Wednesday 24 October 2012

கட்டுபடியானவை.




அழித்துவைத்த சிலேட் போல இருந்தது இன்றைய பிற்பகல்.  முற்றிலும் நடமாட்டம் அற்ற, ஒரு அமைதியான ஐந்து மணி,  மழை வரும் போல இருந்த, மழை வராத சாம்பல் வெளிச்சத்துடன் ஒரு கிழட்டுப் பூனை போல என் பக்கவாட்டில் நகர்ந்து போய்க்கொண்டிருந்தது.  தவறான ரயிலில் ஏறி உட்கார்ந்துவிட்ட பயணியாக, ஒரு அக்காக் குருவிக் கூவல் அவசரமாக தன் பொதிகளுடன் இறங்கிவிட முயற்சித்தது.  வேதக் கோவிலில் இருந்து ஒலிபரப்பான, யூகித்து முதல் வரியைச் சொல்லிவிட முடியாத ஒரு கூட்டுகீதத்தின் மேல், உடைமரத்தின் மூட்டிலிருந்து குறுவாள் எனத் தன்னை உருவி வெளியேறிய கருங்குருவி பறந்தது.

இந்த விஜயதசமி தினத்தில் நான் எதையும் கற்றுக் கொள்ளவில்லை.  நான் எதையும் கற்றுக் கொடுக்கவுமில்லை. மிகக் குறுகிய நேரம், வீசிய அம்மன் முகம் மஞ்சளாகத் தண்ணீரில் அமிழ்ந்து தாமிரபரணியில் கலப்பதை, சுலோச்சனா முதலியார் பாலத்தில் இருந்து பார்த்தது மட்டுமே இன்றைய படிப்பு.   சுழித்தோடும் புது வெள்ளத்தில் நான் சேர்த்த நேற்றைய தினத்தின் நிர்மால்யச் செம்பருத்திப் பூக்கள் மிதந்தோடி மறைந்த விதத்தின்
சுரீர் கொஞ்சமும் குறையாமல் அப்படியே இருந்தது.   மனம் இப்படிக் கூர்மையடையும் பொழுதில் ஒரு துக்கம் கவிந்து விடுகிறது.  அல்லது ஒரு துக்கமான உணர்வு  நம்மைச் சாணை பிடித்துவிடுகிறது.   அடிவயிற்றில் பாய்ச்சிக் கொள்ளச் சொல்லும், முன் தீர்மானமே அற்ற ஒரு தீர்மானமான வாளை ஏந்திய அந்தக் கூர்மையான துக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக,  புத்தகங்களைத் தேடினேன்.  ’ஏடு பிரித்து’  வைத்திருந்த புத்தகங்களில் ஒன்றாக, அந்த “கல்யாண்ஜி கவிதைகள்”  தொகுப்பு இருந்தது.

என்னுடைய தொகுப்புக்களை நான் மீண்டும் பக்க வரிசையில், அல்லது தொடர்ச்சியாக வாசிப்பதே இல்லை.  இன்றும் அப்படித்தான்.  அந்தப் பழைய  தொகுப்பின் முகப்பில் இருந்த என்னுடைய கருப்பு வெள்ளைப் படங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாகப் பார்க்கத்துவங்கினேன். வைட் ஆங்கிள் ரவிசங்கரன் எடுத்த அருமையான படங்கள். கடற்கரைச் சாலை பலகலைக் கழகக் கட்டிடத்தின் முன் தாழ்வாரத்தில், வெயில் கிட்டத்தட்ட மங்கிவிட்ட ஒரு தொண்ணூற்றி ஐந்தாம் வருட மாலையில் ‘சுபமங்களா’ நேர்காணல் ஒன்றின் இணைப்பாக எடுக்கப்பட்டவை.  அந்தச் சமயத்திற்கு சற்று முன் கடற்கரைச் சாலையில் ஞாநியைக் கூட சந்தித்துப் பேசிய நினைவு,  ஒரு கோடு போட்ட வெள்ளைச் சட்டை அது.  சட்டைப் பை பக்கம் சொட்டாக மைக் கறை இருக்கும்.  காலணிகளின் பளபளப்பில் எல்லாம் அக்கறை காட்டுகிறவன் இல்லை நான். இப்போது பார்க்கும் போது, அந்தப் படத்தில் அணிந்துள்ள காலணிகளின் பளபளப்பு நம்பமுடியாததாக இருக்கிறது. நம்ப முடியாத தன்மையிலிருந்து நம்பமுடிகிற தன்மைக்கு என்னை நகர்த்திக் கொள்ள விரும்பியே, என் கவிதைகளை நான் வாசிக்கத் துவங்கியிருக்க வேண்டும்.

