எழுபதுகளில் வாங்கிய தூரிகைகளின் முடி அனைத்தும் உதிர்ந்துவிட்டன. இருப்பது அரக்கு நிறப் பிடி குச்சிகள் மட்டுமே.
பரமனின் க்ராஜுவேட் காஃபி பார் முகப்புச் சுவரொட்டிச் சித்திரங்களை நான் வரைந்து கொண்டிருந்த ஒரு செப்டம்பர் இரவில் தான் நிறை சூலியாக இருந்த என் மனைவியின் தந்தையார் இறந்த செய்தியைச் சொன்னார்கள்.
நாங்கள் ஒருபோதும் வாங்கிஅறியாத, ரோஜாப்பூக்களிட்ட மூடியுள்ள பிஸ்கட் டப்பாவில் தான் நாற்பது வருடங்களாக என் தீர்ந்தும் தீராத போஸ்ட்டர் கலர் குப்பிகள் இன்னும் உலர்ந்தும் உயிருடன் இருக்கின்றன.
ஒவ்வொரு சரஸ்வதி பூஜை தோறும் அந்த டப்பாக் குப்பியில் இருந்துதான் அம்மனின் முகத்துக்குச் செம்பொட்டு இடுகிறேன். கூந்தலும் புருவமும் விழிகளும் வரைகிறேன்.
கணபதி அண்ணன் காட்டிக் கொடுத்த இந்தியன் இங்க் கருப்பு உலகம் காணாமல் போய்விட்டது. வாழ்க்கையைப் போல திட்டமிட்ட திருட்டு இருக்க முடியாது. ப்ளாஸ்ட்டிக் பிடியுள்ள இந்தியன் இங்க் நிப்புகள் ஒன்று கூட இல்லாமல் களவு போய்விட்டன.
சாம்ராஜின் நண்பர் சீனு வாங்கிக் கொடுத்த மிக உயர்ந்த வண்ணப் பசைகள் அடுக்குக் குலையாமல் அப்படியே உள்ளது என் மீதான அவருடைய மரியாதைக்கு நான் செய்த துரோகம் அது.
ஓவியர் வள்ளி ஒரு விஜய தசமி நாளில் வித்யாப்பியாசம் செய்து வைத்த தைல வண்ணமும் கலவை எண்ணெயும் இன்னும் புத்தக வரிசையின் பின்னால் இருக்கின்றன, கல் நாகங்கள் சீறுவது போல வண்ணமும் எண்ணெயும் கலந்த வாசனை அகலமாகப் பத்தி விரிப்புடன்.
தேவதேவன் எண்பத்தொன்பதில் கொடுத்த சார்க்கோல் துண்டின் துணுக்கை இன்னும் வைத்திருக்கிறேன். அதைக் கொண்டு வரைந்த , தாடிக் கிழவனின் பக்க வாட்டு முகத்தை, ஆயன் கூட,’ப்ரும்மாதம்’ என்றார். எல்லாக் கிழவரும் ‘ப்ரும்மாதம்’ தான். தொல் ஆலமரம் எல்லாம் தெய்வம்.
கே.மாதவனில் இருந்து ட்ராட்ஸ்கி மருது வரை அனைவரின் உடனும் நான் போய்க்கொண்டு இருக்கிறேன். தேனுகாவும், சி.மோகனும் விவரிக்கும் ஓவியங்களை ரொட்டி கிடைக்காத பசித்தவனின் ரொட்டியாக தூரத்தில் இருந்து பிட்டுத் தின்கிறேன்.
ஓவியத்தில் அயல், சுதேசி,கீழை, மேலை வகைமை கிடையாது , ஓவியம் மட்டுமே உண்டு என்பதை ஒரு கெட்டுப் போன முட்டையின் மஞ்சள் கருவில் நெளியும் சிவந்த இழை எனக்குச் சொல்லியிருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன் வரையத் தோன்றியது. காமம் ஒத்த விம்மும் தவிப்பில், திரும்பத் திரும்ப, கித்தான் அற்ற ஒரு சித்திரம் அழைத்தது. அது ஒரு அழைப்பு. கேட்ட பின், இருப்புக் கொள்ளாத ரகசியக் குரல் அதற்கு.
வீட்டில் இல்லாமல் வெளியூரில் இருப்பதால், பேத்தியின் அலமாரிக் கதவுகளைத் திறந்தேன். பாடங்களுக்கு வெளியே அவள் வரைகின்ற அக்ரிலிக் ஓவியங்களை எனக்குப் பிடிக்கும்.
நான் என் மேஜையை, அலமாரியை என்னைப் போலவே கலைந்து கிடக்க வைத்திருப்பவன். திறந்த அலமாரி ஒரு கீ போர்ட் போல், கேட்கப்படாத இசைமையுடன் , வரிசையில் இருந்தன. சிறிய தேடலைத் தாண்டி அப்புறம் செல்ல என் ஒழுங்கின்மையின் தயக்கம்..
அக்ரிலிக் குப்பிகள் கிடைக்கவில்லை. பூ ஜாடி போன்ற உருளைக் கிண்ணத்தில் ஒரு ஒற்றை வெள்ளை இறகு இருந்தது. சென்ற அல்லது முந்திய கோடை விடுமுறையில் ஊருக்கு வந்த சமயம் நான் அவளுக்குக் கொடுத்தது.
அதையும் நான் தொடவே இல்லை. கதவை மூடிவிட்டு வந்து, இதோ இதைத் தட்டச்சு செய்கிற முயற்சி. நீண்ட வருடங்களின் தொகுப்பான காலத்தின் மூச்சை சிறிய இழைகளாய் விடுவதில் திணறுகிறது.
தட்டச்சு செய்வதை நிறுத்திவிட்டு இரண்டு முன் கைகளையும் மடிக்கணினி மேல் படரவிடுகிறேன். குளிர்ப் பிரதேசத்துப் பாம்புத்தோல் சுருக்கங்களுடன் என் முன் அவை நீண்டிருக்கின்றன.
உற்றுப் பார்க்கையில் தெரிய முடிகிற நுட்பமான நடுக்கத்தில், என்னுடைய வலது கை விரல்கள் எதையோ வரைந்துகொண்டு இருப்பதாகவே எனக்கு நிச்சயப்படுகிறது.
என்ன அப்படி வரைகிறதென்று நீங்கள் தான் பார்த்துச் சொல்ல வேண்டும்.
அருமையான... வசீகரிக்கும் எழுத்து ஐயா...
ReplyDelete