாமல் நாம் வாங்கிவிடவேண்டியது தான். வாங்கிவிட்டேன்.

இரண்டு கடைகளில் இஞ்சி முரப்பா இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஒரு கடைக்காரர் விற்பனையே இல்லாமல் சும்மாதான் இருந்தார். என் முகத்தைப் பார்த்துப் பதில் சொல்லக்கூட அவருக்கு விருப்பமில்லை. இந்த உலகில் எதையும் திரும்பிப் பார்த்துவிடமாட்டேன் என்கிற சபதம் அவரிடம் இருந்தது. எதிர்ப்பக்கம் ஒரு கடை. மழைக்காலத்தில் பள்ளிக்கூடத்தில், அலுவலகத்தில் எல்லாம் ஒரு விருப்பமான இருட்டு இருக்குமே, அது போல கடைக்குள் இருட்டிக் கிடந்தது. யாரும் இல்லை.
வெளியே ஸ்டூலில் ஒருத்தர் தொய்வாக உட்கார்ந்து புகை பிடித்துக்கொண்டிருந்தார். வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி. இரண்டுமே கசங்கித்தான் இருந்தது. குப்பைக் கூடைத் தாள்க் கசங்கல். முழுக்கைச் சட்டையை சுருட்டி விட்டிருந்தார். ஆள் நல்ல சிவப்பு. எழுந்திருந்தால் என்னை விட உயரமாகக் கூட இருக்கலாம். முகத்துச் சதை எல்லாம் பழுத்துத் தொங்கிக்கிடந்தது. சில சமயம் கடைக்கு சாமான் வாங்க வந்தவரை, ‘செத்த பார்த்துக்கிடுங்க, ஒண்ணுக்குப் போயிட்டு வந்திருதேன்.என்று சொல்லிவிட்டுப் போயிருப்பார்கள். அந்த சந்தேகத்தில்தான், ‘கடையில யாரும் இல்லையோ?என்று அவரிடம் கேட்டேன்.

அவர் அப்போதுதான் சிகரெட்டைப் பற்றவைத்திருக்க வேண்டும். முதல் இழுப்பை ஆழமாக இழுத்தார். புகையை வெளியே விடவில்லை. கடைக்குள் இருந்த இருட்டைப் பார்த்தார். அங்கே அருவமாக நிற்கிறவரிடம் உத்தரவு வாங்கியது போல, ‘என்ன வேணும்?என்றார். ‘இஞ்சி முரப்பா இருக்கா?என்றேன். அவர் இருக்கிறது என்றோ இல்லை என்றோ சொல்லவில்லை. கைவிரலில் இருந்த சிகரெட்டை கடைப் பலகை முடிகிற ஓரத்தில் வைத்தார். பின் பக்கம் பஞ்சு உள்ள, அப்போதுதான் நுனி பொசுங்கத் துவங்கியிருந்த சிகரெட் அழகாக இருந்தது.

மடக்குக் கதவைத் திறந்து உள்ளே போனார். அட்டங்களில் இருந்து எடுக்காமல் குனிந்து இருட்டுக்குள் கையால் துளாவினார். ஒரு பாட்டிலை எடுத்தார். எத்தனை பாக்கெட் என்று கேட்கவில்லை. நான் தான் சொன்னேன். எடுத்துவைத்தார். எவ்வளவு என்று கேட்டாலும் பதில் சொல்லமாட்டார் என்றே தோன்றியது. எனக்கு அதன் விலை தெரியும் என்பதால் ரூபாயை எடுத்துவைத்தேன். அப்போதும் அவர் ஒன்றும் சொல்லவில்லை. மற்றக் கடைகளையும் விட, தலா ஒரு ரூபாய் குறைந்த விலையே கணக்கிட்டு பாக்கியைத் தந்தார். ஒரு பை தரமுடியுமா என்றேன். இருளின் மந்திரம் அவருக்குத் தெரிந்திருந்தது. மறுபடியும் குனிந்து இருட்டுக்குள் இருந்து ஒரு கட்டை உருவி ஒரு நீல நிறப் பையை எடுத்தார். என் கைகளில் இருந்து வாங்கி, அவரே ஒவ்வொன்றாகப் பையில் இட்டு என்னிடம் கொடுத்தார். ஒரு சொல், ஒரு சிரிப்புக் கிடையாது.