அங்கங்கே வாசித்த என்னுடைய கவிதைகளின் பாசாங்கற்ற எளிமையும், ஒரு கல்யாணித்தன உயிர்ப்பும் எனக்குப் பிடித்திருந்தன.  நான் இன்னும் அவற்றை இழந்துவிடவில்லை என்றே நம்புகிறேன். 

இதோ இந்த கீழ்வரும் கவிதையை , இப்போது எழுதினேன் என்றாலும், இப்படியேதான் எழுதியிருப்பேன் என்றே நினைக்கிறேன், அல்லது அப்படி விரும்புகிறேன்.

%

தாத்தா தான் எங்களுக்கு
நிறையக் காட்டினார்.
பாபநாசத்து ஆற்று மீன்கள் முதல்
நெல்லையப்பர் கோவில் யானை வரை.

பொருட்காட்சியும்
தசராச் சப்பரமும்
ஆனித் திருவிழாத் தேரும்
ஆச்சி காட்டியவை.

பாம்பன் பாலம், பப்பநாத சாமி
கன்யாகுமரிக் கடல்
எல்லாம் காட்டியது ஆச்சி.

எதுவும் காட்டாமல்
அப்பா எங்களை
அடைத்துப் போட்டது
புத்தகங்களுக்குள்.

இவள் வந்து காட்டியது
இருக்கவே இருக்கிறது.

மூத்த பெண்ணுக்கு
மலைகளைக் காட்டினோம்.
இவன் பார்க்க இப்போது
திராட்சைத் தோட்டம்.

கட்டுபடியாவதைக்
காட்டும் வாழ்க்கை.
விட்டு விடுதலையாவது
அவரவர் வேட்கை.

%

5 comments:

  1. /கட்டுபடியாவதைக்
    காட்டும் வாழ்க்கை.
    விட்டு விடுதலையாவது
    அவரவர் வேட்கை./

    அழுத்தமான தருணங்களிலெல்லாம் என்னை சட்டென்று மனதில் தோன்றி தூக்கி நிறுத்தும் வரிகள் இவை.

    ReplyDelete
  2. அங்கங்கே வாசித்த உங்களுடைய கவிதைகளின் பாசாங்கற்ற எளிமையும், எழுத்திலிருக்கும் நேர்மையும்தான் என்னை உங்களை விடாமல் தொடர வைப்பது கல்யாணி சார். ஒருமுறை, புத்தக அடுக்குகளில் ரொம்பவும் பழையதாகிப்போன உங்களின் ஒரு புத்தகத்தை(அன்னியமற்ற நதி)விலை குறைத்து கேட்டபோது கோவை விஜயா பதிப்பக நிறுவனர் திரு.வேலாயுதம் சொன்னார், ’கல்யாண்ஜியின் எழுத்துக்கு அதிகமாய் எத்தனை கொடுத்தாலும் தகும்’ என்று. அது எவ்வளவு உண்மை என்பதை நாளும் அறிந்தே வருகிறேன். நன்றி.

    ReplyDelete
  3. எல்லாம் விட்டு விடுதலை ஆக வேண்டும் தான்.. இருந்தாலும், இந்த எழுத்து தரும் உயிரோவியக் காட்சிகளில் மயங்கும் போது, கட்டுபடியாவதை காட்டும் வாழ்க்கையேப் போதும், விட்டு விடுதலையாக வேண்டாம் என்று தோன்றி விடுகிறது.

    ReplyDelete
  4. விட்டு விடுதலை ஆக வேண்டும் என்ற எண்ணம் வராமல் இருக்கத் தானே

    திருவிழா, தேர், பட்டுப் பாவாடை , அருவி
    என வைத்து உள்ளனர்.

    ReplyDelete
  5. கருங்குருவிக்கு, குறுவாள் உவமை அற்புதம் .

    என் மகனுக்கு நான் என்ன காட்டினேன், என்று யோசிக்க வைத்து, தலை குனிய வைத்தது கவிதை.

    ஒரு வேளை முன்னரே இந்த கவிதையை படித்து இருந்தால் அவனுக்கு ஏதாவது காட்டி இருப்பேனோ, என்றும் யோசிக்கவைத்தது.

    உள் மனப் பயணம் போக வைத்த கவிதை..

    --

    ReplyDelete