Saturday 10 November 2012

எச்சிலை மட்டும்






முற்றிலும்  குளிரூட்டப்பட்ட அறை.
தடுப்புக் கண்ணாடிகளை
ஊடுருவ முடியாது பார்வையால்.
நீங்கள் அமர்ந்திருக்கிற
உயர்தர இருக்கைகளிலிருந்து
சுழன்று திரும்பலாம்
அனைத்து திசைகளிலும்.
தேனீரோ காஃபியோ
காகிதக் குவளைகளில் சூடுபறக்க
நீங்களே ஏந்தி அருந்தலாம்.
மனதில் விழாத மெல்லிய இசை
காதில் விழும்.
செயற்கைக் கூழாங்கற்களை நனைக்கிற
செயற்கை நீரூற்றுக்கள் மூலைகளில்.
மிக விரைவில்
நாகரீகமான அடிக்குரலில்
பேசும்படி உங்களை நீங்களே
கட்டுப்படுத்திக் கொள்வீர்கள்.
உங்களைச் சுற்றிமட்டுமல்ல,
கழிப்பறையிலும் உணரமுடியும்
வாசனைத் தெளிப்பான்களை.
எந்தச் சிரமும் உங்களுக்கின்றி
எல்லாம் தானியங்க,
மேலாளரின் அறையிலிருந்து
திரும்புமுன், உங்கள் முகத்தில்
துப்பப்பட்டிருக்கிற எச்சிலைமட்டும்
நீங்களே துடைத்துக் கொண்டால்
போதும்.

%

உறக்கமற்ற மழைத்துளி
தொகுப்பிலிருந்து.
கல்யாண்ஜி.

2 comments:

  1. வேறு எந்த மாதிரியாகவும் இது ஒரு பரிகசிப்பாக, எள்ளலாக அமைந்துவிடக் கூடும். அந்த நிலையின் அத்தனை பரிதவிப்பும் ஏந்தி மனதைப் பிசைகிறது சார்.

    ReplyDelete
  2. மிக அருமை..நச்சென்ற கடைசி வரி.

    ReplyDelete