Saturday, 7 March 2015

வாசனை நிரம்பிய தினம்.




இந்த தினம் அவருடன் துவங்கியது. இந்த தினத்தை அவரே துவங்கிவைத்தார்.

கல்வெட்டாங்குழிப் பக்கம் அதிகாலையில் இப்படி ஒருவரை இதுவரை பார்க்க வாய்த்தது இல்லை. பொதுவாக, இந்த ஊரில் தங்கிக் கட்டிடவேலை பார்க்கிறவர்கள் ‘ கால் கழுவ ‘ கல்வெட்டாங்குழித் தண்ணீருக்குள் இறங்குவார்கள்.

அப்போதுதான் உதிர்ந்த ஒரு சிவப்பு வாதாம் இலையின் பளபளப்புடன் காவி உடையில் அவர் இருந்தார். இப்படி நெஞ்சுக்குக் கீழே இறங்குகிற வெள்ளைத் தாடியுடன் யாரைப் பார்த்தாலும் எனக்கு மேலக்கோபுர வாசலில் ஐம்பது வருடங்களுக்கு முன்பு உட்கார்ந்திருந்த அமாவாசைச் சாமியார் ஞாபகம், அதுவும் ‘சேவல் கொடி மார்க்’ சோப் வாசனையுடன் வந்துவிடும். ஜெயகாந்தனின் ஓங்கூர் சாமியார், விசிறிச் சாமியார், வேதாத்ரி மகரிஷி யாரைப் பார்த்தாலும் அமாவாசைச் சாமியார்தான்  எனக்கு. ஒருத்தரைப் பார்தால் எல்லோர் மாதிரியே இருப்பதும், எல்லோராகவும் ஒருவரே ஆகிவிடுவதுதானே சாமிய நிலை. எல்லோராகவும் இருப்பது என்பது, யாரோ ஒருவராக மட்டும் இருப்பதைத் துறப்பதுவே அல்லவா.

மடியில் ஒரு வெண்கல சேகண்டி இருந்தது. அதை மீட்டும் குச்சியும். ஒரு பெரிய வெண் சங்கு மடியில். கல் சுவர் ஒன்றில் ஒரு கால் மடித்து முதுகுத் தண்டு கோணாமல் உட்கார்ந்திருந்தார். அமர்வதற்கான ஆதாரம் எதுவும் இன்றி, ஒரு அந்தரமான பீடத்தில் இருப்பதான தோற்றம் அது. அவர் என்னைப் பார்க்கவில்லை. மேய்ந்துகொண்டிருந்த புறாக்களைப் பார்க்கவில்லை. எதையும் பார்க்கவில்லை. அல்லது அவர் என்னைப் பார்த்தார். புறாக்களைப் பார்த்தார். எல்லாவற்றையும் பார்த்தார்.

அவரைத் தாண்டிப் போனேன். எனக்கென்னவோ, இப்போது அவரைத் திரும்பிப் பார்த்தால் அவர் காணாமல் போயிருப்பார்  என்று தோன்றியது. திரும்பிப் பார்த்தேன். மெய்யாகவே அவர் காணாமல் போயிருந்தார். கண்டவர்கள் காணாமல் போகிறார்கள். தோன்றியவர் மறைந்துவிடுகிறார்கள். அடைந்தவர்கள் தொலைந்துவிடுகிறார்கள். அவர் தொலைந்து, மறைந்து, காணாமல் போயிருந்தார். அவரைப் பார்த்த காட்சி மட்டும், வழியில் கிடக்கும் ஒரு வாதாம் பழம் போல, என் பாதையில் கடிபட்டுக் கிடந்தது.

நான் யுவன் சந்திரசேகரின் சமீபத்திய ‘மர்மக்கதை’யில் வருகிற சடையனை நினைத்துக் கொண்டேன். தானகவே, உதிர்ந்த மலர் காம்பில் ஒட்டுவதாக, சடையனின் நினைவு அந்தப் புள்ளியில் குவிந்தது. ஒரு குமிழி திரள்வது போல, ஒரு மொக்கு மலர்வது போல சடையன் தன் மூன்றடித் தோற்றத்துடன் மிதந்து கொண்டிருந்தான். அந்தச் சாமியார் கூட, சடையன் தான் என்று  தோன்றியது.

