இப்போது இருக்கும் இந்த வீட்டில் மட்டும் அல்ல, எங்களுடைய பூர்வீக சுடலைமாடன் கோவில் தெரு வீட்டிலும் ஒரு மா மரமோ, தென்னை மரமோ, நெல்லி மரமோ, சப்போட்டா, கொய்யா எதுவுமே கிடையாது.
நான்கு பங்காளிகளுக்கும் பாகப் பிரிவினை செய்வதற்கு முந்திய காலத்தில் இருந்தே , இந்தக் கதை தான். இத்தனைக்கும் இவ்வளவு சொத்தையும் பாடு பட்டுச் சம்பாதித்த மூத்த சிவசங்கரன் பிள்ளைக்குக் கிட்டத்தட்ட, கருவ நல்லூர் கிராமத்தில் முக்கால் வாசி நிலம் இருந்தது. நஞ்சை, புஞ்சை, ஏகப்பட்ட பனைகள். நான் சின்னப் பையனாக இருக்கும் போது, லாரிகளில் இருந்து மூடை மூடையாக நெல்லை மச்சுக்கு ஏற்றியிருக்கிறார்கள். குடம் குடமாகப் பதினியும், கூப்பதினியும் வரும். தோசைக்குக் கூப்பதினி விட்டுத் தொட்டுச் சாப்பிட்ட கடைசிப் பரம்பரை எங்களோடு முடிந்து போயிற்று. வெட்டித் தின்பார் இல்லாமல் குலை குலையாய் நுங்கு கிடக்கும். நுங்குவண்டி தள்ளி விளையாடின காலம் எல்லாம் வெறும் கதை இப்போது. தவண், பனங்
கிழங்கு எல்லாவற்றையும் விளையாட வருகிற பிள்ளைகள் எல்லோருக்கும்
கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுத்தது உண்டு.
பனை ஓலை மட்டையோடு வண்டி வண்டியாக வந்து இறங்கும். பச்சை ஓலை, நல்ல அகலமான கருக்கோடு இருக்கிற பச்சை மட்டை. ‘பயிர் வைக்கிறவர்கள்’ யாராவது அதற்கென்று வந்து ஓலை வேறு மட்டை வேறு தனியாகத் தறித்துப் போடுவார்கள். பச்சை மட்டையில், அப்படிச் சாய்வாக அரிவாள் சவுக்கென்று இறங்கி, முக்கால் வாசி வெட்டியிருப்பதைப் பிடுங்கி மறுபடி வெட்டிப் போடுவார்கள். சில சமயம் சின்ன ஓலை என்றால், இடது கையில் தூக்கிப் பிடித்து, ஒரே போடாகப் போட்டால், ஓலை ஒரு பக்கம் மட்டை ஒருபக்கம் துண்டாக விழும்.
மிளகாயப் பழத்தை எல்லாம் தட்டோட்டியில் பரத்திக் காயப் போடுவோம். அதற்குக் காவல் இருக்கும் போதுதான் ஏழெட்டு வீடுகளுக்கு அந்தப் புறம் இருந்த சாவடிப் பிள்ளை வீட்டுப் புறாக்கள் எங்கள் வீட்டில் வந்து இறங்குவதைப் பார்த்தேன். அதன் பின் என் மேல் அமர்ந்த சாம்பல் புறாக்கள் என்னைவிட்டு அகலவே இல்லை.
மிளகு செடி மாரும், பருத்தி மாரும், எள்ளு மாரும் அந்தந்தப் பருவத்தில் தோட்டத்தில் அடைந்துவைத்திருப்பார்கள். அதிலிருந்து சூவைப் பாம்பு வெளியே வந்திருக்கிறது. எங்களுடையது தோட்டத்தை ஒட்டிய வீடு. எங்கள் வீட்டுப் பட்டாசல் விளக்கு மாடத்தில் கன்னங்கரேர் என்று ஒரு பாம்பு சுருண்டு படுத்துக் கிடந்தது உண்டு. அது அப்படி வந்ததாகத் தான் இருக்கும். எள் விளைச்சல் நன்றாக இருந்தால், மாடசாமியோடு எண்ணெய் ஆட்டச் செக்கடிக்குப் போயிருக்கிறேன். எண்ணெய் ஆட்டி முடிக்கிற சமயத்தில் செக்கில் சதசத என்று அப்பியிருக்கிற ஈரப் பிண்ணாக்கின் ருசி, அதை ஒரு துண்டுக் கருப்பட்டியோடு சாப்பிட்டுப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். செக்குச் சுத்தும் போது, ஞீ.. ஞீஈ.. என்று செக்குப் பாடின பாட்டு இன்னும் மறக்கவே இல்லை
நெல், கேப்பை, காணம், எள், பருத்தி, பிரண்டை என்று எல்லா அருமையும் தெரிந்த , விவசாயத்தை அப்படிப் பார்த்த பெரியதாத்தாவுக்குத் தன்னுடைய அவ்வளவு பெரிய வீட்டில் ஏன் இரண்டு தென்னையையோ, மா மரத்தையோ, அல்லது வீட்டு உபயோகத்திற்கு இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளைக்குக் காய்க்கும் ஒரு ‘பயன் மர’த்தையோ வைத்து வளர்க்க வேண்டும் என்று தோன்றவில்லை? அது இன்னும் ஒரு அதிசயமான கேள்விதான் எனக்கு.
