Saturday 28 April 2012

’திரும்பி வர நினைக்கிறவன் தேனருவி பார்க்க முடியுமா?’ என்று எப்போதோ ஒரு கவிதையில் எழுதி இருந்தேன்.
திரும்பி வர நினைக்காமல்தான் இந்தத் தடவை தேனருவிக்குப் புறப்பட்டேன்.
இது இரண்டாம் தடவை. முதல் தடவை போனது என்னுடைய இருபதுகளில். தோற்றுத் தோற்று ஒரு வழியாகப் பட்டம் வாங்கி வேலை கிடைக்காமல் இருந்த சமயத்தில் அது.   வெற்றி நம் ரசனையின் உடைவாட்களை உபயோகமே இல்லாமல், இடுப்புக் கச்சையில் செருகி
வைப்பதுடன் பொறுப்பு முடிந்தது என ஒதுங்கிவிட, அ-வெற்றிகள்தான் தொடர்ந்து இரண்டு பக்கங்களையும் அவ்வப்போது சாணை பிடித்துக் கொண்டே இருக்கின்றன.
என்னைக் கூர்மையாக அப்படி ஏந்திக்கொண்டே, செண்பகா தேவி அருவிக்கும், தேனருவிக்கும்,கிருஷ்ணாபுரத்துக்கும், சுத்தமல்லி மறுகாலுக்கும் கூட்டிப் போக ஒரு எல்.பாலுவோ, முருகவேள் அண்ணனோ, சக்தி கணபதியோ இருந்தார்கள்.
இந்த முறை ரவிசுப்ரமணியனும் மனோஜ் அண்ணாதுரையும் காந்தியும் அதைச் செய்தார்கள். அந்த வெற்றி தோல்வி என்ற சொற்கள் எல்லாம் தன்னுடைய ஆதி அர்த்தங்களை இழந்து, தேனருவிக்குப் போகிற வழியில் பெரிய பாறைகளாகவும் கூழாங்கற்களாகவும் நீரால் கழச்சி விளையாடப் பட்டுக் கிடந்தன.  ஒரு பச்சைப் பிள்ளையை ஒக்கலில் தூக்கிக் கொண்டு போகிற தாயாரைப் போல,  மனோஜும் காந்தியும் என்னை அந்தத் தேனருவியை நோக்கி நகர்த்திகொண்டே இருந்தார்கள்.  நம்மை அறியாமலே ஒரு பெரும் தீயின் திசையில் செலுத்தப்படுவதும் இப்படி ஆர்ப்பரிக்கும் நீரின் ஆனந்த சுதந்திரத்தின் திவலைகள் நம் புறங்கை ரோமங்களில் பாசி கோர்ப்பதும் ஒரு வகையில் ஒன்றுதான்.  ஆன்மீக உணர்வு என்பது அடர்வனங்களில் உண்டாகுமா எனத் தெரியாது எனக்கு. நான் அடர்வனங்களை அறிந்தவன் இல்லை. ஆனால், எங்கெங்கு எல்லாம்
ஒரு படுகை போல வழியெங்கும் சருகுகள் உதிர்ந்து கிடக்கின்றதோ, அங்கெல்லாம், சமீபத்தில் நான், கிட்டத்தட்ட அப்படியொன்றை அடைந்து கொண்டிருக்கிறேன். சருகுகளின் அருகில் எடுக்கப்பட்ட நிழற்படங்களில்
நான் அழகாக இருக்கிறேன். என் சிரிப்பில் பெருமரங்களின் ஆசீர்வதிக்கப் பட்ட பச்சையம் மினுங்குகிறது. \
நான் மற்றுமோர் சருகாக, பழுத்து, பளபளத்து உதிர்ந்து, அடையாளம் காணமுடியாத படி, அடையாளமற்று இந்தச் சருகுகளின் விரிப்பில் புகுந்து விடுவேனோ என மனோஜை விட, காந்திக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
 என்னிடமிருக்கும் ஏதோ ஒரு பைத்தியக்காரத்தனத்தின் இழையை அவன்
முதலிலேயே உணர்ந்தவனாக இருந்ததால் தான், என்னை அவன் தன்னுடைய முழுப் பொறுப்பில் ஏற்றுக் கொண்டிருந்தான்,
‘ஸார். இன்னும் ரெண்டே ரெண்டு இடம்தான். அதைத் தாண்டிட்டோம்னா
