Monday 10 September 2012

சின்ன விஷயங்களின் மனிதன்








அந்த 407ம் அறையின் முதல் நாற்காலியில் சச்சி இருந்தார். அவருக்கு இடப் புறம் நான். எனக்கு அடுத்து தங்கராஜ். சந்தியாநடராஜன், பெரியசாமி,  கோபால், செந்தில், செந்தி,  ஆண்டிபட்டி முருகன், இசை, லிபி ஆரண்யா,விஜி, அருணாசாயிராம் இசைகேட்க அமர்ந்திருக்கும் ஒருமையுடனிருந்த கோவை ரவீந்திரன், சாதுவாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த  இடைகால் முருகன், காந்தி மற்றும் கடைசி வரை சன்னதம் குறையாத சாம்ராஜ்  ....

அமெரிக்கன் கல்லூரியின் நூற்று இருபது ஆண்டுச் சிவப்புச் செங்கல் நிறம் நனைத்து ஓடிக்கொண்டிருந்த அன்னியமற்ற நதி, சாரதா ராஜன்
விடுதி அறைக்குள் திசை திரும்பி ஓடிக் கொண்டிருந்தது.  ஏற்கனவே பழகிய கரைகளுக்குள் ஓடி வந்தது போலவும். இப்போதுதான் புதிதாகப் பாயப் புறப்பட்டு, பாயப் பாய புதிய கரைகளை உண்டாக்குவதாகவும் அது நகர்ந்து கொண்டிருந்தது.

இப்போது நினைத்துப் பார்க்கையில், அந்த ஏழாம் தேதிப் பிற்பகலும், அமெரிக்கன் கல்லூரி மாலையும், இரவும் இதுவரை நான் வாழாத ஒரு பிற்பகலாகவும், மாலையாகவும், இரவாகவும் இருந்தன.

அன்று காலையில், ஃபாத்திமா கல்லூரியில். எம்.ஏ. சுசிலா அறக்கட்டளை
நிகழ்வாக அந்த ஜூபிலி அரங்கத்தில்,  வழக்கமான என்னுடைய எந்தப்
பதற்றமான முன் தயாரிப்பும் இன்றிப் பேசிய பேச்சு சரியாக அமைந்து
விட்டது என்றே நினைக்கிறேன்.முன்னால் அமர்ந்து கேட்ட மாணவிகளின், மேலே சுழலும் மின்விசிறிச் சத்தம் கேட்கும் அளவுக்கான, அமைதியை
ஒரு அலகாக வைத்துக் கொண்டால், அப்படித்தான் கொள்ளவேண்டும்.

ஆனால், அந்தப் பிற்பகல் மிக மிக மோசமானது.  என் ஐம்பதாண்டுப் படைப்புக் காலத்தை, ‘கொண்டாடுகிற’ விதமாக சந்தியா பதிப்பகம் மிகுந்த விருப்புடன், அமெரிக்கன் கல்லூரியுடன் இணைந்து நின்று ஒழுங்கு செய்திருக்கிற இந்த மாலை நிகழ்வில் என்னுடைய ‘ஏற்புரை’ நன்றாக அமையவேண்டுமென நானே விரும்பினேன்.  ‘சாரல் விருது’  ஏற்புரை, எல்லோர்க்கும் அதைத் தாண்டி நான் செல்வதைப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பைத் தந்து இருக்கும் என நானே நினைத்துக் கொண்டேன். அதனால்   என்னிடம் ஏற்கனவே ஒரு உளவியல் சுழற்சி உண்டாக்கிய பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.

