Friday, 27 October 2017

ஒரு புதிர்வழியும் 27வது குரங்கும்.







நேற்றைக்கே எழுதியிருக்க வேண்டும்
நேற்றைக்கு எழுதியிருந்தால்  இதை விட நன்றாக இருந்திருக்கும். நேற்று என்பதே இன்றை விட உயிருள்ளது தான். நேற்றுக் காலை ஒரு முறையும்  இரவு மீண்டும் ஒரு முறையும் வாசித்தேன். வாசித்த மன நிலையில் க.மோகனரங்கன் மற்றும் சக்தி ஜோதிக்கும் அதன் இணைப்புத் தந்ததற்காக நன்றி சொன்னேன். அதை மொழிபெயர்த்திருக்கும் தமிழ்மகன் முகநூலில் தென்பட்டதும் உள்ப் பெட்டியில் அவருக்கு எழுதிப் பகிர்ந்து கொண்டேன். இன்னும் தொட்டுக் கையைப் பிடிக்காதது ‘உன்னதம்’ கௌதமசித்தார்த்தனை மட்டுமே.

உன்னதம்  இணைய இதழில் - UNNATHAM.NET -  25.அக்டோபர்.2017 பதிவாக வெளிவந்திருக்கிற கதை  26  குரங்குகள், அதனுடன் ஒரு புதிர் வழி.  கிஜ் ஜான்ஸன் எழுதியது. நம்முடைய தமிழ் மகன் மொழியாக்கம். அப்படி ஒரு ஈர்ப்புள்ளதாக மொழிபெயர்த்திருக்கிறார்.

(http://unnatham.net/26-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA/ )

நான் பொதுவாக நேர்கோட்டு வாசிப்புக்குப் பழகினவன். 26 குரங்குகள் , அதுவும் புதிர்வழி சார்ந்தது எப்படி நேர்கோட்டில் இருக்க முடியும்  என்ற தயக்கம் . எல்லாம் வளைகோடுகளே. அனைத்தும் புதிர்வழிகளே என்றாலும் நாம் வளைவழித்தும் புதிரற்றதுமாக  இருக்க எதிர்பார்க்கிறோம். நேர்கோடு என்பது ஒரு சமாதானம். புதிரின்மை என்பது ஒரு ஆசுவாசம்.

இந்தக் கதையில் வரும் 26 குரங்களும் எய்மி என்கிற பெண்  (43) நடத்துகிற          சாகசக் காட்சியில் அவர்  மேடையில் மேலிருந்து கீழிறக்கும் ஒரு குளியல் தொட்டியில் ஒரு ஏணி வழியில் ஏறி உட்கார்கின்றன. அப்புறம் ஏதோ ஒரு புதிர்வழியில் காணாமல் போகின்றன, குளியல் தொட்டி காலியாக இருப்பதைப் பார்வையாளர் உறுதி செய்யலாம். ஒரு சாகசக் காட்சி வேறு எப்படி முடியும்? அந்த 26 குரங்குகளும் அதன் புதிர்வழியிலிருந்து  தொட்டிக்குத் திரும்பி இறங்கி வரிசைப்படுகின்றன மேடையில்.

இவை எங்கோ போகின்றன, எங்கிருந்தோ திரும்புகின்றன, ஆனால் எய்மிக்கு அவை எங்கே போகின்றன, வருகின்றன என்று தெரியாது. புதிர்களின் ஒரு சிறு இளகிய முடிச்சைக் கூட அவளோ, அவள் காதலன் கியோஃப் (28) அல்லது அந்த முதிர்ந்த குரங்கு ஸெப்போ (அது மார்பில் அறைந்தபடி எழுப்பும் கூக்குரல் சாகச அரங்கை நிரப்பும்)    அவிழ்க்க முயல்வதில்லை.

