Sunday, 2 November 2014

கெட்டி மேளம்







நான் கிடைத்த இடத்தில் உட்கார்கிறவன்.

அந்தக் கால திரையரங்குகளில், தலைக்கு மேல் மின் விசிறி இருக்கிற இடமாகப் பார்த்து உட்கார்கிறவர்கள் உண்டு. அவர்களே போல்வர் இப்போது கல்யாண வீடுகளில் வசதியான உறவினர்கள், அல்லது நெருக்கமானவர்கள் இருக்கிற இடத்தைப் பார்த்து உட்கார்கிறார்கள். அது ஒரு வகைத் தேர்ந்தெடுப்பு தான். நான் மனிதர்களைத் தேர்வதில்லை. நான் நடக்கும் போது காலியாக இருக்கும் இருக்கைகளில் உட்கார்கிறேன். பக்கத்து நாற்காலியில் யார் இருப்பினும் சரி.

இன்றும் கூட அப்படித்தான். ஆனால் இடப்பக்கத்தில் இருந்த மூன்று பேரும் தெரிந்தவர்கள் தான். கொஞ்ச நேரம் இந்தக் கல்யாணத்தில் இருந்துகொண்டு, கலந்துகொள்ளமுடியாத லட்சுமி சரவணகுமார்     கல்யாணத்தை நினைத்துக் கொண்டு இருந்தேன். திருமங்கலம் தன் வழக்கமான தூரத்தை விட அதிக தூரத்திற்குப் போய்விட்டது போலவும், எழுத்து வழி அடைந்திருந்த வழக்கமான  நெருக்கத்தை விட,  லட்சுமி சரவணகுமார் அதிக நெருக்கத்தையும் அடைந்துவிட்டது போலவும் இருந்தது.

அப்படியே எல்லாவற்றையும் எல்லோரையும் பார்த்துக்கொண்டே இருந்தேன். புகைப் படம் எடுக்கிற, வீடியோ பதிவிடுகிற  வீரபாகு எனக்கு  ஏற்கனவே தெரிந்தவர். ஒரு புகைப்படக்காரர் இயங்கும் நேரத்தில் அவரைக் கவனிப்பது எனக்குப் பிடிக்கும். குழந்தைகள் வாசலில் விளையாடுவதை,  உங்கள் நண்பர் வீட்டு வரவேற்பறையில் நீங்கள் இருக்கையில், அந்த வீட்டில் இயல்பாக நடமாடுகிற ஒரு பெண்ணை அல்லது முதியவரைக் கவனிப்பது போல அது.

எனக்கு முந்திய வரிசைக்கும் முந்திய வரிசையில், தூண் ஓரத்தில் அந்தப் பதின்வயதுப் பெண் உட்கார்ந்திருந்தார். இடவலமாக, மேல் கீழாக முகத்தை ஒரு கடிகார நொடி முள் போல நகர்த்தியபடி சிரித்துக் கொண்டே இருந்தார். யாரைப் பார்த்து? எல்லோரையும் பார்த்து. எதை நோக்கி? எல்லோரையும் நோக்கி. அப்படி ஒரு சிரிப்பு. எல்லாவற்றுடனும் இருந்து, எல்லாவற்றையும் தாண்டிய சிரிப்பு. சித்தப் பிசகு என்பதே சித்த ஒருமை அல்லவா. அவர் சிரிப்பில் ஒன்றிப் போய் சிரிப்பாகவே ஆகியிருந்தார்.

இன்னொருவர் எனக்கு முந்திய வரிசையில் வந்து உட்கார்ந்தார். அவர் என்று சொன்னால் நன்றாக இல்லை. அந்த ஆச்சி என்றுதான் சொல்ல வேண்டும். எழுபத்தைந்துக்கு மேல் இருக்கும். வீட்டையா இல்லை என்று பார்த்தாலே தெரிகிறது போல வெள்ளைச் சட்டை. நெற்றியில் அள்ளிப் பூசிய திருநீறு. கழுத்தில் இரண்டு மூன்று ஸ்படிக மாலை, வெள்ளியில் கோர்த்த உத்திராட்சம்.

ஆச்சி தானாக  உட்காரவில்லை. அவளைப்பார்த்ததும் ஆளாளுக்கு எழுந்திருந்து  அவள் கையைப் பிடித்து, ‘இங்க உக்காரு, இங்க உக்காரு’ என்று ஏக உபச்சாரம் செய்கிறார்கள். ஆச்சிக்குக் ‘கொள்ளவில்லை’. அப்படிச் சிரிக்கிறார். அப்போதுதான் முளைத்த விதை போல, ஒரே ஒரு பல் மட்டும் கீழ்ப் பக்கம் இருக்கிறது. மற்ற இடத்தைப் பூராவும் சிரிப்பு நிரப்பியிருக்கிறது. அது சிரிப்பு இல்லை. சந்தோஷம். இந்த வாழ்வில் இருந்து திரட்டித் திரட்டியெடுத்து வைத்து, அவள் எல்லோர்க்கும் விநியோகித்துக் கொண்டிருந்த வாழ்வின் சாரம்.