நான் இதுவரை அறிந்த, புழங்கிய சொற்கள் அனைத்தும் என்னைக் கைவிட்டு நகர்ந்து பெரும் தொலைவுக்கு அப்பால் போயிருந்தன. நான் என் பேச்சைத் துவங்குவதற்கான ஒற்றையடித் தடம் விழவே இல்லை. நான் இதுவரை எழுதியிருந்த எந்தக் கதைகளின் தலைப்பும் கூட நினைவுக்கு வரவேயில்லை.  மூளை மடிப்புகள் எனக்கெதிரான ஒரு சாம்பல் நடனத்தைத் தீவிரமாக ஆடுவது தெரிந்தது.  நான் இந்த 50 நிகழ்வை முதலில் இருந்தே விரும்பாததால், என் மனம் முற்றிலும் எதிர்த் திசையில் தொலைந்து போய் இருந்தது. என்னுடைய  சமீபத்திய சிறுகதையான, ‘பொழுது போகாமல் ஒரு சதுரங்கம்’  கதையில் வரும் தாயம்மா அத்தையின் கணவர் பெயர் கூட நினைவுக்கு வரவில்லை. சக்திஜோதிக்கு குறுஞ்செய்தி அனுப்பி, அது சூரி மாமா எனப்படும் சூரியநாராயணன் என்று தெரிந்துகொள்ளும் அளவுக்கு அந்த மறதித் தீவு இருந்தது.

நான் யாரையும் சந்திக்க விரும்பவில்லை. கலாப்ரியாவை, செந்திலை, ரவீந்திரனை, தங்கராஜை எல்லாம் தவிர்த்திருந்தேன். சமயவேல் தொலை பேச்சைச் சுருக்கிக் கொண்டேன்.  அந்த விசாலமான தனிமைக்குள் நான்
மூழ்கிக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில், இனி பேசுகிறதற்கான எல்லா
இழைகளும் அறுந்து போய்விட்டதை உணர்ந்த ஒரு கசந்த புள்ளியில்
ஒரு நான்கு பக்க உரையை நான் எழுத ஆரம்பித்தேன்.  எழுதிய வரையில், சற்றுத் தொய்வான, எதிர்மறையான குரலில் இருந்தாலும், அது சரியாகவே இருந்தது. வாசித்துவிடவேண்டியதுதான் என பேனாவை மூடிய போது மணி நாலே கால் ஆகிவிட்டிருந்தது.

இப்படியொரு மோசமான பிற்பகலுக்குப் பின்,  அந்த நல்ல, அமெரிக்கன்
கல்லூரி மாலையை நான் எதிர்பார்க்கவே இல்லை.  அந்த 120 வருட சிவப்புக் கட்டிடம் தன்னிடம் ஏதோ ஒரு மாயத்தை வைத்திருந்தது.  ஒரு மரத்தின் அடியில் பாரதி கிருஷ்ணகுமாரும் ஏழெட்டுப் பேர்கள் நிற்பதைப்
பார்த்ததுமே எனக்கு உயிர் திரும்பிவர ஆரம்பித்துவிட்டது.  கல்லூரிப் பேரவை அரங்கின் வாசல் படியில் தோழர் எஸ்.ஏ.பெருமாள் நின்றார். அவர் உயரம், அவர் தோற்றம் எப்போதுமே நம்மை என்னவோ செய்யும்.  அவரை
அந்த இடத்தில் பார்த்ததும், தமிழ்ச் செல்வன் வந்துவிட்டாரா என்று நான்  அவரிடம் கேட்டதும், ‘எல்லாரும் வந்துட்டாங்க, அங்கங்க நிண்ணு பேசிக்கிட்டு இருக்காங்க’ என்று பதில் சொன்னதுமே எனக்கு போதும் என
இருந்தது. நான் அந்த நிமிடம் முதல் பேசுவதற்குத் தயாராகிவிட்டேன் என்பதே நிஜம்.  அன்றைய பேச்சை எஸ்.ஏ.பி தந்தார் என்பதை இப்போது நிச்சயமாகச் சொல்லமுடிகிறது.