அருவிதான்’ -  அப்படிச் சொல்வதன் மூலம் அந்தச் சருகுகளில் இருந்து பெயர்த்து என்னைப் பாறைகளின் வழவழப்புக்கு அழைக்க, ஒரு சிரிப்புடன், அவனால் முடிந்தது.  ஒரு மலை அணில் போல அவன் துறுதுறுவென்று இருந்தான். பாறைகளில் காலகட்டி அவன் தாவுகிற விதத்தில் ஒரு வனத் தனம் இருந்தது.  பயப்படாத, பயம் உண்டாக்காது மற்றவர்களை வழி நடத்துகிற ஒரு வீரம் அவனிடம் சதா ஒளிர்ந்து கொண்டிருக்கப் போய்த்தான், அவனால் எங்களது கண்ணுக்குப் புலப்படாமல், பாறைகள் மேல் எழுதப்பட்டிருக்கும் அறிவிப்புக்களை அவனால் வாசிக்க முடிந்தது. புகைப் படங்களுக்கு அவன் போஸ் கொடுக்கிற விதமும்,  எங்களைப் படம் பிடிக்க, அவன் தேர்ந்தெடுத்துக் கொடுத்த பாறைகளும் அசலானவை.
அவன் பாறைகளின் சினேகிதத்தையும் நீரின் காதலையும் ஏற்கனவே
சம்பாதித்து இருந்தான். அவன் புசித்து எறிந்த கனி, அவன் பல் பதிவுடன்
அருவி நீரில் உருண்டோடிக்கொண்டு இருந்தது எப்போதுமே என எனக்கு
உவப்புடன் கற்பனை செய்துகொள்ள முடிந்தது.
இரண்டாவது இடத்தைத் தாண்டிய நொடியில் அந்தப் பரவசத்தை தூரத்தில் காட்சியாக பார்க்கவும் இசையெனக் கேட்கவும் முடிந்தது,  தேனருவி திரை எழும்பி வானின் வழி ஒழுகிக் கொண்டிருந்தது. செங்கதிரோன் இல்லை, தேர்க் கால் இல்லை, பரிக் கால் இல்லை. நாங்கள் நால்வர் மட்டுமே, நால்வர் மட்டுமே, இன்னும் உரக்க அல்ல, ஓர் மந்திரம் போல் மனதுள்  ஓதுவேன், நாங்கள் நால்வர் மட்டுமே.
எனக்கு நீச்சல் தெரியாது. ஆனால் தேனருவித் தடாகம் என்னையே முதலில் அழைத்தது.  நான் செலுத்தப்பட்டவன் போல நீருண்டு நீரால்
அமைந்த நீராலான கூழாங்கற்களை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். ஒரு குளிர்ந்த கண்ணாடித் தகடு போல, தடாகம் தன் பாதாதி காட்டி மலர்ந்திருந்தது.  தண்ணீருக்குள் ஊடுருவுவது என்பதும் தீயினுள் புகுவதும் முதல் கணத்தில் வேறு வேறில்லை.தீண்டும் இன்பம்தான்
அது.  பாதம், கரண்டை, முழங்கால் என என் உடலே ஒரு தண்டாகி உள்ளிறங்க, வெள்ளத்தனையது மலர் நீட்டம்.
இதே தடாகத்தில் தான் முதன் முதல் என் இருபதுகளில் நீரின்
அழைப்பைக் கேட்டேன்.  தன் ஆழங்களை எனக்குக் காட்டிவிட நினைத்த
அழைப்பு.   என்னை நீரால் நிரப்பி,  ஒரு நீர்ப் பூவென மலர்த்த முயன்ற அழைப்பு.  நான் நீரால் அன்று நிராகரிக்கப் பட்டேன்.  என் நுரையீரல்கள் ஒரு நீர் உயிரிக்கானது அல்ல. நான் தாமரைகளை பார்ப்பதற்கு மட்டும். தாமரையாவதற்கு அல்ல. கூழங்கற்கள் பொறுக்குவதற்கு மட்டும். கூழாங்கற்கள் ஆவதற்கல்ல என்ற நிராகரிப்பு அது என இந்த அறுபத்தைந்தில் புரிகிறது.
என்னைத் தடாகம் நினைவு கூர்வதை என்னால் சில்லென உணரமுடிந்தது. ஒரு கணம் தண்ணீருக்குள் கிடந்த வெவ்வேறு வடிவக் கற்களும் ஒரு வெள்ளை ஒற்றை மலராகி, தடாகம் நிரப்பி, மறு படியும் கற்களாக அமிழ்வதை நான் கண்டுகொண்டிருந்தேன். அந்த நொடியில்
எனக்குத் திறக்கப் பட்ட நீரின் வாயிலை, மனோஜோ, ரவி சுப்ரமணியமோ அறிந்தாரில்லை. காந்தியிடம் அதைப் பூரணமாக உணர்ந்ததற்கான சித்து இருந்தது. அவன் சிரித்துக் கொண்டே சொன்னான், ‘வாங்க ஸார். போலாம்.
நீங்க நல்லாத்தான் நீச்சல் அடிக்கிறீங்க’ - அவனுடைய சிரிப்பில் நீலம் இருந்தது. நீலம் சிந்திச் சிந்தி தடாகம் நீலமாகிக் கொண்டு இருந்தது.
