Saturday 12 January 2013

ஒரு மாதிரி இருக்கிறவன்.






'என்ன ஒரு மாதிரி இருக்கீங்க?’
இந்தக் கேள்வியை வீட்டில் அதிகமும்,  என்னைத் தெரிந்தவர்களிடம் அவ்வப்போதும் நான் உண்டாக்கிக் கொண்டே இருக்கிறேன். இன்றைக்கு நீங்கள் என்னைப் பார்ப்பீர்கள் எனில் அந்தக் கேள்வியை நீங்களும் கேட்கக் கூடும். அது எப்படி நான் ஒரே மாதிரி இருக்கமுடியும்? என்னை ஒரே மாதிரி வைக்க வேண்டிய பொறுப்பு என்னைத்தவிர அதிக சதவிகிதம் உங்களிடம் அல்லவா உண்டு?

இன்றைக்கு இதுவரை நான் சரியாகத்தான் இருந்தேன். கொஞ்சம் கவலைக்கு உள்ளானது எனில்,  ’என்ன நினைச்சுக்கிட்டு இருக்க? கண்டார ஓழி. வந்தம்’னா ஈரக் குலைய ரெண்டா வகுந்து போட்டிருவேம் பாத்துக்கோ’ என்ற குரல் அந்த வயதான அம்மாவிடம் இருந்து வந்துகொண்டிருப்பதைக் கேட்டபோதுதான். முந்திய தினத்தின் அத்தனை பூவும் உதிர்ந்து கிடக்கும் மரமல்லி மரத்தின் கீழ் வாசல் பெருக்கிக் கொண்டே, தன் நரைத்தமுடியை அள்ளிக் கொண்டை போட்டபடி, இங்கே பதிவு செய்யத் தயக்கம் தருகிற மேலும் சில உச்ச வசைகளுடன், திட்டிக்கொண்டிருந்த அவர் முன் யாருமே இல்லை. சற்று நேரம் குனிந்து பெருக்கியபடி இருந்தவர், தனக்கு முன் (எதுக்க)அந்த ’இல்லாதவன்’ வந்து நின்றுவிட்டது போல, ‘வாரியல் பிஞ்சுபோகும், இந்த ஜோலியெல்லாம் இங்க வச்சுக்கிடாதே’ என்று வேறோரு தேர்ந்த வசையுடன் முடித்தார். வன்மத்துடன் வீசி எறிந்த ஈட்டி, புல் தரையில் நுனி செருகி, அப்புறம் சிலநொடிகள் அதிர்ந்தாடிச் சமனப்படுமே, அது போல அந்த ‘கெட்டவார்த்தை’ அந்த இடத்தில் அசைந்து அடங்குவதை என்னால் உணரமுடிந்தது.

அவர் வளர்க்கிற நாயாகத்தான் தெரிந்தது. அதற்கு அன்றைக்கு கும்மியடிக்கிற மன நிலை இருந்திருக்கவேண்டும். அவரைச் சுற்றிச் சுற்றி வந்து. ஒவ்வொரு அரைச் சுற்றிலும் அவர் மீது காலைத் தூக்கி வைத்து ஏறிட்டுப் பார்த்துவிட்டு, மறுபடி வட்டம்போட்டு  அவரைச் சுற்றியது. ‘போ.மூதி.அந்தப் பக்கம். கவுட்டைக்குள்ள வந்து என்னத்த கொஞ்சிக்கிட்டுக் கிடக்க” என்று கையை உயர்த்தினார். அது என்னவோ அவரை மானபங்கப்படுத்த வந்தது போல, சேலைத் தலைப்பை எல்லாம் சரிபண்ணிக்கொண்டார், ‘கொஞ்சுததைபாக்கப் படாது, கொஞ்சுததை’ என்று முனகிக்கொண்டு மறுபடி குனிந்து பெருக்க ஆரம்பித்தார்.