ஒவ்வொருவராக, ஒவ்வொருவராக அப்புறம்.  சாம்ராஜ், லிபி ஆரண்யா, சீனு, முத்துமணி, நோபிள் சார், சௌந்திர ராஜன் சார், ஆகாச முத்து எல்லோரும் நான் நுழைந்த இடது ஓரத்தில்.  என்னுடைய நிலகோட்டை காலத்து அலுவலக சகா சின்ன சாமி. எங்கள் மகள் சங்கரிக்கு பாண்டியராஜபுரம் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருந்த திருநாவுக்கரசு ஸார் எல்லோரும் வந்து கையைப் பிடிக்கிறார்கள். கிருஷ்ணகுமார் வருகிறார். என்னைவிட வளர்த்தியான அவருடைய தோள்களைப் பற்றி உலுக்குகிறேன்.  எஸ்.ஏ.பி உயரம் இரண்டு விதையிலைகளைத் தந்தது எனில், கிருஷ்ணகுமாரின் தோள் மூன்றாவது இலையை. காஃபி அருந்துகையில் ஜயபாஸ்கரன்,  சுரேஷ்குமார் இந்திரஜித், சமயவேல் எல்லோரும்.  சற்றுப் பிந்திச் சந்தித்த எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முன்பு அவர் மனைவி  என் பக்கம் வந்து சிரித்துக் கொண்டே விசாரிக்கிறார். நமக்கு வேண்டிய சிலபேரின் சிரிப்பு நமக்கு ஏதோ நல்லது பண்ணுகிறது.

இதற்குள் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் வந்துவிட்டதாக, பேராசிரியர் மீனாட்சிசுந்தரம் சொல்கிறார். மேடையில் நான் அழைக்கப் படுகிறேன். நிலக்கோட்டை அசோகன் முகத்தைப் பார்க்கையில், ராமகிருஷ்ணனைத் தாண்டி, தமிழ்ச் செல்வனைத் தாண்டி மேடை வந்துவிடுகிறது . வலப் புறமாகவாகவா, இடப் புறமாகவா என்ற தயக்கத்தில் லேசாகக் கால் தடுமாறுகிறது. வேறு எந்த விதப் பரபரப்பும் இல்லை. முற்றிலும் அமைதியாக இருக்கிறது மனம். அடுத்தொரு கணத்தில் மலரவிருக்கும் ஒரு நீர்ப் பூ போல.

சாம்ராஜ் கடிதங்கள் பற்றி, லிபி கவிதைகள் பற்றி, தமிழ் என் கதைகளில் வரும் பெண்கள் பற்றி, கிருஷ்ணகுமார் கிட்டத்தட்ட தமிழ்ச் செல்வன் பேசியவற்றின் இன்னொருகோணத்தில் பேசிக் கொண்டே போக, இடையிடையில் ராமகிருஷ்ணன் எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க, நான் பூரணமாக நிரம்பிட்டிருந்தேன். குனிந்து எடுத்துத் தண்ணீர் அருந்தும் போது,  ராமகிருஷ்ணன் ஓ ஹென்ரியின் ஒரே இலையில் உயிரைச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த உதிராத ஒற்றை இலையில் துவங்கிவிட்டது என்னுடைய ஏற்புரை.

நான் எழுதிவைத்திருந்த நான்கு பக்கங்களின் எந்தச் சொல்லும் இன்றி, எந்த வரியும் இன்றி, அந்த மேடையில் துளிர்த்த இலையுடன் துவங்கிய பேச்சு, மிக இயல்பாகவும், மிக அழகாகவும், உணர்வு பூர்வமான சிறு சிறு
இடைவெளிகளுடனும்  நீண்டு கொண்டே போய், இதற்கு மேல் பெருக வேண்டாம் எனத் தீர்மானித்தது போல, ஒரு சிறு மௌனத்திற்குப் பின் அப்படியே பேதமற்ற நிலையில் நிறைந்தது.

பேசிய நேரத்தை விட முக்கியமான நேரம், பேசிய பின், நிகழ்வு முடிந்து நான் மேடையை விட்டு இறங்குகையில் என்னுடன் கை குலுக்கவும் பேசுவதற்கும், புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் சிலர் காத்திருக்கும் நேரம்தான். சொற்களையும் விட விரல்கள் எனக்கு முக்கியம் அல்லவா.

