Saturday, 22 December 2012

செப்பேலோ...

அதற்கு மேல் ஞாபகம் வரவே இல்லை.
திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்க்கிறேன். “போய பிழையும், புகுதருவான் நின்றனவும், தீயினில் தூசாகும், செப்பேலோர் எம்பாவாய்”. அதற்கு முந்திய
எந்த அடிகளும் வரிசைகலைந்து கூட, பக்கத்தில் நெஞ்சுக்கு எட்டின தூரத்தில் காணோம்.

ஏற்கனவே பனிக் காலம். அதிகாலை மழையும் சேர்ந்திருந்தது. பனிக்கு ஒரு குளிர். மழைக்கு ஒரு குளிர். குளிரும் குளிரும் சேர்ந்த தீக்குளிர். இன்று சற்று பிந்தித்தான் நடக்க ஆரம்பித்திருந்தேன். தரையெங்கும் புல்லும் புல்லிடை மஞ்சட் பூவும். இந்தச் சிறு பூக்களின் களங்கமின்மை சூரியனை மறக்கடிக்க வைக்கிறது. இந்தப் பூவின் பெயர் தெரிந்தவர்கள் யாரேனும் இருப்பார்கள்.  ஒரு ஆதிச் சித்தர் நிச்சயம் இந்த மஞ்சட் பூப் படுகை பற்றிப் பாடியிருப்பார்.
நான் ஒரு முன் பனிக்காலத்தில் கண்மூடுவேன் எனில், என் மேல் தூவப்பட
விரும்பும் பூக்கள் இவையே.

வழக்கமான தெருவில்தான் நடக்கிறேன். வழக்கமாக எதிர்ப்படுகிறவர்தான் எல்லோரும். ஆனால் அவர் வழக்கமானவர் இல்லை. ஆனால் தெரிந்தவர். ஒரு  உல்லாசமான மன நிலையில் இருந்திருக்கவேண்டும்  என்பது அவர் உடையில் தெரிந்தது. இந்தப் பக்கம் அதிகம் அணியக் காணமுடியாத அந்த லக்னோ குர்த்தாவை இந்தக் காலைக்குத் தேர்ந்திருந்தார்.’எங்கே இந்தப் பக்கம்?’ என நானும் கேட்கவில்லை. அவரும் கேட்கவில்லை. இதுபோன்ற வெற்றுக் கேள்விகளைக் கேட்காமல் இருக்கும்படி செய்திருந்தது அந்தக் குளிர்ந்த காலை. புன்னகைத்துக் கொண்டோம். அவர் சிரிப்பில் அவரின் இந்த உடை குறித்த சிறிய வெட்கம் இருந்தது. அவரவர் திசை சொல்லும் கைகாட்டிகள் அந்தப் புன்னகையில் அம்புக் குறியிடப்பட்டிருந்தன.
நீண்ட இடைவெளிக்குப் பின் நான்கைந்து  பஞ்சரட்டைக் குருவிகள் தெருவின்  இரண்டுபக்கக் கம்பிகளிலும்.  ஆழ்ந்த தியானத்தில் இருப்பது போல, எந்தச் சாபமும் இடாது தியானம் கலைத்து மறுபடி உறங்கிய  அந்த மூன்று நாய்களை, அதன் கழுத்து அசைவை இப்போது வரையத் தோன்றுகிறது. உறைந்த கடல், ஒருகணம் உருகி,ஒரே  ஒரு அலையடித்து என் கால் வரை எறிந்து, மறுபடி உறைந்துவிட்ட அசைவு அது.

சற்று நீண்ட தொலைவுக்கு யாரும் எதிர்ப்படவில்லை.  வேறு எதையும் பார்த்த நினைவில்லை. இரண்டே இரண்டு பூவரசம் பூ மட்டும் என்று சொல்ல
ஆசை. அப்படிச் சொன்னால் அது வேறொரு தினம் பார்த்த பூவை நேற்றில் ஒட்டவைப்பது ஆகிவிடும். செம்மண் மைதானம் விரிந்து கிடந்தது. எது எல்லாம் நம் முன் விசாலமாகக் கிடக்கிறதோ, அது எல்லாம் நம்மை மேலும் விசாலம் ஆக்குகிறது தானே.  நான்குசக்கர வாகனப் பயிற்சியில் ஈரச் செம்மண் உழுதுபோடப்பட்டது போல வட்ட,நீள்வட்டத் தடங்களுடன் கிடக்கிறது.  யாருமே இல்லை. வேறு ஏதோ ஒரு பூகோளத்தைப் பெயர்த்துத் துண்டாக்கி இங்கே வைத்துவிட்டுப் போனதாக அந்தச் செம்மண் தரை அந்த வாகனத் தடங்களுக்குள் சுழல்கிறது.

