என்னுடைய கையில் சூடு தணிந்த கடும் சாய். தேன் நிறக் குவளையைப் பற்றி அருகமர்ந்த விரல்களில் சுருங்கிக் கிடந்த நீள் காலம். காலியான மரப் பெஞ்ச்சை நீவிவிட்டவர் சொன்னார் ‘நூறு வயது இருக்கும்,யானை உரசின இந்த மரத்துக்கு’
அனேகமாக ஒரு முறை கூடக் கத்தரிக்கப்
படாத பழுப்பு நிற மீசைக்கருகில் சாயின் நெளியும் ஆவியை முகர்ந்துகொண்டு
இருந்தவர், -‘கொழுந்து பறித்தவள் கைகளில், கணவனைப் புலி அடித்துக் கொன்ற நடுக்கம் இருந்திருக்கிறது’ - தரையைப் பார்த்தார்.
இன்னும் அவர் முதல் மடக்கை உறிஞ்சவில்லை.
கண்ணாடிக் குவளையை உயர்த்தி அடி வண்டலின்
அடர் நிறம் பார்த்துத் தலையைத் தொங்கப் போட்ட குரலில்,”எப்போதும் மழை நனைத்த உச்சிப் பாறைகள்.” “மிருகம் கழிச்சது, பறவை கழிச்சது, மரம் கழிச்சதுண்ணு எல்லா எச்சமும் துப்புரவாகி ஓடும் மலம் புழா”
நான் என்பங்குக்குக்
கண்ணை மூடிக் கொண்டேன். முதலில் இமைகளுக்குள்
விளிம்பில் கருத்த புள்ளிகள் இட்ட பெரணிச் செடி இலைகள் அசைந்தன. இன்னும் வாட்ஸாப்பில் சுற்றிக்கொண்டு
இருக்கும் ஒரு ஐந்து தலைப் பாம்பு தெரிந்தது. முள் முருங்கை மரத்தின் செம்பூக்கள் அப்புறம். அடர் வனத்தில் ஒரு மஞ்சள் பூவை என்னால் பூக்கச் செய்ய முடியவில்லை.
‘காட்டில் மஞ்சட் பூவே பூக்காதா?” நான் அவரைக் கேட்க விரும்பிக் கண்ணைத் திறந்தேன். பக்கத்தில் அவரைக் காணோம். போய்விட்டிருந்தார்.
குடிக்கப்படாத அவருடைய சாய் வட்டத்தில் இன்னும் ஆவி நெளிந்துகொண்டு இருந்தது.
No comments:
Post a Comment