 அந்தச் சிறுபொழுதில் நான் வேறொருவன் ஆகியிருப்பேன். அப்படியொரு கல்யாணியை அனேகமாக வீட்டினர் யாரும் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை.  இந்த மனிதர்களையே என் இந்த ஐம்பது வருட எழுத்துக்கள் மூலமாக அடைந்தேன். இந்தச் சிரிப்பு முழுமையும் இப்படி எழுத்தின் மூலமாக அடைந்த மனிதரிடமிருந்து நான் பெற்றதே. நான் இவ்வளவு உரக்கச் சிரிப்பேனா என்பதும். என் முகம் இவ்வளவு மலர மலர விரியும் என்பதும் என் கண்களில் இப்படியொரு சுடர்மிகும் என்பதும் இந்தச் சிரிப்பை,,  இந்த மலர்வை, இந்தச் சுடரை எனக்குத் தந்த அந்த மனிதர்கள்
மட்டுமே அறிவார்கள்.

அந்த 407 அறையும் அப்படித்தான் இருந்தது. அத்தனை பேரும் உரக்கச் சிரித்தார்கள். அத்தனை பேரும் மலர்ந்திருந்தார்கள். அத்தனை கண்களும் சுடர் மிகுத்திருந்தன.  நான்  எல்லோருடனும், எல்லோரின் மத்தியிலும்
இருந்தேன்.  இங்கு என்னுடன் இருப்பது வெறும் பன்னிரண்டு அல்லது
பதிமூன்று பேர்கள் அல்ல. நான் இந்த ஐம்பது வருடங்களிலும்  எழுதிய
கவிதைகளின், கதைகளின் மனிதர் அத்தனை பேரும் என நான் வரித்துக் கொண்ட தருணமாக அது இருந்தது.

அண்ணாச்சி அண்ணாச்சி என எனக்காகச் சிரித்து, எனக்காக அழுதது லிபி அல்ல.  என் மடியில் தலை சாய்த்து, தன் சுருட்டை முடியை அளையவும் தன் தோளைத் தட்டிக்கொடுக்கவுமாக என்னை அனுமதித்து இருந்தது ஆண்டிப்பட்டி முருகன் அல்ல.  சன்னதம் கொண்டவராக, பெரும்பகுதி நேரம் எழுந்து நின்றுகொண்டு, வெளிச்சப்பாடு போல, திருவாளும் காற்சிலம்பும் ஒலிக்க அவ்வப்போது சாமிவந்து உறுமிக் கொண்டும் இருந்த சாம்ராஜை அவ்வப்போது மூர்க்கமான சமருக்கு அழைத்துக் கொண்டிருந்தது இசை அல்ல. இசை பாடிய, ‘முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக’ பாடல் அவர் பாடியதல்ல.  எல்லாமும் எல்லோரும் நான் இந்த ஐம்பது வருடங்களாக எழுதிய வரிகளிலிருந்து வெளிவந்து நடமாடிய நிழல்கள்.

அதிகம் தன்னை முன் வைக்காத, அதிகம் கவனத்தைக் கோரிப் பெறாத
என் உலகத்தின் எளிய மனிதர்கள். அவர்களின் சின்னஞ்சிறு விஷயங்கள்
அறையை நிரப்பியிருந்தார்கள். அந்த அறையை விடவும் நான் மேலும்  முழுமையாக நிரம்பியிருந்தேன். ’அண்ணாச்சி,  உங்களை நாங்கள் முத்தமிடுவதற்கான நியாயங்கள் உண்டு’ என லிபியும் இசையும் இட்ட முத்தங்களும், செய்த தழுவல்களும், கசியவிட்ட கண்ணீரும் அதிர அதிரச்
சிரித்த சிரிப்புகளும் எனக்கு முக்கியமானவை. நான் என் தந்தையின் மடியில் என் இருபதுக்களில் படுத்திருந்ததில்லை.  ஆண்டிபட்டி முருகன் வளரும் நல்ல புகைப்படக்காரன்.  என் மடியில் கிடக்கும் அளவுக்கு என் ஏதோ ஒரு வரி, அல்லது என் ஏதோ ஒரு அசைவு இருந்திருக்க வேண்டும். எவ்வளவு பெரிய விஷயம் இது. எல்லா பெரிய விஷயங்களும் சின்ன விஷயம் ஆவதும் எல்லாச் சின்ன விஷயங்களும் பெரிய விஷயமாவதும் இது போன்ற பொழுதுகளில் தானே.

