Monday 12 November 2012

அசையாத புல் போல




அநேகமாக பிற்பகலில்
நீங்கள் நடுக்கூடத்தில்
விருந்தினர்களோடு பேசிக்கொண்டிருக்கையில்
குடுகுடுப்பைகாரன் வருகிறான்.
அசையும் திரைகளினூடு
பனியால் வரைந்தது போல்
அவன் வாசலில் நிற்பது தெரிகிறது.
குடுகுடுப்பையின் வேகத்திற்கு நிகரான
அவனது குரல்
முற்றிலும் புரியவில்லை உங்களுக்கு.
ஒரு பயம் மட்டும்
உருளத் துவங்குகிறது
உங்களது அடிவயிற்றில்.
அவனை ஏதாவது சொல்லி
அப்புறப்படுத்திவிட்டால் நல்லது எனும்
தவிப்பைத் தவிர்க்க முடியவில்லை
உங்களுக்கு.
கை வளையல்களை அனாவசியமாக
நகர்த்திக் கொள்கிறீர்கள்.
எதிரில் இருப்பவர் மீதான
கவனம் முற்றிலும் சிதறின முகத்துடன்
நீங்கள் வியர்வையை ஒற்றிக் கொள்கையில்
விருந்தினர் வீட்டுப்பையன்
அவனாக எழுந்து போய்
குடுகுடுப்பைக்காரனைப்  பார்க்கிறான்.
கொஞ்சம் சிரிக்கவும் செய்கிறான்.
ஒன்றும் சொல்லாமல்
சட்டைக்காலர் நுனியைக்
கடித்துக்கொண்டு மேலும் பார்க்கிறான்.
அசையாத புல்போல
ஒரு சிறு பொழுது
அவர்களுக்கிடையில் நிற்கிறது.
குடுகுப்பைக்காரன் காலடியில்
அடுத்தடுத்த வீட்டுக் கோலம்
வந்துவிடுகிறது இப்போது.

%

தீபாவளியின், பொங்கலின் பிற்பகலில் எங்கள் வீட்டு வாசலுக்கு
வரும் குடுகுடுப்பைக்காரர்களும் பாம்புப் பிடாரன்களும்  இப்போது
எங்கே போனார்கள். அந்த குடுகுடுப்பைச் சத்தமும் மகுடிச்சத்தமும்
உண்டாக்கிய பயம் நிறைந்த ஈர்ப்பெல்லாவற்றையும்  இந்த தினத்தின்
பிள்ளைகள் இனிமேல் ஒருபோதும் உணர்வதற்கில்லை.  அந்த வேகம்
நிறைந்தசொற்கள் குடுகுடுப்பையின் இருபக்கத் தோல்வட்டத்தில் மோதி மோதி அதிர்ந்துவருவதையும், ஒரு பசித்த அடிவயிற்றின் கடைசி
மடிப்பில் இருந்து உந்தப்பட்ட காற்றில் மகுடி விம்மிப் படமெடுத்து
ஒலித்து அடங்குவதையும்  நான் ஒருபோதும் மறப்பதற்கில்லை. 

சட்டைகாலரைக் கடித்துக்கொண்டு சிரிக்கவும் செய்கிற பையனுக்கும் பிடாரனுக்கும் இடையில் உள்ள தூரம் அல்லது நெருக்கம் என்னவென
உணர்ந்தால் மட்டுமே, அவர்களுக்கு இடையில் நிற்கிற, ‘அசையாத புல்
போல் ஒரு சிறு பொழுதை’ நாம் அறியமுடியும். அதற்கு முந்திய வரிகள் வரை, வழக்கம் போல ஒரு சித்திரத்தை வரைந்துவந்த நான், அசையாத புல் போல் என்ற அந்த இடத்திலிருந்து கவிதையாக்கிவிடுகிறேன். அந்த குடுகுப்பைகாரன் காலடியில் அடுத்தடுத்த வீட்டுக் கோலம் வந்து விடுவது எப்படி? 

எப்படியென்றெல்லாம் தீர்மானித்துச் சொல்லமுடியாது. அப்படித்தான் அவை வரும். அசையாத புல் போன்ற சிறு பொழுதிற்கு அதுவெல்லாம் சாத்தியமானதே.

%

உறக்கமற்ற மழைத்துளி
தொகுப்பில் இருந்து.

2 comments:

  1. சட்டைக்காலர் நுனியைக்
    கடித்துக்கொண்டு மேலும் பார்க்கிறான்.

    காலையில் ஆசை தீர வெடி வெடித்து விட்டு
    அப்படியே தீபாவளி மதிய சிறப்பு சாப்பாடு சாப்பிட்டு
    புது சினிமா கதைகள் எல்லாம் நண்பர்களுடன் பேசி விட்டு
    சற்று வெடிச் சட்டங்கள் ஓய்ந்த நிலையில்
    புதுச் சட்டையின் காலரைக் கடிக்கும் காட்சி
    கண் முன்னே விரிந்தது .

    எங்களைப் போன்ற சாமிய வாசகர்களுக்கு
    தீபாவளிப் பரிசாக இதை (இந்தக் கவிதையை) விட வேறு என்ன வேண்டும்

    ReplyDelete