Friday, 6 September 2013

காற்றே, காற்றே.

’நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன், என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்’ என்ற வரிகளைக் கண்ணதாசன் மட்டுமே எழுதியிருக்க முடியும். அது ஹிந்தி இசைக்கு தமிழில் எழுதப்பட்டது வேதா இசைக்கோர்ப்பில் என எல்லோர்க்கும் தெரியும். சிறைச்சாலை திரைப்படத்திற்கு இளைய ராஜாதான் இசை. அது மலையாள மொழிமாற்றப் படம். அதன் அத்தனை பாடல்களையும் அறிவுமதிதான் எழுதியிருக்கக் கூடும். ஆனால் எந்தப் பாடலைக் கேட்டாலும் அது தமிழ்ப்பாடலாகவே இருக்கும், முக்கியமாக பூவே செம்பூவே, உன் மேகம் நான்’.

இன்றைக்கு மீண்டும் அப்படியொரு பாடலைக் கேட்டேன். பழநி பாரதி எழுதியது. ’செல்லுலாய்ட்’ மலையாளப் படத்தில் ஏற்கனவே வைக்கம் விஜயலட்சுமி பாடியே, ‘காட்டே, காட்டே’ (காற்றே, காற்றே) பாடலின் தமிழ் வடிவம்.

சாம்ராஜ் தான் முதலில் அந்த மலையாளப் பாடலை இணைத்து அனுப்பியிருந்தார். வைக்கம் விஜயலக்‌ஷ்மி பார்வைக்குறைவு உள்ளவர். அவர் பாடும் போதே இயல்பாகச் செய்யப்பட்ட ஒளிப்பதிவுகளுடன் அதைக் கேட்க நேர்ந்ததும் பெரும் நிலை குலைவு உண்டாகிவிட்டது. அகன்ற கண்களும் விசாலமான சிரிப்போடும் அவர் பாடப் பாட, தீப் பாய்ந்தது போல இருந்தது.

பொதுவாக பார்வைக்குறைவு உள்ளவர்களின் முகத்துச் சிரிப்பு பார்வையுள்ளவர்களை கூண்டில் நிறுத்தி விசாரிக்கிறது. அதிக பட்ச தண்டனைக்குரியவன் நான் என்ற குற்ற உணர்வை ஒருகணம் நமக்கு உண்டாக்கி. மறுகணம் பெருங் கருணையுடன் மன்னித்து அனுப்பிவைக்கிறது. நான் விஜயலட்சுமியை அப்புறம் குரலாக மட்டும் கேட்டேன். என்னதான் முயன்றும் அந்தத் துரத்தும் சிரிப்பை விட்டுத் தப்பிக்க இயலவில்லை.

இன்று பழநிபாரதி எழுதி, அதே வைக்கம் விஜயலக்‌ஷ்மி தமிழில், ஜே.ஸி.டேனியலுடன் இணைந்து பாடிய பதிவை சக்திஜோதி இணைத்து அனுப்பியிருந்தார். இதுவும் பாடல் பதிவின் போதே ஒளியிம் ஒலியுமாய் வைக்கம் விஜயலக்‌ஷ்மியை நம் முன் வைக்கிறது. ஆச்சரியம். இப்போது அந்தத் துரத்தல் இல்லை. குற்ற உணர்வு இல்லை. நம் வீட்டுக்குள், நம் மூத்த அல்லது இளைய சகோதரி பாடுவது போல இருக்கிறது.

“காற்றே, காற்றே நீ
மூங்கில் துளைகளில்
கீதம் இசைப்பதென்ன?
வேனில் காலங்களும்
வேணு கானமும்
கீதம் இசைப்பதென்ன?

மேகம் மேகம் அது
போகும் வழிகளில்
நெஞ்சம் மிதப்பதென்ன?
பூட்டிவைத்த ஒரு
பூவின் கதவுகள்
காற்றில் திறப்பதென்ன?

நேற்று என்பது வெறுங் கனவு
இன்று என்பது புது நினைவு
சோகம் சுமந்த தோள்களிலே
பாய்ந்திட வருதே வெண்ணிலவு

முட்டி முட்டி பால குடிக்கும்
கன்னுக்குட்டிச் செல்லங்களும்
குட்டிக் குட்டிப் பூக்களிலே
தொட்டில் கட்டும் தென்றல்களும்
காதில் தேன் மொழி
சொல்கிறதே

அழகிய வானம் திறக்கிறது
ஆயிரம் கிளிகள் பறக்கிறது
பழகிய கிளிகள் கிழக்கினிலே
வானவில் ஒன்று வரைகிறது

மின்மினிகள் கண்களிலே
நட்சத்திரம் பூக்கிறதே
கிண்கிணியின் சந்தங்களில்
கீர்த்தனங்கள் கேட்கிறதே
நேரம் வந்தது
பூவாக”

இதைக் கேட்டு முடிக்கும் இக்கணம் ஜே.ஸி.டேனியல் மட்டும் அல்ல, வைக்கம் விஜயலக்‌ஷ்மி மட்டும் அல்ல, பழநி பாரதியும் எங்களுடன் இந்த வீட்டில் இருக்கிறார். இடையில் இடையில் அலையெனப் புரண்டு போகும் அந்த ஹார்மோனியத்தை வாசிக்கிறவனாக நான் இருக்க விரும்புகிறேன்.
31Like ·  · Promote · 

No comments:

Post a Comment