தோட்டத்தில் ஒரேஒரு மிகப் பெரிய வேப்ப மரம் இருந்தது. இந்த உலகத்தில் உள்ள அத்தனை பறவைகளும் வந்து அடைந்த மரம் அது. நான் இன்று ஒரு கிறுக்கனைப் போல் உதிர் இறகு பொறுக்கித் திரியும் பழக்கத்தின் வேரை அந்த வேப்ப மரமே விட்டிருந்தது. எவ்வளவு அழகழகான, புள்ளிகள் இட்ட, பெரிய பெரிய இறகுகளை எல்லாம் அந்த வேப்ப மரத்தடியிலும் அதன் கீழிருந்த வைக்கோல் போரிலிருந்தும் நான் சேகரித்திருக்கிறேன். அடர் பச்சை நிறத்தில் முட்டைகள் இருக்க முடியும் என்பதை ஏழு எட்டு வயதில் ஒரு பறவைக் கூட்டிலிருந்து அறியத் தந்த கிளையை அந்த வேப்ப மரமே வைத்திருந்தது.
அந்த வைக்கோல் படப்பு, வேப்ப மரம், இன்னொரு வாதமுடக்கி மரம் மூன்றும் இல்லாவிட்டால் நான் இத்தனை சரியான மனிதனாக வளர்ந்திருக்கவே வாய்ப்பில்லை. இதை ஒரு சத்தியப் பிரமாணமாகவே நான் எழுதிவைக்கலாம்.
வீட்டில் இருக்கிறவர்கள் உபயோகிக்கும் படி இரண்டே இரண்டு முருங்கை மரங்கள் மட்டும் இருந்தன. ஒன்று இந்த வைக்கோல் படப்புக்குப் பின்னால், கக்கூஸிற்குப் போகிற வழிக்கு முன்னால். இன்னொன்று புறவாசலில் இருந்த பெரிய உரக் குழிக்குப் பக்கத்தில். அந்த முருங்கைப் பூக்களும் கருவண்டுகளும் அணில் கொறிப்புகளும் இன்னொரு தனிக் கண்காட்சி வைப்பதற்குரிய சித்திரங்கள்.
எதைச் சொல்லவோ வந்து, எதை எதையோ சம்பந்தத்தோடும் சம்பந்தம் இல்லாமலும் சொல்லிக்கொண்டு இருந்திருக்கிறேன். இந்த வரியைக் கூடப் பழக்கத்தில் எழுதிவிட்டேனே தவிர, இந்த வாழ்வில் சம்பந்தம் இல்லாதது என அப்படி ஒன்று உண்டா என்ன? எல்லாவற்றோடும், எல்லோரோடும் ஒரு சம்பந்தத்தை இந்த வாழ்வு உண்டாக்கித்தான் வைக்கிறது. வாழ்வின் காரியமே நோக்கமே கூட அதுதான்.
எனக்கும் அந்த மயிலாடுதுறை மருதசாமிக்கும் என்ன சம்பந்தம்? ஆனால் சம்பந்தம் உடையவராகவே நாங்கள் இருந்திருக்கிறோம். இப்போது அல்ல, மீரா அன்னம் பதிப்பகத்தின் நவகவிதை வரிசையில் என்னுடைய ‘புலரி’ தொகுப்பை வெளியிட்ட காலத்தில் இருந்தே அது தொடங்கியிருக்கிறது. அதன் இரண்டாவது பதிப்பை வெளியிடலாம் என, சந்தியா பதிப்பகம் நடராஜன் சார் தேட, என்னிடம் இல்லாத ‘புலரி’ முதல் பதிப்பின் பிரதியை ,மயிலாடுதுறை மருதசாமி அனுப்பிவைக்கிறார். 1981-82ல் பார்த்திருக்க வேண்டிய நபரை, 2019 வரை காத்திருந்து பார்க்கவைக்கிறது வாழ்வு. ஆ.சிவசுப்ரமணியம் ஐயாவுக்கும் எனக்கும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் அளிக்கிற நாளில் மருதசாமியின் கனிந்த சிரிப்பையும் உறுதியான கைகளையும் நான் முதன் முதலாக அறிகிறேன்.
