இந்த வீட்டிற்கு வந்த இரண்டாம் நாள் அந்தச் சிறுபறவை
(கடைசி வரி வரை அதைச் சிறு பறவை என்றே வைத்துக் கொள்வோம்).
பூந்தொட்டி விளிம்பில் உட்கார்ந்திருந்தது.
தேவைக்கு அதிகமான தூக்க மாத்திரை எடுத்தது போல்
கண்ணை மூடியே இருந்தது.
பகலைப் பார்ப்பதில்லை என்ற அதன் வைராக்கியத்திற்குக்
காரணங்கள் இருக்கலாம்.
கிட்டத் தட்ட அதன் அலகுக்கு எட்டும் நெருக்கத்தில்
இந்த வீட்டின் மிக இளைய நபர் வைத்த சிறுதானியங்களை
மிக உறுதியாக அது அலட்சியப்படுத்தியது.
அவனுடைய இரவு வணக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
காலை வணக்கமும் தெரிவிக்காமல் பறந்துபோயிருந்தது.
முற்றிலும் அது வந்து போனதை மறந்து போகும் படி
சதா ஒரு மழையிருட்டில் நாட்கள் இருந்தன.
இன்றைய சன்னல் திறப்பில் உள்நுழைந்த குளிர்வெயிலில்
தொட்டிச் செடி ஒருமுழு நீள இலையை
இடுப்பிலிருந்து உருவி வீசித் தனிப்பயிற்சியில் இருந்தது.
நிராயுதத்துடன் நெருங்கிப் பார்க்கையில்
மேலும் நிகழ்ந்திருந்தன சில பச்சை அதிசயங்கள்.
இந்த வீட்டின் மிக இளைய நபரின் பெயரை
அடுத்தடுத்துச் சொன்ன அதிர்வில் அந்த நொடி நெளிந்தது.
‘சிறு பறவை வந்துவிட்டதா மறுபடியும்?’
தொட்டி வரிசைக்கு ஓடிவந்தவனிடம் காட்டினேன்
“பார், எத்தனை சிறிய பறவைகள்!”.
சிற்றிலைகளுடன், பறவையினும் அதி பறவையென
முளைவிட்டிருந்தன அவன் சிறுகை அளாவி வீசிய
அன்றிரவின் சென்னிறச் சிறு தானியங்கள்.
பறவைக்கு வைத்த தானியமணிகள் முளைத்து அதிபறவையென சிறகசைக்கும் அழகை எத்தனை அற்புதமான அழகுடன் சொல்லியிருக்கிறீர்கள்.ஆனந்தமாயிருக்கிறது
ReplyDeleteசிறுகை அளாவி வீசிய
ReplyDeleteஅன்றிரவின் சென்னிறச் சிறு தானியங்கள்....
வாவ்... அருமை ஐயா...
ReplyDeleteபறவையினும் அதிபறவையாக முதல் துளிர்ப்பின் இரு இலைகள் அழகோ அழகு! குட்டிப் பையன் விதைக்கப் பழகி விட்டான்!
ReplyDelete