கர்நூலில் இருந்து கரட்டுப்பட்டிக்கு வரமுடிகிற சடையனுக்கு, இந்தப் பெருமாள்புரம் சிதம்பரம் நகருக்கு வருவது பெரிய விஷயமா? மூணே முக்கால் நாழிகை கூட ஆகாது. சடையன் தான் அது. சடையனே தான். சடையனே வந்திருக்கிறான். வானத்து அமரன் வந்தான் காண். வந்தது போல் போனான் காண்.

இப்படிச் சித்தம் போக்கில், ‘காடாக, செடியாக’ ஒரு ஐம்பது நிமிடங்கள் எங்கெங்கோ திரிந்துவிட்டு, வேர்க்க , அக்காக் குருவி கத்த, விறுவிறுத்து நடக்கிறேன். வழியில் யானை மணி. தை மாதக் கரும்பு இரண்டை மாசி மாதக் கடைசியில் யார் வீட்டிலோ நீட்டுகிறார்கள். யானை தும்பிக்கை சுருட்டிக் கரும்பை ஏந்தி, கரும்பாளம் போலத் தன் உடலை எதிர் வீட்டுக்குத் திருப்புகையில், மறுபடி மணி அடித்து, ஒலி சிதறி, தெரு மறைந்து, வனம் ஆகி, திக்குத் தொலைகிறது.

நான் நெடுஞ்சாலைக்கு வந்துவிட்டேன். யானையைத் தூரத்தில் விட்டுவிட்டு மணிச் சத்தம் நான்கு கால்களில் என்னைத் துரத்துகிறது. நான் பிடிபடாமல் தப்பித்துச் செல்கிறேன்.  என் தப்பித்தலின் கயிற்றுத் தொங்கலில் இட வல மணிகளின் கிண்கிணார்.

எதிரே மகளிர் கல்லூரிப் பக்கம், களக்காட்டு மலையில் தீ எரிவது போல, ஒரு காவி நிற விசிறல். மலை மறைந்து, தீ நிறைந்து, எனக்கு முன்னிருக்கிற தூரத்தைக் கைச் சொடுக்கில் அப்புறப் படுத்திவிட்டு, அவர் வேக வேகமாக வருகிறார். இப்போது காவி வேட்டியைத் துண்டு போல இரட்டைத் தட்டாக மடித்து, முழங்காலுக்கு மேல் கட்டியிருக்கிறார். ஒரு நீர்ப்பறவை போல நீண்ட மெல்லிய கால்கள். அவரிடமிருந்து உலர்ந்து வரும் ஈரத்தில் காற்று குளிர்கிறது. இடது கை இடுக்கில் பாம்பு வழவழப்புடன் ஒரு நீண்ட கோல். மடங்கின இடது முழங்கையில் சேகண்டித் தொங்கல். சேகண்டி வட்டத்தின் மையப் பளபளப்பு, நெற்றிக்கண் போல இமை திறந்து என்னைப் பார்த்துவிட்டு, இமை மூடிக் கொள்கிறது.

சங்கு எங்கே என்று தேடுகிறேன். மடியில் ஒரு பனிப்பந்து போல பெரிய வடிவில் அப்போது கிடந்த அந்த வெண்சங்கு, இப்போது அவருடைய இடது உள்ளங் கைக்குள்  ஒரு வெண் தாமரை மொக்குப் போல அடங்கியிருக்கிறது. அவரின் மொத்த உருவமும் அகன்று விட, வெள்ளைத் தாமரை மொட்டுப் போல இருக்கிற சங்கை மட்டும் பார்க்கிறேன்.

சங்கு உடைந்திருக்கிறதோ என்று பதறுகிறது. இல்லை. கீற்றுப் போல ஒரு இளம் செம்மை விளிம்புடன் அந்தத் தாமரை மொக்கு மலரத் துவங்கி இருக்கிறது. முதல் இதழ் மட்டும் தன் நுனிக் காது மடங்க, என்னுடைய திசையில் அவிழ்ந்துகொண்டு இருந்தது.

இதை எழுதி முடிக்கும் இன்னேரம் வாசனையே இல்லாத ஒரு வாசனை 
கமழ்கிறது. தன் தீரா இதழ்கள்  அனைத்தையும் அது மலர்த்திவிட்டது போலும்.

எத்தனை வாசனை நிரம்பிய தினம் இது.

1 comment:

  1. வாசனையே இல்லாத ஒரு வாசனை கமழ்கிறது...அருமை.

    ReplyDelete