நான்  சின்னச் சங்கரன் கோவிலில் கேட்ட,நீரின் இரண்டாவது அழைப்பும் இதே போல நீல நிறத்தில்தான் இருந்தது.  இரண்டு முறை சுழற்றி இழுத்து அது கரையில் தூக்கி எறிந்த போது. அதை ஏற்கனவே எதிர்பார்த்தது போல தட்டான்கள் தும்பைச் செடிகள் மேல் பறந்துகொண்டிருந்தன.  என்னை எறிந்த நீர் ஒரு வட்டப் பாறை மேல் நீலாபிஷேகம் செய்து மறுபடி ஓடும் நீரினுள் வழிந்தது,
‘என் பின்னாலேயே வாங்க’ என்ற காந்தியின் அழைப்பை நான் திடமாக
மறுத்தேன். மனோஜ் இதற்குள் தேனருவிக்கு நீந்திப் போய்க் குளிக்க ஆரம்பித்திருந்தார். காந்தி எனக்கும் அருவிக்கும் மத்தியில் நீந்தியபடி இருந்தார். எனக்கு நீச்சல் தெரியாததற்காக் முதன் முறையாக வருந்தினேன். நான் அமிழ்ந்திருக்கும் தடாகத்திற்கும் அந்த பேரருவிக்கும் இடையே நூறு அடிகள் தூரம் கூட இராது. கடக்க முடியா பாலையென
அது கண்முன் விரிந்து கிடந்தது. எத்தனை முறை முங்கினாலும் தூரம் குறையவே இல்லை. நாற்பது வருடங்களுக்கு முன் தெரியாத தூரம் எல்லாம் இன்று தெரிகிறது. இடது நாசிக்கும் வலது நாசிக்கும் உள்ள தூரம். பெரு விரலுக்கும் சுட்டு விரலுக்கும் உள்ள தூரம்.
என் முகத்தின் மீது எழுதப்படும் புதிய புதிய சஞ்சலங்களை ரவிக்குப் புரிய முடிந்தது. ‘அண்ணே. உங்களுக்குப் பிடிச்ச தண்டபாணி தேசிகர் பாட்டுப் படிக்கிறேண்ணே’ என்றார். நேற்றிரவு கேட்டுக் கொண்ட சமயம் பாடாத அவர், அந்த நேற்றிரவை இந்தத் தடாகத்துள் புலர விடுகிறார். என்
வலப் பக்கம், இடுப்பளவு நீரில் நின்றபடி, ஒரு பெரும் நெடும் பாறையின் படுதா பின்னிருக்க, பாடுகிறார். கும்பகோணம் , நாகேஸ்வரன் வீதி, செல்வம்
லாட்ஜ் எல்லாம் கரைந்து கரைந்து, அவரே காணாது போய், தேசிகராகி, தேனருவித் தடாகத்தில் நிறைகிறார். தடாகம் அலம்பாமல் அப்படீயே\
உறைந்து தளும்புகிறது. உச்ச இசையில், நொறுங்கிய கண்ணடிக் கோப்பை எனச் சிதறும் ரவியின் முக பாவனைகளிலிருந்து இசை பெருகிப் பெருகி
வழிகிறது.
நான் எனக்கும் அருவிக்கும் இருந்த தூரத்தை மறந்திருந்தேன். எனக்கும்
இசைக்கும் இடையே இருக்கும் தூரம் குறைந்து ஒன்றுமற்றதாகி  விட்டதை நினைத்துக் கொண்டே இருந்தேன். ரவி, தன்னிடமே எதைப் பாடுவது என்று கேட்டு, அவர் அவருக்குச் சொன்னதையே பாட ஆரம்பித்திருந்தார்.
அவர் பாடப் பாடத் தான் அந்தச் செடி அங்கு முளைத்திருக்க வேண்டும். அந்தச் செடி ஒருவேளை தன் நாலைந்து இலைகளுடன் அங்கிருந்தது எனினும், அந்த அற்புத கரு நீலப் பூ அப்போதுதான் ரவியின் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு இதழாகத் தன்னை மலர்த்தி இருக்க வேண்டும்.
நான் எனக்களிக்கப் பட்ட பரிசாக, அந்தக் கரு நீலப் பூவையே பார்த்துக்
கொண்டிருந்தேன். அதன் அருகில் நின்று நிழற்படம் எடுத்துக் கொண்டேன்.
அதை நான் தொடவே இல்லை. 
அது நான் காந்தியிடம் மறுத்த அந்த மூன்றாவது அழைப்பின் நீலம் என்பதை நான் அறிவேன்.