இந்தப் பக்கத்தில் நான்கைந்து வீடுகளுக்கு இவர்தான் வாசல் தெளித்து வீடு கூட்டுகிறார். மிகவும் மெலிந்த மனுஷி. சற்று, கத்திக்கப்பல் செய்ய மடக்கின தாள் மாதிரி இருப்பார். செய்கிற வேலை துப்புரவாக இருக்கும் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால், இந்த வித வசைகளுடன் ஒரு நாளைத் துவங்க யாரும் விரும்பமாட்டார்கள். நான் அவரை மட்டுமல்ல, அவர் சதா சண்டைக்கு நிற்கும் அந்த இன்னொரு மனிதரையும் அனேகமாகப் பார்த்துவிடும்   அளவுக்கு, அவர் வீசும் கெட்டவார்த்தைகள்  உத்தேச அங்க அடையாளங்கள் தந்து உதவியிருக்கின்றன.  நான் என் வழியில் தேடுவது எல்லாம் அந்த உத்தேச மனிதரின் எதிர்வரவைத்தான்.

ஆனால், நடப்பில் அவருக்குப் பதிலாக எதிரே வந்தது அவரல்ல, ஒரு சிறு பெண். கல்லூரிக்குப் போகிற வயது. ஏதாவது பக்கத்து கிராமத்தில் இருந்து பஸ்ஸில் வந்து பாரதி நகர் ஸ்டாப் வந்துவிட்டதா, வந்துவிட்டதா என பக்கத்தில் இருப்பவரைப் பதற்றத்துடன் கேட்டு, பெருமாள்புரம் விலக்கு வந்ததில் இருந்தே எழுந்து நின்று குனிந்து குனிந்து பார்த்துக்கொண்டே வந்து இறங்கியிருக்க வேண்டும்.  களங்கமே இல்லாத ,. சிறுசிறு பருக்கள் வெடித்த, எந்தப் பூச்சுமற்ற முகம். இது ஒன்றும் பெரிய தெரு இல்லை.  இவ்வளவு அகலத் தெருவைக் கூட இதுவரை பார்த்திராதது போல் அகன்றிருந்த கண்கள்.
சற்று முன் தரையில் உதிர்ந்த ஒரு பழுத்த இலையின் சத்தத்துடன் அந்தப்
பெண் என்னுடன் பேச ஆரம்பித்தது. , “பாரதி நகர் அஞ்சாவது  தெருவுக்கு எப்படிப் போகணும்?’

என்னைப் போல, திசைதப்பி அலைகிறவன் முகத்தில் கைகாட்டிகள் தன்
அம்புக்குறிகளை நட்டிருக்குமோ என்னவோ?  பெரு நகரங்களில் நான், ‘ரெங்கநாயகி அபார்ட்மெண்டுக்கு எப்படிப் போகணும்?’ என்று பத்து பேரை அடுத்தடுத்துத் தேர்ந்து, தயங்கி, ஒரு ஆட்டோக்காரரிடம் கேட்டே விடுவது என ஒரு முடிவுக்கு வரும் நிமிடத்தில்,  என்னிடம் யாராவது வந்து, மிகுந்த பணிவன்புடன், ‘’நியூ டெக்  அபார்ட்மெண்ட் எந்தப் பக்கம் சார் இருக்கு?’’ எனக் கேட்பார்கள். இந்தப் பெண் கேட்ட பாரதி நகர் ஐந்தாம் தெருவழியாகப் போனது இல்லையே தவிர, அது எங்கிருக்கிறது எனக்குத் தெரியும்.  எனக்கு அப்படித் தெரியும் என நானே நம்பியும், அந்தப் பெண்ணுக்கு வேறுயாரிடமும் வழி
கேட்க அவசியமின்றி நானே சரியாகச் சொல்லிவிடமுடிவதில் மனநிறைவு கொண்டும், ‘’ இது மூணாவது தெரு. ஒம்பதாவது தெருவரை இப்படியே போகலாம். மூணு, நாலு, அஞ்சுண்ணு கணக்கு வச்சுக்கிட்டுத் திரும்பீருங்க.
பக்கம்தான். சிரமம் இல்லை’ என்று என் உடம்பைச் சற்றுத் தெருப்பக்கம்
திருப்பி, கையை உயர்த்திக் காட்டினேன். நான் செய்த தப்பு அங்கே தான். தெருவின் வலது பக்கம் கையைக் காட்டுவதற்குப் பதிலாக இடது பக்கம் காட்டிவிட்டேன். அப்படித் திரும்பினால் நேத்தாஜி தெருவுக்குப் போய்விடும்.
இந்தத் தவறை நான் என்னையறியாது செய்திருக்கிறேன் என்பதை, அந்தத் தெருவை விட்டு விலகி,  ஆட்டோ ஸ்டாண்ட் தாண்டி, சிபி டெய்லர் போர்டு வரைக்கும் வந்தபிறகுதான் தெரிந்தது.