‘சின்ன விஷயங்களின் கடவுள்’ என்ற தலைப்பு இந்த நிமிடம் ஞாபகம் வருகிறது.  நான் ’சின்ன விஷயங்களின் மனித’னாக  மட்டுமே இருக்க விரும்புகிறேன்.  அப்படியே இருக்கிறேன். மீண்டும் ஒரு முறை சொல்லிப் பார்க்கிறேன்.

’சின்ன விஷயங்களின் மனிதன்’ . நன்றாகத்தான் இருக்கிறது.


%

10 comments:

  1. அருமை.
    கலந்து கொள்ளும் வாய்ப்பைத் தவற விட்டு விட்டேனே என்ற
    வருத்தம் உண்டு

    விழாவும் உங்கள் பேசும் அன்பும் சிறப்பாக அமைந்தமை அறிந்து மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. உங்கள் பார்வையில் நிகழ்ச்சியில் பங்கெடுத்த நிறைவு தந்தற்கு நன்றி சார்:)

    ReplyDelete
  3. சின்ன விஷயங்களில் உலகைப் பார்க்கும் ஒரு பார்வை யாருக்கும் கிடைப்பதில்லை. உங்களுக்கு கிடைச்சிருக்கு சார். மறந்தாலும் நினைவுக்கு வரும் சில நல்ல விஷயங்கள் சிறிதலவிலாது.

    ReplyDelete
  4. நான் அங்கே இருந்திருக்க வேண்டும்.
    (இதுவரை உங்களை நேரில் சந்திக்காத ஒரு உறுத்தலுடன்)

    ReplyDelete
  5. சின்ன விஷயங்களில் மனிதன்! தலைப்பே நன்றாக இருக்கிறது. சின்ன சின்ன விஷயங்களில் தான் மனிதம் வெளிப்படுகிறது என்பதை ஏழாம் தேதி மாலை அமெரிக்கன் கல்லூரி அரங்கில் சச்சிதானந்தம், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி இருவருடனும் அமர்ந்து உங்கச்ல் உரையைக் கேட்டபோது நன்றாகவே புரிந்தது.

    ReplyDelete
  6. எதிலிருந்து தொடங்குவது என்ற 'சமாதி' மனநிலையிலிருந்து விடுபட்டு, பரபரப்பாகிப் போன அவஸ்தைகளுடன் திக்குமுக்காடி.. எஸ் ஏ பி,தமிழ்ச்செல்வன், 'பீகே' எஸ் ஆர் கே போன்ற ஆளுமைகளினால் சமவெளிக்குப் பயணித்து...வில்லிலிருந்து புறப்பட்ட நாணாகி வெற்றிகரமாக இலக்கின் உள்வட்டத்தைத்தொட்ட அனுபவப் பகிர்வு அபாரம் வண்ணதாசன்.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. பேதமற்றவானாய் நெகிழ்ந்து கைகூப்பி தன் நினைவுகளை நன்றிகளை பகிர்ந்து கொண்ட உங்களைச் சிலாகித்து மேகத்திடம் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு சில்லென்ற சிலிர் கணத்தில் மேகமும் நெகிழ்ந்து மழையெனப் பேசத் தொடங்கியது. மழைப் பேச்சில் நனைந்து கொண்டிருக்கிறேன்.

    இலைகள் விரும்பும் பெருமழை நீங்கள்.

    உதிராத ஒற்றை இலையும் கூட.

    நெகிழ் அன்பும் மகிழ் நேசமும். வாழ்தல் இனிது.

    ReplyDelete
  9. அந்த 407 ம் அறையில் இல்லாமல் போனதற்கு மிக வருந்துகிறேன்
    அண்ணாச்சி. ’சின்ன விஷயங்களின் மனிதன்’பகிவிர்க்கு நன்றி அண்ணாச்சி

    ReplyDelete
  10. அறை எண் 407 ளில் கடவுள்

    ReplyDelete