என் காலடியில் ஒரே ஒரு இலை. கொய்யா இலை போல, சற்றுத் தடித்த நரம்புகள் உடைய, மொரமொரப்பான இலை. ஒரு  ஒற்றை இலை மட்டும். நான் அதை உதிர்த்த மரத்தைப் பார்க்க விரும்பினேன். முடிந்தால், அந்த மரத்தின் கிளைகளில் அமர்ந்திருக்கும் சிறுபறவைகளைக் கூட.

எதிரே வந்தவர் கூட ஒரு பறவை போலத் தான் இருந்தார். வெகு தூரம் திசை தப்பிப் பறந்துகொண்டே இருக்கிற களைத்துப் போன பறவை. முப்பது முப்பத்தைந்து வயது தான் இருக்கும். தனக்குத் தானே பேசிக்கொண்டு செல்கிறவர்களை மேற்கு மாம்பலத்தில் பார்த்திருக்கிறேன். இங்கு அபூர்வம்.
“எல்லாம் ஓப்பன் சீக்ரெட் ஆயிட்டுது. ஓப்பன் சீக்ரெட்” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே போனார். என்னைத் தவிர யாருமற்ற அந்தப் பிரதேசத்தில், அவருடைய அந்த திறந்த ரகசியத்தைத் தாங்கமுடியாமல் துடித்து அந்த ஒற்றை இலை மட்டும் சற்று நகர்ந்திருக்கக் கூடும்.

எதிரே நாம் கண்டடைவதை எல்லாம் தொலைத்துவிட்டு, உள்ளே வேறு ஏதோ ஒரு தேடல் நடந்துகொண்டிருந்ததில், “வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து” என்ற வரி பிடிபட்டு, ஏற்கனவே வசப்பட்ட இரண்டு அடிகளுடன் சேர்ந்துகொண்டது.

நுனிக்கொம்பிலிருந்து அடிமரத்துக்கு இறங்குகிற பித்தத்தில்  பாசுரத்தின் விழுதில் தொங்கி வேருக்குப் போகிற முயற்சி. அந்த மூன்று வரிகளை மட்டும் சொல்வது ஒரு விளையாட்டுப் போல் ஆகிவிட்டது. மைதானம் முடிகிற இடத்தில் வலது புறம் திரும்பினால் தென்றல் நகர். அதையும் தாண்டினால், பாரதி நகர் மூன்றாம் தெரு. அதற்குள் முழுதும் ஞாபகம் வராமலா போகும்?
இடது புறப் பச்சையைப் பார்த்துக் கொண்டே போகிறேன். அப்படி ஒரு அடர்த்தியுடன் புல் முளைத்துக் கிடக்கிறது. மழைக்குப் பிந்திய தாவரங்கள் பனிக்காலத்தில் பூப்படைந்து விடுகின்றன. கரும்பச்சை மினுமினுப்புடன் புல்லே பூவாகத்தான் இருந்தது.

புல்லுக்கிடையில் வெள்ளையாகப் பூத்தது போல ஏதோ கிடந்தன. ‘கொக்குப் பூத்த வயல்’ என்ற தேவதேவன் வைத்த நாவல் தலைப்பு ஞாபகம் வந்தது. வயலுக்கு மேல் நாரைகள் பறக்கிற, அவரவர் பார்த்த காட்சிகள், உங்களுக்கும் எனக்கும்  இப்போது வந்திருக்கும்.  தூரத்தில் ஒரு அவுரிச்செடி அசைவு. நாம் தூரத்திலும் பக்கத்திலும் பார்க்கிறவர்கள். சில பொழுதுகளில் தூரமே அற்றும்
பக்கத்திலிருந்து விலகியும்.

புற்களின் இடையில் சுக்கல் சுக்கலாகக் கிடந்தது ஒரு கடிதம். அப்போதுதான் கிழித்து எறியப்பட்டிருக்கக் கூடிய பீங்கான் வெள்ளையில் அவை எந்தச் சிறு கசங்கலும் இன்றி, பச்சை வலையில் பிடிக்கப்பட்ட  வெள்ளைச் சதுர மீன்களாக வாய்பிளந்த தன் கடைசிச் சுவாசத்தில் தவித்துக்கொண்டிருந்தன.
யார் யாருக்கு எழுதிய கடிதமோ? எழுதியவரோ பெற்றவரோ முழுதுக்கத்துடன் அல்லது முழு வெறுப்புடன் கிழித்து வீசியிருக்க வேண்டும். விரல் நுனி வரை பரவியிருந்த ஆவேசத்துடன், இதற்கு மேல் அடைய வாய்ப்பற்ற ஆகச் சிறிய
துணுக்குகளாக அவை அப்படிக் கிடப்பது எனக்கு ஏன் அவ்வளவு பதற்றம்
உண்டாக்கியது என்று இப்போதுவரை தெரியவில்லை.