நான் அந்த சிகரெட்டையே பார்த்தேன். பலகை நுனியில் அது நீண்ட சாம்பலுடன் கனிந்து புகைந்துகொண்டிருந்தது. ‘அப்பதான் பத்த வச்சு இருப்பியோ போல. நான் வந்து கெடுத்துட்டேன்என்றேன்.

முதல் முறையாக சற்றுச் சிரித்து, ‘சிகரெட்டா முக்கியம்?என்றார். நான் கடையைப் பார்த்தேன். அவர் சிரிப்பின் அளவுக்கு கடை இப்போது சற்று வெளிச்சம் அடைந்துவிட்டிருந்தது.
%


11 comments:

  1. அருமையான பதிவு. நெகிழ்வான எழுத்து நடை. நாமும் கடையில் இஞ்சி முரப்பா வாங்க கூடச்சென்றது போல் இருக்கிறது.
    நல்ல தமிழ் படிக்க நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி ஐயா திரு வண்ணதாசன்.

    ReplyDelete
  2. மரபின்மைந்தன்12 October 2013 at 08:36

    இவ்வளவு நுட்பமான மனிதர்களும் நுட்பமான கணங்களும் அதிநுட்பமான உங்களுக்கு வாய்ப்பதில் எங்களுக்குத்தான் லாபம்

    ReplyDelete
  3. வார்த்தைகளால் சினிமாவே காட்டி விடுகிறீர்கள் அய்யா
    வாசகனின் கண்களுக்கு .

    வாகை அடி முக்கு வழியாக லச்சுமி திரை அரங்கம் செல்லும் வழியில்
    இருக்கும் இருட்டுக் கடையாக இருக்குமோ என்று தோன்றுகிறது

    ReplyDelete
  4. அருமையான பதிவு

    ReplyDelete
  5. கசக்கும் கரும்பு உளதோ?

    ReplyDelete
  6. இஞ்சி முரப்பா விற்கும் பாட்டையாக்கள், பள்ளிக்கூடம் முன்பு நெல்லிக்காய் விற்கும் பாட்டிகள், சாணை தீட்டும் மனிதர்கள், அரண்ணா கயிறு விற்கும் தாத்தாக்கள் ...இவர்கள் எல்லாம் வியாபாரிகள் கணக்கில் என்றேனும் வருவார்களா?..இருண்டு கிடப்பது கடையா? அல்லது அவர்களின் வாழ்க்கையா?..மனசை என்னவோ செய்கிறது..

    ReplyDelete
  7. இஞ்சி முரப்பா விற்கும் பாட்டையாக்கள், பள்ளிக்கூடம் முன்பு நெல்லிக்காய் விற்கும் பாட்டிகள், சாணை தீட்டும் மனிதர்கள், அரண்ணா கயிறு விற்கும் தாத்தாக்கள் ...இவர்கள் எல்லாம் வியாபாரிகள் கணக்கில் என்றேனும் வருவார்களா?..இருண்டு கிடப்பது கடையா? அல்லது அவர்களின் வாழ்க்கையா?..மனசை என்னவோ செய்கிறது..

    ReplyDelete
  8. வண்ணதாசன் எழுத்து என்றால் ஆளை மயக்கிவிடுமே!

    ReplyDelete
  9. இஞ்சி மறப்பான் என்பது மருவி இஞ்சி முரப்பான் என்றானது. இஞ்சியை மறக்க வைக்கும் மிட்டாய்

    ReplyDelete
  10. Murabba entral saduram arabia mozhil

    ReplyDelete
  11. மதுரை பெரியார் பேருந்துநிலையத்தில் முன்பெல்லாம் இஞ்சிமொரப்பா விற்பார்கள். அதுவும் அவர்கள் கூவிவிற்கும் முறை இன்னும் நினைவில் நிற்கிறது. பித்தம், தலைசுத்தல், கிறுகிறுப்பு, வாந்தி, மயக்கத்திற்கு என்று சொல்லும்போது வரும் ஒலி இப்போது காதில் கேட்கிறது.

    உங்கள் எழுத்தின் வழி எங்களை அன்பின் பாதைக்கு இழுத்தி சென்றமைக்கு நன்றி.

    ReplyDelete