Saturday, 28 October 2017

வானத்தில் முட்டையிடல்.





அந்தப் பறவையியலாளனை நான் சந்தேகிக்கிறேன்.
அவனை நான் தோற்கடிக்க விரும்பினேன்.
அவன் உச்சரிக்கவே முடியாத ஒரு பெயரை அதற்கு இட்டேன்.
உலகத்தில் இருந்திருக்கச் சாத்தியமற்ற  ஒரு பறவையைக்
கற்பனையில் அடைகாத்தேன்.
முப்பாட்டியின் அண்டபேரண்டப் பட்சிக்கு அதீத ஒப்பனைகள்
செய்தேன்.
அ-பறவைக் குணங்களை அதற்கு வரித்தேன்.
கோபமுற்றால் அலகுகளுக்கிடையிருந்து  தீக் கக்கும் என்றும்
சதுப்புக்குள் சிக்கிய யானைக் குட்டியைக்
கால்நகங்களால் தூக்கிக் காப்பாற்றும் என்றும்
கருணையின் வலுவான வளைந்த நகங்களின் செயல் அதுவெனவும்
அதன் தூவிகளில் செய்யமுடியும் தாள வாத்திய ஒலி
மலைஜாதி  நடனம் ஒத்தது என்றும்
எங்கள் வம்சாவழி மூதாதையர் ஒருவர் தோளில் அமர்ந்த
நேரத்திலிருந்து தினைமாவின் ஐஸ்வர்யம் பெருகியது என்றும்
தாவரச் சாற்றில் வரையப்பட்ட வலசை பறக்கும் ஒரு ஓவியம்
என் சரியான இடைவெளிக் கனவுகளில் தொங்குகிறதாகவும்
தோல்வியில் பறவையியலாளன் சிரசு மண்ணில் குனிந்து
பதிகிற வகையில்
‘அறிவீர்களா ஐயா அதை?’  என்று போலிப் பணிவுடன் கேட்டேன்.
எந்தத் தயக்கமும் அற்ற தேர்ந்த புன்னகையுடன்
தூரதரிசனியைக் கண்மட்டத்தில் வைத்தபடி, சுருங்கிய
இடது கண்ணுடன்
‘அலையாத்திக் காடுகளுக்கு மேல் அவை  நடு  வானத்தில்
முட்டையிடுவதை
இரண்டு முறைகள் பார்த்திருக்கிறேன்’ என்றார்.
அப்படியொரு காட்சி மிகப் பிடித்திருந்தது எனக்கு.
%

# பறவை, பறவையியலாளன்

1 comment:

  1. வானில் இருந்து பூமிக்கு வருமுன் பறவையாகிவிட்ட அந்த அதிசயத்தைக் கண்ட இன்னொருத்தி நானாக இருந்தால்....:)

    ReplyDelete