Sunday, 27 January 2013

ஊர்த்துவம்..


முருகவேள் அண்ணன்  சொன்னது போல ‘ஈகிள்’ கடையில் முன்பதிவு செய்யவில்லை. புத்தக விழாவில் வாங்க விட்டுப் போயிற்று . கடைசி தினத்தில் ஞாபகம் வந்தது. உமாசக்தியிடம் சொல்லி எடுத்துவைக்கச் சொல்லிவிடலாம் என நினைத்தேன். தொலைபேசி அழைப்பில் அவர் கிடைக்கவில்லை. கடைசியில், ஊருக்கு வந்து மூன்று நாட்களுக்குப் பின் தங்கராஜிடம் இருந்துதான் சில்பி அவர்களின் ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ தொகுப்பு இரண்டையும் எடுத்துவந்தேன்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ஊர்த்துவ கணபதியை முதலில் வரைந்துதான் அந்தத் தொடரை ஆரம்பித்தாராம். நான் ஓவியர் சில்பியைச் சந்தித்தது, அப்படிச் சொல்லவும் முடியாது,’தரிசித்தது’ என்று சொன்னால் இயல்பாகவும் இராது, அதே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தான். எந்தக் கோபுர வாசல் என்பது ஞாபகமில்லை. அனேகமாக மேலக்கோபுரவாசலாக இருக்கலாம். திண்டுக்கல் ரோடு வழியாக நடந்து, மேலக்கோபுரவாசலில் திரும்பி நடந்தால், சோத்துக்கடைத் தெரு முக்கில் இருக்கிற ‘பாட்டா’ கடை வந்துவிடும். அதில்தான் சொக்கன் வேலைபார்த்தான். முதலில் சேல்ஸ்மேன் அப்போது. முகங்களை விடக் கால்களையே அதிகம் உற்றுப்பார்க்கவேண்டும். அதுவும் சிரித்துக் கொண்டே. மனுஷ்யபுத்திரனை விட, முடிவற்ற ‘கால்களின்
ஆல்பம்’ கவிதை எழுத சொக்கலிங்கத்தால் முடியக்கூடும்.

69 அல்லது எழுபதாம் ஆண்டாக அது இருக்கலாம்.வேலை கிடைக்காத எனக்கு எல்லாக் காலமும் வேனில் காலம் போலத்தான் இருந்தது. வெயில் காலத்தில் மழை பெய்யக் கூடாது என்று கட்டாயமா என்ன? மழைக்கால மழையை விட, வெயில் கால மழைக்கு ரம்மியம் அதிகம். நான் மழைக்கு கோபுரவாசலில் ஒதுங்கினேன். எனக்கு முன்பே அப்படி ஒதுங்கிய ஒருவராக சில்பி நின்றுகொண்டிருந்தார். கையில் வரைபலகை. க்ளிப் மாட்டிய ஓவியக் காகிதம். பார்த்தவுடனே சில்பி என்று தெரிந்துவிட்டது.

 எல்லா உயர்ந்த கலைஞனுக்கும் பார்த்தவுடனே தன்னை  அடையாளம் தெரிவித்துவிடுகிற ஒரு தோற்றம் இருக்கிறது. தோற்றம் என்பதை விட அப்படி ஒரு அம்சம் அவர்களிடம் அமைந்துவிடுகிறது.ஜானகிராம் படிக்கட்டில் இறங்கிவருகிற ஒருவரைப் பார்த்ததும் இவர் பாடகி என்பதனை உணர முடிந்தது. அவர் பெயர் சுதா ரகுநாதன் என்பதை அப்புறம் யாரோ சொல்லத் தெரிந்துகொள்கிறேன்.  பாளை மார்க்கெட் பக்கத்து ஜவஹர் மைதானத்தில்  ஏதோ ஒரு கலை இரவு. தூரத்தில் இருந்து பார்த்தாலே இவர்தான் ஓம் பெரியசாமி என்று தெரிந்துவிட்டது. அசோகமித்திரனை அவர் கதைகளை வாசித்திருக்கிற யார் பார்த்தாலும், அவர்தான் அசோகமித்திரன் என்று தெரிந்து போகும்.  சில்பியும் அப்படித்தான் இருந்தார். இதுவரை அவர் வரைந்து வந்த அத்தனை கோடுகளையும் பார்த்தவர்களுக்கு, அவரை அடையாளம் காண்பதில் எந்தச் சிரமமும் இருந்திராது.