எய்மியுடன் கியோஃபும் சேர்ந்து 127 காட்சிகள் நடத்துகிறார்கள். எய்மியை விட கியோஃப் இந்த பிரபஞ்சத்தை நம்புகிறவனாக இருக்கிறான். ஸெப் இறந்து போகிறது. ஒரு ஒருங்கிணைப்பாளன் போல, நாற்காலியில் சாய்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்துவது போல் இருந்த ஸெப் அதனுடைய மரணத்திற்கு முந்திய கடைசி இரவில் எய்மிக்கும் கியோஃபிற்கும் இடையில் படுத்துக் கொள்கிறது. காலையில் அதன் கூண்டுக்குள் அதற்குப் பிடித்தமான பொம்மையை அணைத்துக் கொண்டு, அதற்குப் பிறகு எழுந்திருக்காமலே, உறங்கி விடுகிறது.

போங்கோ அடுத்த நிகழ்ச்சிகளில் கடைசிக்குரங்காக மேலேறிப் போகிறது. குரங்குகள் இப்போதும் காணாமல் போய்,  காண வருகின்றன, எய்மி அழுகிறாள். ‘நிகழ்ச்சி நடந்ததுஸெப்பினால் இல்லை’ என்கிறாள். ‘தெரியும்’ என்கிறான் கியோஃப்.

குளியல் தொட்டி சாகசம் என்று ஒன்றுமே இல்லை.குரங்குகள்  ஏணியில் ஏறித் தொட்டிக்குள் குதிக்கின்றன. காணாமல் போகின்றன.. உலகமே    இப்படிச் சில பிரமிப்புகளால் நிறைந்தது தான். அதற்குப் பொருள் எதுவும் இல்லை. அது புதிர் எனில் குரங்குகள் மட்டுமே அறிந்த குரங்குகளின் புதிர்.எய்மியும் கியோஃபும் சாகச நிகழ்ச்சிக்கு இடையே வந்து போகிறவர்கள் மட்டுமே.

எய்மி முன்பொருவரிடம் அந்த நிகழ்ச்சியை ஒரு டாலருக்கு வாங்கியது போல, அவளிடம் அதே  ஒரு டாலருக்கு அந்த நிகழ்ச்சியை வேறொருவர் வாங்கிக் கொள்கிறார்

இன்னொரு இடத்தில் சொல்லப்படுவது போல, இந்தக் கதை கூட ‘காலைச் சிற்றுண்டி போல எளிமையானது’ போலத்தான் இருக்கும். ஆனால் அப்படி அல்ல அது. அதன் விமர்சனக் குறிப்பில் இருப்பது போல, “வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையில் ஏற்படும் இடையறாத கேள்வியை மனிதமனம் எப்படித் தர்க்க ரீதியாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறது என்பது தான் இக்கதையின் மையம்’

எப்போதும் போல, ஒவ்வொரு கதையை வாசித்தபின் அதன் பாத்திரங்களுடன் என்னைப் பொருத்தி, என் சாயல்களை அவர்களுடன் ஒப்பீட்டுகிற நிலையில், நான் எய்மியை விட அதிகம் கியோஃப் சாயலில் இருக்கிறேன். கியோஃபை விடவும் அந்த ஸெப் சாயலுக்கு மிகவும் பொருந்திப் போகிறேன்.

சின்னமோன் வாசனை முகிழ்க்கும் என் தேநீரை அருந்துகையில் 26 குரங்குகளின் வாசனையை என்னால் ஒரு போதும் தவிர்க்கவே இயலாது,

நான்  இக்கணம் தமிழ் மகனை நினைத்துக் கொள்கிறேன். கருப்புக கண்ணாடியணிந்து, கீழுதடு காணாமல் போக அகலமாகச் சிரித்துக் கொண்டிருக்கும்பழுப்பு முடிக்காரி கிஜ் ஜான்ஸனை நினைத்துக் கொள்கிறேன்.

ஒரு புதிர்வழி திறக்கும் குளியல் தொட்டியில் 27வது குரங்காக ஏறிக்கொண்டு இருக்கிறேன்.

%

No comments:

Post a Comment