Tuesday 24 April 2012

சரியான இடத்தை அவன் தேர்ந்தெடுத்திருந்தான்.
அந்த புங்கை மர மூட்டில் இளநீர்க் குலைகளையும்
நுங்குக் குலைகளையும் போட்டுவிடலாம். சைக்கிளை,
கொஞ்சம் ‘ஒஞ்சரிச்ச கதவு’ மாதிரி நிறுத்தினால்
போயிற்று. சைக்கிள் கேரியரில்தான் பதநிப் பானை.
அதைச் சுற்றி செருகின பச்சை ஓலை.
நான் பதநீர் குடிக்கிறதே அந்த பச்சை ஓலை வாசனைக்கும்
சேர்த்துதான். அல்லது அதற்காகத்தான். கரையிலிருந்து
படகைக் கடலுக்குள் தள்ளி உள்ளே குதித்து ஏறுகிற
நேரத்தின் துல்லியமான அழகுக்குக் கொஞ்சமும் குறைந்தது
இல்லை, பச்சைப் பனை ஒலையில் ஒரு பட்டை பிடிப்பது.
லேசாக ஒரு மடக்கு. ஓரத்துக் கீற்று ஒன்றைக்கிழித்து
நுனியில் ஒரு செருகு முடிச்சு. ஒரு ஊதல் ஊதினால்,பனஞ்
சோறு பஞ்சுபோல ஒட்டிக்கிடந்தது தூரப் போகும். இதற்குள்
பட்டை நம் கைக்கு வந்திருக்கும்.  ‘ஒரு செம்பு எவ்வளவு டே”
என்று கேட்போம். ’உங்க கிட்ட துட்டு யாரு கேட்டா?’
என்ற சிரிப்போடு, ‘வலது கையை லேசா உசத்திப் பிடிங்க. சிந்தப்
போது’ என எச்சரிக்கை வரும்., பட்டையின் பச்சைக்குள்
வரி வரியாக ஏறுகிற பதநியின் மட்டத்திற்கு நம் முகம் குனியும்
போது அவன் நுங்கு சீவ அருவாளை எடுத்திருப்பான்.
இரண்டு வருஷத்திற்கு முன், இதே போல ஒரு வேன காலத்தில்
அவனைப் பார்க்கும் போது இதை விடச் சின்னப் பையனாக இருந்தான்.
பூனை முடி மீசை இப்போதைய அளவுக்குக்  கருத்துவிடவில்லை. என்னவோ வாசித்துக் கொண்டிருந்தான்.  பக்கத்தில் போய்ப் பார்த்தால், மடியில் தடியாக ராப்பிடெக்‌ஸ் புத்தகம். ஆங்கிலம் பேசுவது எப்படி? பத்தாம் கிளாஸ் படித்த கையோடு பத நீர் வியாபாரத்திற்கு வந்திருந்தான்.
சொந்தப் பனை. அப்பா இறக்கித் தர, இவன் விற்பனைக்கு.
இன்றைக்குக் காலையும் அவனைப் பார்த்தேன்.
அப்போதுதான் நுங்குக் குலைகளை ‘பனைச் செல்வம்’ மினி லாரியில்
இருந்து எடுத்து வெளியே போட்டுக்கொண்டு இருந்தான்.  என்னை பார்த்தவுடன் சிரித்தான். ‘என்ன ஸார், இந்தப் பக்கம் ஆளையே காணும். ரயில்வே கேட் ரத்னம் அண்ணன்கிட்டேயா இப்ப?’ என்று கேட்கும் போதும்
சிரிப்புத்தான். தினத்தந்தி, தினகரன் இரண்டு பேப்பர் கிடந்தன. இரண்டு
செல் போன் அடுத்தடுத்து.  ‘ ஏ. என்னடே. எல்லாம் ரெட்ட ரெட்டையா இருக்கு?’ என்று கேட்கிறேன். அவன் சிரிப்பில் பாதி எனக்கு வந்திருந்தது.
‘ஆமா. கம்பேனி பெருசாயிட்டுல்லா’ என்று முகம் பூராவும் மலர்ந்து
சொல்கிறான்.
பனை செல்வம் அவனுடைய சொந்த வண்டிதானாம். அவனே தான்
ஊரில் இருந்து எல்லாவற்றையும் ‘ஏத்தின’ பிறகு ஓட்டிக் கொண்டு
வந்தானாம். ‘எல்லாம் இன்னும் அஞ்சு வருசப் பாடு, அப்புறம் அவ்வளவுதான்” என்கிறான். சிரிப்பு இப்போது வேறு மாதிரி ஆகியிருந்தது.
சின்னப் பையன் என்று நினைத்துக் கொண்டிருந்த முகத்தில் இப்போது
வேறொரு ஜாடை வந்திருந்தது.
‘அய்யா காலம் வரைக்குந்தான் இது’ - அவன் முன்பை விடவும் என்
கண்களைப் பார்த்துப் பேச ஆரம்பித்திருந்தான். ‘வர வர, குடி ஜாஸ்தியாப்
போச்சு. இந்த ரேட் ல போனா, அதிக நாள் செல்லாது’ -  அம்பு எய்தது மாதிரி என் முகத்தில் குத்தி எனக்கு அப்புறம் பாய்ந்து கொண்டிருந்தது
அவனுடைய ஒவ்வொரு சொல்லும்.  ‘அப்புறம், இந்த மாதிரி மினிலாரி,
டெம்போ எதாவது ஓட்டிக்கிட்டு அலைய வேண்டியது தான். என்ன
சொல்லுதிய?” என்று என்னிடமே கேட்டான்.
நான் என்னத்தைச் சொல்ல?
வேரோடு பிடுங்கி எடுத்த செவக்காட்டுப் பனங்கிழங்கை கட்டுக் கட்டாக்
வைத்துக் கொண்டு,உழவர் சந்தைப் பக்கம் உட்கார்ந்து, போவோர் வருவோரிடம், ‘கட்டு நுப்பது ரூவா தான், வாங்கிக்கிட்டுப் போங்கையா’
எனக் கெஞ்சிக் கொண்டிருந்த வயசாளி முகம் ஞாபகம் வந்தது.
‘உனக்கு தாத்தா யாரும் இருக்காங்களோ டே?’ என்று மட்டும் சம்பந்தமே
இல்லாமல் கேட்டேன்.


4 comments:

  1. arputham , ithai vaasikum poluthu pathanee vaasam kidaithathu.

    ReplyDelete
  2. உங்கள் வரிகளைப் படித்ததும்
    குறுக்குது துறை ரோடும்
    அருணகிரி திரை அரங்கமும்
    குறுக்குத் துறை சாலை குடி தண்ணீர் தொட்டியும்


    ஞாபகம் வந்து விட்டது சார்.இப்போதே கணினியை அணைத்து விட்டு நெல்லை செல்லும் பேருந்தில் ஏறி அமர வேண்டும் என்ற எண்ணம்

    ReplyDelete
  3. நெல்லை ஜங்க்ஷன் ரயில் நிலையம் முன்பு பிப்ரவரி 4 அன்று சைக்கிள்கேரியரில் கட்டியிருந்த பச்சைப்பட்டையில் ஆசை ஆசையாய் பருகிய பதநிப் பிசுக்குகள் இன்னும் நாவுக்குள் ஒட்டியிருக்கிறதா என்று நினைக்க வைத்தது!...இரா குமரகுருபரன், சென்னை

    ReplyDelete
  4. சுவாரசியமான கதை!

    ReplyDelete