ஒரு ஓவியன் அவனுடைய எல்லாக் கோடுகளிலும் தன்னையும் சேர்த்தே வரைகிறான். சோபனாவின் இரண்டு நடனத் தோற்றங்களை சமீபத்தில் சுரேஷ்குமார இந்திரஜித் முகப் புத்தகத்தில் பதிவேற்றியிருந்தார். அலர்மேல் வள்ளியைப் போல சோபனாவையும் எனக்குப் பிடிக்கும். சோபனா எப்போதும் சோபனாவையே ஆடிக்கொண்டிருக்கிறார். அந்த இரு படங்களிலும் கூட. எந்த மெல்லிசைக்குழுவின் புல்லாங்குழல் கலைஞனும் அவனையே அவன் வாசித்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கமுடியும்.

நான் சில்பியை இரு கை கூப்பி வணங்கினேன். அகன்ற நெற்றியில் திருநீறு துலங்க, யாரையும் பார்க்காமல் எல்லோரையும் பார்த்துக்கொண்டிருந்த அவர் முகம் தீர்க்கமாக இருந்தது. அவரைத் தொழுவது என்பது அவர் அந்த தினத்து மழையின் முதல் தாரை விழும்வரை வரைந்திருந்த அத்தனை ஆயிரம் சிற்பங்களையும் ஒருசேரத் தொழுவது போன்றது. எந்தெந்த நூற்றாண்டுக் கல்லையும் உளியையும் விரலையும் தொழுவது அது. அடுக்கடுக்கடுக்கான பாறைகளில், அகாலம் கண்ட பெருந்தச்சர்கள் ஆண்டாண்டு  செதுக்கிய கல்லோவியங்களின் ஒற்றைப் பிரதிநிதியாக, மேலக்கோபுரவாசலில் அந்தத் தேர்ந்தெடுத்த கணத்து மழை வடித்த சிலையாக அவர் நின்றுகொண்டு இருந்தார். அவருடைய சிரிப்பு மட்டுமே அவரின் ஆசீர்வாதமாக இருந்தது.
நான் அவருடன் ஒன்றும் பேசவில்லை. மழை நிற்கும் வரை நானும் நின்றேன். மீண்டும் அவரை வணங்கிக் கொண்டேன். அவருடைய அகன்ற நெற்றியே எனக்கு விடை கொடுத்தது.

இன்று மறுபடியும் அந்த நெற்றியும் நீறும் துலங்குகிறது. சிதம்பர நகரில் அல்ல.நான் இப்போது மேலக் கோபுரவாசலில் ஒதுங்கி நிற்கிறேன்.

சொல்ல முடியாது, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தால் இப்போது இந்த தை நிசியில் மழைபெய்துகொண்டு  இருக்கக் கூடும். சில்பி இப்போது மழை நடனத்தைப் பார்த்துக்கொண்டிருப்பார். அவருக்குத்தான் ஊர்த்துவம் பிடிக்குமே.

%


1 comment:

 1. அருமை சார்.
  வாசிக்கும் பொழுதே மேலக் கோபுர வாசலையும் , உள் கடையில் விற்கும் ரவா லாடுவையும்,.
  சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தின் பொழுது டேப் ரிக்கார்டரில் ஒலிக்கும்
  ஊர்த்வாய நமகா, ஊர்த்வ லிங்காய நமகா
  என மதுரையைக் கண் முன்னே கொண்டு வந்து விடுகிறீர்கள்

  ReplyDelete