ஆச்சி ஒருத்தர் கையைப் பிடிக்கிறாள். ஒருத்தர் தோளைப் பிடித்து ,’எம்புட்டு நாளாச்சுய்யா எல்லாரையும் பார்த்து’ என்கிறாள்.  ஒருத்தரைப் பார்ப்பதே அவளுக்கு எல்லோரையும் பார்ப்பது ஆகிவிடுகிறது. ஆண் கிடையாது. பெண் கிடையாது அவள் உலகத்தில். எல்லோர்க்கும் ஒரே கன்னம் . கைவிரல்களைக் குவித்துக் கன்னத்தில் வைத்து, அதற்கு ஒரு  முத்தம். ஒரு நொடி கூட யாரும் ஆச்சியைத் தொடாமல் இல்லை. ஆச்சியும் ஒருத்தர் பாக்கிவைக்காமல் தொடுகிறாள். சிரிக்கிறாள். விசாரிக்கிறாள். மறுபடி சிரிக்கிறாள். மறுபடி முத்துகிறாள். ஒரு பல் சிரிப்பில் உலகம் சுழல்கிறது.

நானும் பின்னால் தான் இருக்கிறேன். எனக்கும் கன்னம் இருக்கிறது. ஒரே ஒரு தடவை , என்னைக் கிள்ளி ஆச்சி முத்திக் கொள்ள மாட்டாளா என்று இருக்கிறது. நான் ஆச்சிக்கு முன் வரிசையில் சிரித்துக்கொண்டிருந்த அந்த சித்தம் மலர்ந்த  பெண்ணைத் தேடுகிறேன். இந்தச் சிரிப்பு அந்தச் சிரிப்பைத் தொலைத்துவிட்டது.  நிஜமாகவே அந்தப் பெண்ணைக் காணோம். அது இருந்த இடத்தில் வேறு யாரோ இருக்கிறார்கள்.

எனக்குப் புரிந்துவிட்டது. அந்தப் பெண் தான் இந்த ஆச்சி. அந்தச் சிரிப்பே இந்தச் சிரிப்பு. அவள்தான் இவளாக இருக்கிறாள். நான் இப்படிக் கிறுக்குத் தனமாக  நினைக்கையில்,  ஆச்சி யார் கையைப் பிடித்துக்கொண்டோ அப்படிச் சிரிக்கிறாள்.  ஆச்சி சிரிக்கும் போது, சொல்லிவைத்தது போல கெட்டிமேளச் சத்தம் கேட்கிறது.

தாலி கட்டுவதற்கு மட்டும் தானா, ஆச்சியின் இந்த சிரிப்புக்குக் கெட்டி மேளம் வாசிக்கக் கூடாதா என்ன?

3 comments:

  1. //ஒரே ஒரு பல் மட்டும் கீழ்ப் பக்கம் இருக்கிறது. மற்ற இடத்தைப் பூராவும் சிரிப்பு நிரப்பியிருக்கிறது. அது சிரிப்பு இல்லை. சந்தோஷம். இந்த வாழ்வில் இருந்து திரட்டித் திரட்டியெடுத்து வைத்து, அவள் எல்லோர்க்கும் விநியோகித்துக் கொண்டிருந்த வாழ்வின் சாரம்........
    ஒரு பல் சிரிப்பில் உலகம் சுழல்கிறது.//
    கல்யாணி அண்ணன் கைவிரல்களில் கெட்டிமேளம் கிறுகிறுப்படைகிறது .ஆச்சியின் கன்னம் தான் மேளமோ?

    ReplyDelete
  2. ஒரு கல்யாண வீட்டின் பூரிப்புக்கு சிகரம் வைத்த எழுத்து. 'சித்தம் மலர்ந்த' என்ற பதப் பிரயோகம் கூட மனதை நிறைவிப்பதாகவே.

    வயது கூடியவர்கள் சொந்த பந்தங்களை ஒரே இடத்தில் பார்த்து, புளங்ககிக்க திருமண வீடு முதன்மையானது. ஆச்சியும் வீட்டையாவுடன் சேர்ந்த பிற்பாடு கடைசியாக 'அந்த' திருமண வீட்டுச் சந்திப்பு எல்லோர் மனசிலும் பசுமையாகவே மேலெழும் அல்லவா...
    மிச்சமிருக்கும் ஒற்றைப் பல்லால் அவர் சாதிப்பதை நாம் ஒவ்வொருவரும் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தோன்றுகிறது.

    ReplyDelete
  3. சித்தப் பிசகு என்பதே சித்த ஒருமை அல்லவா.
    சித்தம் மலர்ந்த பெண்ணைத் தேடுகிறேன்.

    எழுத்து வழி அடைந்திருந்த வழக்கமான நெருக்கத்தை விட, லட்சுமி சரவணகுமார் அதிக நெருக்கத்தையும் அடைந்துவிட்டது போலவும் இருந்தது.

    ஒரு புகைப்படக்காரர் இயங்கும் நேரத்தில் அவரைக் கவனிப்பது எனக்குப் பிடிக்கும். .....................................................எனக்கும்


    ஆச்சியின் இந்த சிரிப்புக்குக் கெட்டி மேளம் வாசிக்கக் கூடாதா என்ன?

    இதை வாசித்த எங்களுக்கும் கூட ............................

    ReplyDelete