அந்த தினத்தில் இருந்து நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். சந்தியா நடராஜன், அக்கலூர் ரவி, மருத சாமி எல்லோரும் மயிலாடுதுறைக் காரர்கள். என்னை எப்படியோ நடுவில் வைத்துக்கொண்டார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் பேச்சில் வந்துவிடுகிறோம். இதில் மருதசாமி தினம் தோறும் ‘காலை வணக்கம்’ சொல்கிற செய்திகளை, படங்களைப் பகிர்ந்துகொள்கிறவரானார். நான் என் அதிகாலை உற்சாகங்களுக்கு உகந்த படி, அவர் அனுப்பிய காலை வணக்கப் படங்கள் சார்ந்து அவ்வப் போது மரபில் கவிதைகள் எழுதி அனுப்பி வருகிறதாகிவிட்டது. நண்பர் மருதசாமிக்கு நான் வண்ணதாசன் இல்லை. கல்யாண்ஜி இல்லை. ‘கவிஞர் ஐயா’.
மருதசாமிதான் பத்து தினங்களுக்கு முன் அந்த -- மேலே பதிவிட்டிருக்கும் - பூத்திருக்கும் மாமரத்தின் படத்தை அனுப்பியிருந்தார். அது அவருடைய மயிலாடு துறை வீட்டில் இருக்கிற மா மரம். பார்த்தால் ரொம்ப வருடங்களாக நின்று பூத்துக் காய்த்தபடி நிற்கிற ஒன்றுதான்.புதிதாக ஒரு வீட்டுக்குப் போகும் சமயம், நம் வருகையை எதிர்பாராமல் உட்கார்ந்திருக்கும் அந்த வீட்டு மூத்த மனுஷியைச் சந்திப்பது போல அது இருக்கிறது.
இந்த முறைதான் அது ‘மேல் கிளைகளில்’ இவ்வளவு பூத்திருக்கிறதாம். இதற்கு முன் அந்த மரம் அதன் மேல் கிளைகளில் இப்படிப் பூத்ததே இல்லையாம். மருதசாமி அதை அப்படியே படம் எடுத்து, ‘கவிஞர் ஐயா, எங்கள் வீட்டு மாமரம் அப்படிப் பூத்திருக்கிறது. இதுவரைக்கும் இப்படி அது மேல் கிளைகளில் இவ்வளவு பூத்ததே இல்லை. சந்தோஷமாக இருக்கிறேன்’ என்று வாட்ஸாப் செய்தியாக அனுப்பிவைத்திருந்தார்.
என்னிடம் இது வரைக்கும் அப்படி யாரும், ‘எங்களுடைய வீட்டுச் செடி பூத்திருக்கிறது, எங்களுடைய வீட்டு மரம் காய்த்திருக்கிறது, எங்கள் வீட்டுப் பசு ஈன்றிருக்கிறது’ என்று வாய் வார்த்தையாகக் கூடச் சொன்னதில்லை. இதை மருதசாமி மட்டுமே சொன்னார். அது ஒரு விவசாயியின் மனமாக இருக்கலாம். ஒரு தஞ்சாவூர்க் காரனின் மனமாக இருக்கலாம்.
எனக்கு அதை எல்லாம் விட இப்படித் தோன்றுகிறது. அது அப்பழுக்கில்லாத, தன் வாழ்வைத் தானே கண்டடைந்து கொண்டாடும் ஒரு மனுஷனின் மனம்.
நிச்சயம் அந்த மாங்கன்று மருதசாமியால் தான் நடப்பட்டிருக்கவேண்டும். அதற்கு அவர்தான் தண்ணீர் ஊற்றி வளர்த்திருக்க வேண்டும். அவருடைய மகளையோ மகனையோ, ஒரு செம்புத் தண்ணீரைக் கோதிக் கொடுத்து அந்தச் செடியின் மூட்டில் ஊற்றச் சொல்லியிருக்க வேண்டும்.ஒரு அணிலும் அவரும் சேர்ந்துதான் அதன் அடிக்கிளையில் காய்த்த மாம்பழத்தை முதலில் கடித்திருக்க வேண்டும்.
நல்லது மருதசாமி. உங்கள்வீட்டு மா மரம் இந்த வருஷம் மேல்கிளையில்
பூத்திருக்கிறது. நீங்கள் எப்போதும் எல்லா வருஷமும் உங்கள் அடிக்கிளையில் பூத்துக்கொண்டே இருக்கிறீர்கள். இந்தப் படத்தை நீங்கள் உங்கள் கை பேசியில் எடுத்த போது, உங்களையும் நீங்கள் ஒரு ‘செல்ஃபி’ எடுத்திருக்கவேண்டும்.
நீங்களும் அந்த மா மரம் போல்தான் இருந்திருப்பீர்கள். ஒரு வித்தியாசமும் இருந்திருக்காது.
No comments:
Post a Comment