அடுத்த பத்தாவது அடியில், நனைந்து கருத்த தார் மினுங்கும் ஜல்லிக்கல் பாதையில்  பவளம் உருள்வது போல், ஒரு வெல்வெட் பூச்சி இடமிருந்து வலமாக நகர்ந்துகொண்டிருந்தது.

நான் வருவதை அவர்கள் பார்த்துவிட்டார்கள். எனக்கு எதிரே வருவதற்கு அவர்களுக்குச் சம்மதமில்லை. முக்கியமாக அந்த அம்மாவுக்கு. தன்னுடைய வீட்டின் அகலமான இரும்பு கேட்டிற்குள் தன்னையும் தன் மனவளர்ச்சியற்ற மகனையும் ஒளித்துவைத்துக் கொள்வது போல், உள் ஒடுங்கி நின்றார்கள். அந்த இருபது இருபத்தைந்து வயது ஆணின் முகம் இந்தக் காலையில் அவனுக்கு மட்டும் நட்சத்திரங்கள் உதித்துக்கிடக்கும் வானத்தில் போய் அமர்ந்திருப்பது போல் சிரித்துக்கொண்டிருந்தது. வெளியே வந்துவிடும் ஆர்வத்தில்  அந்த இரும்புக் கதவை நடுவில் பிளப்பது போல அவன் உந்தித் தள்ள, ஆதாரம் தவறி அந்தத் தாய், புகைப்படத்துக்கு சாத்திய மாலை அதன் ஒருபக்க ஆணியில் இருந்து அவிழ்ந்துதொங்குவதாக, சட்டென்று தன் பாதி உடலுடன் வெளியே சரிந்து, நிதானித்தது. விழுந்துவிடவில்லை. அத்துடன் விட்டிருக்கலாம். அந்தப் பையன் முகத்தில் வேகமாகக் கையை வீசி அடித்தது. நெஞ்சில் கைவைத்து மகனை உள்ளே தள்ளியதை  நான் பார்த்துவிட்டதும், அழ ஆரம்பித்தது.

எனக்கு மறுபடியும் புல்லுக்கு இடையில் சுக்கல் சுக்கலாகக் கிடந்த அந்த வெள்ளைத் துணுக்குகள் ஞாபகம் வந்தன. இதுவரை உச்சரித்துக்கொண்டு இருந்த வரிகள் உட்பட எல்லாவரிகளும்  தீயினில் தூசாகிவிட்டிருந்தன.

இப்போது செப்புவதற்கு ஒன்றுமே இல்லை என்னிடம்.

%

3 comments:

 1. நெகிழ்வான பதிவு.
  அடுத்த முறை அந்த வீடு நெருங்கியதும் நீங்கள் திரும்பலாமோ / அந்த வீடு இருக்கும் பகுதியைத் தவிர்க்கலாமோ

  ReplyDelete
 2. இரக்கமற்றதாகத்தான் அமைந்து விடுகிறது வாழ்க்கை ..சில பேருக்காவது. பனி சூழ்ந்த புலர் காலைப் பொழுது..சிறு மழைக்கு பிந்திய பசுந்தரை ..பறவைகள் , மைதானம் எனும் இயற்கையின் எழில்கள் எல்லாம் மனிதத் துயரங்களுக்கு முன்பாக ஒன்றுமில்லாமல் போய் விடுகின்றன. அதுவும் ஒரு தாயின் துயரமென்பது படைத்தவனையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றி விடும் சக்தி படைத்ததென்று தான் தோன்றுகிறது..

  பழகிய பாடலின் வரிகள் நினைவுகளின் ஆழத்தில் சிக்கிக் கொண்டு தவிப்பது உண்மையிலேயே ஒரு வேதனை ! எவ்வளவோ முயன்றும் நீங்கள் சொன்ன இறுதி அடிகளை வைத்து கோதை பாசுரத்தின் தொடக்கத்தை மீட்டெடுக்க இயலவில்லை! இறுதியாய் திருப்பாவையை சரணடைந்துப் பார்த்தால்...அடடா ..'மாயனை மன்னு வட மதுரை மைந்தனை...' நன்றாகத் தெரிந்த பாசுரமாயிற்றே என்ற ஏக்கம்...

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete