மரபின் மைந்தன் முத்தையா , அவருடைய ‘அற்புதர்’ நூலை அனுப்பி இருந்தார். சத்குருவுடனான அவருடைய அனுபவங்களை ‘சாய்வெழுத்திலும் நேரெழுத்திலும்’ செய்யப்பட்ட பதிவு அது.
அதில் முத்தையா சத்குருவுடன் காசிக்குச் சென்றிருந்ததைப் பற்றிய ஒரு பகுதி இருக்கிறது. இருவரும் விசுவநாதர் கோவிலுக்குச் செல்கிறார்கள். கங்கைக் கரையோரமாகச் சிறுவர்கள் பட்டம் விட்டபடி இருக்கிறார்கள். சத்குரு பார்க்கிறார். ‘ Oh! It is a long time since I flew a kite ‘ என்று அவர் சொல்கையில் சத்குருவின் வலது கரம் பட்டத்தின் நூலை விடுவது போலவும் சுண்டி இழுப்பது போலவும் பாவனை செய்கிறது. அப்புறம் அவர் பட்டம் விடுகிறார். அது கரணம் அடித்து எதிரே இருந்த ஒரு பள்ளத்தில் விழுகிறது. சிறுவர்கள் உற்சாகக் கூச்சல் இடுகிறார்கள். சத்குருவும் சேர்ந்து கொள்கிறார்.
எனக்கு இந்தக் காட்சியை உணர முடிந்தது. அதில் நான் இருந்தேன். பட்டம் விடும் சிறுவர்களில் நானும் ஒருவன். பள்ளத்தில் விழுந்த பட்டம் என்னுடையதுதான். அப்படி விழுந்ததற்காக ‘ஹோ’ என்று எழுந்த உற்சாகக் கூச்சலில், என்னுடைய உரத்த ‘ஹோ’ உண்டு.
நான் சிறுவயதில் மிகவிருப்பமாகப் பட்டங்கள் விட்டிருக்கிறேன். நடராஜ மாமாதான் எனக்குப் பட்டங்கள் செய்யச் சொல்லிக்கொடுத்தார். வானத்தைப் பற்றியும் காற்றைப் பற்றியும் கொஞ்சம் அவரிடம் இருந்து அறிந்திருந்தேன். மூங்கில் ‘பிளாச்சு’ ஒன்றை வளைத்து பட்டத்தில் வில் வைக்கவும் பட்டத்தின் சூட்சுமக் கயிற்றைச் சரியாகக் கட்டவும் நடராஜ மாமாவிடம் இருந்தே என் விரல்கள் தெரிந்துகொண்டன. அது எப்போதுமே ஒரு மாயம் போல நிகழும். பத்தமடை சாய்பு கடையில் வாங்கிவந்த ட்வைன் நூல் கண்டு முற்றிலும் தீர்கிற உயரத்தில் வானில் என்னுடைய பட்டங்கள் பறந்திருக்கின்றன.
அது ஒரு ஆனி மாதமாக இருக்கலாம். எங்கள் வீட்டுத் ‘தட்டோட்டி’யில் இருந்து ஒரு நாள் அப்படிப் பட்டம் விட்டுக்கொண்டு இருக்கிறேன். சந்திப் பிள்ளையார் முக்கில் இருந்து மேல ரத வீதிக்குத் திரும்பிக்கொண்டிருந்த பெரிய தேரின் உச்சிக் கலசமும் சிவலிங்கக் கொடியும் என்னுடைய பட்டம் எவ்வும் விரி வானத்தின் கீழ், கண்ணியிட்டுத் தொடரும் அடுத்தடுத்த வீட்டு உச்சந்தலைக் கூரைகள் தாண்டி, ஒரு கனவு போல நகர்வது தெரிந்தது.
அது ஓர் அழியாச் சித்திரம். அதே போல என்னிடம் இன்னொரு சித்திரம் உண்டு. அறுவடையான வயலில், இன்னும் மிச்சமிருக்கிற நெல்லின் அடித்தாள்கள் பழுப்புக் கத்திகளாகப் பாதங்களில் குத்த, விடுமுறைப் பையன்கள் பட்டம் விடுகிற ஒரு காட்சியை, முந்திய ஊர்த் திருவிழா முடிந்து இன்னொரு ஊர்த் திருவிழாவுக்குப் போகிற யானை, இடைத் தங்கலாக ஒரு உள்ளூர்த் தென்னந்தோப்பில் நின்று, தும்பிக்கை சுழற்றி ஓலை உண்பதைப் பட்டம் விடும் சிறுவர்கள் பார்ப்பது போன்ற ஒன்றை எல்லாம் பல வருடங்களுக்கு முன், கலாப்ரியா, பாண்டிய ராஜ், நான் எல்லோரும் சேர்ந்து யோசித்த வண்ணநிலவனின் ‘எஸ்தர்’ திரைக் கதைக்கான குறிப்புகளில் வைத்திருந்தேன்.
இப்போதும் அந்த யானை அதே தென்னந்தோப்பில் தும்பிக்கை துளாவி நிற்கிறது. அந்தச் சிறுவர்கள் அறுவடையான வயலில் இன்னும் பட்டம் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். காசியில் இட்ட ‘ஹோ; என்ற ஆனந்தக் கூவல் என் காதுகளில் இக் கணம் விழுகிறது.
அந்த யானை, அந்த
அறுவடை வயல், அந்தப் பட்டம், அந்த ‘ஹோ’ எல்லோர்க்கும் உரியது.
எல்லோரும் ஒரே ஒரு பட்டமாவது செய்ய வேண்டும்.
எல்லோரும் ஒரே
ஒரு முறையாவது பட்டம் விடவேண்டும்
எல்லோரும் ஒரே
ஒரு முறை ‘ஹோ’ என்று கூச்சல் இடவேண்டும்.
பட்டம் ஒரு அற்புதம்.
பட்டம் விடுவது
ஒரு அற்புதம்.
பட்டம் விடும்
எல்லோரும் அற்புதர்களே.
%
எல்லோரும் அற்புதர்கள் = அதில் நான் இருந்தேன். பட்டம் விடும் சிறுவர்களில் நானும் ஒருவன். பள்ளத்தில் விழுந்த பட்டம் என்னுடையதுதான். - பட்டம் விடுவது ஒரு அற்புதம்.
ReplyDeleteபட்டம் விடும் எல்லோரும் அற்புதர்களே. - வண்ணதாசன் = அற்புதம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். மகிழ்ச்சி சார் திரு Vannadasan Sivasankaran S
அற்புதர்கள் சூழ வாழ்தலும் அற்புதமே... வேடிக்கை பார்க்க மட்டுமே அருளப்பட்ட எம் போன்றோருக்கு.
ReplyDelete