ரசூல் பூக்குட்டியை ‘ரெசுல் பூ குட்டி’ என்றுதான் ஆங்கிலத்தில் இட்டிருந்தார்கள் அந்த எட்டாம் பக்கத்தில்.
‘எய்யா, ரெசூலூ, கொஞ்சம் இங்க வந்து என்னாண்ணு கேட்டுட்டுப் போ’ என்று ஒரு குரலை, அது ரசூலின் அம்மாவைப் பெற்ற பாட்டியின் குரலாக, நான் கேட்டுக்கொண்டே அந்தப் பக்கத்துக்குள் போனேன்.
அது ரசூல் பூக்குட்டியின் மிகச் சிறிய நேர்காணல். நிறையப் பேசுகிறவராக ஒரு வேளை ரசூல் இருந்திருக்க மாட்டார். ஒரு ரசூல் நாளின் கடைசி ஒன்றாக, களைத்த இரவில் அது எடுக்கப்பட்டிருக்கிறது. நேர்காண்பவர் நுழையும் போது, ஆஸ்கர் வென்ற ரசூல் அவருடைய சட்டையைத் தேய்த்துக்கொண்டு இருக்கிறார்.
‘ஒரு கதை சொல்லட்டுமா?’ என்ற படத்தில் - அப்படிச் சொல்லக் கூடாது தான் - அவர் நடிக்கிறார். அவருடைய ஓசைப் புலன்களின் 360 பாகையில் அது எடுக்கப் பட்டிருக்கிறது. அவர் சொல்வது, ‘அந்தப் படம் அதுவாக நிகழ்ந்தது, அவர் வாழ்வில் நிகழ்ந்திருக்கும் மற்ற எத்தனையோ போல’.
அவருக்கு, இந்த உலகத்தின் மா பெரும் நிகழ்வுகளில் ஒன்றான பூரம் திருவிழாவின் ஓசையைப் பதிவு செய்ய வேண்டும் என்பது கனவாக இருந்திருக்கிறது. ‘நூறு யானைகள், முன்னூறு இசைக்கலைஞருடனான அந்த எழுபது ஏக்கர் நிகழ்வில், ரசூல் ஓர் இடத்தில் , அரைகுறைப் பார்வையே உள்ள ஒரு யானையைப் பார்க்கிறார். (ஒரு பார்வை இழந்த யானையை, ஒரு பார்வை இழந்த குரங்கை, ஒரு பார்வை இழந்த நாகத்தை, ஒரு பார்வை இழந்த சிட்டுக்குருவியை என்னால் யோசிக்கவே முடியவில்லை).
அரைப் பார்வை உள்ள அந்த யானையிடமிருந்து, ரசூல் பார்வையற்ற ஒரு மனிதர் அந்தப் பூரம் திருவிழா ஓசையை, அந்த இடத்திலேயே அவர் இல்லாமல் எப்படி அனுபவிப்பார்? என்ற ஒரு உணர்வுக்கு நகர்கிறார். பார்வையற்றதோர் உலகிலிருந்து, ஓசையுற்றதோர் உலகம் ! அங்கிருந்துதான் இந்தத் திரைப்படம் துவங்குகிறது. ரெசுல் பூ குட்டி நாயகனாகும் விபத்து நடக்கிறது.
ஒரு ஓசையின்மையைப் பற்றிய கேள்விக்கு, இந்த பொது சினிமாக்காரர்கள் ஓசையின்மைக்கு - அமைதிக்கு - ப் பயப்படுகிறார்கள் என்கிறார்/
ரசூலிடம் கேட்கப்படும் ஆஸ்கர் விருது பற்றிய கடைசிக் கேள்விக்கு, அவர் சிரித்துக்கொண்டு, ‘ அது என் வங்கிக் காப்பறையில் இருக்கிறது. வருடத்திற்கு ஒருமுறை எடுத்துத் துடைத்து வைத்துவிடுகிறேன்’ என்று பதில்கிறார்.
நான் என் வங்கிக் காப்பறையைப் பற்றி நினைப்பதைத் தவிர்க்க முடியவில்லை.
அருமையான எழுத்து ஐயா...
ReplyDeleteவாசிப்பின் சுவராஸ்யம்.