Friday 8 November 2013

சஷ்டியை நோக்க ...

கவிதையும் கதையும்
--------------------
கல்யாண்ஜி.

%



பூப்பது கவிதை.
தொடுத்தது கதை.
இரண்டும் பூ தான்.
*
கவிதை அருவி.
கதை நதி.
இரண்டும் நீர் தான்.
*
கவிதை திசை காட்டி.
கதை காற்சுவடுகள்.
வாழ்வுச் சாலை பொது.
*
கவிதை கனவு.
கதை நனவு.
மனம்தான் மையம்.
*
கவிதை நெருப்பு.
கதை வெயில்.
ஒன்று தொட்டால் சுடும்.
மற்றதில் தொடாவிட்டாலும் நிழல் விழும்.
*
கவிதை என்பது கலவி.
கதை என்பது பிரசவம்.
ஒன்று கருவுக்கு முந்தியது.
இன்னொன்று கருவறைக்குப் பிந்தியது.
*
கவிதை வானம் சார்ந்தது.
கதை நிலம் சார்ந்தது.
ஒன்று நனைக்கும்.
ஒன்றில் முளைக்கும்.
*
கவிதை குடத்தில் இருந்து விரிகிற காவிரி.
கதை காவிரியில் அள்ளுகிற குடம்.
*
மல்பெரிச்செடிகளைப் பார்க்கையில்
பட்டுப் பூச்சிகளை நினைப்பது கவிதை.
பட்டுச்சேலைகளைப் பார்க்கையில்
கூட்டுப் புழுக்களை நினைப்பது கதை.
*
ரயில்பெட்டியில் நகர்ந்துகொண்டே
பார்க்கிற மின்மினிப் பூச்சிகள் கவிதை.
காடா விளக்கடியில் பீடி சுற்றிக்கொண்டிருக்கிற
கைகளுக்கு வளையடுக்குவது கதை.
*
கவிதை கல்லூரி மாணவர்கள்
வாங்குகிற பியர் பாட்டில்.
கதை குடும்பஸ்தன் கூச்சப்பட்டுக்கொண்டு
வீசியெறிகிற ஆணுறை.
*
கவிதை
பார்க்காத மார்புகளை வர்ணிப்பது.
கதை
உதறின கைவிரல்களைப் பற்றி உருகுவது.
*
கவிதை சிலசமயம் தீர்க்க தரிசனம்.
கதை சிலசமயம் வரலாற்றுப் பதிவேடு.
*
கவிதை பாதங்கள் இல்லாததால் பறப்பது.
கதை சிறகுகள் இல்லாததால் நடப்பது.
*
கவிதை காதலியுடன் சிரிப்பது போல.
கதை சினேகிதனுடன் அழுவது போல.
*
மீட்டினால் கவிதை.
பாடினால் கதை.
ஒன்று வாத்திய இசை.
ஒன்று வாய்ப்பாட்டு.
*
கவிதை
வரைவதற்கு முந்திய திரைச்சீலை.
கதை
வரைந்துமுடித்த ஓவியம்.
*
கவிதை கிளி.
கதை இலை.
உட்கார்ந்த கிளையிலிருந்து பறக்கும்.
உதிர்வதற்கென்றே துளிர்க்கும்.
*
கவிதை நிகழ்ச்சி நிரல்.
கதை நிகழ்ந்ததன் குரல்.
*
கவிதை
பாரிஜாதப் பூக்களுக்கு மேல்
பன்னீர் தெளிப்பது.
கதை
கட்டைவிரல் ரேகைகளுக்குச்
சிக்கல் எடுப்பது.
*
கவிதை என்பது
இன்னொரு நான்.
கதை என்பது
நானேதான்.

*
வருடம் இல்லை. 95ல் இருந்து 99 இருக்கலாம். 8/8 என்று தேதி இட்டிருக்கிறேன். நண்பர் ஆ.ஆனந்தன் தன்னுடைய 07.11.13 கடிதத்தில் இணைத்து அனுப்பியிருக்கிறார். இன்று இந்த கந்த சஷ்டி தினத்தில் கிடைத்த இதைப் படிக்கப் படிக்கச் சந்தோஷமாக இருக்கிறது.

சி.க.

No comments:

Post a Comment