இதற்குள் அந்தப் பெண் எங்கெல்லாம் போயிருக்கிறதோ? நேத்தாஜி தெரு ஒன்றும் தொலைந்து போகச் சொல்லும் அளவுக்குப்  புதிரான திருப்பங்கள் உள்ளது அல்ல. இன்னும் (என்னைப்போல் அல்லாத) ஒருவரிடம் கேட்டால், பத்தே நிமிடங்களில் அந்த ஐந்தாவது  தெருவைச் சுலபமாகவே அது  கண்டு பிடித்துவிடலாம். ஆனால் அந்தப் பத்து நிமிடங்கள் அந்தப் பெண்ணுக்கு எத்தனை நெடுந்தூரம் உண்டாக்குகிற ஒரு நேரம். மறுபடியும் எச்சில் விழுங்கி,  நாலைந்தாக பாதுகாப்புக்கு வருவது போல ஒரு கொத்தாக நகரும் தெரு நாய்களுக்குத் தயங்கி, சாய்ந்த பல்ஸர் பைக்கில் காலூன்றிக்கொண்டு வேப்பமரத்தடியில் நிற்கும் இரண்டு பையன்களுக்குத் தேவையின்றிப் பயந்து, பிள்ளையார் கோவிலில் இருந்து  வந்துகொண்டிருக்கும் யாரிடமாவது வழி கேட்கும் வரை எவ்வளவு பதற்றம் உண்டாகியிருக்கும்?

எனக்கு இந்த தினத்தின் மிகப் பெரிய தவறை, நான் செய்துவிட்டது உறுதியாகி விட்டது. நான் இப்படித் திரும்பத் திரும்ப ஏதாவது எளிய தவறுகள் செய்வது அதிகமாகிவருவதை நினைத்து எனக்குக் கஷ்டமாக இருந்தது. வாகை மரத்தடியில் பிளந்து பிளந்து குவிந்து கிடக்கும் இளநீர்ப் பாதிகள் எல்லாம் யார் யாரின் முகங்களோ ஆகி, ‘ என்ன ஆச்சு? என்ன ஒருமாதிரி இருக்கீங்க?’ என்று என்னைக் கேட்பது போல இருந்தது.

‘என்ன ஒரு மாதிரி இருக்கீங்க?’ என்று தயவு செய்து  கேட்காதீர்கள்.
’என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே. வந்தம்னா...’ என்று இரண்டு  மூன்று கெட்டவார்த்தைகள் சேர்த்து, அந்த வயதான மனுஷியின் குரலில் திட்டுங்கள்.

நேற்றைய பூக்கள் உதிர்ந்துகிடக்கும் மரமல்லி மரம் ஏதாவது இந்தப் பக்கத்தில் இருக்கிறதா, தெரியவில்லை. அல்லது என்னைச் சுற்றிச் சுற்றிவந்து வட்டம் அடித்துக் கொஞ்சும் ஒரு நாயாவது .

%







4 comments:

  1. சிறிய (நேரம் அதிகம் எடுக்காதா) இரண்டு நிகழ்வுகளை / மனிதர்களை வைத்தே
    அற்புதமாக காவியம் படைத்து விடுகிறீர்கள்

    ReplyDelete
  2. ஒரு மாதிரி இருக்கும் போது, வசைச்சொல்கள் கூட வருடித்தரவல்ல இத்தகைய எழுத்தைப் படித்தால் சரியாகி விடுகிறோம்.

    ReplyDelete
  3. அந்த வயசான அம்மாவுக்காக மனசு வதங்குது. அந்த பொண்ணுக்காக மனசு இரங்குது. காலம் அந்த பொண்ணையும் அந்த அம்மா மாதிரி 'ஒரு மாதிரியா' ஆக்கிடுமோன்னு நினச்சாத்தான் ...

    ReplyDelete
  4. மிக அருமையான எழுத்து .தினம் சந்திக்கும் சம்பவங்கள் அப்படியே மனக்கண்ணில்.

    ReplyDelete