5 comments:

  1. தேரடி வீதிகளை மட்டும் அல்ல
    தேன் அருவியையும், தென்காசியையும்
    கூட வாசகரின் கண் முன்னால் கொண்டு வரும்
    வல்லமை படித்தவர் சார் நீங்கள்

    ReplyDelete
  2. படைத்தவர் & படித்தவர்

    ReplyDelete
  3. அருவியின் சகல சூக்குமங்களையும் சருகுகளின் அந்தரங்கங்களையும் பொதிந்து சுரக்கும் சுனையாக வண்ணதாசன் எழுத்துக்கள்!

    ReplyDelete
  4. எப்பவும் போல் அருமை சார்.:)

    ReplyDelete

  5. வாசித்ததும் எனக்கு தோன்றிய ஒரே வருத்தம்
    தேனருவி, அங்கு இருந்த தடாகம், சருகு, கூழாங்கற்கள்,கருநீலப்பூ இவற்றிற்கெல்லாம்
    நீங்கள் எழுதி இருப்பதை மொழி பெயர்த்து சொல்ல முடியாதே என...!
    எனினும்... கொடுத்து வைத்தவை...!
    உயரப் பறக்க வைக்கிறது, உங்களது எழுத்துகள் ஒவ்வொரு முறையும்... நன்றி!

    ReplyDelete